ஒரு நாள் கழிந்தது

ஒரு நாள் கழிந்தது

7 mins read
f41b0d4f-5577-415b-8d61-c37d2dba53ed
-

“கமலம்! அந்தக் கூஜாவிலே தண்ணீர் எடுத்தா! வெற்றிலைச் செல்லம் எங்கே? வச்சது வச்ச இடத்தில் இருந்தால்தானே? ” என்று முணுமுணுத்தார் முருகதாசர்.

கையில் இருக்கும் கோரைப் பாயை விரிப்பதே ஒரு ஜாலவித்தை. நெடுநாள் உண்மையாக உழைத்தும் பென்ஷன் கொடுக்கப்படாததால் அது நடு மத்தியில் இரண்டாகக் கிழிந்து ஒரு கோடியில் மட்டிலும் ஒட்டிக் கொண்டிருந்தது. அதை விரிப்பது என்றால் முதலில் உதறித் தரையில் போட்டுவிட்டு, கிழிந்து கிடக்கும் இரண்டு துண்டுகளையும் சேர்த்துப் பொருத்த வைக்க வேண்டும். அதுதான் பூர்வாங்க வேலை. பின்பு, விடுதலை பெற முயற்சிக்கும் அதன் கோரைக் கீற்றுகள் முதுகில் குத்தாமல் இருக்க ஒரு துண்டையோ அல்லது மனைவியின் புடவையையோ அல்லது குழந்தையின் பாவாடையையோ எதையாவது எடுத்து மேலே விரிக்க வேண்டும்.

முருகதாசரைப் பொறுத்தவரை (அது அவரது புனை பெயர்) அது இரண்டு பேர் செய்ய வேண்டிய காரியம்.

மறுபடியும், “கமலா!” என்று கூப்பிட்டார்.

சமையல் + உக்ராண + ஸ்நான அறை மூன்று நான்கு கட்டுகள் தாண்டி, துண்டாக, அலாதியாக இருப்பதால் இவருடைய பாய் விரிப்புக் கஷ்டங்கள் அந்த அம்மையாருக்கு எட்டவில்லை.

சென்னையில் ‘ஒட்டுக் குடித்தனம்’ என்பது ஒரு ரசமான விஷயம். வீட்டுச் சொந்தக்காரன், குடியிருக்க வருகிறவர்கள் எல்லாரும் ‘திருக்கழுக்குன்றத்துக் கழுகு’ என்று நினைத்துக்கொள்ளுவானோ என்னமோ!

‘குடித்தனக்காரர் குடியிருக்க இரண்டு ரூம் காலி’ என்று வெளியில் போட்டிருந்த போர்டை நம்பித்தான் முருகதாசர் வீடு - வேட்டையின்போது அங்கே நுழைந்தார்.

உள்ளே வீட்டின் பாக வசதி[Ϟ]தான் விசித்திரமாக இருந்தது. முன்பக்கம், ஒற்றைச் சன்னல் படைத்த ஒரு சிற்றறை. அதற்கப்புறம் எங்கோ பல கட்டுகள் தாண்டி மற்றொரு அறை. அதுதான் சமையல் வகையறாவுக்கு. முதல் அறை படிக்க, படுக்க, [Ϟ]நாலு பேர் வந்தால் பேச இவை எல்லாவற்றிற்கும் பொது இடம். முதலில், முருகதாசர் பொருளாதாரச் சலுகையை உத்தேசித்தே அதில் குடியிருக்கலாம் என்று துணிந்தார். அதனால், தமக்கும் தம் சகதர்மிணிக்கும் இப்படி நிரந்தரமான ‘பிளவு’ இருக்கும் என்று சிறிதும் எட்டி யோசிக்கவில்லை; மேலும் அவர் யோசிக்கக்கூடிய[Ϟ]வரும் அல்லர்.

பக்கத்தில் இருந்த அரிக்கன் விளக்கை எடுத்துக்கொண்டு அவர் சமையல் பகுதியை நோக்கிப் பிரயாணமானார்.

