உப்பைத் தின்னாதவன்

அந்த அலு­வ­ல­கம், ‘கோரப்­பட்ட’ நேரம் - அதா­வது காலை பதி­னோரு மணி ஊழி­யர்­களில் மூன்­றில் ஒரு பங்­கி­னர், வேலை­யைத் துவக்­க­வில்­லை­யா­னா­லும், வேலைக்­காக கூடி­விட்ட வேளை.

இவர்­க­ளுக்­காக, ‘காபி’ வாங்­கிக்கொண்டு திரும்­பிய வேத­முத்து, அலு­வ­லக வளா­கத்­திற்­குள் நுழைந்­த­வு­ட­னேயே, என்­னமோ - ஏதோ­வென்று எக்கி எக்கி ஓடி­னான். யூனி­பார பழுப்பு சட்­டைக்கு மேல், பூணுல் போட்­டது மாதி­ரி­யான வெள்ளை பிளாஸ்­டிக் பட்­டை­யின் அடி­வா­ரத்­தில் தொங்­கிய ‘இரண்டு லிட்­டர்’ பிளாஸ்க். கிட்­டத்­தட்ட அறுந்து விழப்­போ­ன­போது, அவன் வாசற்­ப­டிக்கு வந்­து­விட்­டான். அங்கே கண்ட காட்­சி­யைப் பார்த்­த­தும், ஒரு காலை வாசல் படி­யில் வைத்து, தூக்­கிய மறு­காலை, தரையில் பதிய வைக்­கா­மல், நிலைப்­படி­யினை ஆதா­ர­மாய் பிடித்­த­படி அவன், ஒற்­றைக் காலில் நின்­ற­போது - அந்த அலு­வ­ல­கத்­திற்­குள் ஏறிக் கொண்­டி­ருந்த ஒற்­றைக் குரல், இப்­போது எகி­றி­யது.

‘என்­னம்மா... காது குத்­தறே... ஒருத்­தன் போயிட்டா... ஆபீஸே போயி­டுமா என்ன... முத­ல­மைச்­சர், கவர்­னரை வீட்­டுக்கு அனுப்­பி­னா­லும் கவர்­னர், முத­ல­மைச்­சரை வீட்­டுக்கு அனுப்­பி­னா­லும் சர்க்­கார்னு ஒண்ணு இருக்­கத்­தா­னமா செய்­யும்? இந்­தி­ரா­காந்தி இல்லைன்னா கவர்ன்­மெண்ட் இல்லாமல் போயிருமா என்ன? அப்­படி இருக்­கை­யிலே... இவன் சுண்­டக்­காய் ஆபீ­ஸரு... பிள்­ளைக்­காப் பயல்... இவன் போயிட்­டால்... எங்க பண­மும் போக­ணும்னு அர்த்­தமா... தெரி­யா­மத்­தான் கேக்­கேன். விளை­யா­டு­ற­துக்கு ஒனக்கு வேற ஆளு கிடைக்­க­லையா...’

செம்­மண் நிறத்­தி­லான திரைத் துணி­யால் ‘கோஷா’ போடப்­பட்ட கிழக்­குப் பக்­கத்து ஆபீ­ஸர் அறைக்­கும், காலி­ழந்த நாற்­கா­லி­க­ளை­யும், ஓட்டை ஒடி­சல் மேஜை­க­ளை­யும் கொண்ட மேற்கு பக்­கத்து ‘மூளி’ அறைக்­கும் இடைப்­பட்ட செவ்­வக அறைக் கூடத்­தில், கடற்­க­ரைப் பாண்டி, நர்த்­த­னமே ஆடி­னார்.

காலில் சலங்­கை­யில்­லாக் குறை­யைப் போக்­கு­வது போல், இரு­பக்­க­மும் போடப்­பட்ட மேஜை நாற்­கா­லியைத் தட்­டி­ய­ப­டியே அங்­கும் இங்­கு­மாய் ஆடி­யும் ‘பாடி­யும்’ அவர் சுழன்­ற­போது - அதி­காரி அறைக்கு வெளியே, நான்கு அடி இடை­வெளி­யில், அதன் வாச­லுக்கு முன்­பக்­க­மாய் போடப்­பட்ட ‘எஸ்’ நாற்­கா­லி­யில் நுனிக்கு நகர்ந்­து­விட்ட அக்­க­வுண்­டண்ட் பாத்­திமா, மேஜை­யில் கையூன்றி, அதன்­மேல் முகம் போட்­டுக் கிடந்­தாள்.

