அனந்தசயனபுரி

கதை: சாம்ராஜ்

அவன் திருவனந்தபுரம் போய் இறங்கும்பொழுது நல்ல மழை. இந்த கற்கிடக மழை தொடங்கினால் நிற்காது பெய்துகொண்டே இருக்கும். ரயில் குழித்துறையை தாண்டும்பொழுதே மழை தொடங்கிவிட்டது. முன்பு இது போல் மழை பெய்தால் கதவருகேயே நிற்பான். மழை கேரளத்தை பார்ப்பது ஆன்மிகம். அதிகாலையில் பச்சை வெளிக்குள் சிறிய அம்பலமும் (கோயில்)அதில் ஏற்றபட்டிருக்கும் விளக்குகளின் மினு­­மினுப்பும் கசிந்துவரும் மலையாளப் பாடலும் மனதை கனியச் செய்யும். இன்று அப்படி நிற்கமுடியவில்லை அவன். ஜன்னலையே பார்ப்பதைத் தவிர்த்தான். ஒரு கட்டத்தில் முடியாமல் மேலேஏறி படுத்தான்.

திருவனந்தபுரம் பரபரப்பில்லாமல் இருந்தது. சிகப்பு பேருந்துகள். அலட்சிய ஆட்டோக்கள். இந்தியன் காஃபி ஹவுஸ். பிரம்மாண்ட மோகன்லால்.
இவன் அவசரமில்லாமல் நடந்தான். இறங்கிய எல்லோருக்கும் போவதற்கு வீடோ, விடுதியோ இருந்தது. அவனுக்கு அப்படியொன்று இல்லை. கொஞ்ச நாட்கள் முன்புவரை இருந்தது. இப்பொழுது இல்லை. நடந்தான். "இன்னத்த லாட்டரி இன்னத்த லாட்டரி” என கரகரத்த குரல் ஒலித்தது. கந்தாரி அம்மன் கோவில் தெருவில் திரும்பினான். மழை விடாது தூறி கொண்டிருந்தது. சுவர்களில் பச்சைபடர்ந்திருந்தது. மணி பார்த்தான். பகல் 12 மணிக்கே இருட்டியிருந்தது. விடுதியில் அறையெடுக்கலாம். கையில் பணம் குறைவாக இருந்தது. முடிந்தவரை அறை­யெடுப்பதைத் தவிர்த்தால் நல்லது என நினைத்துக்கொண்டான். அதை “அந்த” சந்திப்பே தீர்மானிக்கும்.

தெரு முழுக்க விடுதிகளாக இருந்தது. ஒரு கைவிடப்பட்ட வீட்டில் இருந்து பூனை ஒன்று மழையைப் பார்த்துக்கொண்டிருந்தது.
ஏறக்குறைய தெருவில் யாரும் இல்லை. ஒரு நீள் மெளனம் போல தெரு கிடந்தது. காந்தாரி அம்மன்கோயில் பூட்டியிருந்தது. அங்கேநிரந்தரமாகப் பிச்சை எடுப்பவள் போர்த்தி சுருண்டிருந்தாள். விடுதியொன்றில் தண்ணீர்த் தொட்டி நிரம்பி மழைக்குப் போட்டியாக வழிந்துகொண்டிருந்தது. மாடியில் இருக்கும் தகரங்கள் காற்றில் ஆடி வினோத சத்தங்களை எழுப்பின. யூனியன் ஆபிஸில் ஒருவரையும் காணவில்லை. பூட்டிய க்ரில் கதவுக்குப்பின் நிறைய சிவப்புக்கொடிகள் தெரிந்தன.
இப்பொழுது போனால் சாப்பாட்டு வேளை. தன்னுடைய வருகை அவர்களின் சாப்பாட்டை குலைக்கக்கூடும். இரண்டு மணிக்குமேல் போனால் உறுதியாக சாப்பிட்டிருப்பார்கள். மறுபடி மணி பார்த்தான்.

ஒரு மணி ஆகியிருந்தது, பாங்கொலி கேட்டது. ஒரு டீ குடித்தால் நேரத்தைக்கொஞ்சம் கடத்தலாம்.

