மொட்டக்கிள்ளு

மொட்டக்கிள்ளு

11 mins read
d80ec37e-2149-4dea-a2c8-c79bca1a1da0
எழுத்தாளர் கி.சுப்பிரமணியம் - கி.சுப்பிரமணியம்

‘என்னையா வஹாப், எத்தனைமுறை சொன்னாலும், வெற்றிலைய மொட்டையாவே கிள்ளுறியே. கொஞ்சம் அரை அங்குலம் காம்பை விட்டு கிள்ளையா!’ என்று கெஞ்சாத குறையாய் தலையில் கைவைத்தபடி சொன்னார் தோட்டத்தின் உரிமையாளர் சிவலிங்கம்!

பக்கத்தில் பாத்தியின் நடுவே வளரும் புற்களைக் களையெடுக்கும் வேளையில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த மாரியம்மாளும் வாயில் வெற்றிலையைக் குதப்பிய வண்ணம் சிரிக்க ஆரம்பித்தாள்!

‘நீங்க எத்தனை முறை சொன்னாலும் அவரோட விரல் மொட்டையாத்தான் கிள்ளுது. அவர் விரல்ல ஏதோ கோளாறுபோல தெரியுது’ என்று சொல்லி மீண்டும் வெற்றிலைக் கறை படிந்த பல் தெரிய சற்று உரக்கச் சிரித்தாள்.

இப்படி வெற்றிலையைக் காம்புக் குறைத்துக் கொஞ்சம் மொட்டையாக கிள்ளுவதைத் தவிர்க்க சிரமப்படுவதால், வஹாப்பிற்கு மொட்டக்கிள்ளு என்பது பட்டப்பெயர் ஆயிற்று.

அந்தத் தோட்ட உரிமையாளரைத் தவிர எல்லோரும் மொட்டக்கிள்ளு என்றே கூப்பிடுவது வழக்கமாகிவிட்டது. மாரியம்மாள் மட்டும் நாணா என்று கூப்பிட்டுப் பழகிவிட்டாள்.

தலையில் துண்டால் கட்டிய முண்டாசும், கணுக்காலுக்கு சற்று உயர கட்டிய சாயம்போன லுங்கியும், பானை வயிற்றுக்குக் கீழ் கட்டிய அகலமான பச்சை நிற, பணம் மட்டும் சில பொருட்கள் வைக்கும் பச்சை நிற பெல்ட்டும், சரிவர முகச்சவரம் செய்யாத தோற்றத்துடனும் காட்சி தருபவர் வஹாப். ஐந்தரையடி உயரமும், அறுபது வயதைத் தாண்டியவருமான இந்த மனிதர், நல்ல உழைப்பாளி.

இப்படிக் காம்புக் குறைத்துக் கிள்ளுவதைக் கண்டு தோட்ட உரிமையாளர் குறை கண்டு சொன்னாலும், சிரித்துக்கொண்டே சரி இனிமேல் சரியாக் கிள்ளுறேன் என்று சொல்வாரே ஒழிய, முகத்தில் எந்த அதிருப்தியோ கோபதாபமோ கொஞ்சமும் காட்டமாட்டார். அப்படி ஒரு பிறவி!

பீடி புகைக்கும் பழக்கத்தைத் தவிர, வேறு வேண்டாத பழக்கம் அவருக்கில்லை.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

அவரின் பூர்வீகத்தைப் பற்றி யாருக்கும் அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை. ஒருமுறை தான் பிறந்து வளர்ந்தது தமிழகத்தின் தென்காசிப் பகுதியின் ஏதோ ஒரு கிராமம் என்று மட்டும் சொல்லியதைக் கேட்டுள்ளனர். ஆயினும் மலேசியாவின் மூவார் பகுதியில் தான் பலகாலம் இருந்துவிட்டு சிங்கப்பூர் வந்திருக்கிறார்.

