ஐவரில் யார்?

‘அந்த ஐந்து பேரும் இந்த விடு­தி­யி­லி­ருந்து வெளியே போகாம பார்த்­துக்­க­ணும், ஹென்றி யோ’, என்று காவல்­துறை துப்­ப­றி­வா­ளர் நட்­சத்­திரா உறு­மி­னாள்.

‘இவர்­கள்ல யாரா­வது ஒருத்­தர்­தான் இந்த ஆசா­மியை கொன்­றி­ருக்க வேண்­டும்’, நடைபாதை­யில் கிடந்த உடலைப் பார்த்­த­வாறு, அவ­ளது ஊகத்தை வெளிப்­ப­டை­யா­கவே அவ­ளது உத­வி­யா­ள­ரி­டம் கூறி­னாள்.

“இரண்டு மணி நேரத்­துக்கு மேல் அடை­மழை பெய்­து­கொண்­டி­ருக்கு, யாரும் தப்­பித்துப் போயி­ருக்க முடி­யாது.”

“மேடம், மேலும் கண்­காணிப்­புக் கரு­வி அந்த ஐவ­ரை­யும் அடை­யா­ளம் காட்­டுது, எல்­லோ­ரை­யும் உள்­ளேயே இருக்­கும்­படி உத்­த­ரவு போட்­டி­ருக்­கிறேன்,” என்று ஹென்றி யோ பதி­ல­ளித்­தார்.

அது மலே­சி­யா­வின் வடக்கு தெற்கு நெடுஞ்­சா­லை­யின் மாச்­சாப் பகு­தி­யி­லுள்ள ஒரு மாடிக் காப்பி விடுதி.

நெடுஞ்­சா­லை­யின் பக்­கத்­தில் ஒரு ஒதுக்­குப்புறத்­தில் இருப்­ப­தால், கழி­வறை மற்­றும் இளைப்­பார அங்கு சிலர் வண்­டி­களை நிறுத்­தி­விட்டு ஓய்­வெ­டுப்­பது வழக்­கம். காப்பி விடு­தியை நடத்­து­ப­வர் திரு வோங். அன்று மதி­யம் அங்கு நடந்த கொலை­யைப் பற்றி தக­வல் கொடுத்­த­வ­ரும் அவர்­தான்.

“அலு­வ­ல­கம் பக்­கத்­துல இருக்­கி­ற­தால, இந்த கொலைய விசா­ரிக்­கிறது நம்ம பொறுப்பா ஆயி­டுச்சு, இனி மழை ஓய்ந்த பிற­கு­தான் தட­வி­யல் வல்­லு­நர்­கள் வரு­வாங்க. அதற்­குள்­ளாக என்­னென்ன தட­யங்­கள் கிடைக்­கின்­றன என்று பார்ப்­போம்,” நட்­சத்­திரா தனது வேலை­யில் மும்­மு­ரமா­னாள்.

தரை­யில் கிடந்த அசை­வற்ற உடலை குனிந்து பார்த்­து­விட்டு, ‘கொலை செய்­யப்­பட்­ட­வ­ரைப் பற்றி... ஏதே­னும் தக­வல் இருக்கா?’ நட்­சத்­திரா ஏறிட்டு ஹென்றி யோவைப் பார்த்­தாள்.

“குப்­பற கிடக்­கிற உட­லின் கால்­சட்­டைப் பின் பையில் எந்த பணப்­பை­யும் இல்ல. ஆனா இவரு இந்­த காப்பி விடுதிக்கு இப்­போ­து­தான் முதல்­மு­றை­யாக வந்­தி­ருக்­கி­றார் என்று விடுதியின் முதலாளி சொன்­னாரு. வேற ஒண்­ணும் தெரி­யல மேடம்,” எனப் பதி­ல­ளித்­தார் ஹென்றி யோ.

உட­லின் தலையைத் தொட்­டுப் பார்த்த நட்­சத்­திரா, “மழுங்­கிய ஆயு­தத்­தால தலை­யில அடித்­தி­ருக்­க­ணும். வாங்க இரத்­தக் கரை எங்­கி­ருந்து தொடங்­கு­துன்னு போய் பார்ப்­போம்,” என நகர்ந்­தாள்.

