தடுமாற்றம்..!

தடுமாற்றம்..!

1 mins read

யாருமற்ற அந்த மலைக்காட்டில்

தவறி விழுந்து கிடந்த போதுதான்

உன்னைக் கண்டெடுத்தேன்.

வளராத சிறகுகள்,

வளைந்து நடக்கவியலாத ஒரு கால்,

வலித்தாலும் கத்துகிற வாய்..

கவச, குண்டலமாய்

இறுகப் பற்றிக் கொண்ட

உன்னை வளர்ப்பதொன்றே

என் வாழ்க்கையானது.

இடைவிடாமல் நீ எழுப்பும் ஒலி

என் செவிகளுக்கு சுவாசம்.

உன் மெளனம், என்னை திடுக்கிட்டு எழச்செய்யும் அலாரம்..

உன் கழுத்தைக்

கவ்விப் பறந்ததொரு கழுகு.

உன் ஒலியடங்கலே என்னைத் தாய்க்கோழியாக்கியது.

'வானத்தைக் காட்டியிருக்கும் கழுகு,

ஏன் தடுத்தாய்?' என்றாய் கோபத்தோடு..

உன்னை உணவாகப் பார்க்கும் காட்டுப்பூனைகளை

உறவாகப் பார்க்கத் தொடங்கினாய்..

இறக்கைகள் வளர்ந்தும் குறைகாலைப்

பார்த்தே பறக்க மறுத்து, மறந்தாய்..

எச்சரிக்கையும், ஊக்குவிப்பும்

உனக்கு நச்சரிப்பானது..

உன் சப்தத்தின் அடர்த்தி குறைந்து

கொண்டே வருவதுணர்ந்து திரும்பிப் பார்க்கிறேன்.

எப்போதோ கட்டப்பட்ட பழுதான கயிற்றின்மேல்

கழைக்கூத்தாடியின் தடுமாற்றத்தோடு

நடந்து போய்க் கொண்டிருக்கிறாய்

அடுத்த மலைமுகடு நோக்கி..

உன்னைக் கண்டும் கடந்து போயிருக்கலாமோவெனும்

விரக்தியுடன், தடுக்கவியலாமல்

தவித்து நிற்கிறேன்.

நீ கடக்க வேண்டியபடி

உறக்கம் தொலைத்து..!!