பெட்டை - பாகம் 1

மயில்களைக் குதறியிருந்தன நாய்கள். அதாவது கோல மயில்கள். மார்கழிக்குப் போட்ட கோலம். 11 புள்ளி, 4 வரிசை, 5 வரை நேர்ப்புள்ளி என்ற இலக்கணத்தில் போட்டது. அதன் மீது தூவப்பட்ட‌ பச்சை, நீலம், வாடாமல்லி வண்ணப் பொடிகள். வைகறையில் முக்கால் மணி நேரம் குத்த வைத்தமர்ந்து, நைட்டித் துவாரங்கள் வழி ஊடுருவி உடம்பை நடுக்கிய செங்குளிரில் போட்டது. அத்தனையும் பாழ். ஆறுதல் பரிசாய் நாய்களின் காலடித் தடங்கள் புதுப்புள்ளிகளைக் கோலத்திற்குச் சேர்த்திருந்தன. மனதில் கடும் எரிச்சல் உண்டாயிற்று மாதவிக்கு.

தெருவின் இருபுறமும் திரும்பிப் பார்த்தாள். இடது பக்கம் மங்கயர்கரசி அக்காவின் வீட்டு வாசலிலும் எதிரே சுப்ரியா வீட்டு வாசலிலும் இருந்த கோலங்கள் அப்படியே இருந்தன. வலப்புறம் பரத் அம்மாவின் வீட்டில் கோலம் இல்லை. இன்று ஞாயிற்றுக்கிழமை - பரத்துக்குப் பள்ளி விடுமுறை அதனால் இன்னும் எழுந்திருக்க மாட்டாள்.

ஓடிக் கொண்டிருந்த‌ நாய்களைப் பற்களை அரைத்தபடி பார்த்த போதுதான் அவளுக்கு விளங்கியது. இரண்டு நாய்கள் பரஸ்பரம் புட்டத்தில் ஒட்டியபடி எதிரெதிர் திசையில் ஓட எத்தனித்தன. சுற்றிலும் ஏழெட்டு நாய்கள். இத்தனை நாய்களை அத்தெருவில் பார்த்ததே இல்லை. இரண்டு, மூன்று திரியும். சில வீடுகளில் சோறு வைப்பார்கள். அவளும் மீந்தது போட்டிருக்கிறாள் - சிலசமயம் மஜ்ஜை உறிஞ்சிய‌ எலும்புத்துண்டு. சிக்கி அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்த ஜோடியில் ஒன்றை மாதவிக்கு அடையாளம் தெரிந்தது. வெண்மையும் பழுப்பும் கலந்த நாய், கரேலென்றிருக்கும் வாய். பெட்டை. சுற்றி நின்ற மற்ற யாவும் ஆண் நாய்கள். அடுத்த‌ தெருவிலிருந்து வந்திருக்கலாம்.

“இப்பத்தான் அந்தப்பொட்டை நாயி பெருசாயிருக்கு போல‌. நாக்கத் தொங்கப்போட்டு வந்திரிச்சுக எல்லா நாயிகளும். காலங்காத்தால தெருப்பூரா ஏறிக்கிட்டுத் திரியிதுக.”

“பாவந்தேன் அதுவும்.”

“என்னத்த பாவம்? ராத்திரி தூங்கவும் முடியாது. குலைச்சே கொல்லும்.”

சிக்கல் விடுபட்டுப் பெட்டை ஓடியது. மற்றவை விடாமல் துரத்தின. அவசரமாய் டிஃபன் பாக்ஸில் இட்லிகளை அமுக்கி, டப்பியில் சாம்பார் அடைத்து ஹேண்ட்பேகில் போட்டுக் கிளம்பும் முன் மீண்டும் கண்ணாடி பார்த்துக்கொண்டாள்.

“காலைக்கு இட்லி ஹாட்பேகில் இருக்கு. மதியம் மட்டும் வெளிய சாப்ட்டுக்கங்க.”