இடைவழியில், குழாயடியில் உள்ள வழுக்குப் பிரதேசம். அடுத்த பகுதிக்காரர் விறகுக் கொட்டில் முதலிய விபத்துக்கள் உள்ள ‘பிராட்வே’ யை எல்லாம் பொருட்படுத்தாது, ஒருவாறு வந்து[Ϟ]சேர்ந்தார். சமையல் அறை வாசலில் ஒரே புகைமயம். “கமலம்!” என்று கம்மிய குரலில் கூப்பிட்டுக்கொண்டு உள்ளே நுழைந்தார்.

உள்ளே புகைத் திரைக்கு அப்பாலிருந்து, “வீடோ லட்சணமோ! விறகைத்தான் பார்த்துப் பாத்து வாங்கிக்கொண்டு வந்தியளே! ஒங்களுக்கின்னு தண்ணீலே முக்கிக் கொடுத்தானா? எரியவே மாட்டுதில்லை? இங்கே என்ன இப்பொ? விறகு வாங்கின சீரைப் பாத்து மகிழ வந்திட்டியளாக்கும்?” என்று வரவேற்புப் பத்திரம் வாசிக்கப்பட்டது.

“தீப்பெட்டியை இப்படி எடு! அதுக்காகத்தான் வந்தேன்!” என்று நடைப் பக்கமாகப் பின்நோக்கி நடந்தார்.

“இங்கே குச்சியுமில்லை, கிச்சியுமில்லை! அலமுவெ தீப்பெட்டி வாங்க அனுப்பிச்சேன். மண்ணெண்ணெய் விளக்கே நீங்கதான் துடைச்சிக் கொள்ளணும்!” என்றாள் கமலம்.

“குழந்தையை அந்தியிலே வெளியிலே அனுப்பிச்சையே, நான் வந்த பிறகு வாங்கிக்கொள்ளப்படாதா?” என்று அதட்டினார் முருகதாசர்.

“ஆமாம், சொல்ல மறந்தே போயிட்டுதே... செட்டியார் வந்துவிட்டுப் போனார், நாளை விடியன்னை வருவாராம்!” என்றாள் கமலா.

முருகதாசர் இந்தப் பாசுபதாஸ்திரத்தை எதிர்பார்க்கவில்லை.

“வந்தா, வெறுங்கையை வீசிக்கிட்டுப் போக வேண்டியதுதான்! வாரத்துக்கு நேரம் காலம் இல்லை?” என்று முணுமுணுத்துக்கொண்டே வெளியேற முயற்சித்தார்.

“அங்கே, எங்கே போயிட்டிக, ஒங்களைத்தானே! கொஞ்சம் நல்லெண்ணை வாங்கிட்டு வாருங்களேன்!”

“எங்கிட்ட இப்பொ துட்டுமில்லே, காசுமில்லே!” என்று திரும்பி நின்று பதிலளித்தார் முருகதாசர்.

“அதுவும் அப்படியா! இன்னா இந்த மிளவொட்டியிலே மூணு துட்டு இருக்கு. அதெ எடுத்துக்கிட்டுப் போங்க!”

“வந்ததுக்கு ஒரு வேலையா? அங்கே ஒருபாடு எழுதித் தொலைக்கணும். இங்கே உனக்கு இப்பத்தான் எண்ணெ புண்ணாக்கு - பகலெல்லாம் என்ன செய்துகிட்டு இருந்தே? இருட்ன பொறவா எண்ணை வாங்குறது! எல்லாம் நாளைக்குப் பார்த்துக்கலாம்!”

“சோம்பல் வந்தா சாத்திரமும் வரும். எல்லாம் வரும். ஏன் அன்னைக்குப் போய் வாங்கிட்டு வரலியா? எல்லாம் உங்களுக்குத்தான். இப்பத்தான் அப்பளக்காரன் வந்து கொடுத்துட்டுப் போனான்; பிரியமா சாப்பிடுவேளென்னு சொன்னேன். பின்னே அந்தச் சின்னக் கொரங்கே என்ன இன்னும் காணலே! போனப்ப போனதுதான்; நீங்கதான் சித்த பாருங்களேன்!”

