தலைப்பு: இவள்...? : சிறுகதைத் தொகுப்பு
நூலாசிரியர்: மணிமாலா மதியழகன்
பதிப்பாளர்: Singapore : Manimala Mathialagan, 2019.
குறியீட்டு எண்: Sing MAN
அனைத்து உரிமைகளும் காப்புரிமைக்கு உட்பட்டவை.
பத்து சிறுகதைகளின் தொகுப்பு. சிறுகதையில் துப்பாக்கி மாட்டப்பட்டிருப்பதாகக் காட்டப்பட்டால் கதை முடிவதற்குள் அது வெடித்தாக வேண்டும் என்பது சிறுகதைக்கே உரிய இலக்கணம். இந்த இலக்கணம் சிறுகதைகளில் தவறாமல் கடைப்பிடிக்கப்பட்டிருப்பதைக் கதைப்பின்னலும் கதை சொல்லும் பாங்கும் தெளிவுறப் படம்பிடித்துக் காட்டுகின்றன.
ஓர் உணர்வை அல்லது நிகழ்வை மையமாக்கி இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பல கதைகள் பின்னப்பட்டுள்ளன. முதல் கதை ‘ங்கா….’ தேன்சிட்டின் கூடு கட்டும் முயற்சியை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. சிங்கப்பூர்ச் சூழலில் ஒரு குருவி கூடு கட்டுவதில் உள்ள சிக்கலைக் கதை நகர்வின் மூலம் தொய்வின்றி எடுத்துச்செல்வதில் தன் திறமையை நிரூபித்துள்ளார் நூலாசிரியர்.
‘நோவு’ என்னும் சிறுகதை, நாற்பது வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் அனுபவத்தையும் அப்போது ஏற்படும் மன உளைச்சலையும் தெளிவாக எடுத்துக்கூறுகிறது. இக்கதையின் முடிவு வாசிப்பவரை சிறிது நேரம் அதிர்ச்சிக்குள் இட்டுச் செல்லும். ‘துரந்தரி’ என்னும் கதைக்கான தலைப்பும் கதையும் பணிப்பெண்ணின் வாழ்வை நேர்த்தியாகக் காட்டுகின்றது.
தொடர்புடைய செய்திகள்
ஆர்வமூட்டும் ஆரம்பம், கதைத்திருப்பம், எதிர்பாராத முடிவு என்னும் முப்பரிமாண வடிவினை அனைத்துக் கதைகளிலும் காண முடிகின்றது. ‘திடீர் வெள்ளத்தால் நாலாபுறமும் சிதறியோடும் நதியைப் போல’ என்பது போன்ற அழகான உவமைகள் ஆசிரியரின் மொழித்திறனைப் பறைசாற்றுகின்றன. அனைத்து வயதினருக்கும் உகந்த சிறந்த இலக்கியப் படைப்பாக ‘இவள்….?’ விளங்குகிறது.
- தேசிய நூலக வாரியத்துக்காக, விஸ்வலிங்கம் தேன்மொழி
நூல் கிடைக்கும் நூலகங்களின் விவரங்களைப் பெற: http://catalogue.nlb.gov.sg