நடந்தான் டீக்கடைகள் ஒன்றும் கண்ணில் படவில்லை கால்போன போக்கில் சென்று ஒரு தெருவில் திரும்பினான். முழுக்க வீடுகளாக இருந்த தெருவின் மத்தியில் போலிஸ் வேன் ஒன்று நின்றது. டிரைவர் தன்னையே பார்ப்பதுபோல் இருந்தது. திரும்பி நடந்தால் கூப்பிட்டு விசாரிக்கக்கூடும். மெதுவாக நடந்தான். வேன் அணைக்காமல் லேசான அனத்தலோடு நின்றிருந்தது. கேட்டால் என்ன பதில் சொல்வது?

இந்தத் தெரு முட்டுச் சந்தாக இருந்தால் இன்னும் மோசம். என்னதான் மலையாளம் பேசினாலும் தமிழன் என்று கண்டுபிடித்து­
விடுவார்கள். உடனடியாக ‘பாண்டி’ என்ற இளக்காரம் கண்களில் தெரியும். போலிஸ்காரன் பார்த்துக்கொண்டே இருந்தான் கட்டை மீசையோடு ஒரு சாயலுக்கு பிஜூமேனன் போலிருந்தான். ஒன்றும் கேட்கவில்லை. இவன் தாண்டி நடந்தான். தெருமுடிந்து ஒரு சின்ன இடுக்கு தொடங்கியது. அதற்குள் இறங்கி நடந்தான். பெரிய வீடுகளில் பின்புறம் போல இறங்கிய பின்தான் தெரிந்தது. ஒரே கசடாய், துணிமொந்தைகளாய், கழிவுநீர் வழிந்தோடியபடி. கவனமாய் நடந்தான்.
இடுக்குச் சந்து ஒரு நடுவாந்திர தெருவில் கொண்டுபோய் சேர்த்தது. கொஞ்சம் நடமாட்டம் தெரிந்தது. டீக்கடை தென்பட்டது. வயசாளி டீ அடித்துகொண்டிருந்தார். கடையில் வேறுயாரும் இல்லை. ரேடியோவில் ‘நகரம் நகரம் மகா சாகரம்’ பழைய தேவராஜன் மாஷேவின் பாடல். கட்டஞ்சாயா வந்தது. கண்ணாடி தம்ளரின் வழி தெரு வேறொரு நிறத்தில் தெரிந்தது.

"தமிழ்நாட்டில எவிட” என்றார் மலையாளக் கொச்சையுடன்.

"சென்னை”

“இவிட எந்தா ஜோலி?”

“ஒரு ஆளக் காணா வேண்டி”

டீக்கடைக்காரர் அதன்பின் ஒன்றும் கேட்கவில்லை.

பெரிய வீடுகளால் நிரம்பி இருந்தது அந்த தெரு. தேநீர் கடை மாத்திரமே வேறோர் உலகத்தின் பிரதிநிதி.

கடையடைப்புக்கான ஆவேச பிரகடன சுவரொட்டி மழையில் ஊறி பாதி சுவரிலும் பாதி வெளியிலும் காற்றில் ஆடியது. சாக்கடையில் நீர் அவ்வளவு கறுப்பாக இல்லை. எலியொன்று சிலிர்த்தமுடியோடு பாதி உடல் வெளியே தெரிய நீந்திப் போனது. தொலைக்காட்சியில் செய்திவாசிப்பவரின் குரல் சட்டென்று உரத்து கேட்டது. இப்போது நடக்க ஆரம்பித்தால் சரியாக இருக்கும்.

சாலை மேடேறியது. அரசு அச்சகத்திற்குள் ஆட்கள் இரண்டு மணி ஷிப்ட்டுக்கு வேகமாக நுழைந்து கொண்டிருந்தார்கள். ஒய்எம்சிஏ கிரவுண்டில் மழையில் நனைந்தவாறே சேறுபடிந்த கேன்வாஸ்களோடு குட்டைப் பாவாடை அணிந்த சிறுபெண்கள் போய்க் கொண்டிருந்தார்கள்.