சிங்கப்பூரில் இந்த அறுபதுகளின், காலக்கட்டத்தில் இரண்டு வெற்றிலைத் தோட்டங்கள் இருந்தன. ஒன்று வஹாப் வேலை செய்யும் இந்தப் பழைய சுவா சூ காங் பகுதி. மற்றொன்று கிராஞ்சி என்னும் பகுதியில் இருந்தது.

நூறு வெற்றிலை ஒரு கவுளி என்றும், முப்பது கவுளி ஒரு முட்டி என்றும் சொல்லப்படும். எப்படியும் இரண்டு அல்லது மூன்று முட்டிகளை ஒரு நாளுக்குள் கிள்ளி கட்டிவிடுவார் வஹாப்.

மாரியம்மாளுக்குப் பாத்தியில் முளைக்கும் புற்களைக் களையெடுப்பதும், வாழைமரத்தின் காய்ந்த மேல்பட்டைகளை உரித்தெடுத்துத் தோட்டத்தின் இடையே இருக்கும் சிறிய தாமரைக் குளத்தில் ஊறவைத்துப் பின்பு அதைக் கொஞ்சம் காயவும் வைத்து, கயிறாகப் பிரித்தெடுத்து, வஹாப்பிடம் கொடுப்பது போன்ற வேலைகள் ஒதுக்கப்பட்டன. அந்தக் கயிற்றைக்கொண்டு வெற்றிலைக் கொடிகள் ஒழுங்காகப் படர, மரக்கொம்புடன் இணைத்துக் கட்டுவது வஹாப்பின் மற்றுமொரு வேலை.

இப்படியே ஒன்பது ஆண்டுகளாக இருவரும் இணைந்தே உழைத்து வருகின்றனர். மதத்தால், சில பழக்கவழக்கங்களால் வேறுபட்டும், இருவரும் நல்ல நண்பர்களாக உழைத்து வந்தனர். ஆயினும் தாங்கள் கடந்து வந்த பாதையைப்பற்றி அதிகம் பகிர்ந்துகொள்வது மாரியம்மாள் மட்டும்தான். மலாயாவின் பாகாங் மாநிலத்தின் ஜெராண்டுட் பகுதியில் ஏதோ ஒரு தோட்டப்பகுதியில் இரண்டு சகோதரிகளுடன் பிறந்து, மிகவும் வறுமையில் சிரமப்பட்டு வளர்ந்தவள் மாரியம்மாள். பெற்றோரை சிறு வயதில் இழந்ததால், தன் இரு இளைய சகோதரிகளை வளர்த்து, கொஞ்சம் படிக்கவைத்து, எப்படியோ மணம் முடித்தும் வைத்துவிட்டாள்.

மணமுடித்து குழந்தைகள் பெற்று வாழ்ந்தாலும், அங்கு பணக்கஷ்டம் தீர்ந்தபாடில்லை. தான் மட்டும் தனியாக வாழக் கற்றுக்கொண்டு, தன் உழைப்பால் வந்த சிறு வருமானத்தையும் தங்கைகளுக்காகத் தொடர்ந்து கொடுத்து உதவிவந்த மாரியம்மாள், தனக்கென ஒரு மண வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவில்லை. அவளும் இப்படியே உழைத்து உழைத்து திருமணவயதைத் தாண்டிவிட்டாள்!

குறைந்த வருமானத்தில், தன் தோட்டத்திலிருந்து உழைப்பதைவிட வெளியூர் சென்று வேலை செய்வதென்ற முடிவுக்கு வந்தாள் மாரியம்மாள். எப்படியோ தெரிந்த ஒருவரின் தயவால், மிக தொலைவான சிங்கப்பூருக்கு வந்து இங்கு வேலையில் அமர்ந்துகொண்டாள். இங்கு, தான்பெற்ற வருமானத்தை மிகவும் சிக்கனப்படுத்தி, தன் தங்கைகளுக்குத் தொடர்ந்து பணம் அனுப்பிவந்ததோடு, ஆண்டுக்கு ஒருமுறை தன் ஊருக்குச் சென்று குடும்பத்தைக் கண்டு வந்தாள்.

காலம் உருண்டோடி இப்பொழுது நாற்பத்தெட்டு வயதைத் தொட்டுவிட்டாள் மரியம்மாள்!

