தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
சுருக்கம்: பூமிக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலைச் சமாளிக்க, நிலவிலிருந்து ‘மதிநீர்’ எடுக்கச் செல்லும் விண்வெளி வீரர்கள் இருவர், தங்கள் பயணத்தில் பல தடைகளை எதிர்கொள்கின்றனர். ஆனால், அவர்கள் பூமிக்குத் திரும்புவதற்குள், பெரும் வெப்பத்தால் பூமி அழிந்துபோகிறது.

சிறுகதை: செம்பெருமீன்

8 mins read
ea042ffc-4d8b-4cc1-b934-48b4dc2e8a7d
புவிக்கு ஆபத்து வந்தபோது, நிலவிலிருந்து ‘மதிநீரை’ எடுத்துவரச் செல்லும் இரு விண்வெளி வீரர்களின் சாகசப் பயணமும், அதற்குள் பூமி அழிந்துபோகும் சோகமும் இக்கதை. - படம் செயற்கை நுண்ணறிவு

மில்லத் அகமது

கையில் கட்டியிருந்த திறன் கைகடிகாரத்திலிருந்து வெளியே வந்த மெய்நிகர் வெண்புறா, “தூயவன் உங்களுக்கு நாசாவிடமிருந்து செய்தி வந்துள்ளது” என்று கூவியப்படியே வட்டமடித்தது. அதன் காலில் கட்டியிருந்த செய்தி மடலைத் தொட்டவுடன் புறா, மெய்நிகர் திரையாக மாறியது. நாசாவின் தலைமை விஞ்ஞானி உதயமாகி தூயவனுக்கு முதலில் வாழ்த்துக் கூறி, அவர் நிலவுக்குச் செல்லத் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தியைச் சொல்லி, இது சம்பந்தமாக உங்கள் நாட்டு அமைச்சு உங்களைத் தொடர்புகொள்ளும் என்று சொன்னபோது, ‘மிகவும் அவசரம்’ என்ற செய்தி மெய்நிகர் ஜெட் விமானத்தில் பறந்து வந்தது. உடனே தலைமை விஞ்ஞானி உங்களுக்குச் செய்தி வந்துவிட்டது. இனிமேல் நீங்கள் சூறாவளியாகச் செயல்பட வேண்டும். இந்த உலகத்தின் ஆயுள் உங்கள் கையில்தான் இருக்கிறது, சந்திப்போம் என்று கூறிக் காற்றில் கரைந்தார்.

நாற்பத்தி எட்டு மணி நேரத்தில் தூயவன் புகழின் உச்சிக்குப் போகப் போகிறார். இல்லையில்லை அதற்கும் மேலே, நிலவுக்குப் போகப் போகிறார்.

நல்லா அமைதியாகச் சுற்றிக்கொண்டிருந்த இந்த உலகத்தைச் சனி பிடித்தது போல ஓசோன் படலத்தில் வெற்றிடம் ஏற்பட்டது. புவிப்பரப்பிலிருந்து மேலே இருபது முதல் நாற்பது கிலோமீட்டர் வரை ஓசோன் காற்று மண்டலம் சூழ்ந்துள்ளது. இது சூரிய வெப்பம் பூமியைத் தாக்காமல் காக்கிறது.

இப்போது இந்த ஓசோன் மண்டலத்தில் ஆங்காங்கே ஓசோன்-ஆக்சிஜன் சிதைவுகள் ஏற்பட்டு உலகம் வெப்பமயமானது. கடந்த நூற்றாண்டில் இருந்த வெப்பநிலை தற்போது இரண்டு விழுக்காட்டு செல்சியஸ் உயர்ந்துள்ளது. இந்தப் பருவநிலை மாற்றத்தால், உலகின் வாழ்க்கைமுறை மாறி சுற்றுச்சூழல் சீரழிந்து, கடல்நீர் மட்டம் உயர்ந்துகொண்டே வருகிறது. மேலும் உயிரினங்களும் அழியத் தொடங்கியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டிறுதியில் கொரோனா என்ற புதிய வகைத் தொற்றுநோய் வந்தது. அந்த அரக்கன் எந்த அளவிற்கு மக்களின் உயிரையும், வாழ்வாதாரத்தையும் குடிக்க முடியுமோ, அந்த அளவிற்குக் குடித்துவிட்டுச் சென்றது. இந்த 2030ஆம் ஆண்டுச் செம்பெருமீன் என்ற சிவப்பு அரக்கன் இடியாய் விழுந்து மக்கள் மனங்களைப் பொடியாய் ஆக்கினான்.