கலைப்பொருள் விற்பனையகத்தில் வெளியே வைக்கப்பட்டிருக்கும் யானை சிற்பம் ஒருபாதி மழையில் நனைந்து கூடுதல் கருப்பாகியிருந்தது.
திருவிதாங்கூர் கிளப்பில் ஒன்றிரண்டு கார்கள் மாத்திரமே நின்றிருந்தன. மைதானத்தின் முடிவில் பாலீதீன் கவரில் பொதிக்கப்பட்ட குப்பைகள், சிறிய குன்றென உயர்ந்திருக்க, குன்று சல சலத்தது. ஒரு பூனையின் தலைதெரிந்தது. ஒரு கணம் இவன் கண்களைச் சந்தித்த பூனை மறுபடி குவியலுக்குள் மறைந்தது. சாலை கீழிறங்க தொடங்கியது.

வீடு இருக்கும் தெருவிற்கு வந்துசேர்ந்தான். என்னமாதிரி எதிர்கொள்வார்கள் எனத் தெரியவில்லை.

உரத்து சத்தம் போட்டால் பக்­கத்து வீட்டுக்குக் கேட்கும். நான்கு வீடுகொண்ட காம்பவுண்ட் அது. தரையில் இருந்து பத்தடிகீழே இருந்தது அவர்களது காம்பவுண்ட். அண்டைவீட்டுக்­காரர் யாராவது பார்த்தால் சிக்கல். "ரொம்ப காலமாச்சே பார்த்து," என கேட்கலாம். என்ன பதில் சொல்வது? அவர்களுக்கு என்ன தெரியும்; எந்த அளவிற்குத் தெரியும் என இவனுக்குத் தெரியாது.

மழை சுத்தமாக நின்றிருந்தது. வீட்டின் ஓட்டுக்கூரை தென்பட்டது.

பதற்றமாய் இருந்தது. ஏறக்­குறைய பத்து மாதங்கள் கழித்து வருகிறான். சந்தின் இடதுபக்க வீட்டின் சமையலறை கழிவுநீர்க் குழாய் அருகே நாயுருவிச் செடி செழித்திருந்தது.

வீட்டின் மரச்சட்டங்களும் திரைச்சீலையில் தெரிய ஆரம்பிக்க, கதவருகே செருப்பொன்றும் இல்லை. பிறகே கவனித்தான். பூட்டியிருந்தது. அவனுக்கும் அவன் மனைவிக்குமான உரையாடல் அற்றுப்போய் மணவிலக்குப் பெறுவதற்காக குடும்ப நீதிமன்றத்தை அணுகியிருந்தார்கள். இவன் வீட்டுக்கு வருவது அறவே நின்றுபோயிருந்தது. கடைசியாக ஒருமுறை பேசிப்பார்க்கலாம் என வந்திருக்கிறான். இன்னும் மூன்று மாதங்களில் குடும்ப நீதிமன்றம் தீர்ப்பளிக்கும்.
திரும்பி நடந்தான். என்ன செய்வதென்று தெரியவில்லை.

எங்கு போயிருப்பார்கள்? வெளியூருக்கு எங்காவது? சென்னையிலிருந்து புறப்பட்டு வந்தாயிற்று. ஒரு நாளோ இரண்டு நாளோ காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை. மறுபடியும் போய்வந்தால் செலவு. திருவனந்தபுரம் எனும்போது மனம் திடுக்கிடுகிறது. ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ஞாபகங்கள் உண்டு. மழை வந்தால் இன்னும் மோசம்.