வேலைக்கு இடையில், தான் வாழ்ந்து வந்த மலாயா தோட்டப்பகுதியைப் பற்றியும், அங்கு பட்ட சிரமங்கள் பற்றியும், சற்று எட்டி நின்று வேலை செய்யும் வஹாபிற்கு சொல்லிக்கொண்டே தன்வேலையில் ஈடுபடுவாள். வஹாப்பும் உம்....உம் என்று சொல்லிக்கொண்டே, மாரியம்மாளின் கடந்த கால கதையையும், நிகழ்காலக் குடும்பப் பிரச்சினைகளையும் கேட்டுக்கொண்டே வேலையில் ஈடுபடுவார்.

பாவம் மாரியம்மாளுக்கு பேச்சுத்துணைக்கு, இவரை விட்டால், [Ϟ]வேறு யார்தான் இருக்கிறார்!

உள்ளத்தில் இருக்கும், கவலைகளையும் போராட்டங்களையும் யாரிடமாவது சொன்னால்தானே ஏதோ சுமை குறைந்ததுபோன்ற உணர்வை ஏற்படுத்துகிறது! அதுவும் இடைக்கேள்வி ஏதும் கேட்காது, தொடர்ந்து மாரியம்மாள் பேசிக் கொட்டுவதை உம்ம் போட்டுக் கேட்கும், வஹாப் போன்ற மனிதர் கிடைத்தால், கேட்கவும் வேண்டுமா!

இப்படித்தான் ஒரு நாள் இவர்கள் பேசிக்கொண்டே வேலையில் ஈடுபட்டிருக்கும்போது, திடீரென நீண்ட பாம்பு ஒன்று வஹாப் குந்திக்கொண்டு வெற்றிலை கிள்ளும்போது, பாத்தி வழியே ஊர்ந்து வந்தது. அதன் பாதையில் வஹாப் இருப்பதைக் கண்டு அவரை நெருங்கி தலைதூக்கி சீற்றமுடன் நின்றது.

பழுப்பு நிறத்துப் பாம்பு, வெற்றிலைக் கொடியுடன் பின்னி இருந்தால், பார்ப்பதற்குச் சரியாகப் புலப்படாது! அப்படியிருக்க, இது பாத்திவழி வந்து பக்கத்தில் படமெடுத்து நிற்பதை வஹாப் உணராது, மாரியம்மாளின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்க, இரண்டு பத்தி தள்ளி வேலைசெய்துகொண்டிருந்த மாரியம்மாள் கண்களுக்கு அந்தப் பாம்பு எப்படியோ தென்பட்டுவிட்டது!

அவள் மிகவும் நிதானத்தோடு பேச்சுகொடுத்தாள் வஹாப்பிடம்.

‘நாணா, கொஞ்சம்கூட அசையாது அப்படியே இருங்க. ரொம்பப் பக்கத்தில் பாம்பு படமெடுத்து நிக்கிது. அசைந்திங்கன்னா கொத்திடும்’ என்று அவர் காதுக்குக் கேட்கும்படி நிதானமாகச் சொல்லவும், முதலில் ஏதோ பயம் காட்ட மாரியம்மாள் செய்யும் வேடிக்கையென மனதில் நினைத்த வஹாப், மாரியம்மாளின் முகத்தைக் கூர்ந்து பார்த்தவுடன், அவள் சொல்வதில் உண்மை இருக்கும் என்பதை உணர்ந்து அப்படியே சிலைபோல், கொஞ்சமும் அசையாது இருந்தார். சிறிது நேரத்தில், சற்று பின்வாங்கிய பாம்பு, அடுத்த பாத்தி வழியாக நகர்ந்தது!

இதைக் கண்ட வஹாப்பிற்கு உடலெல்லாம் வியர்த்தது. ஊர்ந்து சென்ற பாம்பு, தாமரைக் குளத்திற்குள் நுழைந்து மறைந்துவிட்டது!