ஒவ்­வொரு அடி­யை­யும் மெது­வாக வைத்து, கண்­களை எங்­கும் சுழ­ல­விட்டு நடந்­த­னர், நட்­சத்­தி­ரா­வும் ஹென்றி யோவும்.

ஆங்­காங்கே காய்ந்­தும் காயா­ம­லும் கிடந்த இரத்­தக்கறை கழி­வ­றை­யின் ஓர் அறை­யில் முடிந்­தது.

விளக்­கொ­ளி­யில் கழி­வ­றை­யின் அந்த அறை நல்ல வெளிச்­சத்­து­டன் இருந்­தது.

இந்த அறை­யில்­தான் தலை­யில் அடி­பட்­டி­ருக்க வேண்­டும் என்று முடி­வுக்கு வந்­தாள் நட்­சத்­திரா.

ஆனால் ஆயு­தம்..? அறையை ஒவ்­வொரு அங்­கு­ல­மாக நோட்­ட­மிட்­டாள். நீர்ப்­பாய்ச்­சி­யின் கொள்­க­லன் மூடியை நகர்த்­தி­னாள்.

கொள்­க­ல­னில் உள்ள தண்­ணீர் சிவப்பு நிற­மாக இருந்­தது. அடி­யில் உடைந்த ஒரு செங்­கல். அதன் பக்­கத்­தில் தண்­ணீ­ரில் மிதந்­து­கொண்­டி­ருந்­தது ஒரு பணப்பை.

ஈர­மாக இருந்த அதைத் திறந்து பார்த்­தாள். கொலை­யுண்­ட­வ­னின் அடை­யாள அட்டை இருந்­தது.

பணப்­பையை ஹென்றி யோவி­டம் நீட்­டி­னாள். என்ன செய்­ய­வேண்­டும் என்­பது அவ­ருக்குத் தெரி­யும் என்ற நம்­பிக்­கை­யில்.

நட்­சத்­திரா அங்­கி­ருந்து வெளி­யே­றி­னாள். அவ­ளைப் பின் தொடர்ந்­தான் ஹென்றி யோ.

வந்த வழியே திரும்­ப­வும் நடைபா­தைக்கு வந்­த­னர். நடைபாதை­யின் பக்­கத்­தில் ஒரு கல் இருக்கை. அதை நெருங்கி இருக்­கையை ஆய்வுசெய்­தாள்.

அங்கே, நன்­றாகப் புகைத்து முடித்த ஒரு வெண் சுருட்டுத் துண்டு கிடந்­தது. நடைபா­தை­யின் இரு பக்­கங்­க­ளி­லும் செங்­கற்­கள் செங்­குத்­தாக வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தை­யும் அவர்­கள் கவ­னித்­த­னர். அதில் ஓரிரு கற்­கள் காணா­மல் போயி­ருந்­தன.

மீண்­டும் நடை­பா­தையை கடந்து காப்பி விடுதியின் முன்­பு­றத்­துக்கு வந்­த­னர். முன் வாச­லில் இருந்த இருக்­கை­யில் அமர்ந்­த­னர். நட்­சத்­திரா சுற்­றுமுற்­றும் தன் கண்­களை ஓட­விட்­டாள்.

வாச­லின் மேற்­ப­கு­தி­யில் கண்­கா­ணிப்­புக் கருவி இருந்­தது. காப்பி விடு­திக்­குள் வரும் அனை­வ­ரும் கண்­கா­ணிக்­கப்­ப­டு­கி­றார்­கள் என்­பதை நட்­சத்­திரா உறு­தி செய்­து­கொண்­டாள். ஆனால், இருக்கை அமைந்த பகுதி மற்­றும் கழி­வ­றைக்குச் செல்­லும் நடை­பாதை கண்­கா­ணிக்­கப்­ப­ட­வில்லை என்­ப­தை­யும் அவள் உணர்ந்­தாள்.