வீட்டிற்குக் கிளை பிரியும் தெரு அருகே நின்றான். இங்கிருந்து பார்த்தால் சந்திற்குள் ஆட்கள் நுழைவது தெரியும். சுற்றுமுற்றும் பார்த்தான். நேந்திரம் பழம் சிப்ஸ் போடும் கடை அடைத்திருந்தது. அடுப்பு வைப்பதற்காக தகரத்தை வளைத்து கடையின் முன் நிறுத்தி வைத்திருந்தார்கள். அந்தப் படிக்கட்டில் அமர்ந்தால் ஆள் இருப்பது தெரியாது. தகரத்தின் இடுக்கின் வழியாக சந்தில் நுழைபவர்களைப் பார்க்க முடியும். கால்களை நீட்டி அமர்ந்தான். பசித்தது. இப்படியே நடந்தால் தலைமைச் செயலகம் தாண்டி உணவகங்கள் உண்டு. அப்படிப் போனால் பேருந்து நிறுத்தத்தில் இருந்து பிந்து, அம்மா, ஸ்ரீக்குட்டி எதிரே வர சாத்தியமுண்டு. அப்படியொரு கணத்தை எதிர்கொள்ள அவனுக்கு மனம் இல்லை.

மரம் மழையை ஞாபகம் வைத்து சொட்டிக்கொண்டிருந்தது. இரண்டு கைகளிலும் பெரிய பைகளைத் தூக்கிக்கொண்டு மலையாள டப்பாக்கட்டு வேஷ்டி கட்டியவாறு ஒருவர் தெருமுனையில் தோன்றினார். அவர் நெருங்கிவருகையில் இவனுக்கு அடையாளம் தெரிந்து விட்டது. இவர்களுடைய வீட்டிலிருந்து நான்கு வீடுகள் தள்ளியிருப்பவர். எப்பொழுதும் இவர்கள் காம்பவுண்ட் அருகே தண்ணீர் தேங்கி நிற்பதற்காக குடியிருப்பவர்களையும் வீட்டு உரிமையாளரையும் திட்டுபவர். இவனை ஓரக்கண்ணால் பார்த்தபடி நடந்தார். முகத்தில் எங்கோ பார்த்த குழப்பம். சந்துக்குள் திரும்பும்பொழுது மறுபடியும் ஒருமுறை திரும்பிப்பார்த்து மறைந்தார். தகரத்தில் படிந்திருந்த புகையின்மீது நீர் ஒற்றையடிப் பாதையாய் ஓடியிருந்தது.கடைக்காரரின் பிள்ளையோ பேத்தியோ தகரத்தில் மலையாள அட்சரங்களை எழுதியிருந்தார்கள். அந்த இடத்தில் மாத்திரம் கருப்பு கொஞ்சம் மங்கி இருந்தது.ஸ்ரீக்குட்டி பள்ளிக்கு போகிறாளா? ஓன்றும் அறியான்.
மணி பார்த்தான். ஐந்து. எம்.ஜி.ரோட்டில் இரண்டு பக்கமும் பிரம்மாண்ட கடைகள். எதிரே பறக்கும் செங்கொடியைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார் கே.எஃப்.சி.போர்டிலிருக்கும் கிழவர். எல்லா கடைகளிலிருந்தும் இரண்டு கைகளிலும் பெரிய பைகளோடு ஆட்கள் வெளிவந்து கார்களில் ஏறிக்கொண்டிருந்தார்கள். போத்தீஸைத் தாண்டும்போது லேசாக குளிர்நதது. சைவப் பிரகாச சபையில் கண்ணாடி அணிந்த வயதானவர் குறைந்த வெளிச்சத்தில் தடித்த புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தார். பாலம் கடந்தான். புத்தரிக்கண்டம் மைதானத்தில் ஏதோ கண்காட்சி.

கிழக்கேகோட்டை பேருந்து நிலையம் பரபரப்பாய் இருந்தது. கோயிலுக்குப் போகலாம் என நினைத்தான். கோட்டை மதிற்சுவர் தாண்டி திரும்பி கோயிலை நோக்கி நடந்தான். பொருள்வைக்கும் அறையில் பையையும் செல்போனையும் வைத்துக்கொள்ள, வேட்டியின் வாடகைக்கும் சேர்த்து 80 ரூபாய் கேட்டார்கள். இவன் பதிலேதும் சொல்லாமல் திரும்பினான்.