இவ்வளவிற்கும் அவர் இருந்தால்தானே! விறகுப் பிரதேசத்தைத் தாண்டி வழுக்குப் பிரதேசத்தை எட்டிவிட்டார். புகையையும் பேச்சையும் தப்பி வந்தால் போதும் என்றாகிவிட்டது. முருகதாசரின் ஆஸ்தான அறையின் ஒரு விசித்திரம் என்னவென்றால் சென்னையில் ‘லைட்டிங் டைம்’ அட்டவணையைக்கூட மதிக்காமல் அது இருண்டுவிடும்.

இம்மாதிரி மண்ணெண்ணெய் நெருக்கடி ஏற்படாத காலங்களில் அந்த அறைக்குத்தான் முதலில் இராத்திரி. ஆனால் எண்ணெய் நெருக்கடிக் காலங்களில் சிவபெருமானின் ஒற்றைக் கண் போன்ற அந்த அறையின் சன்னல், எதிர்ப்பக்கம் நிற்கும் மின்சார விளக்குக் கம்பத்திலிருந்து கொஞ்சம் வெளிச்சத்தைப் பிச்சை வாங்கும். கார்ப்பரேஷன் தயவு வரும் வரை, ஸ்ரீ முருகதாசர் வேறு வழியில்லாமல் தெரு நடையில் நின்று அலமுவின் வருகையை எதிர்நோக்கியிருக்க வேண்டியதாயிற்று.

முருகதாசர் வானத்தை அளக்கும் கதைகளைக் கட்டுவதில் மிகவும் சமர்த்தர்; ‘சாகாவரம் பெற்ற’ கதைகளும் எழுதுவார். அந்தத் திறமையை உத்தேசித்து, ஒரு விளம்பரக் கம்பெனி மாதம் முப்பது ரூபாய்க்கு வானத்தையளக்கும் அவரது கற்பனைத் திறமையைக் குத்தகை எடுத்துக் கொண்டது. அதனால் அவர் வீர புருஷர்களையும், அழியாத சித்திரங்களையும் எழுத்தோவியமாகத் தீட்டுவதை விட்டுவிட்டு, சோயாபீன் முதல் மெழுகுவர்த்தி வரையிலும் வெளிநாடுகளிலிருந்து வந்து குவியும் பண்டங்களின் காவியங்களை இயற்றிக்கொண்டிருக்கிறார். ‘டபாஸா’ வீரிய மாத்திரையின் மீது பாடிய பரணியும், தேயிலைப் பானத்தின் சுயசரிதையும், அந்தத் தமிழ் தெரியாத வெள்ளைக்காரனையும் இவர் மீது அனுதாபம் காட்டும்படி செய்துவிட்டன. அதற்காகத்தான் அந்த முப்பது ரூபாய்!

வீட்டு எதிரில் நிற்கும் மின்சார விளக்கின் உதவியைக் கொண்டும் பிள்ளையவர்களால் அலமுவைக் கண்டுபிடிக்க இயலவில்லை. வெற்றிலை, வேலை, குழந்தை வராத காரணம் - எல்லாம் அவரது மனத்தில் கவலையைக் கொண்டு கொட்டின. நடையிலிருந்து கீழே இறங்கிச் சந்தின் மூலை வரை சென்று பார்த்து வரலாமா என்று புறப்பட்டார்.

பக்தி மார்க்கத்தில் ஏகாக்கிரக சிந்தையைப் பற்றிப் பிரமாதமாக வர்ணிக்கிறார்கள். மனம் ஒரே விஷயத்தில் லயித்துவிட்டால் போதுமாம். பிள்ளையவர்களைப் பொறுத்தவரை அவர் இந்தப் ‘பணம்’ என்ற மூன்றெழுத்து மந்திரத்தில் தீவிர சிந்தை செலுத்துபவர்.

