ஆசையுடன் பேரனைக் கொஞ்சி மகிழ்ந்தாள் அம்மா, “குழந்தை, அப்படியே தன் தாத்தாவை உரித்துக் கொண்டு பிறந்திருக்கிறான் சுந்தரம். அவர் பேரையே வச்சுடனும்ப்பா” என்றபோது, உணர்ச்சி மிகுதியால், அவள் கண்கள் தளும்ப, குரல் தழுதழுத்தது, பக்கத்திலிருந்த ரஞ்சனி, முகம், சுளித்தாள். குழந்தை அப்படியே அவன் அப்பா ஜாடைதான், பார்க்க வந்தவுங்க எல்லோரும் அப்படித்தான் சொல்றங்க”, என்றாள் காட்டமாக, நானும், அம்மாவும், ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்துச் சிரித்துக் கொண்டோம்.
ஏனெனில், முழுக்க, முழுக்க, நான் என் அப்பாவின் மறு அச்சு என்பது எங்கள் ஊரறிந்த, உறவறிந்த விஷயம். ஆனால், எப்போதுமே அம்மாவின் பேச்சுக்கு, ஏட்டிக்குப்போட்டியாகப் பேசுவதுதானே ரஞ்சனியின் வழக்கம்,
இளம் வயதில் தந்தையை இழந்துவிட்ட என்னை, கண்போல் வளர்த்து, படிக்கவைத்து, ஒருகௌரவமிக்க குடிமகனாக்க என் அன்னைபட்ட பாடு, கொஞ்சநஞ்சமல்ல.
அப்பா வைத்துச்சென்ற கொஞ்ச நஞ்ச ஆஸ்திகளைவைத்துக்கொண்டு, அந்தக் குக்கிராமத்தில், அவள் மாடாய் உழைத்து, என்ன மனிதனாக்கிய தெய்வம். வாழ்வில் உயர்ந்தநிலைக்குவந்து, அம்மாவின் கஷ்டங்களுக்கெல்லாம் பரி காரமாய்,எல்லாவித,வசதிகளுடனும் ஒரு ராணிபோல் வைத்துக் காப்பாற்றவேண்டும் என்ற ஆசை ஒருவேள்வித்தீயாய், என்னுள் வளர்ந்து கொண்டிருந்தது, வாழ்வு வந்தது, வசதிவந்தது. வாழ்க்கைத் துணையாய் ரஞ்சனியும் வந்தபோது, என் கற்பனைகள், கனவுகளாயின. ஒருபடித்த அதிகாரியை, கணவனாக, மகிழ்ச்சியுடன், ஏற்றுக் கொண்ட, ரஞ்சனிக்கு, ஒருபட்டிக்காட்டு விதவை தன் மாமியாராக வந்துவிட்டதில் கொஞ்சமும் உடன் பாடில்லை தன் அதிருப்தியை செயல்களில் காட்டியபோது நான் நிலைகுலைந்து போனேன்.
என் மகிழ்ச்சிதான் அம்மாவின் ஒரே குறிக்கோள், தன் வருகையால், மகனின் மணவாழ்வு, பாதிக்கப் படக்கூடாது என்ற முடிவில் நகரத.து வாழ்க்கை, தனக்கு ஒத்து வரவில்லலை,” என்று கூறிக்கொண்டு, மறுபடியும், கிராமத்துக்கே போய்விட்டாள். நான் இருக்குமிடம் நரகமாய் இருந்தால் கூட அவளுக்கு அது சொர்க்கம் என்பது, என் உணர்வுகள் அறிந்த, விஷயமாயிற்றே!
வாய்விட்டு அழக்கூட, வழியற்ற, ஆண்மகவை பிறந்துவிட்டது குறித்து நான் வருந்தியது உண்மை. ஆனால், அம்மா, அதற்க்காக, ஒதுங்கி, ஒரேயடியாக, எங்கள் உதாசீனப் படுத்தவில்லை. இந்த ரஞ்சனி, கல்யாணமாகி, ஐந்து வருடங்களாகியும் குழந்தை இல்லாமல், தவித்து மருகியபோது, மலடி என்று ஏசவில்லை.