மிகவும் பயந்துபோனார் வஹாப். அன்றைக்கு தொடர்ந்து வேலை செய்யப் பயந்து, தோட்டத்தைவிட்டு வெளியே வந்துவிட்டார்.

மறுநாள் காலையும் அவரின் பயம் தணிந்தபாடில்லை

‘தோட்டத்துல பாம்பு இன்னும் எங்கோ பதுங்கி இருக்கும்போது, அங்க நின்னு வேலை செய்ய ரொம்பப் பயமா இருக்கு ஐயா’ எனத் தோட்ட உரிமையாளர் சிவலிங்கத்திடம் முறையிட்டார் வஹாப்.

மாரியம்மாள் தனது மலாயா தோட்டத்தில் உழைத்த காலங்களில் பலமுறை பாம்புகளைக் கண்டவளென்ற போதிலும், வஹாப்பின் பயத்தை முன்னிட்டு, அவளும் வஹாப் பேச்சுக்கு ஒத்து ஊதினாள்!

இதை அமைதியாகக் காதுகொடுத்துக் கேட்ட தோட்ட உரிமையாளர் சிவலிங்கம், அங்குப் பாம்பு பிடிக்கும் பழக்கமுடைய இரண்டு இந்தோனேசியர்களைக்கொண்டு பாம்பைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

முதலில் அந்தத் தாமரைக் குளத்தை நீண்ட கம்பு கொண்டு கலக்கியும் பாம்பு வெளியில் வந்தபாடில்லை

இரண்டு நாள் தோட்டத்தின் எல்லாப் பகுதிகளிலும் அலசிப் பார்த்துக்கொண்டிருக்கும்போது ஒரு வெற்றிலைக் கொடியுடன் அந்தப் பாம்பு பின்னிக்கொண்டிருப்பதைக் கண்டு, எப்படியோ திறமையுடன் பிடித்துவிட்டனர் அந்தப் பாம்பு பிடிக்கும் ஆசாமிகள்.

அந்தச் சம்பவத்துக்குப் பின்னரே கொஞ்சம் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு வேலையில் ஈடுபட்டார் வஹாப்.

மாரியம்மாள் அந்தச் சம்பவத்தை மீண்டும் வஹாபிற்கு நினைவுபடுத்தினாள்.

‘பாம்பு பக்கத்துல வந்தப்ப, நீங்க ரொம்பப் பயந்து வேர்த்துப் போய், கண்ணக்கூட சிமிட்டாமல் சிலைபோல ஐந்து நிமிஷம் உட்கார்ந்து இருந்திட்டீங்க’ என்றாள் சற்று வேடிக்கையாக.

‘பாம்பைக் கண்டால் படையும் அஞ்சும் என்பாங்களே. நானும் மனுஷன்தானே. பயம் வராம இருக்குமா’ என்று நகைத்துக்கொண்டே வஹாப் பதில் சொன்னார்.

‘எது எப்படி இருந்தாளும் அன்றைக்கு நீ என் காதுக்கு எட்டும்படி, பாம்பு பக்கத்தில் நிற்பதை சொல்லாவிட்டால், இந்நேரம் பாம்பு கடித்து செத்துப் போயிருப்பேன்’ என்றார் வஹாப்.

‘அப்படிச் சொல்லாதிங்க நாணா. கடவுள்தான் உங்களைக் காப்பாத்தினாரு. கொஞ்ச தூரத்துல அது இருந்து எப்படியோ என் கண்ணுக்குப் பட்டிடுச்சி. சரி விடுங்க அந்தப் பாம்பு பேச்ச! புதுசா வேற ஏதாவது பாம்பு வந்திடப் போகுது.’ என்று சொல்லி கலகலவென வாய்நிறைய வெற்றிலையைக் குதப்பியவாறு சிரித்தாள் மாரியம்மாள்.

‘ஒருநாள் முழுக்க வெற்றிலைய போட்டுகிட்டே இருக்கியே. கொஞ்சம் குறைத்துக்கொள்ளக் கூடாதா மாரியம்மா’ என அக்கறையுடன் கேட்டார் வஹாப்.