பணத்தை வாரிச் சேர்த்துக் குபேரனாகிவிட வேண்டும் என்ற எண்ணம் ஒன்றுமில்லை. கவலையில்லாமல் ஏதோ சாப்பிட்டோம் வேலை பார்த்தோம் வந்தோம் என்று இருக்க வேண்டும் என்பதற்காக எத்தனையோ வித்தைகளையெல்லாம் செய்துவிட்டார். அவருடைய குடும்பத்தின் வரவுசெலவு திட்டத்தை மட்டிலும் அவரால் எப்பொழுதும் சமன் செய்ய முடியவில்லை.

நிதி மந்திரியாக இருந்தால் பட்ஜெட்டில் துண்டுவிழுவதற்குப் பொருளாதாரக் காரணங்கள் காட்டிவிட்டு, உபமான்யங்களைத் தைரியமாகக் கேட்கலாம். கவலையில்லாமல், கொஞ்சமும் உடம்பில் பிடிக்காமல் கடன் கேட்டுப் புறப்படுவதற்கு முடியுமா? குடும்பச் செலவு என்றால், சர்க்கார் செலவாகுமா?

கவலை இருக்கப்படாது என்ற உறுதியின் பேரில்தான் நம்பிக்கை என்ற இலட்சியத்தை மட்டும் திருப்தி செய்விக்க, ‘சாகாவரம் பெற்ற’ கதைகளை எழுதுவதைக் கொஞ்சம் கட்டி வைத்துவிட்டு, இந்த ‘லிப்டன் தேயிலை’, காப்பி, கொக்கோ ஆகியவற்றின் மான்மியங்களை அவர் எழுத ஆரம்பித்தார். ஒரு பெரிய நாவல் மட்டிலும் எழுதிவிட்டால் அது ஒரு பொன் காய்க்கும் மரமாகிவிடும் என்று அவர் நெஞ்சழுத்தத்துடன் நினைத்த காலங்களும் உண்டு. இப்பொழுது அது ஒரு நெடுந்தூர இலட்சியமாகவே மாறிவிட்டது.

முன்பாவது, அதாவது நம்பிக்கைக் காலத்தில், ஏதோ நினைத்ததைக் கிறுக்கிவைக்கக் காகிதப் பஞ்சமாவது இல்லாமல் இருந்தது. அப்பொழுது ஒரு பத்திரிகை ஆபீஸில் வேலை. ஆனால், இப்பொழுது காசு கொடுத்து வாங்காவிட்டால் முதுகில்தான் எழுதிக்கொள்ள வேண்டும். முருகதாசர் நல்ல புத்திசாலி. அதனால்தான் முதுகில் எழுதிக் கொள்ளவில்லை. யாராவது ஒரு நண்பரைக் கண்டுவிட்டால் போதும், தமது தூர இலட்சியத்தைப் பற்றி அவரிடம் ஐந்து நிமிஷமாவது பேசாமல் அவரை விடமாட்டார். நண்பர்கள் எஸ்.பி.ஸி.ஏ. (விலங்குவதைத் தடுப்புச் சங்கம்) யின் அங்கத்தினர்களோ என்னவோ, அத்தனையும் சகித்துக் கொண்டிருப்பார்கள்.

சந்தில் திரும்பிப் பார்த்தால் அலமுவின் ராஜ்யம் நடந்து கொண்டிருந்தது.

“ஏட்டி என்ன! நீயோ, உன் லட்சணமோ?” என்று ஆரம்பித்தார் முருகதாசர்.

ஒரு ரிக்‌ஷா வண்டி ஏர்க்கால் பக்கத்தில் வண்டிக்காரன் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். அலமு, ஒரு சுண்டெலி மாதிரி ஜம்மென்று மெத்தையில் உட்கார்ந்திருக்கிறாள். ரிக்‌ஷாக்காரனுடன் ஏதோ நீண்ட சம்பாஷணை நடந்துகொண்டிருந்தது போலும்!