மற்றெருவளை மருமகளாக்கும், முயற்சியில் இறங்கவில்லை. மாறாக, பரிவுடன் அணைத்து, ஆறுதல் சொல்லி, “நம் வம்சத்திலேயே ரொம்ப நாள் கழிச்சுத்தான் குழந்தை பிறக்கும். அஞ்சு தலமுறையா ஆண்குழந்தைதான். உனக்கும் கடவுள் கண்திறப்பான், என்று கூறி அமைதிப்படுத்தியவள் அவள். அவள் வாக்கு பலித்தது, அந்த மசக்கைக்குக் கூட, ஒடிவந்து உதவி, வாய்க்குருசியானதை வகைவகையாய் சமைத்துப் போட்டு, மருமகள் முகம் சுளித்து, ‘போ’ எனச்செல்லும் வரை நன்றியுடன் முகம் பார்க்கும், நாயாக உழைத்தவள் என்தாய்,
சில தனிமைகளில், அவள் என்னுடன் வைத்துக் கொள்ள முடியாத ஆற்றாமையில், மனம் நொந்து, அவள் மடியில் முகம் புதைத்து, நான் குழுறும் வேளைகளில், அம்மாவின் இதமான சொற்கள் ரணமான என் இதயத்திற்க்கு மருந்தாகும்
“சுந்தரம்! கண்டதையும் நெனைச்சு, மனசை வருத்திக்காதே. நான் விரும்பறதெல்லாம் உன் சந்தோஷம் ஒண்ணுதான், எனக்குன்னு எந்த வசதியான வாழ்க்கையும் வேண்டாம். எங்க இருந்தாலும், என் நெனப் பெல்லாம், உன்னச் சுத்திக்கிட்டுத் தான் இருக்கும், நாம மகிழ்ச்சியா இருந்தாத்தான், அம்மா, நிம்மதியா இருப்பாங்கிறதை, நெனவில் வச்சுக்கிட்டு நீ ரஞ்சனியை ரொம்ப அனுசரிச்சுப் போகணும். நான்பழுத்தஇலை.இன்னைக்கோ, நாளைக்கோ உதிர்ந்திடுவேன், நீ வளமா, வளரவேண்டிய இளம் பயிர் . கவலைகளால் நீ வாடி விடக்கூடாது. உனக்காக நான் பட்ட கஷ்டங்கள்ளை யெல்லாம் வீணக்கிடாதே சுந்தரம்!” என்று என் கேசத்தை, கோதியவாறு அவள் பேசியபோது, நான் உருகிப் போனேன். அதற்க்குப்பிறகு, மறந்தும் கூட நான் ரஞ்சனியை கண்டிப்பதில்லை ஆனல், அம்மாவின் மீதிருந்த அன்பு மட்டும் என் இதயத்தின் அடித்தளத்தில் நீறு பூத்த நெருப்பாய், கனன்று கொண்டிருந்தது.
அம்மாவுக்காக, நான் எது வாங்கிக் கொடுத்தாலும், அது ரஞ்சனிக்கு பிடிக்காது. நான் அவளுக்கு மட்டுமே உறியவன் என்பதில், வேறுயாருக்கும் அதில் பங்கில்லை என்பதில் அவள் தீவிரமாக இருந்தாள். அம்மாவும் என்னை ஆழ்ந்து நேசிப்பவள்தானே! அவளால் மட்டும் என்னை எப்படி ரஞ்சனியிடம் முழுமையாகத் தாரை வார்க்க முடிந்தது? அதுதான் தாய்மையின் தனித்துவமா?
சென்றதீபாவளிக்கு அம்மாவுக்கு ஒருபட்டுப்புடவை எடுத்தேன். என் நீண்ட நாள் விருப்பம் அது.அம்மா பெரும்பாலும் காட்டன் புடவைதான் கட்டுவாள். ரஞ்சனி ஏற்கனவே ஒன்றுக்கு ரெண்டா தன் செலக்ஷனை முடித்துக்கொண்டாள். வேலைக்குப் போகும்பெண் விதத்துக்கு ஒன்றய் கட்ட விரும்புவது சகஜம்தானே! அம்மா தன்புடவையை, ரஞ்சனியிடம் காட்டியபோது, அவள் “புடவை ரோம்ப அழகாய் இருக்குமாமி! எனக்கே இந்தக் கலரில் ஒண்ணு வாங்கனும்னு, ரொம்பநாளாய் ஆசை” என்ற வார்த்தைகள் சற்றும் யோசிக்காமல் வந்தன. அம்மா, மறுபேச்சுப் பேசாமல் அந்தப் புடவையை, ரஞ்சனிக்கே கொடுத்து விட்டாள், ஆக அந்தத் தீபாவளிக்கு வழக்கமாய் கிடைக்கும் நூல்புடவைகூட,அம்மா வுக்கு, இல்லாமல் போயிற்று.ரஞ்சனி, அறைக்குள் வந்து, என் அருகே அமர்ந்தாள். அது அவள் பிறந்த வீடு. குழந்தை பிறந்து ரெண்டு மாசமாக போகிறது. நானும் அம்மாவும் வந்திருந்தோம், குழந்தையைப் பார்க்க .”என்னங்க! அடுத்த மாசத்தோட லீவு முடியுது, நான் வேலையில் சேரனும்”.