“எப்பவும் அதானே! மகாராணி ராத்திரியும் வெளிய சாப்பிட‌ச் சொல்லிடாதீங்க‌.” சுருக்கென்றது மாதவிக்கு. போன வாரம் ஞாயிற்றுக்கிழமை அலுவலகம் சென்றபோது இரவுணவை ஹோட்டலில் உண்ண வேண்டி இருந்தது. மேனேஜரின் பிறந்த நாள் ட்ரீட். அலுவலகத்தில் எல்லோரும் கலந்துகொண்டார்கள். மறுத்தால் நன்றாய் இருக்காது. அவரே வற்புறுத்தியதால் தயக்கமாய் ஒப்புக்கொண்டாள். சாப்பிட்ட பின் கிளம்ப‌ப் பத்து மணி ஆகிவிட்டது. ஆட்டோ கிடைக்காமல், கிடைத்த ஆட்டோவில் ஃப்ளைட் டிக்கெட் விலை சொன்னதால் அதே ஏரியாவில் வசித்த, உடன் பணிபுரியும் சங்கருடன் டூவீலரில் வந்திறங்கினாள். முன்பே ஃபோன் செய்து வெளியே சாப்பிடச் சொல்லி இருந்தும் கேளாமல் கைகட்டி வீட்டு வாசலில் காத்திருந்தான் சக்திவேல்.

பதறி அவனுக்குச் சம்பா ரவையில் உப்புமா கிளறிப் போட்டு ஏன் தன்னால் அதைத் தவிர்க்க முடியவில்லை என திரும்பத் திரும்ப விளக்கிக் கொண்டிருந்தாள். அவன் எதுவுமே சொல்லாமல் சாப்பிட்டுவிட்டுப் படுத்துக்கொண்டான். இன்று குத்துகிறான். விடுமுறைகளிலும் கூட்டமாய் வரும் அப்பேருந்திலேறி அதிர்ஷ்டவசமாய்க் கிடைத்த இடத்தில் - அதுவும் ஜன்னலோரம் - அமர்ந்து கொண்டாள். இலேசாய்த் தலை வலித்தது.

மாதவி எல்லோரையும் போல் கல்லூரி போய், எல்லோரையும் போல் காதலித்தவள். அவனுடன் கொஞ்சம் ஊர் சுற்றி இருந்தாள். பைக்கில் மலைக்கோயில், டவுனுக்குப் போய்ச் சினிமா, பராமரிப்பற்ற பெரும்பூங்கா, அப்புறம் சில சிற்றுண்டிச் சாலைகள். கடற்கரையற்ற அவ்வூரில் காதலர்களுக்கு நேர்ந்து விட்ட இடங்கள் அவ்வளவுதாம். பலரும் ஊரில் அவர்களைப் பார்த்திருந்தார்கள். வீட்டில் அவளாக‌ எதையும் சொல்ல வேண்டி இருக்கவில்லை. அப்பா கேட்ட போது தலைகுனிந்தபடி ஒப்புக் கொண்டாள்.

“அவுங்க என்ன ஆளுக, மாதவி?”

அவள் பதில் சொல்லவில்லை. அவர் புரிந்துகொண்டார். எழுந்து போய் விட்டார். அம்மா தலையில் அடித்துக் கொண்டாள். கல்லூரிக்குப் போனது போதும் என்றாள்.

கோபத்தில் வரும் வசையின் ஒரு பகுதி என்றே மாதவி அதை நினைத்தாள். ஆனால் மறுநாளே அப்பா கல்லூரி போய் இனி வர மாட்டாள் எனக் கடிதம் கொடுத்து வந்து விட்டார். அவனைத் தொடர்புகொள்ள முயன்றும் நடக்கவில்லை. ஆளுங்கட்சியின் தயவில் சாதி ஓட்டு வாங்கி தன் கட்சிக்கென ஒற்றைச் சட்டமன்ற உறுப்பினராய் இருந்தவரிடம் இந்தப் பிரச்சனையை அவள் அப்பா எடுத்துப் போக, அவர் அவனை அழைத்துக் கடுமையாய் மிரட்டியதாக‌க் கல்யாணத்துக்குப்பின் தெரிந்துகொண்டாள்.
சக்திவேல் அவளைப் பெண் பார்க்க வந்தபோது குழப்பத்தில் இருந்தாள் மாதவி. அதற்கு முன்பே ஒருவன் வந்து பார்த்து விட்டுச் சம்மதம் சொல்லிய‌ பின் யாரோ அவள் காதலைக் கொச்சையாய்ச் சொல்லப் போக, எல்லாம் நின்றது. அதனால் இம்முறை எல்லாவற்றையும் சொல்லிவிடத் தீர்மானித்திருந்தார் அவள் அப்பா.