கடந்த அரை மணி நேர­மாக தன் குறிப்­பேட்­டில் சேக­ரித்து வைத்­தி­ருந்த தக­வல்­களை ஒன்­று­வி­டா­மல் நட்­சத்­தி­ரா­வி­டம் ஒப்­பித்­தார் ஹென்றி யோ.

“நீங்க கொடுத்த அடை­யாள அட்டை கொலை செய்­யப்­பட்­ட­வ­ரு­டை­யது. பெயர் சிவ­சண்­மு­கம். வயது நாற்­பது. கட்டை பிர­மச்­சாரி. இரா­ணு­வத்­தில் முழு­நேர பயிற்­று­விப்­பா­ள­ராக இருக்­கி­றார். பகுதி நேரத்­துல குத்­துச்சண்டை கற்­றுக்­கொ­டுக்­கி­றார். மேலும் இந்த ஒரு வார­மாக விடுப்­பில் இருக்­கி­றார்.

“இவர்­தான் இந்த காப்பி விடு­திக்­குள் முத­லில் நுழைந்­த­வர் என்று கண்­கா­ணிப்­புக் கருவி காட்­டு­கிறது”.

“நன்று, விரை­வா­கவே தக­வல்­களை சேக­ரித்­து­விட்­டீர்­களே. அத­னால்­தான் உங்­களை எனக்கு உத­வி­யா­ள­ராக வைத்­தி­ருக்­கி­றேன்...” என்று புன்­ன­கைத்­த­வாறே, ‘சிவ­சண்­மு­கத்­துக்கு புகை­பி­டிக்­கும் பழக்­கம்...?” நட்­சத்­திரா கேள்­வியை முடிப்­ப­தற்­குள், ‘ஆமாம்’ என்று கூறி­ய­தோடு எந்த வகை­யான வெண்சுருட்டு, எண்­ணிக்கை போன்ற மற்ற விவ­ரங்­க­ளை­யும் விவ­ரித்­தார் ஹென்றி யோ.

“அடுத்து காப்பி விடு­திக்கு வந்­த­வர், சரக்­குந்து ஓட்­டு­நர் மாரி­முத்து. நாற்­பத்­தைந்து வயது. அவர் ஒவ்­வொரு வார­மும் ஒரு சில நாட்­க­ளுக்கு இந்­தக் காப்பி விடு­திக்கு வந்து கழிப்­ப­றையைப் பயன்­ப­டுத்தி­விட்டு செல்­வது வழக்­கம். இன்று பலத்த மழை பெய்­து­கொண்­டி­ருந்­த­தால் உள்ளே தேனீர் அருந்த உட்­கார்ந்­து­விட்­டார்”.

“அடுத்து நுழைந்­த­வர் டேவிட். வயது அறு­பது. ஓய்வுபெற்ற ஆசி­ரி­யர். பக்­கத்­துல தங்­கி­யி­ருக்­கி­ற­தால அவ்­வப்­போது இந்­தக் காப்பி விடு­திக்கு வந்து தேநீர் குடிப்­பது வழக்­கம்.

“அவ­ருக்கு திரு­ம­ணம், பிள்ளை குட்­டி­கள்?’, என இடை­ம­றித்­தாள் நட்­சத்­திரா.

“திரு­ம­ண­மாகி முப்­பது வரு­டங்­க­ளுக்கு மேல் ஆகுது. ஒரே பையன். பத்து வரு­டங்­க­ளுக்கு முன் இரா­ணு­வத்­தில் சேர்ந்த போது ஒரு விபத்­தில் சிக்கி இறந்­த­தாக தெரி­கிறது. மூன்­றாண்­டு­க­ளுக்கு முன் அவ­ரது மனை­வி­யும் இறந்­து­விட்­ட­தால இப்­போது தனி­யா­கத்­தான் இருக்­கி­றார்,” என்று முடித்­தார் ஹென்றி யோ.

“நான்­கா­வது நபர். முப்­பது வய­தைக் கடந்த முன்­னால் போதைப் புழங்கி, மதி­ய­ர­சன்.