இ.எம்.எஸ்.பூங்காவில் யாரோ பிரசங்கித்துக்கொண்டிருந்தார்கள். சங்குமுகம் கடற்கரை போகும் பேருந்தை கண்டுபிடித்து ஏறினான். நகர இரைச்சலிலிருந்து விலகி தென்னை மரங்கள், வெள்ளை மண், சி.எஃப்.சி. விளக்கின்கீழ் பரப்பப்பட்டிருக்கும் மீன்கள், ஆங்காங்கே அமர்ந்திருக்கும் நாராயணகுரு, பொக்கைவாய் சிரிப்பு இ.எம்.எஸ். என பேருந்து கடந்தது. பீமாப்பள்ளி மசூதியை தாண்டும்பொழுது கடல் தெரிய ஆரம்பித்தது. முன்பு இங்கு அடிக்கடி இருவரும் வருவார்கள். அவளுக்கு இந்த இடம் மிகவும் பிடிக்கும்.

சங்குமுகம் கடற்கரையில் இறங்கும்பொழுது இருட்டியிருந்தது. அந்த இருட்டிலும் கால்பந்து விளையாண்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு பெரிய குடும்பம் கடல் அலையில் சந்தோஷப்பட்டுக்கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் ஒருவர் திடு திடுவென கரைக்கு ஓடிவந்து குழந்தை ஒன்றைத் தூக்கிக்கொண்டு மறுபடி அலைக்கு ஓடினார். ஸ்ரீகுட்டிக்கு. தன் முகம் ஞாபகம் இருக்குமா. தமிழும் மலையாளமும் கலந்து பேசுவாள். ஒரு சமயம் இவன அச்சா, மற்றொரு சமயம் அப்பா. பையில் அவளுக்கான அச்சு முறுக்கு இருந்தது.

இவன் மல்லாந்து படுத்தான். ஒரு பறவை தாழப் பறந்துபோக அதன் ஒலி கேட்டு எழுந்தான். கடற்கரையில் ஆட்கள் வெகுவாகக் குறைந்திருந்தார்கள்.
பேருந்து கன்னிமாரா மார்க்கெட் வழி போனது. இங்கே இறங்கினால் வீட்டிற்குப் பக்கம். சடக்கென எழுந்து ‘இறங்கணும்’ என்றான். வண்டி நிறுத்தத்திலிருந்து புறப்பட்டிருந்தது. நடத்துனர் அலுத்துக்கொண்டார். அதைவிட கூடுதலாக வண்டி அலுத்துக்கொண்டது. இவன் இறங்கிய மாத்திரத்தில் வண்டி படாரென புறப்பட்டுச் சென்றது. குறுக்குவழியில் நடந்தான். இந்த வழியேதான் மார்க்கெட்டுக்கு வருவார்கள். முன்னிரவில் நல்ல மீன் வாங்கி, சொதியோ குழம்போ வைத்து ஏசியாநெட் ப்ளஸில் மோகன் லால் படத்துடன் சிரிப்பும் சோகமும் கலந்த கலவையாக அந்த இரவுகள் முடியும்.

மார்க்கெட்டுக்குப் போகும் எல்லா முன்னிரவுகளிலும் நபார்டு வங்கியின் தலைமையகத்தின் முகப்பில் தொங்கும் பெரிய தேன் கூட்டைப் பார்ப்பார்கள்.

நிமிர்ந்து பார்த்தான். தேன்கூடு இருந்தது. எல்லா வீடுகளிலிருந்தும் சீரியல் சத்தம் கேட்டது. இவன் அவன் வீட்டிற்கான சந்தில் திரும்ப இருவர் அவசர அவசரமாகக் குடித்துவிட்டு குப்பியைக் கீழே போட்டுவிட்டுப் போனார்கள். இவன் வீட்டை நெருங்கும்போதே தெரிந்தது. வெளிச்சம் இல்லை. கண்களை இடுக்கிப் பார்த்தான். பூட்டியிருந்தது.

