பாட்னா: அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்பதற்கு வியூகம் வகுத்துக் கொடுக்கும் ‘கிங் மேக்கர்’ என்றழைக்கப்படும் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பீகார் தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளார்.
கிஷோர் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் திரண்டு வந்தது. அதைக் கண்ட அவர், பெரும் நம்பிக்கையுடன் 238 தொகுதிகளிலும் தனது கட்சியான ஜன் சுராஜ் சார்பில் வேட்பாளர்களை நிறுத்தினார்.
வேட்பாளர் தேர்வின்போது சல்லடை போட்டு சலித்து, மக்களிடம் நன்மதிப்பு பெற்ற வேட்பாளர்களாகத் தேர்வு செய்தார்.
ஜன் சுராஜ் கட்சி, எப்படியாவது 150 தொகுதிகளுக்கு மேல் மாபெரும் வெற்றி பெறும் என்று நம்பிக்கையுடன் பிரசாரம் செய்து வந்தார். மேலும் 150 தொகுதியில் ஒரு தொகுதியில் தோற்றால்கூட அது தோல்வியாகவே கருதப்படும் என்று கூறியிருந்தார்.
பீகாரில் பா.ஜ.க. – காங்கிரஸ் கூட்டணிகளிடையே கடுமையான போட்டி நிலவி வந்த சூழலில் புது போட்டியாளராக தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி களத்தில் குதித்தது. மொத்தமுள்ள 238 தொகுதிகளிலும் அக்கட்சி போட்டியிட்டது.
தேர்தல் முடிந்ததும் நாளிதழ்கள் கருத்துக் கணிப்புகளை வெளியிடத் தொடங்கின. அப்போது அனைத்து நாளிதழ்களின் கருத்துக் கணிப்புகளும் கிஷோரின் கட்சி படுதோல்வியைத் தழுவும் என்றும் ஓரிரண்டு தொகுதிகளில் மட்டும் வெல்லும் வாய்ப்பு உள்ளதாகக் கூறின. மேலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்தன.
கருத்துக் கணிப்பு முடிவுகளால் வெகுண்டெழுந்த பிரசாந்த் கிஷோர், “நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் 25 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது. அவ்வாறு நடந்துவிட்டால் நான் அரசியலைவிட்டே விலகுவேன்,” என்று சவால்விட்டார். ஆனால், கருத்துக் கணிப்பில் வெளிவந்ததுபோலவே பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் அமைந்துவிட்டன.
மாநிலம் முழுவதும் மூவாயிரம் கிலோ மீட்டர் பேரணி சென்று தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார் பிரசாந்த் கிஷோர். செல்லும் இடங்களில் எல்லாம் நல்ல கூட்டமும் கூடியது. இதனால் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தார் அவர். ஆனால் இந்தத் தேர்தலில் ஒரு இடத்திலும் ஜன் சுராஜ் கட்சி முன்னிலை பெறாதது அக்கட்சியின் தொண்டர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