“எந்­த­வொரு வேலை­யி­லும் நீடித்து நிலைத்­தி­ருப்­ப­தில்லை. இங்கு அடிக்­கடி வரு­ப­வன். இந்­தக் கடை உரி­மை­யா­ள­ருக்கு நன்கு அறி­மு­க­மா­ன­வன்.

“இவன் கொலை­யுண்ட சிவ­சண்­மு­கத்­தின் இரா­ணுவ முகாம் உண­வ­கத்­தில் சில மாதங்­கள் வேலை செய்­து­விட்டு வில­கி­யி­ருக்­கி­றான்.

“ஒரு சில சந்­தர்­பங்­களில் இரு­வ­ருக்­கும் மோதல்­கள் ஏற்­பட்­டி­ருக்­காம். எல்­லாமே சொற்ப விஷ­யங்­க­ளுக்­கா­கத்­தான். கொலை செய்­யும் அள­வுக்கு இவை இல்லை என்று தெரி­கிறது’.

“ஐந்­தா­வது நபர் நாற்­பது வய­து­டைய ஹரி. தனி­யார் நிறு­வ­ன­மொன்­றின் நிறு­வ­னர்.

“இவ­ரும் கொலை­யுண்ட சிவ­சண்­மு­கத்­து­டன் இரா­ணு­வத்­தில் பணி­பு­ரிந்­தி­ருக்­கி­றார்.

“இரு­வ­ருக்­கும் எந்தவித மனஸ்­தா­ப­மும் ஏற்­பட்­ட­தில்லை. இவ­ரும் இந்­தக் காப்பி விடு­திக்கு அடிக்­கடி வரு­ப­வர்­களில் ஒரு­வர்”.

ஹென்றி யோ கூறிய அனைத்­தை­யும் நட்­சத்­திரா குறிப்­பெ­டுத்­துக்­கொண்­டாள்.

“காப்பி விடு­திக்­குள் வந்­த­வர்­க­ளின் வரி­சையை கண்­கா­ணிப்­புக் கரு­வி­யி­லி­ருந்து கிடைத்­ததை வைத்­துத்­தானே சொன்­னீர்­கள், அதை உரி­மை­யா­ள­ரி­டம் உறுதிப்­படுத்­தி­னீர்­களா?

“இல்லை”.

“கண்­கா­ணிப்­புக் கருவி காப்பி விடு­தி­யின் வாச­லில் வரு­வோரை கவ­னிக்­கிறது, ஆனால் வலது புறம் திரும்பி நடைபாதை வழி சென்று கழிப்­பறை மற்­றும் அந்த இருக்­கை­யில் இளைப்­பா­று­ப­வர்­களை அது கண்­கா­ணிக்­க­வில்லை.

“ஆக, விடு­திக்­குள் சென்­ற­வர்­க­ளின் வரிசை நீங்க சொன்ன மாதிரி இருக்­காது,” என்று திட­மா­கக் கூறிய நட்­சத்­திரா தொடர்ந்­தாள்.

‘மேலும் விடு­திக்­குள் புகை­பிடிக்க அனு­ம­தி­யில்லை. அத­னால சிவ­சண்­மு­கம் அந்த இருக்­கை­யில் அமர்ந்து புகை­பி­டித்­தி­ருக்­க­வேண்­டும். உரி­மை­யா­ளர் சிவ­சண்­முகத்தை உயி­ரோடு நேரில் பார்த்­தி­ருக்க வாய்ப்­பில்லை, கண்­காணிப்­புக் கரு­வி­யில்­தான் பார்த்­தி­ருப்­பார்.

சில தக­வல்­களை ஹென்றி யோவி­ட­மி­ருந்து கேட்டு மறு­ப­டி­யும் உறு­திப்­ப­டுத்­திக்­கொண்­டாள். தனது கைக்க­டி­க­ரத்தை பார்த்­தாள். மாலை மணி ஐந்து எனக் காட்­டி­யது.

