வேலையிட விபத்தில் நண்பரை இழந்து தவிப்பவர், குடும்பத்துக்கு மாதக் கடைசியில் பணம் அனுப்ப அன்றாடம் சிக்கனமாகச் செலவிடுபவர், குடும்பத்தாரை நேரில் காண முடியாமல் ஏக்கத்திலேயே நாள்களைக் கடத்துபவர் - இதுபோல, வெளிநாட்டு ஊழியர்கள் பலரும் வாழ்வில் வலியை உணர்ந்தவர்கள்.
எனினும், இப்பயணத்தில் அவர்களுக்குத் தோள்கொடுக்க அன்பு உள்ளங்கள் உள்ளன என்பதை உணர்த்த, மனிதவள அமைச்சின் ‘ஏஸ்’ எனப்படும் ‘உத்திரவாதம், அன்பு, சென்றடைதல்’ குழு (Assurance, Care and Engagement) அக்டோபர் 13ஆம் தேதி ஞாயிறு மாலை வெஸ்ட் கோஸ்ட் பூங்காவில் இரண்டு-கிலோமீட்டர் மெதுநடை நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தது.
இந்நிகழ்ச்சியில் ‘ஹெல்த்சர்வ்’ (HealthServe) அறநிறுவனம், என்டியுசி கிளப் (NTUC Club), ‘பேஷன் டு சர்வ்’ (Passion To Serve), ‘24ஏஷியா’ (24asia), ‘பிக் அட் ஹார்ட்’ (Big At Heart) போன்ற அமைப்புகளும் பங்காளிகளாக இணைந்தன.
வெளிநாட்டு ஊழியர்கள், ‘ஹெல்த்சர்வ்’ தோழமை ஆதரவுத் தலைவர்கள், முதலாளிகள், தொண்டூழியர்கள், சிங்கப்பூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (எஸ்ஐடி) மாணவர்கள் உட்பட மொத்தம் 312 பேர் மெதுநடையில் பங்கேற்றனர்.
அதைத் தொடர்ந்து பெஞ்சுரு பொழுதுபோக்கு நிலையத்தில் விளையாட்டுச் சாவடிகளும் இடம்பெற்றன.
‘எஸ்ஐடி’யின் மாணவத் தொண்டூழியர்கள்
வெளிநாட்டு ஊழியர்களின் உடற்வலிகளைப் போக்க எஸ்ஐடி இயன்முறை மருத்துவ மாணவர்களும் ஆசிரியர்களும் பெஞ்சுருவில் உத்திகள் கற்பித்தனர்.
வெளிநாட்டு ஊழியர்களை சிங்கப்பூருடன் ஒன்றிணைக்கும் ‘எஸ்ஐடிஇன்டகிரேட்ஸ்’ மாணவர்க் குழு, விளையாட்டுகளையும் வழங்கியது. மெதுநடையிலும் எஸ்ஐடி தொண்டூழியர்கள் கலந்துகொண்டனர்.
எஸ்ஐடி, தன்னாட்சிப் பல்கலைக்கழகமாகத் தம் 10ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாட ஓராண்டுக்கு நடத்தும் ‘பத்துத் தொண்டுகள்’ முயற்சியில் இதுவும் அடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
‘எந்நேரமும் உதவிசெய்யத் தயார்’
இரவு 11.45 மணிக்குத் தற்செயலாக விழித்திருந்த வெளிநாட்டு ஊழியர் ராமதாஸ் சரவணன், 40, தமது தங்குமிடத்தில் சகத் தொழிலாளர் தழுதழுக்கும் குரலில் தொலைபேசியில் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டார்.
“என்ன ஆனது?” என சரவணன் கேட்டபோது, தம் தாயார் இந்தியாவில் இறந்துவிட்டதாக அந்த நண்பர் அழுதுகொண்டே கூறினார்.
“நான்தான் ஒரே மகன். கடைசியாக ஒரு முறை என் அம்மாவைப் பார்க்கவேண்டும். பணம் போதவில்லை. எப்படி ஊருக்குப் போவது எனத் தெரியவில்லையே,” எனக் கண்கலங்கி உதவி கோரினார். சரவணன் உடனே மேலிடத்திடம் கூறி, தம் நிறுவனத் தொழிலாளர்களிடமிருந்து நிதி திரட்டி அவரை உடனே ஊருக்கு அனுப்பினார்.
புதிதாக சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டு ஊழியர்கள் தனிமையில் அல்லல்படக்கூடாது என்பதால் சிம் அட்டை வாங்கித் தருவதுமுதல் லிட்டில் இந்தியாவிற்கு அழைத்துச் செல்வது வரை 39 வயது வெளிநாட்டு ஊழியர் சம்பந்தம் கலைவாணன் பலவித உதவிகளையும் செய்துவருகிறார்.
இருவரும் ‘ஹெல்த்சர்வ்’ அறநிறுவனத்தின் தோழமை ஆதரவுத் தலைவர் (Peer Support Leader) திட்டத்தில் ஈராண்டுகளாக, சக ஊழியர்களுக்கு மனநல உதவியை வழங்கப் பயிற்சிபெற்றுள்ளனர்.
2021ல் தொடங்கிய இத்திட்டம், இதுவரை 1,200க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பயிற்சி வழங்கியுள்ளது.
வெளிநாட்டு ஊழியர்கள் ‘ஹெல்த்சர்வ்’ 24 மணி நேர உதவிச் சேவையைப் பெற, 3129 5000 எண்ணில் தொடர்புகொள்ளலாம். வெளிநாட்டு ஊழியர் நிலைய 24 மணி நேரச் சேவையை 6536 2692 எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
முன்னுதாரண நிறுவனம்
“வாராவாரம் ஊழியர்களைச் சந்தித்து, நீங்கள் வீட்டிற்கு அழைத்தீர்களா, வேலை எப்படி இருக்கிறது, உணவு நன்றாக இருக்கிறதா, ஏதேனும் உதவி தேவையா என கேட்போம்.
“ஊழியர்களுக்காக தங்குமிடத்திலேயே தொழுகை அறைகளும் முறையான பயிற்சியாளர்களுடன் உடற்பயிற்சிக்கூடத்தையும் அமைத்திருக்கிறோம். மூன்று வேளையும் சமையலறையில் உடனே தயாரித்த உணவை வழங்குகிறோம்,” என்றார் ஃபோர்டிஸ் கட்டுமானத்தின் பாதுகாப்பு மேலாளர் குரு சங்கர், 44.

