புதுடெல்லி: டெல்லி, செங்கோட்டை அருகே கடந்த 10ஆம் தேதி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 73 பேரிடம் சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டு இருக்கிறது. சம்பவம் நடந்த டெல்லி, வெடிபொருள்கள் சேகரிக்கப்பட்ட ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் பல்வேறு சோதனைகளும், விசாரணைகளும் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், டெல்லி கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 மருத்துவர்கள் உள்பட 4 பேரை என்.ஐ.ஏ. விடுவித்துள்ளது. முக்கியக் குற்றவாளி என கைது செய்யப்பட்ட மருத்துவர் உமருக்கும், பரிதாபாத்தின் அல்-பலா பல்கலைக் கழக மருத்துவர்களுக்கும் இச்சம்பவத்தில் எந்த தொடர்பும் இல்லை என என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹரியானாவில் கைது செய்யப்பட்ட மருத்துவர்கள் ரேஹன், முகம்மது, முஸ்தகீம், உர முகவர் தினேஷ் சிங்ளா ஆகியோரை புலனாய்வு முகமை விடுவித்துள்ளது. மூன்று நாள்கள் தொடர் விசாரணைக்குப் பிறகு இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

