நான்கு சுவர்களுக்குள் இருப்பது மட்டுமே வீடல்ல, அன்பும் அரவணைப்பும் நிறைந்திருக்கும் இடம் யாவும் வீடுதான், அங்குள்ள யாவரும் குடும்பத்தினர்தான் என்பது சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழக (என்யுஎஸ்) தமிழ்ப் பேரவை ஏற்பாடு செய்த ‘நம்ம வீட்டுப் பொங்கல் 2.0’ கொண்டாட்டத்தில் கண்கூடாகத் தெரிந்தது.
ஜனவரி 12ஆம் தேதி மாலை 5 முதல் இரவு 9 மணிக்கும் மேலாக, கொட்டும் மழையிலும் தொய்வில்லாத உற்சாகத்துடனும் சகோதரத்துவத்துடனும் இளையர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் மற்ற பல்கலைக்கழகங்கள், பலதுறைத் தொழிற்கல்லூரிகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். அது சிங்கப்பூர்த் தமிழ் இளையர்களிடையே உள்ள ஒற்றுமையைப் பறைசாற்றியது.
மொத்தம் 260க்கும் மேற்பட்ட நுழைவுச்சீட்டுகள் விற்பனையாகின.
நுழைவுச்சீட்டுகளின் விலை, முன்பே வாங்கியவர்களுக்குப் பத்து வெள்ளி; கடைசி இரு வாரங்களில் வாங்கியவர்களுக்கு 12 வெள்ளி.
சிங்கப்பூரின் பல இன சமுதாயத்தின் அடையாளமாக, என்யுஎசைச் சேர்ந்த இரு சீன மாணவர்கள் கலந்துகொண்டு, பொங்கல் கொண்டாட்டத்தைக் கண்டு வியந்தனர்.
“இந்நிகழ்ச்சிக்கு எங்கள் நண்பர்கள் எங்களை வரவேற்றதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இதுதான் எங்கள் முதல் பொங்கல் கொண்டாட்டம். அனைவரும் வண்ணமயமான உடைகள் அணிந்து வந்தனர்,” என்று அமதியாஸ், ஏல்கன் இருவரும் கூறினர்.
இவ்வாண்டு என்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 50வது ஆண்டு நிறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டு, ‘நம்ம வீட்டு பொங்கல்’ முதன்முறையாக நடைபெற்றது.
பாரம்பரியம், புத்தாக்கம்
பொதுவாகக் காணும் பொங்கல் நடவடிக்கைகளையே வழங்காமல் இளையர்களைக் கவரும் நவீன அம்சங்களை என்யுஎஸ் குழுவினர் புகுத்தியிருந்தனர்.
உதாரணத்துக்கு, ‘பொட்டு ஃபார் பொண்ணு’ எனும் நகைச்சுவையான விளையாட்டில், கண்கட்டியபடி திரைப்பட நடிகர்களின் நெற்றியில் சரியாகப் பொட்டை வைக்கவேண்டும்.
‘கோலியுடன் கோல்ஃப்’, ‘நீர்ப்புட்டிகள்மீது வளையல்கள் வீசுதல்’, ‘கண்கட்டி உறியடித்தல்’, போன்ற பல சுவாரசியமான விளையாட்டுகளும் இடம்பெற்றன.
வழக்கமான மருதாணி இடுதல், பொங்கல் பானையில் ஓவியந்தீட்டுதல், போன்ற நடவடிக்கைகளும் இருந்தன. ஆனால் ஒரு வித்தியாசம், பொங்கல் பானைகள் மிகச் சிறிதாக, அழகாக இருந்தன. விரைவில் வண்ணம்தீட்டி முடிக்க முடிந்தது.
“நம் இளையர்கள் பலரும் பொங்கலைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளாமலிருக்கிறார்கள். இவ்விளையாட்டுகள்மூலம் அவர்கள் பொங்கலைப் பற்றி பலவற்றையும் கற்றுக்கொண்டனர்,” என்றார் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் நிரஞ்சனா ராமசாமி.
மழையின் காரணமாகக் கூட்டம் திரளத் தாமதமானதால் நிகழ்ச்சியிலும் தாமதம் ஏற்பட்டது.
எனினும், அதை ஈடுகட்டும் வகையில் அறுசுவை விருந்து, கூட்டு விளையாட்டுகள், ஆடல் பாடல்கள் அனைத்தும் விமரிசையாக நடைபெற்றன.