கடற்­க­ரைப் பாண்­டி­யின் குரல் ஏற ஏற, அவ­ருக்கு பயப்­ப­ட­வில்லை என்­ப­து­மா­திரி முகத்தை நிமிர்த்­தி­னாள். அதே­ச­ம­யம், உடல் எதிர் விகி­தாச்­சா­ரத்­தில் கூனிக் குறு­கி­யது. கூடவே, ஜன்­ன­லுக்கு வெளியே, பிற அலு­வ­லகவாசி­களும், ‘பப்­ளிக்­கும்’ ஜன்­னல்­களை மொய்த்­தார்­கள்.

போதாக்­கு­றைக்கு. அவள் ஏதோ செய்­யத்­த­காத தப்­பைச் செய்து விட்­ட­து­போன்ற பார்வை...

இத­னால் பாத்­திமா, தனது பச்­சைச் சேலை­யால் தலைக்கு முக்­காடு போட்டு, தென்னை ஓலை­க­ளுக்­குள் மின்­னிய செவ்­வி­ளனீர் போல் முகங்­காட்டி தன்னை வேடிக்கை பார்த்த கூட்­டத்­திற்கு ஒரு தன்­னிலை விளக்­கம்­போல் கடற்­க­ரைப் பாண்­டி­யைப் பார்க்­கா­மல், அந்­தக் கூட்­டத்தை ஓரங்­கட்­டிப் பார்த்­த­ப­டியே பேசி­னாள்.

‘அவர் டிரான்ஸ்­ப­ரில் போனா­லும்... இன்­னும் வீட்­டைக் காலி பண்­ணல... எப்­ப­டி­யும் வரு­வாரு... வந்­து­தான் ஆக­ணும்... அநே­க­மாய் ஒரு வாரத்­துல...’

‘ஒரு வாரம்... ஒரு வார­முன்னு மூணு­மா­சமா... இப்­ப­டித்­தான் சப்­பக்­கட்டு கட்­டு­றேம்மா... மூணு மாசமா சம்­ப­ளம் வாங்­கா­மல் இருந்­தி­ருப்­பானா... மூணு­மா­சமா வீட்­டுக்குச் செல­வ­ழிக்­கா­மல் இருந்­தி­ருப்­பானா... மூணு­மா­சமா... பெண்­டாட்­டி­கிட்டே...’

‘பெரி­ய­வரே...’

பாத்­திமா, காது­க­ளைப் பொத்­திக்­கொண்டு, தலை­யைக் குனிந்து கொண்­டாள். அழு­தாளோ இல்­லையோ, அழு­வ­து­போல் முகத்தை அப்­படி பண்­ணி­னாள். இவ­ளுக்கு வேண்­டி­ய­து­தான், என்­ப­து­மா­திரி இது­வரை வேடிக்­கை பார்த்த சகாக்­களில் அரு­திப் பெரும்­பான்­மை­யி­ன­ருக்கு அந்த ஆசா­மி­யின் பேச்சு அதி­கப்­ப­டி­யாய் தோன்­றி­யது.

‘கிரேட் ஒன்’ கிளார்க் ஜோதி­யம்மா, பாத்­தி­மா­வின் பக்­கத்­தில் போய் நின்று கொண்­டாள். அவள் போன­தா­லயே, ‘கிரேட் டு’ ஆறு­மு­க­மும், அவளை பின் தொடர்ந்­தான்.

எந்த பாத்­தி­மா­வுக்கு பாது­கா­வ­லாய் நிற்க போவ­து­போல் போனானோ, அந்த பாத்­தி­மாவை விட்டு விட்டு, பழ­கு­தற்கு ‘இனிய’ ஜோதிக்கு மெய்க்­கா­வ­லன்­போல் மெய்­யோடு மெய்­ப்பட நின்­றான்.

அந்த ஆசா­மி­யின் ஆட்­டத்­திற்கு ஜால்ரா போடு­வ­து­போல் அர­சாங்க கவர்­களில் சாப்பா போட்­டுக் கொண்­டி­ருந்த ‘டெப்­திரி’ சாமி­நா­தன், அங்­கி­ருந்­த­ப­டியே, கடற்­கரைப் பாண்­டி­யன் முது­கைப் பார்த்து முறைத்­தான்.