இரவு தங்கித்தான் ஆகவேண்டும். அரிஸ்டோ ஜங்ஷனில் அறையொன்றும் கிடைக்கவில்லை. நான்கைந்து விடுதிகள் ஏறி இறங்கினான். ஒன்று, அறை இல்லை என்றார்கள். அல்லது தொள்ளாயிரம் ஆயிரம் என்று வாடகை சொன்னார்கள். தனியே வருபவர்கள் தற்கொலை செய்துகொள்வார்கள் என்பதும் தன் தோற்றமும்தான் நிராகரிப்புக்குக் காரணமென தோன்றியது. கடைசியாக விசாரித்த விடுதியிலிருந்து வெளியே வரும்பொழுது, விடுதிப்பையன் கூட வந்தான். திருநெல்வேலி பக்கமாக இருக்கவேண்டும்.’ஸ்டேஷனுக்கு அந்தப்பக்கம் போங்க சார். சீப்பா கிடைக்கும்’ என்றான்.
இரும்புப் பாலத்தின்கீழ் நிறைய ரயில்கள் தெரிந்தன. ஒரு கந்தலாடை பெண் படிக்கட்டு திருப்பத்தில் சுருண்டிருந்தாள். அவளை தூரத்திலிருந்து ஒரு நாய் பார்த்தவண்ணம் இருந்தது.

வெளியில் இருந்து பார்க்க அந்த விடுதி சுமாராக இருந்த்து. ‘நானூறு ரூபாய்’ என்றான் ரிஷப்ஷனில் இருந்தவன்.

“ஒரு ஆள் அல்லே”

‘ஆமாம்’ என தலையாட்டினான். ‘ரூமைப் பார்க்க முடியுமா?’

அலட்சியமாய் ‘காணாம். காணாம்’ என்றான். ஒரிஜினல் டிரைவிங் லைசன்ஸை வாங்கி கொண்டான்.

இவன் அறைக்குள் நுழைந்தான். அறை மிக அழுக்காய் இருந்தது. சுவர்களில் மனிதர்களின் வியர்வை பிசுக்கு. தொலைபேசி எண்கள், ஸ்டிக்கர் பொட்டுக்கள், எங்கும் ஆணியோ கொக்கியோ இல்லை. தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்கும் ஏற்பாடு என்று தோன்றியது. கொசுவர்த்தி வைத்து எடுத்த தடம் மேசையில் தெரிந்தது. தலையணை உறையை மீறி தெரிந்த நிறம் அழுக்கின் நிறமாய் இருந்தது. குளியலறையைத் திறக்க தயக்கமாய் இருந்தது. மூத்திரம் முட்டியது. திறந்தான். குபீரென வீச்சம் முகத்தில் அடித்தது. நிழலுருவங்கள் மாத்திரமே தெரியும் கண்ணாடி.

கோப்பைக்கு அருகே ரத்தக் கறை படிந்திருந்தது. கரப்பான் பூச்சிகள் திரிந்தன. வாளியை கவிழ்த்து வைத்திருந்தார்கள். நிமிர்த்த பயமாய் இருந்தது. அதன் கீழும் கரப்பான் பூச்சிகள் இருக்கக்கூடும். மெதுவாய் நிமிர்த்தினான். பூரான் ஒன்று அவசரமாய் ஓடியது. படக்கென தண்ணீர் ஊற்றிவிட்டு வெளியே வந்தான்.
மெத்தையில் அமர்ந்தான். அதிலிருந்து ஒருவித அழுக்கிய நாற்றம் கிளம்பியது. இங்கே தூங்க முடியாது, சவம் போல் களைத்து வந்தால் மாத்திரமே இந்த அறையில் தூங்கமுடியும். கதவைப் பூட்டிக்கொண்டு கீழ் இறங்கினான். மொத்த விடுதியிலும் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. ரிசப்ஷனில் இருந்தவன் பார்வையாலே எங்கே என்றான். இவன் முணுமுணுப்பாக ‘சினிமா’ என்றான். ‘’சூச்சிச்சு, போலீசு பிடிக்கும்” என்றான் அவன். சட்டென ஏதோ யோசனை வந்தவனாக இவனுடைய டிரைவிங் லைசன்ஸையும் ஹோட்டல் பில்லையும் கொடுத்து 'போலீசு பிடிச்சா காட்டு,' என்றான்.

(தொடரும்)

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!