சூரியக் குடும்பத்தில் நூறு பில்லியனுக்கும் அதிகமான விண்மீன்கள் இருக்கின்றன. இதன் மேற்பரப்பின் வெப்பநிலை தோராயமாக ஐந்தாயிரத்து ஐநூறு டிகிரி செல்சியஸ் ஆக இருக்கிறது. இது வெண்மை நிறத்தில் ஒளி தரும். ஆனால், பூமிக்கு வந்தடையும்போது சூரிய ஒளியின் நிறமாலையில் ஒளிச்சிதறல் ஏற்பட்டு நம் கண்களுக்கு மஞ்சள் நிறமாகத் தெரிகிறது.

கதிரவனின் உள்ளகத்தில் வினாடிக்கு சுமார் அறுநூறு மில்லியன் டன்கள் ஹைட்ரசன்கள் இணைந்து ஈலியமாக மாறி, வெப்பத்தை அதிகரித்து, வெளிப்புற அடுக்குகள் விரிவடைந்து, சிவந்த நிறத்தில் பூதாகாரமாகப் பெருக்க ஆரம்பிக்கும். இதுதான் செம்பெருமீன், இது புதன் மற்றும் வெள்ளிக் கிரகத்தின் சுற்றுப் பாதையை விழுங்கி விடுகின்ற அளவிற்குப் பெரியதாக இருக்கும்.

இந்தச் செம்பெருமீன் இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து, அதாவது 2040இல் இந்தப் பூமியைத் தாக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் கணித்திருந்தனர். ஆனால், நமது கெட்டநேரம் இப்போது பெருத்து, வளிமண்டலத்தைக் கிழித்துக்கொண்டு பூமியை நோக்கி புறப்பட்டுவிட்டது.

உலக நாடுகளில் முக்கியமான இருபத்தைந்து நாடுகள் அவசரமாக ஒன்றுக்கூடி மெய்நிகர் கூட்டம் நடத்தி ஆலோசித்தன. நாசா விஞ்ஞானிகள், “இந்த உலகத்தைக் காக்க ஒரே வழி, ஓசோன் மண்டலத்தை வலுப்படுத்த வேண்டும். அதற்கு ஒரே தீர்வு, நிலவில் கிடைக்கும் மதிநீர்தான் (Moon water). உடனே நிலவுக்குச் சென்று அந்த மதிநீரைக் கொண்டு வந்து, ஓசோன் படலத்தில் ஊற்ற வேண்டும். அது செம்பெருமீனின் வெப்பத்தைக் குளிர்வித்து, அழித்துவிடும். இல்லையென்றால், செம்பெருமீன் நிச்சயம் பூமியை எரித்துவிடும்,” என்று எச்சரித்தனர்.

மேலும், “மதிநீரைக் கொண்டுவர உடனடியாக இரண்டு விண்வெளி வீரர்கள் தேவை. அதற்கு யாரை அனுப்புவது என்பதை நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். இது வாழ்வா? சாவா? என்கிற இறுதிப் பரீட்சை. எங்களிடம் ஒரு விண்வெளிக்கலம் இருக்கிறது. இரண்டொரு நாளில் அதனைப் பரிசோதனைச் செய்து, தயார் செய்கிறோம்” என்றனர்.

இந்த ஆபத்தான பரீட்சையில் நாங்கள் கலந்துக் கொள்ளவில்லை என்று பல நாடுகள் கூறிவிட்டன. இந்தச் சவாலை ஏழு நாடுகள் மட்டும் ஏற்றுக்கொண்டன. ஆக, ஒரு நாட்டிற்கு இருவர் என மொத்தம் பதினான்கு வீரர்களின் பெயர்களை நியமனம் செய்தனர். அதிலிருந்து தலைசிறந்த இரு வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு நாசாவுக்கு வழங்கப்பட்டது.