‘பராஸ்’ (மேஜை நாற்­காலி களை துடைப்­ப­வர்) சண்­மு­கம், கையில் பிடித்த ஈரத் துணியை பிழிந்­த­ப­டியே, தக­ரா­றுக்கு உரிய இடத்தை நோக்கிப் பாய்ந்­தான்.

வெளியே கூடிய கூட்­டத்தை துரத்­தி­விட்டு உள்ளே வந்த பியூன் வேத­முத்து அந்த ஆசா­மியை கையைப் பிடித்து வெளியே கொண்டு விட­லாமா என்­ப­து­போல் யோசித்­தான். இதற்­குள், அந்த ஆசா­மி­யான கடற்­க­ரைப் பாண்டி சவா­லிட்­டார்.

‘நீ அழு­தா­லும் சரி... இந்த பய­லுக அடிச்­சா­லும் சரி... போவ­தாய் இருந்­தால், மூவா­யி­ரத்து முந்­நூறு ரூபா­யோ­டத்­தான் போவேன். இல்­லாட்டா, இங்­கி­ருந்து இம்­மி­யும் நக­ர­மாட்­டேன்... ஒங்­க­ளால ஆனதை நீங்க பாருங்க... என்­னால ஆனதை நான் பாக்­கேன்...’

அந்த அலு­வ­ல­க­வா­சி­கள், ஆடிப்­போ­னார்­கள். ஏற்­க­னவே அடி­பட்­டது­போ­லவே அரற்­றும் கடற்­க­ரைப் பாண்­டியை விட்டு, சிறிது விலகி நின்­றார்­கள்.

கிரேட் டு ஆறு­மு­கம், கிரேட் டு ஜோதியை தோளைப் பிடித்து இருக்­கையை நோக்கி, மெல்­லத் தள்­ளி­விட்டு, அந்த சாக்­கில் அவ­னும் நடந்­தான்.

ஆக மொத்­தத்­தில், எல்­லோ­ரும் மூச்­சைக்­கூட மெல்ல விட்­டார்­கள். ஆனால், வேத­முத்­து­தான், பாத்­தி­மா­விற்கு கேட­யம்­போல், நின்­று­கொண்டு ‘யோவ்’ என்று ஊளை­யிட்­டான்.

இது எரி­கிற தீயில் எண்­ணெய் ஊற்­றி­ய­து­போல் ஆகி­விட்­டது. இத­னா­லேயே, கடற்­க­ரைப் பாண்டி ஒரு காரி­யம் செய்­தார்.

கடற்­க­ரைப் பாண்டி, திடீ­ரென்று ஆபீ­ஸர் அறை முக்­காட்­டுத் துணியை சுருட்டி நிலைப்­ப­டிக்கு மேலே உள்ள பக்­க­வாட்டுக் கம்­பி­யில் சொரு­கி­விட்டு, அந்த அறைக்­குள் ஓடி­னார். அங்கே உள்ள சன்­மைகா போட்ட வளைவு மேஜையை ஒரு பக்­க­மாய் இழுத்­துப்­போட்­டு­விட்டு, அதற்­குப் பின்­னால், புத்­தம் புதி­தாய் கிடந்த மெத்தை நாற்­கா­லியை இழுத்­த­போது, சக்­க­ரச் செருப்­பு­கள் போட்ட அதன் கால்­கள், அவர் பக்­க­மாய் நகர்ந்­தன.

நீல கலர் நாற்­காலி. பின் வளை­வாய் வளைந்து, இரு பக்­க­மும் யானைத்­தந்­தம் போல் வழு­வ­ழுப்­பான கை­பி­ரேம்­கள் கொண்ட கலை­வ­டிவு.

ஒரு­வர் படுக்க இரு­வர் உட்­கா­ரும் அள­விற்­கான சுக­மான இருக்கை. உட்­கார்ந்­தி­ருப்­ப­வர் பின்­னால் சாயச் சாய, அதற்கு ஏற்ப அது வளைந்து கொடுக்­கும். முன்­னால் நகர நகர, தன்­னைத் தானே முன்­பக்­க­மாய் மாற்­றிக்­கொள்­ளும். அப்­ப­டிப்­பட்ட முதுகு மெத்தை.

இப்­ப­டிப்­பட்ட இந்த நாற்­கா­லியை, வாசல் முனைக்குக் கொண்டு வந்­து­விட்ட கடற்­க­ரைப்­பாண்டி, அதன் உச்­சியை, ஆபீ­ஸ­ரின் தலை­யாய் அனு­மா­னித்து, வலது கையால் அதை திரு­கி­ய­படியே, இடது கையை ஆட்டி ஆட்­டிப் பேசி­னார்.

