சென்னை: பயிற்சி மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீட்டில், வெளிநாட்டில் மருத்துவம் பயின்றவர்களுக்கு 20 விழுக்காடு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சென்னையில், ஜனவரி 6ஆம் தேதி செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
மேலும், அந்த மாணவர்களுக்குத் தற்காலிகச் சான்றிதழ் வழங்குவதற்கு தமிழ்நாடு மருத்துவக் கழகம் காலம் தாழ்த்தி வருவதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்துடன், வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரி பிரிவினர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
மாநில அரசு அதன் 11 மருத்துவக் கல்லூரிகளில் வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்குக் கட்டாயச் சுழலும் மருத்துவப் பயிற்சி (CMRI) பெறுவதற்கு முன்பு அனுமதி அளித்திருந்தது, அது இப்போது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
“வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களைப் புறக்கணிப்பது, அவர்களை அவமரியாதையாக நடத்துவதை தமிழ் நாடு மருத்துவக் கழகம் நிறுத்திக் கொள்ள வேண்டும்,” என்றும் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
“வெளிநாடுகளில் மருத்துவம் படித்த தமிழக மாணவர்களுக்கு உதவ தேசிய மற்றும் மாநில அளவில் உதவி மையங்கள் நிறுவப்பட வேண்டும்,” என்று சங்கத்தினர் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
இந்தப் போராட்டத்துக்குத் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் வந்து ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “அரசு மருத்துவக் கல்லுாரிகளில் பயிற்சி இடங்களில் 20 விழுக்காட்டை வெளிநாடு மருத்துவ மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கடந்த 2022ஆம் ஆண்டில் முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மாணவர்கள், மாவட்ட அரசு மருத்துவமனைகளில் பயிற்சி பெறலாம் என தேசிய மருத்துவ ஆணையம் அனுமதித்தும் செயல்படுத்தாதது குறித்து தமிழக அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.
“மாணவர்களின் கோரிக்கை தொடர்பாக மக்களவையில் பேசுவதுடன், மத்திய அமைச்சரிடமும் வலியுறுத்துவேன்,” என்றார் திருமாவளவன்.
மாநில உரிமைகளைப் பறிக்கும் வகையில், சோதனைக்கூட தொழில்நுட்பம், துணை மருத்துவம் ஆகிய படிப்புகளைப் படிக்க ‘நீட்’ தேர்வை திணிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