சக்திவேல் டவுனில் நல்ல வேலையில் இருந்தாலும் ஒற்றைச் சமஉ கட்சியில் அடையாள அட்டை பெற்ற அடிப்படை உறுப்பினன். கூட்டங்களில் பங்கேற்பான் - “மயக்கிக் கூட்டிட்டுப் போன ஈன சாதிப்பயலுக கிட்ட இருந்து நம்ம புள்ளைகளக் காப்பாத்தற‌ வரைக்கும் நம்மகிட்ட வேகம் இருக்கு. ஆனா அதே புள்ளைக்குத் தாலி கட்ட மட்டும் நம்மாளுகளுக்கு ஏன் மனசு வர மாட்டேங்குது? அதச் செய்யலன்னா காதலைப் பிரிக்கறம்ங்கற கெட்ட பேருதான் நமக்கு நம்ம‌ புள்ளைககிட்ட இருக்கும்.”

மாதவியின் அப்பா பவ்யமாய் சன்னக்குரலில் விஷயத்தைச் சொன்னபோது சக்திவேலுக்குத் தலைவரின் கம்பீரக் குரல்தான் மன‌தில் ஒலித்தது. பெற்றோர் தயங்க, அவன் கல்யாணத்துக்கு ஒப்புக் கொண்டான். அவன் சொன்னது ஒரே நிபந்தனை.
“கல்யாணத்துக்குப் பெறகு ஒழுக்கமா இருக்கனும்.”

“ஐயோ மாப்ள, இப்பவும் அப்படித்தான் அவ. ஏதோ புத்தி கெட்டுப் பண்ணிட்டா.”
சொல்லியிருந்ததை விடக்கூட ஒரு பவுன் போட்டுக் கல்யாணம் செய்துகொடுத்தார்.
முதலிரவில் அவள் மீது விரல்கூடப் படும்முன் அதையே சொன்னான். விழியோர ஈரத்துடன் மௌனமாய்த்தலையாட்டினாள். விளக்கையும் அவளையும் அணைத்தான்.
*
மாதவி இறங்க வேண்டிய நிறுத்தத்தின் பெயரை நடத்துனர் கதறியதும் இறங்கி, வேகநடையில் அலுவலகம் அடைந்து, ஒரு சம்பிரதாயப் புன்னகையை அணிந்தபடி வரவேற்பறையில் அமர்ந்து நிமிர்ந்த போது வாடிக்கையாளர்கள் காத்திருந்தார்கள்.
அது நகைக்கடன் நிறுவனம். அடகு வைக்க, வைத்ததை மீட்க, தவணை செலுத்த, அல்லது விவரங்கள் அறிந்துகொள்ளவோ மக்கள் வந்து போனபடி இருப்பார்கள். மாதவி அங்கே ரிசப்ஷனிஸ்ட். வருபவர்களை விசாரித்து சம்மந்தப்பட்ட மேசைக்கு அனுப்பி வைக்க வேண்டும். நகைக்கடன் குறித்த தகவல்கள், செலுத்த வேண்டிய நிலுவைத்தொகை இவற்றை எல்லாம் அவளே கண்டு சொல்லவும் கற்றிருந்தாள்.

அந்த நடுத்தர வயதுக்காரர் கடன் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய பேனா கேட்டார். வாங்கும்போது அவரது விரல் அவள் கைகளில் கூடுதலாய்ப் பட்டதை உணர்ந்தாள். அவளெதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்து விண்ணப்பத்தை நிரப்ப முனைந்தார்.