‘இது எவன் அப்­பன் வீட்­டுச் சொத்து? பணம் கொடுக்க வக்­கில்ல... வகை­யில்ல. இந்த லட்­ச­ணத்­துல... நீ வேற, இதுல கால்­மேல் கால் போட்டு உட்­கார்ந்தே...

இதோ இந்த ரூமுக்­குள்ள, மல்­ல­லாக்­கப்­ப­டுத்து உட்­கார நல்லா இருக்கே பெரி­ய­வ­ரேன்’னு சொன்ன வாயி... இப்ப ஏமா பேச மாட்­டேங்­குது.’

பாத்­தி­மா­வுக்கு வெட்­க­மாகி விட்­டது. கண்­க­ளைக் குறும்­புத்­த­ன­மாய் பட­ர­விட்ட வெட்­க­மல்ல. நிர்­வா­ணப் பட்­டது மாதி­ரி­யான அவ­மா­ன­க­ர­மான வெட்­கம்.

அலு­வ­லக சகாக்­க­ளைப் பார்க்­கா­த­து­போல் பார்த்­தாள். அவர்­கள் தன்­னையே தரம் தாழ்த்­திப் பார்ப்­பது­போல் இருந்­தது.

பொது­வாக, ஒரு அதி­கா­ரி­யின் நாற்­கா­லி­யில், அலு­வ­லர்­கள் உட்­கா­ரு­வது இல்லை. கூடாது. அப்­படி உட்­கார்ந்­தால் அது இன்­டிஸ்­ஸிப்­ளின். ஆனால், இந்த பாத்­தி­மாவோ அலு­வ­ல­கத்­தில் எவ­ரும் இல்­லாத சம­யங்­களில், மூட்­டைப்­பூச்­சி­கள் வாழும் தனது நாற்­கா­லிக்கு காலால் ஒரு உதை கொடுத்­து­விட்டு, அதோ அந்த அறைக்­குள் போய் இந்த அரி­யா­சன நாற்­கா­லி­யில் உட்­கா­ரு­வாள்.

முது­கைப் பின்­னால் வளைத்து, கால்­களை முன்­னால் நீட்டி அந்த நாற்­கா­லி­யையே கட்­டி­லாக்கி, மெய்­ம­றந்து கிடப்­பாள்.

பிறகு நிமிர்ந்து உட்­கார்ந்து, தானே ஆபீ­ஸ­ரா­ன­து­போல் கற்­பனை செய்­து­கொண்டு, எதிர்ச் சுவ­ரில் பொருத்­திய கண்­ணா­டியை எழுந்து நின்று பார்ப்­பாள்.

பிறகு மீண்­டும் கம்­பீ­ர­மாய் உட்­கார்ந்து, மேஜை­யில் உள்ள பென் செட்­டில் பச்­சைப் பேனாவை எடுத்து, ‘பேடில்’ கையெ­ழுத்­துப் போடு­வாள். பச்­சை­யாய் இனி­ஷி­ய­லிட்டு ரசிப்­பாள். (பச்சை இங்க் பேனாவை ஒரு ஆபீ­ஸர் மட்­டுமே பயன்­ப­டுத்­த­லாம்.

இப்­படி பல நாள் நடக்­கும் சங்­க­தியை இந்­தக் கிழம், வழக்­க­மாய் பாக்கி கேட்க வந்த ஒரு நாள் பார்த்­து­விட்­டது.

என்ன செய்­வது என்று புரி­யா­மல் அவள் தடு­மா­றி­போது கடற்­கரைப் பாண்­டிக்கு அதுவே வெல்­லக்­கட்­டி­யா­கி­யது. வீறிட்­டுக் கத்­தி­னார்.

“ஏம்மா நீயும்... அவன் கூட ஜீப்­பில ஏறி வந்­தியே... அவ­னுக்கு இந்த நாற்­கா­லிய செலக்ட் செய்து கொடுத்­தது நீதானே.

“அப்போ ஒனக்­கும் காசு கொடுக்­கி­ற­துல ஒரு பொறுப்பு இருக்­கு­துல்ல? ஏன் பேசா­மல் அப்­படி பாக்­கிற தெரி­யா­மத்­தான் கேட்­கேன்... எதுக்­காக நாம் வேட்டி... சேலை உடுத்­து­றோம்.”