குறிப்­பு­கள், படங்­கள் சேக­ரிக்க ஒரு மணி நேரத்­துக்கு மேல் ஆகி­விட்­டதை அப்­போ­து­தான் அவள் உணர்ந்­தாள். சிறிது நேரம் யோச­னை­யில் ஆழ்ந்­தாள்.

இரு­வ­ரும் காப்பி விடு­திக்­குள் நுழைந்­த­னர். இடையே, காப்பி விடு­தி­யின் உரி­மை­யா­ளரை சந்­தித்து பேச்­சுக் கொடுத்­தாள் நட்­சத்­திரா.

‘வரி­சையா... யார் யார் விடு­திக்­குள்ள வந்­தாங்­கன்னு சொல்­ல­மு­டி­யுமா?, அவள் திரு வோங்கை கேட்­டாள்.

“முதல்ல இங்க வந்­த­வர், மாரி­முத்து, அப்­பு­றம்... மதி­ய­ர­சன்...பிறகு... ஹரி... கடை­சியா டேவிட்...” என்று வரி­சைப்­ப­டுத்­தி­னார் திரு வோங்.

“முதல்ல வந்த மாரி­முத்­து­வுக்­கும் கடை­சி­யாக வந்த டேவிட்­டுக்­கும் எவ்­வ­ளவு நேர இடை­வெளி இருக்­கும்?”

அவள் சந்­தே­கத்தைத் தெளிவுபடுத்­திக்­கொள்ள இந்தக் கேள்­வியைக் கேட்­டாள்.

“ஒரு மணி நேரம் இருக்­கும்,” என்று பதி­ல­ளித்­தார் உரி­மை­யா­ளர்.

ஹென்றி யோவை தனியே அழைத்து, முதி­ய­வர் டேவிட்டை காப்பி விடு­தி­யில் இருந்த அலு­வ­லக அறைக்கு அழைத்து வரச் சொன்­னாள். அமை­தி­யாக ஹென்றி யோவு­டன் அறை­யி­னுள் நுழைந்­தார் டேவிட்.

‘சிவ­சண்­மு­கத்தைக் கொலை செய்­தது நீங்­கள்­தானே டேவிட்?’, சீறி­னாள் நட்­சத்­திரா. ஹென்றி யோ வியப்­பில் விழித்­தான்.

“அவ­னு­டைய சந்­தே­கம் போதைப் புழங்கி மதி­ய­ர­சன்­மீது இருந்­தது. எந்­த­வித சல­ன­மு­மின்றி டேவிட் குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டார்.

“பத்து வரு­டங்­க­ளுக்கு முன், என்­னு­டைய ஒரே மகன் இரா­ணு­வத்­தில் பணி­யாற்றத் தொடங்­கி­னான். அவ­னு­டைய பயிற்­று­விப்­பா­ள­ராக இருந்­த­வன் சிவ­சண்­மு­கம். சிவ­சண்­மு­கத்­தின் கைத்தொ­லை­பேசியைத் தற்­செ­ய­லாக என் மகன் தட்­டி­விட்­ட­தால் மூர்க்­கத்­த­ன­மாக குத்தி தாக்­கப்­பட்­டான். அதன் விளை­வாக மருத்­து­வ­ம­னை­யில் பல மாதங்­கள் சிகிச்சை பெற்­று­வந்­தான்.

“ஒவ்­வொரு நாளும் என் மனை­வி­யும் நானும் அவனை பார்த்து அவன் நிலைக்­காக வருத்­தப்­பட்­டோம். கும்­பி­டாத தெய்­வங்­கள் இல்லை. ஆறு மாதத்­துக்­குப் பிறகு மருத்துவர்­களும் கைவி­ரித்­து­விட்­டார்­கள். நாங்­கள் எங்க ஒரே பிள்­ளைய இழந்­தோம்.

“ஆனா... ஆனா.. சிவ­சண்­முகத்­துக்கு எந்தத் தண்­ட­னை­யும் கிடைக்­காம தப்­பித்­துக்­கொண்­டான். மகன் இறந்த வேத­னை­யில் என் மனை­விக்குப் புத்தி பேத­லித்­து­போ­னது.