‘நீங்க விடாம நாள்முழுதும் [Ϟ]பீடி பிடிக்கிறிங்களே. அத விட்டிங்கன்னா நான் வெத்தல போடுறத விட்டிடுறேன் ‘ என்று சொல்லி மேலும் சிரித்தாள் மாரியம்மாள்.

அதற்குப் பதில் சொல்ல இயலாது, வஹாப்பிற்கு சின்ன புன்னகை மட்டும் பதிலாக வந்தது.

இப்படியே ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டே உழைத்தவண்ணம் மேலும் ஓர் ஆண்டும் ஓடி மறைந்தது.

இப்பொழுதெல்லாம், வெற்றிலை போடுவதை குறைத்துக்கொண்டாள் மாரியம்மாள். தனது கன்னத்தின் உள்பகுதி புண்ணாகிவிட்டதுதான் காரணம். மிகவும் சோர்வாகவும் காணப்பட்டாள். வஹாப்பிடம் பேசுவதும் குறைவு. உணவு உண்ணும் நேரத்தில், கொஞ்சம் வலியுடன் கலந்த முனகலும் கேட்க ஆரம்பித்தது.

இதை வஹாப் கவனித்துக்கொண்டே இருந்தார். ஆரம்பத்தில் இதை ஏதோ சாதாரண சுகக்குறைவு என்றே விட்டுவிட்டார். ஆயினும் இது தொடர்வதைக்கண்டு ஒருநாள் நேராகக் கேட்டுவிட்டார்

‘ஏன் இவ்வளவு சோர்வா இருக்கே. முன்புபோல் இல்லையே நீ. என்ன ஆச்சு?’ என்று கேட்டார் வஹாப்.

‘பல வருஷமா இந்த வெத்தலைய போட்டுப்போட்டு, என்னோட கன்னத்து உள்பகுதி ரொம்பவும் புண்ணாயிடுச்சி. வெத்தலையோடு இந்தச் சுண்ணாம்பையும் கத்தக்காம்பையும் சேர்த்து மென்றதால வந்த வினைன்னு நினைக்கிறேன். போதாதற்கு வெத்தலபோட்டு துப்பியதும் வாய சரியா நான் கழுவுவதும் இல்ல. இப்ப எல்லாம் சேர்த்துப் புண்ணாயிடுச்சி’ என்று சற்றுக் கவலையுடன் சொல்லி முடித்தாள் மாரியம்மாள்.

இதைக் கேட்ட வஹாப், ‘நான் ஆரம்பத்துல இருந்து சொல்லிப்பார்த்தேன், வெத்தல போடுறத குறைக்கச்சொல்லி. நீதான் கேட்கல. சரி டாக்டரைப் போய்ப் பார்த்தியா?’ என்று அக்கறையுடன் கேட்டார்.

‘ஆமாம் போனவாரம் போனேன். வாய திறக்கச்சொல்லி, கன்னத்தின் உள்பகுதி புண்ணில், கொஞ்சம் கிள்ளி எடுத்துச் சோதித்து, என் வாய்ப்புண், ஏதோ கேன்சர் என்று சொல்லி பெரிய ஆஸ்பத்திரிக்கு போய் ஆபரேஷன் செய்யணும்னு சொல்லிட்டார்’ என்றாள் மாரியம்மாள்.

அதிர்ந்து போனார் வஹாப்.

‘அந்த ஆபரேஷனுக்கு ரொம்பப் பணம் செலவாகும்ணு சொல்லுறாங்க’ என ஒரு பெருமூச்சு விட்டாள் மாரியம்மாள்.

அதற்குபின் அங்கு அமைதிதான் நிலவியது.

வாரங்கள் உருண்டோடின. இப்பொழுதெல்லாம், அடிக்கடி மாரியம்மாளால் ஒழுங்காக வேலைக்கு வரமுடிவதில்லை. வந்தாலும் வேலை செய்வதில் மிகவும் சிரமப்படுவாள்.

இப்படியிருக்க, மேலும் ஒரு செய்தி இருவரையும் உலுக்கியது.

