முதுமைக்கால மறதி நோய் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க ‘ஷெல்’ நிறுவனம், ‘டிமென்ஷியா சிங்கப்பூர்’ அமைப்புடன் இணைந்து பல்வேறு புதிய திட்டங்களைத் தாெடங்கியுள்ளது.
சிங்கப்பூரிலுள்ள கிட்டத்தட்ட 40 ஷெல் எரிபொருள் நிலையங்களில் இந்த விழிப்புணர்வு இயக்கத்துடன் தொடர்பான மின்-சுவரொட்டிகளையும் குறுங்காணொளிகளையும் பார்வையாளர்கள் காணலாம்.
இந்த இயக்கத்தில் முதிர்ந்த வயதை அடையாதோருக்கும் ஏற்படும் முதுமை மறதி நோய் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
65 வயதுக்குக் குறைவானோரைப் பாதிக்கும் இந்நோய்க்கான அறிகுறிகள், வயதானோருக்கு ஏற்படும் அறிகுறிகளைக் காட்டிலும் மாறுபடும்.
கடந்த சில ஆண்டுகளாக, முதுமைக்கால மறதிநோயை முன்கூட்டியே உணர்வோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
சிங்கப்பூரில் தற்போது சுமார் 3,700 பேருக்கு இந்நோய் உள்ளது.
நோய் அறிகுறிகள்
முதுமைக்கால மறதிநோயை முன்கூட்டியே அனுபவிப்பவர்களுக்கான அறிகுறிகள் மாறுபட்டிருக்கும்.
அசைவு, ஒருங்கியக்கம் ஆகியவற்றில் பிரச்சினைகளை இத்தகையோர் எதிர்நோக்குகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
அத்துடன், இந்த மறதிநோய் பிரச்சினையால் வயது குறைவானவர்களின் மூளையின் ‘ஃப்ரண்டோடெம்போரல்’ (frontotemporal) பகுதி அதிகம் பாதிக்கப்படுகிறது. இதனால் திட்டமிடுதல், நிர்வகித்தல் போன்ற ஆற்றல்கள் பாதிக்கப்படுகின்றன.
முன்கூட்டியே முதுமைக்கால மறதிக்கு ஆளாவோருக்கு வேலையும் குடும்பப் பொறுப்புகளும் இருக்கும் வாய்ப்பு அதிகம் என்பதால் இந்த நோயின் பாதிப்பு மேலும் கடுமையாகிறது.
புரிதல் வேண்டும்
முதுமைக்கால மறதிநோய்க்கு அஞ்சி அதனால் பாதிப்புக்குள்ளானோரை ஓரங்கட்டுவதற்குப் பதிலாக அவர்களை ஒருங்கிணைத்து அனைவரையும் ஊக்குவிப்பது இந்த ஏற்பாட்டின் நோக்கம் என்று ‘டிமென்ஷியா’ சிங்கப்பூரின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேசன் ஃபூ தெரிவித்தார்.
இந்த முயற்சியின்வழி முதுமைக்கால மறதி பற்றிய கலந்துரையாடல்களும் பரிவு உணர்வும் அதிகரிக்க உதவலாம் என்று ‘ஷெல்’ நிறுவனத்தின் மூத்த துறைத்தலைவர் திரு டான் மின் யிஹ் கூறினார்.