சிறையிலிருந்து தாம் திரும்பும்வரை பல ஆண்டுகளாகக் காத்திருந்த மனைவிக்காகக் கடிதம் எழுதி வாசித்தார் ஆஷிக். தம்மைத் திருத்துவதற்காக ஆஷிக் எடுத்த முயற்சியை உணர்ந்து மனைவி ஸுராய்னி பதில்கடிதம் வாசித்தார்.
முன்னாள் குற்றவாளிகளின் வாழ்வின் இத்தகைய உணர்ச்சிமிகுந்த தருணங்களை மேடையேற்றியது மஞ்சள் நாடா திட்டப்பணியின் 20 ஆண்டு நிறைவு விழா. இவ்விழா இசை நிகழ்ச்சியாக, ‘த ஸ்டார்’ அரங்கில் அக்டோபர் 17ஆம் தேதி நடந்தது. அதற்கு 4,000க்கும் மேற்பட்டோர் வருகையளித்தனர்.
நிகழ்ச்சியில் மூத்த அமைச்சரும் தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியன் கலந்துகொண்டு, “நாம் ஒருவருக்கொருவரின் மறுவாய்ப்புகளாக அமைவோம்” (We Are Each Other’s Second Chances) என்ற மஞ்சள் நாடா திட்டப்பணியின் புதிய முழக்கவரியை அறிமுகப்படுத்தினார்.
இசை, ஓவியம், நடனம், சமையல் எனக் கலைகளின்வழி வாழ்வில் புதிய ஒளியைக் கண்டுள்ள பல முன்னாள் குற்றவாளிகள் நிகழ்ச்சியில் தங்களது கதைகளைப் படைத்தனர்.
அவர்களில் ஒருவர்தான் இறுதி நடன அங்கத்தைப் படைத்த ‘பிளஸ் பாய்ண்ட்’ நடனக் குழுவின் தோற்றுநர் மிலா, 44.
கரடுமுரடான வாழ்விலிருந்து மீண்டுவந்த மிலா, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, அண்மையில் கார், நான்கறை வீட்டை வாங்கியுள்ளார்.
வீட்டிலிருந்து உணவைத் தயாரித்து ‘கேட்டரிங்’ வணிகத்தை 20 ஆண்டுகளாக நடத்திவருகிறார். ‘பிளஸ் பாய்ண்ட்’மூலம் பல இளையரை நல்வழியில் கொண்டுவந்து பல நிகழ்ச்சிகளையும் படைத்துவருகிறார்.
திசையறிந்தபின் பீடுநடை
தம் தந்தை பெயர்கூட அறிந்திடாத மிலா, குடும்ப ஆதரவு இல்லாததால் 13 வயதில் வீட்டைவிட்டு வெளியேறினார்.
தொடர்புடைய செய்திகள்
அங்கிருந்து அவர் குண்டர் கும்பல்களில் சேர்ந்து, போதைப் பழக்கத்திற்கு அடிமையானார். “அங்கிருந்தவர்களால்தான் என்னைப் புரிந்துகொள்ள முடிந்ததாக அப்போது நான் நினைத்தேன்,” என அவர் நினைவுகூர்ந்தார்.
இதற்கிடையே, குடும்ப வன்முறை காரணமாக அவர் தம் பிள்ளைகளின் தந்தையிடமிருந்து பிரிந்தார். அதனால், பிள்ளைகளை வளர்க்கப் பணத்திற்காகச் சிரமப்பட்டு, பாலியல் தொழிலில் நுழைந்தார்.
போதைக் குற்றங்களுக்காக 2004ல் பத்து மாதங்களும் 2008ல் 18 மாதங்களும் சிறையில் இருந்தார் மிலா. அதனால் அவரது ஏழு பிள்ளைகளும் வளர்ப்புப் பெற்றோர் இல்லங்களுக்கு அனுப்பப்பட்டனர்.
வாழ்வில் இவ்வளவும் தாம் இழந்துவிட்டதை அப்போதுதான் உணர்ந்தார் மிலா.
இரண்டாம் முறையாகச் சிறையிலிருந்தபோது அவரின் 12 வயது மகன் அவரிடம், “அம்மா, இது போல இனிமேல் செய்யமாட்டீர்கள் என சத்தியம் செய்யுங்கள்,” எனக் கேட்டுக்கொண்டார். மிலா வாழ்வில் புதிய பாதையில் செல்ல முடிவெடுத்தார்.
சிறையிலிருந்து வெளியானதும், கடுமையாகப் போராடி தம் பிள்ளைகளைத் தமது பராமரிப்பில் கொண்டுவந்தார் மிலா.
‘பழைய மிலா நானல்ல’
போதைப்பொருள் விற்பனையாளர்கள் பலமுறை வற்புறுத்தியபோதும் மிலா மறுப்பு தெரிவித்தார்.
பெரிய குடும்பத்துக்காகப் பணம் சம்பாதிக்க துப்புரவாளர், காசாளர் எனக் கிடைத்த சிறு சிறு வேலைகளைச் செய்துவந்தார் மிலா. மாதம் 1,900 வெள்ளி சம்பளத்தில் அங் மோ கியோவில் ஓரறை வீட்டில் ஏழு பிள்ளைகளை வளர்ப்பது மிகக் கடினமாக இருந்தது. ஆனால், நம்பிக்கை இழக்காமல் அவர் அதையே செய்தார்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தளவாடத் துறையில் அவருக்கு வேலை கிடைத்தது. அதன்வழி முன்னேறி, இன்று அவர் மூத்த மேற்பார்வையாளராகப் பணியாற்றுகிறார்.
இளையர்கள் தம்மைப் போல் வழிதவறிச் செல்லக்கூடாது என்பதால் 2012ல் ‘பிளஸ் பாய்ண்ட்’ எனும் நடனக்குழுவைத் தொடங்கினார் மிலா. காற்பந்து உட்பட சிற்சில குழுக்களையும் அவர் இளையர்களுக்காக நடத்துகிறார்.