“அங்க போய் உட்கார்ந்து எழுதுங்கண்ணா. அடுத்த கஸ்டமர் வெயிட் பண்றாங்க.”
‘அண்ணா’ என்பதை அழுத்தினாள். திரும்ப வந்து பேனா கொடுத்தபோது இன்னும் தாராளமாய்க் கைகளில் தொட்டார். மாதவிக்குப் பழகி விட்டது. வாடிக்கையாளர்கள் என்றில்லை, மேனேஜர் தவிர‌, உடன் பணிபுரியும் ஆண்கள் எல்லோரும் ஏதேனும் கொடுக்கும் போதோ வாங்கும்போதோ விரல் படாமல் இருப்பதில்லை. மேனேஜர் நல்ல பிள்ளையாய் இருப்பதற்குக் கூட அவரது வயதுதான் காரணமாய் இருக்கும்.

மதிய உணவு முதலில் மற்றவர்களுடன் உட்கார்ந்து சாப்பிட்டாள். இரட்டை அர்த்தப் பேச்சுக்கள் அவ்வப்போது துருத்தவும் தனியே தாமதமாகப் போகத் தொடங்கினாள். அக்காரணத்தாலேயே அலுவலக வாட்ஸ்அப் குழுமத்திலிருந்தும் வெளியேறினாள்.
ஒருமுறை அவள் சீட்டில் இருக்கும் தொலைபேசிக்கு ஃபோன் செய்து “கொஞ்சம் நேரம் ஜாலியாப் பேசிட்டு இருக்கலாமா?” என்று எவனோ கேட்டான். யாரென்று சொல்வது? வரும் வாடிக்கையாளர் வரை எல்லோருக்கும் அந்த எண் தெரியும்.
அது ஆண்களின் உலகம். தான் அங்கு ஒரு நுகர்வுப்பொருளென‌ உணர்ந்திருந்தாள்.வேலை மிக அதிகமாய் இருந்தது. சனி, ஞாயிறுகள் அப்படித்தான். வேலை முடித்துக் கிளம்பிப் பேருந்தேறிப் பார்க்கையில் மணி ஆறே முக்கால். உட்கார இடமில்லை.

சக்திவேல் அவளை நன்றாகவே பார்த்துக் கொண்டான். மாதவி ஒருபோதும் பழைய காதலைத் தேடத் துணியவில்லை. அவனும் அவளைத் தொடர்புகொள்ளவில்லை. டவுனில் வீடு பார்த்துக்குடியேறிய பின் மெல்லத்தனிமையை உணரத்தொடங்கினாள்.
சீரியல் பார்க்கும் பழக்கமில்லை. பக்கத்து வீடுகளில் எப்போதுமா அரட்டை அடிக்க முடியும்! வேலைக்குப் போக நினைத்தாள். எதிர்வீட்டு சுப்ரியா போகிறாள். டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் வேலை. ஆனால் சக்திவேலிடம் கேட்கத் தயக்கமாய் இருந்தது. நெகிழ்வான ஒரு பின்னிரவுத் தருணத்தில் அவனிடம் கிசுகிசுப்பாய்க் கேட்டாள்.

“ஏங்க, நான் வேலைக்குப் போகவா?”

“என்ன திடீர்னு? அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்.”

திரும்பிப் படுத்துக்கொண்டான். பிறகு அவள் அந்தப் பேச்செடுக்கவில்லை.

எழுந்தபோது ஒருவேளை தான் வேலைக்குப் போய்ச் சிரமப்பட வேண்டாம் என்று நினைக்கிறானோ எனத்தோன்றியது. அவன் மீது பிரியமும் கிறக்கமும் கலந்தூறியது. பிடித்தம் போக, அவனுக்கு மாதம் இருபதாயிரம் ரூபாய் சம்பளம் வருகிறது. அது அவர்கள் இருவருக்கும் அந்த டவுனில் வாழப் போதுமானதாய் இருக்கிறது தான். ஆனால் சக்திவேலுக்கு வீடு வாங்க வேண்டும் என்ற கனவிருந்தது. டவுன் எனினும் சிறுநகரமாக விரிந்துகொண்டிருந்தது என்பதால் ஏழெட்டு லட்சமாவது தேவைப்படும். ஒன்றே முக்கால் லட்சம் சேர்த்து வைத்திருந்தான். மீதிக்கு வங்கிக்கடனுக்கு முயலலாம்.