“அந்த ஏழு வரு­டங்­கள்ல, நான் எத்­தனை துன்­பங்­களை அனு­ப­வித்­தேன்னு உங்­க­ளுக்கு தெரி­யுமா? என் மனைவி இறந்து மூன்­றாண்­டு­கள் ஓடி­விட்­டன. என் குடும்­பத்தை சின்­னா­பின்­னா­மாக்­கி­ய­வனை சும்மா விடலாமா?

“அதான்... அதான்.... அவனை.....” முடிக்­கா­மல் பல­மாக சிரித்­தார் டேவிட்.

நட்­சத்­தி­ரா­வும் ஹென்றி யோவும் முதி­ய­வர் டேவிட்­டின் நிலைக்­காக பரி­தா­பப்­பட்­ட­னர். ஆனா­லும் குற்­ற­வாளி தண்­டனை பெற்­றுத்­தானே ஆக­வேண்­டும்.

“சரி, இவரை காவ­லில் தடுத்து வையுங்­கள். ஹென்றி யோ,” என்று கூறி நகர்ந்­தாள் நட்­சத்­திரா.

நட்­சத்­தி­ரா­வின் அபார புல­னாய்­வுத் திற­மை­யில் மூழ்­கிப்­போ­னார் ஹென்றி யோ!

என்ன நடந்­தி­ருக்­கும் என அவ­ரது மனத்­தி­ரை­யில் காட்­சி­க­ளா­கப் பதி­வா­யின.

முத­லில் வந்த சிவ­சண்­மு­கம், விடு­திக்­குள் செல்­லா­மல் நேரே நடைபா­தை­யில் கிடந்த இருக்­கை­யில் அமர்ந்து புகை­பி­டித்­துக்­கொண்­டி­ருக்­கி­றான்.

அடுத்து வந்த மாரி­முத்து, கழிப்­ப­றையை பயன்­ப­டுத்­தி­விட்டு தேநீர் அருந்த விடு­தி­யி­னுள் சென்­றி­ருக்­கி­றார்.

மூன்­றா­வ­தாக வந்­த­வர், டேவிட். அவர் காப்பி விடு­திக்­குள் செல்­ல­வில்லை.

புகைபிடித்­துக்­கொண்­டி­ருந்த சிவ­சண்­மு­கத்தை அடை­யா­ளம் கண்­டுக்­கொண்­டார்.

அவ­ரும் அந்த இருக்­கை­யில் சிவ­சண்­மு­கத்­து­டன் சிறிது நேரம் உட்­கார்ந்­தி­ருக்­கி­றார்.

அப்­போ­து­தான் பழி­வாங்­கும் எண்­ணம் அவ­ருக்குத் தோன்­றி­யிருக்க வேண்­டும்.

சிவ­சண்­மு­கம் புகை­பி­டித்து முடித்­த பிறகு கழிப்­ப­றைக்குச் சென்­றி­ருக்­கி­றான்.

டேவிட், செங்­கல்­லு­டன் பின் தொடர்ந்­தி­ருக்­கி­றார். கழிப்­ப­றை­யில் சிவ­சண்­மு­கத்­தின் தலை­யில் ஓங்கி அடித்­தி­ருக்­கி­றார்.

மழை பல­மா­கப் பெய்­துகொண்­டி­ருந்­த­தால் வேறு­வ­ழி­யின்றி டேவிட் கடைசி ஆளாக விடு­திக்­குள் சென்­றி­ருக்­கி­றார்.

மதி­ய­ர­சன் மற்­றும் ஹரி கழி­வறைப் பக்­கம் போகா­மல் நேரே விடு­திக்­குள் சென்­றி­ருக்­கி­றார்­கள்.

தலை­யில் பலத்த அடி­பட்ட சிவ­சண்­மு­கம் நடை­பா­தை­யில் தள்­ளாடி விழு­வ­தைப் பார்த்த காப்பி விடுதி உரி­மை­யா­ளர், காவல் நிலை­யத்­துக்குத் தக­வல் கொடுத்­தி­ருக்­கி­றார்.

முற்­றும்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!