“அதுக்கென்ன! ஒருநல்ல நாள் பார்த்து எழுது, நான் வந்து கூட்டிட்டுப் போகிறேன்.”
“அதுக்கில்லைங்க, குழந்தையைப் பார்த்துக்க ஆள் வேணமா? என் அம்மாவை கொஞ்சநாளைக்கு, வரச் சொல்லலாம்ணு பார்க்கிறேன்.”
“எதுக்கு ரஞ்சனி? உன் தங்கைக்கு கல்யாணம் முடிவாகப் போகுது, தம்பிங்க காலேஜுக்கு போறங்க. இத்தனையும் விட்டுட்டு அவுங்க நம்மக்கூட வரமுடியுமா?
“வந்தா என்னங்க? ஒரு சமயா சமயத்துக்கு உதவத்தானே தாய் வீடுஇருக்கு?
குழந்தை அழும்குரல் கேட்டது
பசிக்கு அழுத குழந்தையை, தொட்டிலில் இருந்து, அள்ளி எடுத்து வந்து, மார்போடணைத்து பாலூட்ட ஆரம்பித்தாள் ரஞ்சனி.அவள் முகம், மகிழ்வில் மலர்ந்து, தாய்மைப் பெருக்கில், மந்தகாசத்துடன் ஜொலித்தது. ஒருகணம் அங்கு அமைதி நிலவியது. நான் மீண்டும் பேச்சைத் தொடர்ந்தேன்.
“வேண்டாம் ரஞ்சனி ! அவங்களை தொந்தரவு, செய்ய வேண்டாம்.நாம வேற ஏற்ப்பாடு பண்ணிக்குவோம்” .
ரஞ்சனி என்னை வெறித்து நோக்கினள்.
“நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு, எனக்குப் புரியுது, உங்கம்மாவை வந்து, குழந்தையைப் பார்க்கச், சொல்லலாம் என்று நினக்கிறீங்க, அதுவேண்டாம், பட்டிக்காட்டு பத்தாம் பசலி,அவங்களாலே குழந்தையை ஒழுங்கா வளர்க்கமுடியாது. விளக்கெண்ணையும், வேப்பெண்ணையும் புகட்டி கெடுத்துடுவாங்க. விசுக்கென்று நிமிர்ந்தேன். என்னுள் மறைந்து கிடந்த கோபம் பீறிட்டு எழுந்தது.
ஆயினும் நிதானமாக, “அப்ப ஒண்ணு செய், குழந்தையை, உன் அம்மாவிடமே விட்டுவா. அடிக்கடி நாம வந்து பார்த்துக்கலாம், அவன் செலவுக்கு மாதா மாதம் பணம் அனுப்பிடலாம்”.
ரஞ்சனி திடுக்கிட்டு நிமிர்ந்தாள, தாயின் அணைப்பிலிருந்து விடுபட்ட குழந்தை, வீறிட்டு அழ, உள்ளே வந்த அம்மா குழந்தையை வாங்கித், தோளில் சார்த்தி, வெளியே போய் சமாதானப் படுத்த ஆரம்பித்தாள்.
ரஞ்சனி கோபத்தால் முகம் சிவக்கக் கத்தினள்.
“உங்களுக்கு பைத்தியமா பிடிச்சிருக்கு? தாய்ப்பால் குடிக்கிற மூணுமாசத்து பச்சைக்குழந்தை, அவனை விட்டுட்டு வரச் சொல்றீங்க அவன் உடம்பு என்னாகும்?