அன்று தோட்டம் பக்கம் சிவலிங்கம் வந்தபோது, வஹாப்பும் மாரியம்மாளும் வேலையில் இருந்தனர்.

சிவலிங்கம் இருவரையும், ஒரு மரத்தடி நிழலில் அமரச்செய்து, தானும் அருகில் அமர்ந்தபின், மாரியம்மாளின் உடல்நிலையை விசாரித்தார். பின்பு பேச்சைத் தொடங்கினார்...

‘இந்தத் தோட்டப்பகுதியை, ஒரு தவணைமுறையில்தான் அரசிடமிருந்து பெற்று, பலகாலம் வெற்றிலைத் தோட்டம் போட்டுவந்தேன், ஆனால் இப்போது அரசு மீண்டும் நிலத்தைக் கைப்பற்றவுள்ளது. ஆகையால் தொடர்ந்து இங்கு நீங்கள் [Ϟ]வேலை செய்ய இயலாதென்பதை வருத்தத்துடன் உங்களிடம் சொல்லவேண்டிய நிலையில் நான் இருக்கிறேன்.

இந்த மாதம் முடிய பத்து நாள்தான் இருக்கிறது. மாதம் முடிந்ததும் சம்பளப்பணத்தை பெற்றுக்கொண்டு ஏதேனும் வேறு வேலைக்கு முயற்சிசெய்யுங்கள்,’ என்று சொல்லவேண்டியதைப் பக்குவமாய்ச் சொல்லிவிட்டு நகர்ந்தார், தோட்ட உரிமையாளர்.

வஹாப்பிற்கு இது ஒன்றும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. அவருக்குத்தான் தன் உழைப்பை எதிர்பார்த்து வாழும் உறவுகள் என்பது ஏதும் இல்லையே! மேலும் எதிர்காலச் சிந்தனை என்பதும் அவருக்கு இருந்ததும் கிடையாது. இங்கு வேலை போனால் வேறெங்கோ சென்று பிழைத்துக்கொள்வார். ஆனால் அவர் தொட்டுத்தடவி, செல்லமாய் காம்புகுறைத்துக் கிள்ளும் வெற்றிலைத் தோட்டத்தை விட்டுப் பிரியும் செய்தி, மனதில் ஏக்கத்தை ஏற்படுத்தியது.

ஆனால் மாரியம்மாளின் நிலை!

பணப்பற்றாக்குறை எப்பொழுதும் தலைதூக்கி நிற்கும் தங்கைகளின் குடும்பச் சூழல். இதையும் தாண்டி மாரியம்மாளின் மோசமாகிவரும் உடல்நிலை!

கவலையால் அதிகம் பாதிக்கப்பட்டவள் மாரியம்மாள்தான்.

அன்று அமைதியாகவே வேலையில் மனது ஒன்றாது செய்து முடித்து வீடு நோக்கிச் சென்றனர்.

அன்றிரவு முழுதும் சரியாகத் தூக்கமில்லாது, எதையெதையோ யோசித்தபடி இருந்தார் வஹாப். அவர் உள்ளம் மாரியம்மாளின் தற்போதைய நிலையைப்பற்றி சிந்திக்கத் தொடங்கியது.

அன்றுமட்டும் மாரியம்மாள் பாம்பு ஒன்று மிக அருகில் பட [Ϟ]மெடுத்து நிற்பதை சாதுர்யமாக தன் காதுக்கு எட்டும்படி எச்சரிக்காவிட்டால், நிலைமை என்ன ஆகியிருக்கும் என்று சிந்தித்துச் சிலிர்த்தார் வஹாப். தன்னுயிரைக் காப்பாற்றிய மாரியம்மாள், இன்று மிக மோசமான நோயால், மருத்துவம் பார்க்க வசதியின்றி, செய்த வேலையும் போய் அவதிப்படுகிறாளே என நினைத்து துன்பப்பட்டார்.

வெகுநேரம் யோசித்து, மனதிற்குள் ஒரு முடிவு எடுத்தபின்பு, சற்று அமைதியாக உறங்கினார்.

