தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தில் உலக சதுரங்க வெற்றியாளர் போட்டி

2 mins read
செந்தோசாவின் ‘ஈக்குவாரியஸ்’ விடுதியில் புதன்கிழமையும் (டிசம்பர் 11), வியாழக்கிழமையும் (டிசம்பர் 12) தொடரும் பதின்மூன்றாம், பதினான்காம் விளையாட்டுகள் உலகச் சதுரங்க வெற்றியாளரை நிர்ணயிக்கும். 
8034faa9-b90a-49a5-b15a-3586cc8bc7f2
உலக சதுரங்கப் போட்டிக்கிடையே, செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 10) சிங்கப்பூர் சதுரங்க கிராண்ட் மாஸ்டர்கள் பங்கேற்ற கேள்வி - பதில் அங்கம் இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து சிங்கப்பூரின் கிராண்ட் மாஸ்டர்களில் ஒருவரான சித்தார்த் ஜெகதீஸ் நட்புமுறை ஆட்டத்தில் பங்கேற்று ஆடினார். - படம்: எங் சின் அன்

வெள்ளைக் காய்களை வெற்றிக்கு நகர்த்தி ஆரவாரம் எழுப்பிய அடுத்த நாள், திங்கட்கிழமை (டிசம்பர் 9) உலகச் சதுரங்க வெற்றியாளர் போட்டியின் பன்னிரண்டாம் விளையாட்டில் தோல்வியைத் தழுவினார் இளம் இந்தியச் சதுரங்க கிராண்ட்மாஸ்டர் குகேஷ் தொம்மராஜூ, 18.

சீனாவைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டரும் கடந்த ஆண்டின் உலகச் சதுரங்க வெற்றியாளருமான 32 வயது டிங் லிரனுக்கும் அவருக்கும் இடையே நவம்பர் 26ஆம் தேதி முதல் தொடர்ந்துள்ள சதுரங்க மோதலின் புள்ளி நிலவரம் தற்போது 6-6 எனும் கணக்கில் உள்ளது.

அண்மைய காலத்தில் நிகழ்ந்த தமது மிகச் சிறந்த ஆட்டமாக திங்கட்கிழமை நடந்த விளையாட்டு விளங்குவதாக செய்தியாளர் கூட்டத்தில் பதிவு செய்தார், ஞாயிற்றுக்கிழமை கடைசிக் கட்டத்தில் செய்த பிசகான நகர்த்தலில் குதிரைக் காயை இழந்து தோல்வியுற்ற டிங்.

தோல்வி நிச்சயமான கடைசி ஆறு நிமிடங்களில் விளையாட்டைத் துறந்ததன் பின்னர் சோர்வாகக் காணப்பட்ட குகேஷ், மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற பதினோராம் விளையாட்டுக்குப் பிறகு உடனே தோல்வியுற்றது குறித்து வருந்தினாலும், அடுத்த இரு விளையாட்டுகளுக்குத் தயார் செய்வதில் உறுதியாக உள்ளார்.

செந்தோசாவின் ‘ஈக்குவாரியஸ்’ விடுதியில் புதன்கிழமையும் (டிசம்பர் 11), வியாழக்கிழமையும் (டிசம்பர் 12) தொடரும் கடைசி இரண்டு விளையாட்டுகளான பதின்மூன்றாம், பதினான்காம் விளையாட்டுகள் உலகச் சதுரங்க வெற்றியாளரை நிர்ணயிக்கும்.

சமநிலை முடிவாக அமைந்தால், வெள்ளிக்கிழமை சமபுள்ளிகளை முறியடிக்கும் (tie breaker) விளையாட்டுகளில் பங்குகொண்டு வெற்றியாளர் வாகை சூடுவார். 

ஆக அண்மைய பன்னிரண்டாம் விளையாட்டில் முதல் 11 நகர்த்தல்களுக்கு மட்டும் இரண்டு மணிநேர விளையாட்டு நேரத்தில் பாதி நேரத்தைச் செலவிட்டார் டிங். நேரடியாக விளையாட்டைக் கண்ட நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்களுக்குக் கடைசி அரைமணி நேரம் மிக விறுவிறுப்பாக அமைந்தது. முன்னைய ஆட்டங்களில் நேர நிர்வாகச் சவால்களை எதிர்நோக்கிய டிங், பத்தாம் விளையாட்டைப் போல் இல்லாமல் கூடுதல் மனத்தெளிவுடன் செயல்பட்டதாகக் குறிப்பிட்டார். 

ஆசிய நாடுகளைச் சேர்ந்த இரு கிராண்ட்மாஸ்டர் வீரர்கள் களமிறங்குவது உலகச் சதுரங்க வெற்றியாளர் போட்டியின் வரலாற்றில் இதுவே முதல் முறை. இது குறித்து பெருமையடைவதாக தமிழ் முரசிடம் கூறிய குகேஷ், இந்நிலை சதுரங்க விளையாட்டு ஆசியாவில் இன்னும் பிரபலமடைந்து வருவதற்கான நல்ல அறிகுறி என்றும் தாம் இந்தியாவைப் பிரதிநிதிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் சொன்னார். 

இப்போட்டியில் குகேஷின் வெற்றி அவரை வரலாற்றிலேயே ஆக இளைய உலகச் சதுரங்க வெற்றியாளராக அரியணையேற்றும். 1985ஆம் ஆண்டில் தமது 22ஆம் வயதில் வெற்றி கண்ட ரஷ்ய சதுரங்க வீரர் கேரி கேஸ்பராவ் தற்சமயம் ஆக இளைய உலகச் சதுரங்க வெற்றியாளராகத் திகழ்கிறார்.

குறிப்புச் சொற்கள்