“ஒண்ணும் ஆகாது. புட்டிப் பாலிலேயே அவன் நல்ல, வளருவான், எத்தனையோ குழந்தைகள் இன்னிக்கு தாயை விட புட்டிப்பாலைத்தானே நம்பி இருக்காங்க உன்குழந்தை மட்டும் என்ன உசத்தி” என்குரல் சூடேறியது .
“உசத்திதான். என்குழந்தை உசத்திதான்”, ஹிஸ்டீரியா வந்தவள் போல் அலறினாள் ரஞ்சனி. “அஞ்சு வருஷமா, குழந்தை இல்லாமே நான் பட்டபாடு, வேதனை, எனக்குத்தானே தெரியும்.பிறக்குமா? பிறக்குமான்னு, காத்திருந்து, நான்பெற்ற பிள்ளயை நான் ஒரு நிமிஷம் கூட பிரிய மாட்டேன். எனக்கு வேலையும் வேணாம், ஒரு மண்ணும் வேணாம் போதும், போதுங்கிற அளவுக்கு பாலூட்ட நான் இருக்கும்போது, புட்டிப் பால் குடிச்சு வளர்ற தலையெழுத்து அவனுக்குவேணாம்,”
“இல்ல ரஞ்சனி, நான் சொல்றதைக் கேளு,” அம்மாவின் கையிலிருந்த என் அன்புச் செல்வனை வாங்கிக் கொண்டு நான் உள்ளே வந்து, நெஞ்சோடு அணைத்துக்கொண்டு, வேதனையோடு பேச ஆரம்பித்தேன். மனதுக்குள் வெகுகாலம் அடைபட்டுக் கிடந்த தாபம் பிரவாக மெடுத்தது.
“இவனுக்கு கண்டிப்பா நீ தாய்ப்பால் கொடுக்கக்கூடாது, கொடுத்தினா உன்மேல் இவனுக்கு அன்பும் பாசமும் அதிகமாகும்.
தொப்புள்கொடி உறவல்ல வா?. ரத்தத்தோட கலந்த பந்தம் லேசில் போகாது. என்னிக்காவது ஒருநாள் இவனுக்குன்னு. ஒருத்தி வருவா. உனக்கும் அவனுக்கும் நடுவிலே நிற்பா. உன்னியும் ஒதுக்கமுடியாமே, அவளயும் தவிர்க்க முடியாமே இவன் தவிப்பான். அந்தத்துயரம்! அம்மம்மா ! அதை நாம் அவனுக்கு கொடுக்கக்கூடாது ரஞ்சனி! உன்கருவில் சுமந்த அவனுக்கு நீ எதாவது நன்மை செய்யனும்னா, அது இதுதான், பால் மணத்தை அவனுக்கு பழக்கப்படுத்தாதே, அது இவனுக்கு நீ செய்கிற பாவம்!” கண்ணீர் துளிகளை மறைக்க தலையை திருப்பிக்கொண்டேன்.
என்சொற்களின் தீவிரம் அவளைப் பாதித்திருக்கவேண்டும், அதன் சத்தியம் அவளை உலுக்கியிருக்க வேண்டும். பரிவுடன் என் கைகளைப் பற்றிக்கொண்டாள்.
“என்னை, மன்னிச்சிடுங்க. உங்களை நான் ரோம்ப நோகடிச்சுட்டேன். தாய்மையை நானும் ஒருதாயாக மாறும் போதுதான், புரிஞ்சுக்க முடியுது என் பிள்ளை என்கூட இருக்கறது நியாயம்னா, நீங்களும் உங்க அம்மா கூட இருக்கறதுதானே நியாயம், நாம எல்லோரும் ஒண்ணா இருப்போம்.அத்தை நம்ம வம்சத்துக்கு ஒரு வாரிசுதான்னு சொன்னாங்க. அந்த ஒரு வாரிசும், பாசபந்தங்களோடு, ஜீவனுள்ள மனிதனா வாழட்டும். என்றபோது, என்னுள் குதூகலம் குமிழியிட்டது,
“அம்மா ரஞ்சனி என்ன சொல்றான்னு வந்து கேளேன்! மகிழ்ச்சியுடன் கூவினேன்.
தனலஷ்மி கருப்பையா

