ஆனந்தயாழ் மீட்டியவன்

1 mins read

நா.முத்துக்குமார் - அவன்

நா உதிர்த்ததெல்லாம்

நன்முத்துக்கள்தான்

பாடல் வரிகளால்

பல இளைஞர்களைப்

பித்துப்பிடிக்க வைத்தவன்

அடைமொழி ஏதுமின்றி

திரைப் பாடல்களை

அடைமழையாய்ப் பொழிந்தவன்

பச்சையப்பனிலிருந்து ஒரு

தமிழ்வணக்கமாய்ப் புறப்பட்டு

பட்டிதொட்டியெங்கும்

பாடல்வழியே சென்று சேர்ந்தவன்

ஒவ்வொரு வீட்டின்

அணிலாடும் முன்றிலிலும்

நின்று கொண்டு

ஆனந்தயாழ் மீட்டியவன்

எளிய வார்த்தைகளால்

எதார்த்த வாழ்க்கையை

அவன்போல் அத்தனை -

அழகாய்ச் சொன்னவன்.

பட்டாம்பூச்சி விற்று முடித்து

நட்சத்திரங்கள்

விற்கச் சென்றுவிட்ட

நல்ல மனசுக்காரனும் அவனே.