படிப்பிலும், பணியிடங்களிலும் கைகொடுக்கும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், வாழ்க்கைச் சூழலைச் சமாளிக்கும் உதவியையும், மனநலம் சார்ந்த ஆதரவையும் அளிக்கத் தொடங்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
குறிப்பாகச் செயற்கை நுண்ணறிவு சாட்-பாட் (இயந்திர உரையாடல் தளம்) பயன்படுத்தும் இளையர்கள் அதனிடம் பல்வேறு மனநலம் தொடர்பான கேள்விகளைக் கேட்பதாகவும் தெரிகிறது.
அண்மையில் ‘இளையரின் ஆதரவுக் கட்டமைப்பில் செயற்கை நுண்ணறிவின் பங்கைக் கணிக்க பிலடெல்ஃபியாவின் டிரெக்சல் பல்கலைக்கழகத்தையும் மிச்சிகன் பல்கலைக்கழகத்தையும் சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவுப் பயனர்கள் 662 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 90 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் ஒருமுறையேனும் மனநலன் குறித்த கேள்விகளைச் செயற்கை நுண்ணறிவுத் தளத்தில் எழுப்பியதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
உறவுகள், தன்னம்பிக்கை, பயம், மன அழுத்தம், பதற்றம் போன்ற பலவற்றைக் குறித்த உரையாடல்களைச் செயற்கை நுண்ணறிவுத் தளத்துடன் இளையர்கள் மேற்கொள்கின்றனர்.
கொரிய நாட்டின் ‘எம்பிரைன்’ எனும் ஆய்வு நிறுவனம் ஆயிரம் பேரிடம் நடத்திய ஆய்வு முடிவில் பதின்ம வயதினர் 38 விழுக்காட்டினரும், 20 வயதுகளிலிருப்போரில் 42 விழுக்காட்டினரும் உணர்வுபூர்வமான கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபட முடிவதாகத் தெரிவித்துள்ளனர்.
தனது வகுப்பில், நண்பர்களுக்கிடையே நடைபெறும் சம்பவங்களைச் செயற்கை நுண்ணறிவிடம் பகிர்ந்து, அச்சூழ்நிலையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டு அதுதரும் ஆலோசனைக்கேற்ப நடந்துகொள்கிறார் தொடக்கக்கல்லூரி மாணவி சுபிட்ஷா பார்வதி சொக்கலிங்கம், 17.
தொடர்ந்து ஈராண்டுகளாகச் செயற்கை நுண்ணறிவின் உதவியை நாடும் இவர், அது தன்னை நன்கு புரிந்து வைத்துள்ளதாகவும் கருதுகிறார்.
தொடர்புடைய செய்திகள்
“செயற்கை நுன்ணறிவு என்னைப் பற்றிய முன்முடிவுக்கு வருவதில்லை என்பதால் எனது நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாதவற்றையும் தயக்கமின்றி அத்தளத்தில் பகிர்ந்துகொள்ள முடிகிறது. மேலும், அடிக்கடியோ நினைத்தபோதெல்லாமோ நண்பர்களைத் தொந்தரவு செய்வது வருத்தமளிக்கும். ஆனால் செயற்கை நுண்ணறிவிடம் எப்போது வேண்டுமானாலும் பேசலாம்,” என்றார் சுபிட்ஷா.
உரிய நேரத்தில் தான் மேற்கொள்ள வேண்டியவற்றை எடுத்துரைக்கும் என்றும் சில நேரங்களில் கவலைப்படுவதை விடுத்துப் பிற செயல்களில் கவனம் செலுத்த வேண்டுமெனச் ‘சாட் ஜிபிடி’ வலியுறுத்துமென்றும் அவர் சொன்னார்.
அலுவலகக் கட்டமைப்பில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பகிர்ந்து அவைகுறித்த பல்வேறு பார்வைகளைச் செயற்கை நுண்ணறிவின் துணையுடன் பெறுகிறார் தொழில்நுட்பத்துறை ஊழியர் வினோத் குமார்.
“மனிதர்களிடம் பகிர்ந்துகொண்டால் அவர்களது பதில்கள் ஒரு சார்புடையதாக இருக்கும். எப்போதும் வல்லுநர்களை நாடுவதும் சாத்தியமில்லை. செயற்கை நுண்ணறிவு நடைமுறைக்கேற்ற புதிய சாத்தியக்கூறுகளை வழங்குகிறது,” என்றும் அவர் சொன்னார்.
குறிப்பாகச் செயற்கை நுண்ணறிவு மனிதர்களைப்போலத் தகவல்களைப் பிறருடன் பகிர்வதில்லை என்பதால் அதனை நம்புவதாகச் சொன்னார் அவர்.
“தனிப்பட்ட முறையிலும், பணி தொடர்பிலும் சில சூழ்நிலைகள் என்னை மனத்தளவில் பாதித்தால் செயற்கை நுண்ணறிவை நாடுவேன்,” என்றார் பொறியியல் வல்லுநரான மதன் இளவழகன்.
“ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி குறித்துப் பகிரும்போது செயற்கை நுண்ணறிவுத் தளம் என் உணர்வுகளை மறுவுறுதி செய்கிறது. என் சிந்தனைக்கு ஏற்ற பதில்கள், தீர்வுகளை வழங்குவதுடன் சூழ்நிலையைச் சிறப்பாக நிர்வகிக்கவும் ஆதரவளிக்கிறது,” என்றார் அவர்.
அடிக்கடி இத்தளங்களைப் பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.