மறுநாள், இன்னும் சில நாட்களில், வேலை முடிவிற்கு வருவதால், மற்ற வேலை எதிலும் ஈடு [Ϟ]படாமல், இருக்கின்ற வெற்றிலைகளைக் கிள்ளி எடுத்தனர்.

மாலையில் வந்த சிவலிங்கம், இன்றோடு வேலையை முடித்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டு மாத முடிவிற்கு முன்பாகவே, சம்பளத்தைத் தந்ததோடு, சில ஆறுதல் வார்த்தைகள் சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அவர் சென்றபின் இருவரும் மரத்தடியில் அமர்ந்தவண்ணம் தனிமையில் விடப்பட்ட வெற்றிலை கொடிகளை ஏக்கத்துடன் பார்த்தார்கள்.

‘இனி நீ என்ன செய்யப்போவதா திட்டம் மாரியம்மா’ எனச் சற்று தாழ்ந்த குரலில் கேட்டார் வஹாப்,

‘இந்த நோவோடு எங்க போய் வேலை செய்ய. யார்தான் [Ϟ]வேலை கொடுப்பாங்க. இனி எத்தனைநாள் உயிரோட இருக்கப்போறேனோ’ என்று, முதன் முதல் கண்களில் நீர் வழிய, சற்று விம்மலுடன் பதில் சொன்னாள் மாரியம்மாள்.

வஹாப்பின் கண்களும் ஈரமானது.

‘நீ முதலில் சிகிச்சைசெய்துகொள். நான் விசாரித்த வரையில், இது ஆரம்ப கால நோய்தான். குணப்படுத்த முடியும்’ என்றார் பரிவாக வாஹாப்.

‘அது சரி நாணா. ஆனா பணச்செலவுக்கு எனக்கு வழியில்லையே’. என்று மீண்டும் கலங்கினாள்.

ஏதும் பதில்சொல்லாமல், தான் கொண்டு வந்திருந்த பையிலிருந்து, எதையோ எடுத்து, மாரியம்மாளிடம் நீட்டினார் வஹாப்.

‘இதில் ஐயாயிரம் வெள்ளி இருக்குது, இதை எடுத்துக்கிட்டு, உனக்கு வைத்தியம் செய்துகொள்’ என்று கூறினார்.

அதிர்ந்துபோனாள் மாரியம்மாள்!

‘ஐயோ இது என்ன நாணா. நீங்க சேர்த்துவைத்த பணத்த எனக்குக் கொடுத்துட்டு நீங்க என்ன செய்விங்க. பரவால [Ϟ]நாணா, நான் எப்படியும் ஜெரான்டுட் போய் வைத்தியம் செய்துகிறேன்’ என்றாள் தழுதழுத்த குரலில்.

‘நீ என்னப்பத்தி கவலைப்[Ϟ]படாதே மாரியம்மா. நான் தனி ஆளு. எனக்குக் குடும்பம் குட்டி ஏதும் இல்ல. உனக்கு எத்தனையோ குடும்பக் கவலைங்க. நீ தேறிவந்தாதானே, முடியும். ஏதும் யோசிக்காம, இங்கயே நல்லவிதமா சிகிச்சை செய்துக்கோ.

நான் பழையபடி மூவார் போய் வேலைசெய்து பிழைச்சுக்குவேன். சொன்னதச் செய்’ என்றார் சின்ன புன்முறுவலை வரவழைத்துக்கொண்டு.

மாரியம்மாள் கண்கள் அருவியாயின.

‘இத எப்படித் திருப்பித்தரப்[Ϟ]போறேன் நாணா’ என அழுதாள் மாரியம்மாள்.

‘நான் அன்னைக்குப் பாம்பால கடிபட்டிருந்தா என்ன ஆயிருக்கும்? நீ என்ன காப்பாத்தல? திருப்பியொன்னும் தரவேண்டாம் மாரியம்மா, என்று சொல்லிவிட்டு மெல்ல நடந்து சென்றார் வஹாப்.

கி. சுப்பிரமணியம்

குறிப்புச் சொற்கள்