தகுதி, அறிவு முதிர்ச்சி, மனவுறுதி, உடனடி நடவடிக்கை, படைப்பாற்றல் மற்றும் மாற்றுச் சிந்தனை ஆகியவற்றின் அடிப்படையில் அந்தப் பதினான்கு வீரர்களில் தூயவனும், அமெரிக்காவைச் சேர்ந்த செல்வி நான்சி செண்டியும் தெரிவு செய்யப்பட்டனர்.

நாசாவில் நுழைந்த தூயவனை வரவேற்ற ஜான் மைக்கேல், அவரை விண்வெளி வீரர்கள் மண்டலத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே சிலருடன் உரையாடிக் கொண்டிருந்த செல்வி நான்சி, தூயவனைக் கண்டவுடன் முகமன் கூறி வரவேற்றார். நான்சி மற்றவர்களைப் போகச் சொல்லிவிட்டு, தூயவனை அழைத்துக் கொண்டு மின்படிக்கட்டு வழியாகக் கீழே இறங்கினார். அப்போது தூயவன், ஜான் மைக்கேலைப் பற்றிப் புகழ்ந்து சொல்ல, நான்சி சிரித்தார். ஏன் சிரிக்கிறீர்கள்? என வினவ, அவர்கள் மனிதர்கள் இல்லை, எந்திரங்கள். இங்கே இருப்பவர்கள் அனைவருமே எந்திர மனிதர்கள் என்ற தகவலை அறிந்த தூயவன் சற்று மலைத்துத்தான் போனார்.

இருவரும் தலைமை விஞ்ஞானி அறைக்குள் முக அடையாளத்தைப் பயன்படுத்தி உள்ளே நுழைந்தனர். அந்த அறை விண்வெளிக்கலத்தின் உள்ளமைப்பு மாதிரி வடிவமைக்கப்பட்டிருந்தது. “இந்த உலகத்தைக் காக்க முன் வந்த உங்களுக்கும் எட்டு பில்லியன் மக்கள் சார்பாக நன்றியை கூறிக் கொள்கிறேன். நூற்றி ஐம்பத்தி இரண்டு மில்லியன் கிலோமீட்டர் தொலைவிலுள்ள சூரியவெளியிலிருந்து, மணிக்கு நூற்றி இருபத்தி நான்காயிரம் கிலோமீட்டர் வேகத்தில் செம்பெருமீன் பூமியை நோக்கி வந்துக்கொண்டிருக்கிறது. இந்தப் பூமியின் ஆயுட்காலம் கிட்டத்தட்ட தொள்ளாயிரம் மணிநேரம், அதாவது முப்பத்தி ஏழரை நாட்கள். இந்தத் தருணத்திலிருந்து ஒவ்வொரு வினாடியும், இந்தப் பூமியின் இதயத்துடிப்புக் கணக்கிடப்படுகிறது. உங்களுக்கு அடுத்த நாற்பத்தி எட்டு மணிநேரம் இடைவிடாது பயிற்சியளிக்கப்படும். விண்வெளிக்குப் போகும்போது ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். அதுவரை உறக்கத்தை உங்கள் பக்கம் நெருங்க விடாதீர்கள். அதற்குள் விண்கலம் தயாராகிவிடும். வெற்றியுடன் வந்தால் இந்த உலகத்தின் நாயகர்கள் நீங்கள்தான். இந்த அரிதினும் அரிய வாய்ப்பு எவருக்கும் வாய்க்காது. இந்தச் சவாலில் தோற்றால், எல்லோருக்கும் வாய்க்கரிசிதான். நாம் முதன்முதலில் 1969ஆம் ஆண்டுச் சந்திரனுக்குச் சென்றபோது ஆன காலநேரம் எட்டு நாட்கள், மூன்று மணி, பதினெட்டு நிமிடங்கள், முப்பது வினாடிகள். ஆனால், இன்று நமக்கிருக்கிற அறிவியல் வளர்ச்சி, தொழில்நுட்பத்தால் அதே எட்டு நாட்களில் சந்திரனுக்குப் போய்த் திரும்பி வந்து விடலாம். எஞ்சியுள்ள இருபத்தியேழு நாட்களில், நீங்கள் இருபது நாட்களுக்குள் சந்திரனிலிருந்து மதிநீரை கொண்டு வர வேண்டும். நீங்கள் பூமிக்கு வந்தவுடன், தயாராக இருக்கும் இராணுவ விமானங்கள் மூலம், ஓசோனின் வெற்றிடங்களில் இந்த மதிநீர் ஊற்றப்படும். இதுதான் நமது திட்டம். நீங்கள் பயிற்சிக்கூடத்திற்குச் செல்லுங்கள். வாழ்த்துகள்,” என்று கைகுலுக்கி வழியனுப்பி வைத்தார் தலைமை விஞ்ஞானி.

