தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உடற்பயிற்சியின்போது சரியான சுவாசம் அவசியம்

2 mins read
9d23f645-c41e-40a0-bfa7-b60c7af53bb7
உடற்பயிற்சியின்போது சரியான முறையில் சுவாசிக்க வேண்டும். - படம்: பிக்சாபே

உடற்பயிற்சி செய்யும்போது பலவற்றை கருத்தில்கொள்ள வேண்டும். சுவாசிப்பது மிக முக்கியமான ஒன்று. ஆனால் அதே நேரத்தில் அது சில நேரங்களில் கவனிக்கப்படாமலும் போகலாம்.

அதைச் சரியான முறையில் செய்யாவிட்டால் அது உடற்பயிற்சியின்போது பின்விளைவுகளை உண்டாக்கும்.

எடை தூக்கினாலும், மெதுவோட்டம் ஓடினாலும், யோகா செய்தாலும், மிதிவண்டி ஓட்டினாலும், சுவாசத்தைக் கட்டுப்படுத்துவது ஒருவரின் செயல்திறன், சகிப்புத்தன்மை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்.

உடலின் தசைகளுக்குப் பிராணவாயுவை கொண்டுசெல்வதுதான் சுவாசிப்பது. உடற்பயிற்சி செய்யும்போது நம் தசைகளுக்கு அதிகளவில் பிராணவாயு தேவைப்படும்.

சுவாசம் ஆழமற்றதாகவோ ஒழுங்கற்றதாகவோ இருந்தால் அது சோர்வு, தலைச்சுற்றல் அல்லது தசைப்பிடிப்புக்குக்கூட இட்டுச்செல்லும்.

அதே நேரம் கட்டுப்படுத்தப்பட்ட சுவாச முறை சீரான பிராணவாயு விநியோகிப்பைப் பராமரிக்க உதவுவதோடு, இருதயத் துடிப்பை ஒழுங்குபடுத்தி, மனத்தை அமைதிப்படுத்த உதவுகிறது.

எடைகள் தூக்கும்போது ஒருவித சுவாச முறையைப் பின்பற்ற வேண்டும். எடுத்துக்காட்டுக்கு ஸ்குவாட் எனப்படும் குந்தியிருக்கும் உடற்பயிற்சியை செய்யும்போது உடல் தாழ்த்தப்படும். அப்போது மூச்சை உள்ளிழுத்து மேலே வரும்போது மூச்சை வெளியிட வேண்டும்.

ஆனால் நீண்ட நேரத்திற்கு மூச்சை உள்ளிழுத்துக் கொண்டிருந்தால் அது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும்.

ஓடுவது, நீந்துவது, மிதிவண்டி ஓட்டுவது போன்ற கார்டியோ உடற்பயிற்சிகள் செய்யும்போது வேறு வகையில் சுவாசிக்க வேண்டும்.

இரண்டு அடிக்கு மூச்சை இழுத்து, இரண்டு அடிக்கு மூச்சை வெளியிட வேண்டும். இது சுவாசத்தைச் சீராக்க உதவுகிறது. யோகா, பிலாட்டேஸ் போன்ற மிதமான உடற்பயிற்சி செய்யும்போது மெதுவாக சுவாசிக்க வேண்டும்.

இது ஒருவரின் நீக்குப்போக்குத்தன்மையை அதிகரித்து மனத்தையும் அமைதிபடுத்துகிறது. சரியான முறையில் சுவாசிப்பது தசைகளுக்கு மட்டும் நன்மை அளிப்பதில்லை. அது மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் குறைக்கும்.

சாதாரண உடற்பயிற்சிகள் செய்யும்போது மயக்கம் வருவது, வாய் மூலம் சுவாசிப்பது, மூச்சு விடாமல் இருப்பது போன்ற அறிகுறிகள் இருந்தால் ஒருவர் உடற்பயிற்சியின்போது சரியாக சுவாசிக்கவில்லை என்று சொல்லலாம்.

குறிப்புச் சொற்கள்