அலு­வ­லக சகாக்­க­ளுக்கு பாத்­திமா, ஜீப்­பில் ஆபீஸரோடு போன விப­ரம் மட்­டும்­தான் கேட்­டது. அந்த விவ­ரத்­தி­லேயே அவர்­கள் நின்று நிதா­னித்து சுவை­ஞர்­க­ளாகி விட்­ட­தால், அவர் சொன்ன ‘வேட்டி சேலை’ விவ­கா­ரம் கேட்­க­வில்லை.

‘ஜீப்­பில இவள் ஆபீ­ஸ­ரோட முன்­னால உட்­கார்ந்­தி­ருப்­பாளா, இல்ல பின்­னால இருந்­தி­ருப்­பாளா..’ என்ற ஆராய்ச்­சி­யில் அவர்­கள் மூழ்­கி­ய­போது, வேத­முத்து ஒரு­வன் மட்­டுமே சுய­மாய் நின்­றான்.

நிலைமை ‘கட்­டுக்கு’ மீறிப் போவதைப் புரிந்துகொண்டு, கடற்­க­ரைப் பாண்­டியை அதட்­டி­னான்.

‘யோவ்... இதுக்கு மேல... ஒனக்கு மரி­யாதி இல்ல... மொதல்ல எதைக் கேட்­டா­லும், முறை­யாய்க் கேட்க தெரிஞ்­சிக்­க­ணும்?

வேத­முத்து, கடற்­க­ரைப் பாண்­டியை கழுத்­தைப் பிடித்து தள்­ளாத குறை­யாக, நெருங்­கிப் போனான். ஆனால், அவரோ, அவ­னைப் பார்ப்­ப­தற்கு முகத்­தை­கூட நிமிர்த்­த­வில்லை. எவனோ ஒருத்­தன் எதி­ரில் நிற்­கி­றான் என்ற அனு­மா­னத்­து­டன் கத்­தி­னார்.

‘என்­னய்யா... மொறை­யக் கண்ட.. பொல்­லாத மொறைய மொதல்ல என்ன விஷ­யம்னு கேளு... அது­தான் முறை... மூணு மாசத்­துக்கு முன்­னால... இங்கே ஒருத்­தன் இருந்­தானே... சூட்­டும் கோட்­டு­மாய்... சொட்­டத் தலை­யன்... ஆபீ­ஸ­ராம் ஆபீ­ஸரு... இவ­னு­வல்­லாம் ஆபீ­ஸ­ரா­ன­தால்­தான் இப்போ இந்­தி­யாவே நாறுது, அவ­னும், இந்த பொண்­ணும் எங்க பர்­னிச்­சர் கடைக்கு ஜீப்­புல வந்­தாங்க... இந்த நாற்­காலி வேணு­முன்­னாங்க. இதை மூவா­யி­ரத்தி முன்­னூறு ரூபாய்க்கு பேசி முடித்து அங்­கேயே அசோக முத்­தி­ரத் தாளுல ஆர்­டர் கொடுத்­தாங்க ‘கிரி­டிட் பில்’ தந்­திங்­கன்னா... அதை ஹெட் ஆபீ­சுக்கு அனுப்பி அங்கே இருந்து செக் வந்து... அதை மாத்­து­றத்­துக்கு நாளா­கும்... அத­னால கேஷ் பில்லா கொடுங்க... ஒரு வாரத்­துல பணம் வந்­து­டு­முன்னு சொன்­னாங்க... நானும்... அந்த ஜீப்­பை­யும்... அதுல வந்த மூஞ்­சி­க­ளை­யும் பார்த்து நம்­பிட்­டேன். மூணு மாச­மா­யிட்­டது... இன்­னும் பணம் வந்­த­பா­டில்ல. வரும் என்­கி­ற­துக்கு அத்­தாட்­சி­யும் இல்ல... சீவி சிங்­கா­ரிக்க தெரி­யுது... சொன்ன வாக்கை காப்­பாற்ற தெரி­யல்ல... தூ....”

எல்­லோ­ரும் சும்மா நின்­ற­போது, கடற்­க­ரைப் பாண்­டி­யி­ட­மும் ஒரு நியா­யம் இருப்­ப­தைப் புரிந்­து­கொண்ட வேத­முத்து, இப்­போது இத­மா­கப் பேசி­னான்.