இரு நாட்கள் பயிற்சி என்ற உளியால் இருவரும் சிறந்த விண்வெளி வீரர்களாகச் செதுக்கப்பட்டனர். மூன்று, இரண்டு, ஒன்று, சுழியம் என்றவுடன் சிங்கத்தின் கர்ஜனையோடு, சிறுத்தையின் பாய்ச்சலோடு, அக்கினிக் குஞ்சுகளைப் பொறித்துக் கொண்டே புறப்பட்டது விண்கலம். உலகம் முழுவதும் அந்த நாளைத் திருவிழாபோலக் கொண்டாடினர். நான்சியும், தூயவனும் உலக நாயகர்களாகச் சமூகத் தளங்களில் ட்ரெண்டிங் ஆனார்கள். மத வழிப்பாட்டுத்தளங்கள் நிரம்பி வழிந்தன. மனிதநேயம் உச்சத்தில் பறந்தது. கடும் சொற்கள், வசை மொழிகள், கயமைத்தனங்கள் மக்களின் மனங்களிருந்து வேரோடுப் பிடுங்கி எறியப்பட்டது. வேற்றுமை தன் தோல்வியை ஒற்றுமையிடம் மண்டியிட்டு அழுதது. அறம் அரசாட்சி செய்தது. ஒரே உலகம், ஒரே மக்கள் என்ற வாசகங்கள் ஹேஷ்டேக் ஆனது.

1972ஆம் ஆண்டுக் கடைசியாகக் காலடி பதித்த தளபதி யூஜின் செர்னன், ஹாரிசன் ஷ்மிட்டிற்கு பிறகு இருவரும் நிலவில் கால் பதித்தனர். அணிந்திருந்த விண்வெளி ஆடைகளையும் ஊடுருவி மெய்சிலிர்த்து வியர்ந்தனர். திசை காட்டும் கருவியின் உதவியால் மிதந்து மிதந்து கிளாவியஸ் பள்ளம் வந்தார்கள். இது பூமியிலிருந்து சந்திரனைப் பார்த்தால் தெரியும் பள்ளங்களில் ஒன்று. இந்தப் பள்ளத்தில் நீர்ச்சுனை ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. “தூயவன், இதுதான் நாம் தேடி வந்த மதிநீர்” என்று கூறினார் நான்சி. அந்த நீர் பார்ப்பதற்கு, பாதரசம் போல வெள்ளி நிறத்தில் அடர் திரவமாக இருந்தது. உபகரணங்கள் இல்லாமல் கைகளால் அள்ளினால் லேகியம் போல மென்மையாக வந்தது. இருவரும் கொண்டு வந்திருந்த இரண்டு சிறப்பு நெகிழிப் பைகளில் அள்ளி அள்ளி நிரப்பினார்கள். நிறைந்தவுடன் சிறிய எந்திர நாய்களின் உதவியோடு விண்கலத்திற்குக் கொண்டு வந்தனர்.

சிறிதளவு மதிநீரை நெருப்பின் அருகே கொண்டு சென்றனர். உடனே நெருப்பு அணைந்தது. நான்சி, தலைமை விஞ்ஞானியை தொடர்புகொண்டு விவரங்களைக் கூறினார். உடனே அவர் “அற்புதம்... அற்புதம்” என்று பாராட்டிவிட்டு, “சந்திரனுக்கும், பூமிக்கும் உள்ள நேர வித்தியாசம் நீங்கள் அறியாததல்ல. இருந்தாலும் நான் நினைவூட்டுவது எனது கடமை. இங்குள்ள ஒரு மணிநேரம் சந்திரனில் ஒண்ணேகால் நாட்கள். காலம் இருக்கிறது என்று அலட்சியமாக இருந்துவிட வேண்டாம். வேகமாக செயல்பட்டு, அனைத்துப் பைகளிலும் மதிநீரை நிரப்பிக்கொண்டு வாருங்கள். கவனமாக இருங்கள்,” என்றவுடன் குரலொலி அமைதியானது.

