வேலைவாய்ப்பு: இளையர்களின் குழப்பங்கள், நம்பிக்கைகள்

3 mins read
643f8299-ca23-42c3-92e5-e07ce40e0525
‘அமேசான் சேவைகள்’ நிறுவனம் நடத்திய ஆய்வில் 2025ஆம் ஆண்டு மின்னிலக்கத் திறன்கொண்ட கூடுதலான  2.1 மில்லியன் ஊழியர்கள் தேவைப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் உள்ள 31 விழுக்காடு நிறுவனங்கள் விரிவாக்கங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும், பல நடுத்தர, பெரிய நிறுவனங்கள் நிதிச் சுமை காரணமாக ஊழியர்களைச் சேர்ப்பதை நிறுத்தவும் பரிசீலித்து வருவதாக வேலைவாய்ப்புகள் குறித்த அண்மைய கணக்கெடுப்பு சுட்டியது.

‘ஜாப் ஸ்திரீட்’ நிறுவனம் கடந்த ஆண்டு இறுதியில் ஏறத்தாழ 800 நிறுவனங்களிடம் நடத்திய ஆய்வின் முடிவில் 58 விழுக்காட்டு நிறுவனங்கள் தொடர்ந்து வேலைவாய்ப்புகளை அளித்து வந்ததாகத் தெரியவந்துள்ளது.

நிர்வாகம், மனிதவளத் துறை, கணக்கியல், விற்பனை, வணிக மேம்பாடு, வாடிக்கையாளர் சேவை ஆகிய துறைகளில் தொடர்ந்து வேலை வாய்ப்புகள் இருந்து வந்துள்ளதையும் இந்த ஆய்வு கோடிட்டுக்காட்டுகிறது. அதே துறைகளில் ஆட்குறைப்பும் நடந்துள்ளதாக ஆய்வு கூறியது.

பாதிக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் (54%) செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்டோருக்கு முன்னுரிமை தருவதையும் அவற்றில் 19 விழுக்காடு நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு தொடர்பான திறனை முதன்மைத் தகுதியாகக் கொண்டுள்ளதையும் ஆய்வு சுட்டியது.

தங்கள் வேலைவாய்ப்புகள் குறித்தும் எதிர்கால பணிச்சூழல் குறித்தும் பதற்றமும் குழப்ப மனநிலையும் இருப்பதாகச் சில மாணவர்கள் பகிர்ந்துள்ளனர்.

அனைத்துத் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் நுழைந்துள்ளதும், எதிர்காலத்தில் எந்தெந்தத் துறைகளைச் செயற்கை நுண்ணறிவு முற்றிலும் இல்லாமல் ஆக்கிவிடும் எனும் சிந்தனை கூடுதல் பயத்தைத் தருவதாகவும் கூறினார் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயின்ற பிரியா (உண்மைப் பெயரன்று). தமக்குப் பொருத்தமான துறை எது எனத் தேர்ந்தெடுப்பது குறித்த குழப்பமும் அழுத்தமும் இருப்பதாகவும் சொன்னார் அவர்.

“பிற திறன்களைப் போலவே துறை நிபுணர்களின் பரிச்சயமும் வழிகாட்டுதலும் அவசியம்,” என்று சொன்ன சிங்கப்பூர் நிர்வாகக் கல்விக்கழகத்தில் பயின்ற மூலா ஆதித்யா வெங்கடே‌ஷ், 22, “எந்தத் துறைக்குள் நுழைய வேண்டுமென்றாலும் தொழில்நுட்பத் திறன் தேவை என நம்புகிறேன்,” என்றார்.

குறிப்பாக, நிறுவனங்கள் புதிதாகத் துறைக்குள் நுழைவோரிடம் என்ன எதிர்பார்க்கின்றன என்பது தெரியாததால் தனக்கு வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் அவர் கருதுகிறார்.

“வேலைச் சந்தையில் வாய்ப்புகள் மிகக்குறைவாக இருப்பதாகத் தோன்றுகிறது. வேறு வழியின்றி, கிடைக்கும் பணியில் சேர்ந்துவிட்டால் எதிர்காலத்தில் பிடிக்காத துறையில் தொடர்ந்து செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுவேன் எனும் பயம் அதிகமாக இருக்கிறது,” என்றார் புதிய பட்டதாரியான கவிதா தண்ணீர்மலை, 23.

விரைவில் பணியில் சேரவேண்டும் எனும் சமூக அழுத்தம், காத்திருந்து விருப்பமான பணியில் சேரலாம் எனும் எண்ணத்திற்கு முட்டுக்கட்டையாக அமைவதாகவும் சொன்னார் அவர்.

தொடர்ந்து, உருப்படிவ (Modelling Software) மென்பொருள் தொடங்கி, செயற்கை நுண்ணறிவு வரை அனைத்தையும் பாடத்திட்டத்தில் கற்பதாகவும், அதனை உரிய முறையில் பயிற்சி செய்வது பணி வாய்ப்புகளை அதிகரிக்கலாம் என்றும் கருத்து தெரிவித்தார் அவர்.

வரும் ஜனவரி மாதத்துக்குள் பணியில் சேர்ந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் பிரியதர்‌ஷினி, 24. நிர்வாக, அமைப்புசார் திறன்களை நிறுவனங்கள் எதிர்பார்ப்பதாக அவர் நம்புகிறார்.

பணிச்சூழலுக்கேற்ப மேம்பட்ட திறன்களை நிறுவனங்கள் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிடும் அவர், கல்வியில் திறன்களை மேலோட்டமாக மட்டுமே கற்க முடிவதாகக் கூறினார்.

அவற்றை மேம்படுத்த சுயபயிற்சியோடு பணிச்சூழலுக்கு ஏற்ற மென்திறன்களைக் கற்க வேண்டும் எனவும் சொன்னார்.

நிச்சயமற்ற சூழலுக்கிடையிலும் விரைவில் பணியில் அமரும் நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறினார் அவர்.

குறிப்புச் சொற்கள்