கலபுரகி: தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளின்படி, ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே அனைத்துத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுவிட்டன என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
“நாங்கள் தேர்தல் வாக்குறுதிகளின்படி திட்டங்களைச் செயல்படுத்தவில்லை என்று எதிர்க்கட்சிகள் அரசியலுக்காகப் பொய்ப் பிரசாரம் செய்து வருகின்றன. மேலும், எங்கள் அரசிடம் உள்கட்டமைப்புப் பணிகளுக்குத் தேவையான நிதி இல்லை என்றும் பேசி வருகின்றனர்.
“ஜெவர்கி என்ற ஒரு தொகுதிக்கு மட்டும் ரூ.906 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. எங்களிடம் நிதிப்பற்றாக்குறை இருந்தால் எவ்வாறு எங்களால் இதுபோன்ற திட்டங்களைச் செயல்படுத்த முடியும்?” என்று முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
“வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலேயே அரசு செயல்படுகிறது. அதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த தேர்தலில், 592 வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வழங்கியது. 243 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. எஞ்சிய வாக்குறுதிகளும் வருகிற நாள்களில் நிறைவேற்றப்படும்” என்றார் திரு சித்தராமையா.
ரயில்வே மற்றும் நீர்நிலைத் துறைகளுக்கான மத்திய துணை அமைச்சர் வி.சோமண்ணா, அண்மையில் சித்தராமையா பெயருக்குத்தான் முதல்வராக உள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் அளவிற்கு கர்நாடக அரசிடம் நிதி இல்லை என்று கூறியிருந்தார். அவருக்குப் பதிலளிக்கும் வகையில், காங்கிரஸ் அளித்த 592 தேர்தல் வாக்குறுதிகளில் ஆட்சிக்கு வந்து ஒரே ஆண்டில் 243 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுவிட்டன என்று திரு சித்தராமையா கூறியுள்ளார்.
அதிகாரப் பகிர்வு
இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கும், துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கும் இடையே அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் குறித்து கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாகப் பேசப்படுகிறது.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள அகில இந்திய காங்கிரசின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடகாவில் முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் பதவிப் பரிமாற்றத்தின்போது கருத்து வேறுபாடுகள் எழுந்தால் அவர்கள் இருவரையும் புதுடெல்லிக்கு வரவழைத்து அது குறித்து விவாதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
கடந்த நவம்பர் 20 ஆம் தேதி காங்கிரஸ் அரசு தனது ஐந்தாண்டு பதவிக்காலத்தின் பாதியை நிறைவுசெய்ததையடுத்து, தலைமைத்துவத்திலும் அதிகாரப் பகிர்விலும் மாற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