இருவரும் மீண்டும் மதிநீர் எடுக்கச் சென்றனர். அவர்கள் சென்ற இரண்டு மணி நேரத்திற்குப் பின், திடீரென நிலவில் நில அதிர்வு ஏற்பட்டது. யாரோ ஒருவர் நிலவைப் பிடித்து உலுக்குவது போன்று அதிர்ந்தது. ஏற்கனவே இதைப் பற்றி அப்போலோ விண்வெளி வீரர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

இது விதியா? இல்லை இயற்கையின் வியாதியா? என்று சிந்திப்பதற்குள் இருவரும் வெவ்வேறு திசைக்குத் தள்ளப்பட்டனர்.

நிலவின் வேக இயக்க நிலையால் ஆங்காங்கே இருந்த பள்ளங்களில் விரிசல்கள் ஏற்பட்டு, விரிந்து குழிகளாயின. இந்த நிலவு அதிர்ச்சி மூன்று மணி நேரங்கள் தொடர்ந்தன. அதாவது பூமியில் பத்து நிமிடங்கள். அதிர்வு நின்றவுடன், மீண்டும் ஒரு சிறு அதிர்வு ஏற்பட்டு நின்றது. அது சண்டைக்குப் போகும் கத்திக்கட்டு சேவல் தன் பிடரி முடிகளைச் சிலிர்த்தது போலிருந்தது.

சிரமப்பட்டு எழுந்த தூயவன், நான்சியைத் தேடினார். அவர் அங்கில்லை. அலைவரிசைகளின் உதவியால் அவர் இருந்த இடத்திற்கு மெதுவாக ஊர்ந்து வந்தார். ஆனால், காலம் விரைவாகப் போய்க்கொண்டு இருந்தது. அங்கேயிருந்த ஒரு பள்ளத்தில் வீழ்ந்திருந்த நான்சியை சிரமப்பட்டுத் தூக்கினார். பின் இருவரும் நகர்ந்து மதிநீர் ஊற்று இருக்கும் இடத்திற்கு வந்தார்கள்.

இப்போது ஊற்றுப் பனிப்பாறையாக மாறி இருந்தது. வெட்டி எடுத்துப் பைகளில் போடுவது சிரமமானது என்ன செய்யலாம் என்று? யோசித்தபோது, நான்சியின் பின்புறத்திலிருந்த கருவியிலிருந்து உயிர்வாயு கசியத் தொடங்கியது. இதற்கு மேல் தாமதித்தால் உயிருக்கு ஆபத்து, வாருங்கள் விண்கலத்திற்குச் சென்று சீர்செய்ய வேண்டும் என்று நான்சியை அழைத்துக் கொண்டு புறப்பட்டார் தூயவன்.

அந்தக் கருவியைச் சீர் செய்து, மீண்டும் மதிநீர் வேட்டைக்குச் சென்றனர். அயராது, தொடர்ந்து பல முறைகள் சென்று, சில நாட்களில், வெற்றிகரமாகக் கடைசிப் பையில் மதிநீரை நிரப்பினார்கள். இதனைத் தெரிவிக்க நாசாவை தொடர்பு கொள்ள முயன்றார்கள். ஆனால், தொடர்புகொள்ள இயலவில்லை.

இருவரும், பல தடைகளை உடைத்து, எடுத்த பணியைச் சிறப்பாகச் செய்து, வெற்றிக்கனியான மதிநீருடன் பூமியை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். ஆனால், இவர்களுக்கு முன் செம்பெருமீன் பூமியை அடைந்தது. பூமி கடும் வெப்பத்துடன் தீப்பற்றி எரியத் தொடங்கியது.

(முற்றும்)

குறிப்புச் சொற்கள்