வெவ்வேறு பண்பாடுகளுக்கு இடையே ஒரு பிணைப்பை ஏற்படுத்தி, தேநீரின் மூலம் குடியிருப்பாளர்களை ஒன்றிணைக்கும் முயற்சியை தென்கிழக்குச் சமூக மேம்பாட்டு மன்றம் முன்னெடுத்துள்ளது.
தேநீர் சடங்குகள்வழி வெவ்வேறு பின்னணிகளோடு பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்களுக்கு இடையே இன நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் ‘டீஸ் யுவர் பாலெட்’ (TeaSE Your Palette) என்ற நிகழ்ச்சி ஜூலை 27ஆம் தேதி தொடங்கியது.
அந்நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக விஸ்மா கேலாங் சிராயில் நடந்த முதல் பயிலரங்கில் ஏறத்தாழ 80 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.
கலாசாரப் பரிமாற்றமும் உரையாடலும் நிறைந்த அந்தப் பயிலரங்கில், தேநீரின் வரலாற்றை விளக்கும் காணொளி ஒன்று காட்டப்பட்டது.
அதை அடுத்து, சீன, மலாய், இந்தியக் கலாசாரங்களின் தேநீர் செய்யும் முறையும் பங்கேற்பாளர்களுக்குக் கற்பிக்கப்பட்டது. அதோடு, நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் வெளிப்படையான உரையாடல்களும் நடைபெற்றன.
அந்தத் தொடக்கப் பயிலரங்கை அடுத்து, சிங்கப்பூரின் பன்முக மரபுடைமையை கொண்டாடும் வகையில் மேலும் பல பயிலரங்குகள் அவ்வட்டாரம் முழுதும் நடைபெறவுள்ளன.
“‘டீஸ் யுவர் பாலெட்’ போன்ற நிகழ்ச்சிகள் புரிந்துணர்வுக்கான விதைகளை நடுவதோடு, மற்ற கலாசாரங்களைப் பற்றிய ஆர்வத்தைத் தூண்டி, அனைவரையும் உள்ளடக்கும் ஒரு சமுதாயத்தை உருவாக்க உதவுகின்றன,” என்றார் தென்கிழக்குச் சமூக மேம்பாட்டு மன்றத்தின் நல்லிணக்க பிரிவுத் தலைவர் திரு முஹம்மது இர்ஷாத்.
மேல்விவரங்களுக்கு southeast_cdc@pa.gov.sg என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.