குழந்தை இப்போதைக்கு வேண்டாமென ஒத்திப் போட்டிருந்தார்கள். சொந்த வீட்டில் தான் தன் குழந்தை தவழ வேண்டும் என வைராக்கியம் கொண்டிருந்தான். ‘ஏதாவது விசேஷமா?’ என்று அவ்வப்போது கேட்டவர்களைச் சமாளிக்கப் பழகி விட்டார்கள். பிறகு அவனே ஒரு முறை கேட்டான், “மாதவி, வீட்ல இருக்க போர் அடிக்குதா?”

என்ன சொல்வதென அவளுக்குக் குழப்பமிருந்தது. ஆமோதிப்பாய்த் தலையசைத்தாள்.

“நாம ஒரு வீடு வாங்கணும் மாதவி. நீ வேலைக்குப் போனா அது வேகமா நடக்கும்.”

“அதை ஏன் இப்படி உம்முன்னு மூஞ்சிய வெச்சுட்டு சொல்றீங்க? நான் போக ரெடி.”

“நீ வேலைக்குப் போறது பெரிய‌ விஷயம் இல்லை. ஆனா பத்திரமா இருக்கணும்.”

அவள் புரியாது பார்க்க, தொடர்ந்தான், “எல்லா ஆம்பிளைகளும் ஒரே மாதிரி இல்ல‌.”

அவள் அழுத்தமாய்ச் சொன்னாள், “எல்லாப் பொம்பளைகளும் ஒரே மாதிரி இல்ல.”

*

பிகாம் டிஸ்கன்டின்யூட் என்ற தகுதியுடன் கரிகுலம் விட்டே அடித்து வேலைக்கு விண்ணப்பித்தபோது முதல் ஐந்து நிறுவனங்களில் எந்தப் பதிலும் கிட்டவில்லை. சுப்ரியாவிடம் போய்ப்புலம்பினாள். அவள் இரு உதவிகள் செய்தாள். ஒன்று தனக்குப் பழக்கமானவ‌ர்கள் வழி இரண்டு, மூன்று நிறுவனங்களில் காலியிடங்கள் இருப்பதை அறிந்து விண்ணப்பிக்கச்சொன்னாள். அடுத்து ஒரு முக்கிய‌ ஆலோசனை சொன்னாள்.

“ஒரு பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ இருந்தா அதை ரெஸ்யூம்ல சேருங்களேன்.”

சேர்த்தாள். இரண்டாவது நிறுவனத்தில் நேர்முகத் தேர்வுக்கு வரச் சொன்னார்கள். மூன்றாவதில் வேலை கிடைத்தது. ஆனால் அவள் விண்ணப்பித்தது அக்கவுண்டன்ட் வேலைக்கு. கிடைத்தது ரிசப்‌ஷனிஸ்ட் பணி. மறுபடி சுப்ரியாவிடம் தஞ்சமடைந்தாள்.

“முதலில் இதில் சேருங்க. அதில் இருந்துட்டே வேற வேலைக்கு முயற்சிப்போம். அல்லது அங்கயே கூட கொஞ்சம் வேலை கத்துக்கிட்ட பின் கேட்டுப் பார்க்கலாம்.”

மாதம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள்தான் புரிந்தது, தினம் வந்து கூட்டிப் பெருக்கி, கழிவறை கழுவிப் போகும் ஆயா தவிர‌ அங்கே பணி செய்யும் ஒரே பெண் அவள்தான். ஆயா கழுவிப் போகும் கழிவறைகூட ஒன்றுதான்.
காலை ஒன்பது மணிக்கு அலுவலகம் வர‌ வேண்டும். ஒன்பதரை மணி நேர வேலை. அதில் அரை மணி மதிய உணவுக்கு. சனி, ஞாயிறு வேலை நாள். புதன் விடுமுறை. சக்திவேலுக்கு ஞாயிறு லீவ் நாள். இருவரும் வெளியே போவதே குறைந்து விட்டது.
வேலைக்குப் போய் வந்த முதல் நாளிரவு சக்திவேல் கேட்டான்.

“ஆஃபீஸ்ல எத்தனை ஆம்பிளைங்க வேலை செய்யறாங்க?”
*

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!