“ஏட்டி!” என்றார் முருகதாசர் மறுபடியும்.

“இல்லையப்பா? நீ இனிமே என்னை அலமுன்னு கூப்பிடுவேன்னியே!” என்று சொல்லிக்கொண்டே வண்டியிலிருந்து இறங்கப் பிரம்மப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தாள்.

“தீப்பெட்டி எங்கடீ?” என்றார் முருகதாசர்.

“கடைக்காரன் குடுக்கமாட்டேங்கறான். அப்பா!”

“குடுக்காதெ போனா நேரே வீட்டுக்கு வாரது! இங்கே என்ன இருப்பு?”

“அப்படிக் கேளுங்க சாமி! நம்ம கொளந்தென்னு மெரட்டாமே சொல்லிப் பாத்தேனுங்க. வீட்டுக்கு வண்டியிலே கொண்டாந்து வுடணுமுண்ணு மொண்டி பண்ணுதுங்க. எனக்குக் காலுலே சுளுக்கு. அந்தச் சின்னாம்பயலே காணும்...” என்று நீட்டிக்கொண்டே போனான் ரிக்‌ஷாக்காரன்.

“அப்பா, அவன் பங்கஜத்தெ மாத்ரம் கூட்டிக்கிட்டே போரானே!” என்றாள் அலமு. பங்கஜம் எதிர்வீட்டு சப்ரிஜிஸ்திரார் குழந்தை. அது ரிக்‌ஷாவிலும் போகும், மோட்டாரிலும் போகும்! அந்த விஷயம் ரிக்‌ஷாவுக்குத்தான் புரியுமா, குழந்தைக்குத்தான் புரியுமா?

“அலமு! ராத்திரிலே கொழந்தைகள் ரிக்‌ஷாவிலே போகப்படாதுடீ! எறங்கி வா!” என்று குழந்தையைத் தூக்கிக்கொண்டு வாடிக்கைக் கடைக்காரனிடம் சென்றார் முருகதாசர்.

பிள்ளையவர்கள் கடையை எட்டு முன்பே கடைக்காரன், “சாமி! இந்த மாதிரியிருந்தா கட்டுமா? போன மாசத்திலே தீர்க்கலியே! நானும் சொல்லிச் சொல்லிப் பார்த்தாச்சு. பாக்கியை முடிச்சு, கணக்கெத் தீர்த்துடுங்க! எனக்குக் குடுத்துக் கட்டாது. நான் பொளைக்க வந்தவன்!” என்றான்.

“நானும் பிழைக்க வந்தவன்தான். எல்லாரும் சாகவா வருகிறார்கள்! மின்னே பின்னேதான் இருக்கும். நான் என்ன கொடுக்க மாட்டேன் என்று சொல்லுகிறேனா?”

“போங்க சாமி! அது ஒண்ணுதான் பாக்கி! ரூ. 2.5.4 ஆச்சு. எப்ப வரும்?”

“தீப்பெட்டியெக் குடு, சொல்றேன்!”

“பெட்டிக்கென்ன பிரமாதம்! இந்தாருங்க, எப்ப வரும்?”

“எப்பவா? சம்பளம் நாளைக்குப் போட்ருவாங்கன்னு நினைக்கிறேன்; நாளை இல்லாவிட்டால் திங்கட்கிழமை.”

“திங்கட்கிழமை நிச்சயந்தானே? நான் சீட்டுக் கட்டணும்!” என்றான்.

“சரி, பார்க்கிறேன்!” என்று திரும்பினார் தாசர்.

“பார்க்கிறேன்னு சொல்ல வேண்டாம். நிச்சயமாக வேண்டும்!”

ஒரு கவலை தீர்ந்தது... அதாவது திங்கட்கிழமை வரை.

பாதி வழியில் போகையில், “அப்பா!” என்றது குழந்தை.

- தொடர்ச்சி அடுத்த ஞாயிறு முரசில்

குறிப்புச் சொற்கள்
புதுமைப்பித்தன்