‘பெரி­ய­வரே உங்­க­ளுக்கு மனசு சரி­யில்ல. இன்­னிக்­குப் போயிட்டு நாளைக்கு வாங்க... பேசிக்­க­லாம்...’

ஒனக்கு ராம­பி­ரான்னு நெனப்போ... என் நிலம ஒனக்கு தெரி­யு­மாய்யா? ஒங்­கள மாதிரி நான் சர்க்­கார் மாப்­பிள்ளை இல்­லய்யா...

காலை­யில எட்டு மணிக்­குக் கடைக்­குப் போய்... கூட்­டிப் பெருக்கி, தண்ணி தெளிச்சு, ஒவ்­வொரு மேஜை­யாய் நகர்த்தி... திங்­கள் கிழ­மை­யி­லி­ருந்து ஞாயிற்­று­கி­ழமை மத்­தி­யா­னம் வரைக்­கும் உழச்­சும் இரு­பது வரு­ஷத்­துல தொளா­யிர ரூபாய் சம்­ப­ளத்­துல கஷ்­டப்­ப­டுற தொழி­லா­ளிய்யா...

முத­லாளி இல்­லாத சம­யத்­துல கேஷ் பில் போட்டு இந்த நாற்­கா­லிய கொடுத்­தேன். இப்போ, எங்க முத­லாளி நானும் கூட்­டுக் கள­வாணி என்­கி­றான்.

பணத்தை வட்­டி­யோட கட்­டாட்­டால் போலீஸ்ல ஒப்­ப­டைப்­பா­ராம். சர்க்­கார் முத்­தி­ரை­யோட ஒரு ஏழைய ஏமாத்­து­றது நியா­ய­மாய்யா..? பேச வந்­துட்­டான் பேச. நான் லாக்­கப்­புக்கு போனா, எவன்யா ஜாமீன் எடுப்­பான்? என் குடும்­பம் நடுத்­தெ­ரு­வுல நிக்­கப் போவுது... வேணு­முன்னா வந்து வேடிக்க பாருய்யா...’

இப்­போது கடற்­க­ரைப் பாண்­டி­யின் ஓங்­கா­ரக் குரல், உடைந்து ஓல­மிட்­டது. எல்­லோ­ரும், அவரை ஒரு­மித்­தும், ஒரே முனைப்­பா­க­வும் பார்த்­தார்­கள். உய­ரத்­துக்கு ஏற்ற உடம்­பில்­லா­த­வர்... பைசா நக­ரம்­போல் ஒடிந்து விழப் போவது மாதி­ரி­யான முன்­வ­ளைவு. வெடு­வெ­டுப்­பான பார்வை... முண்டா பனி­ய­னைக்­காட்­டும் காட்டா மோட்டா கிழி­சல் சட்டை. நார் நாராய் போன நாலு­முழ வேட்டி...

தலை­யில் கைவைத்­த­ப­டியே தரை­யில் உட்­கார்ந்த கடற்­க­ரைப் பாண்­டியை பார்க்க சகிக்­காத வேத­முத்து, பாத்­தி­மா­வி­டம் கிசு­கி­சுத்­தான்.

மேடம்... ஓங்க பணத்­துல இருந்து கொடுத்­து­டுங்க. அப்­பு­ற­மாய் ஆபீ­ஸர்­கிட்ட வாங்­கிக்­க­லாம்.’

‘ஒன்­கிட்ட சொல்­லக் கூடாது... ஆனா­லும் சொல்ல வேண்­டிய கட்­டா­யத்­துல சொல்­றேன் முத்து... ஆபீஸ் சம்­ப­ளத்தை ‘அவர்’கிட்ட அப்­ப­டியே கொடுத்­தி­ட­ணும். அப்­பு­றம் தின­மும் பஸ் சார்ஜ்க்­கும், ஒரு கப் காபி குடிக்­கி­ற­துக்­கும் அவர்­கிட்ட கையேந்தி பிச்சை வாங்­க­ணும்... இது­தான் என்­னோட பிழப்பு...

பாத்­திமா ஏதோ பணம் கொடுப்­பாள் என்­பது மாதிரி வேத­முத்­து­வின் கிசு­கி­சுப்­பின் மூலம் நம்­பிக்கை பெற்ற கடற்­க­ரைப் பாண்டி, அவள் கையை விரித்து பதி­லுக்கு கிசு­கி­சுப்­ப­தில், ஏமாற்­ற­ம­டைந்து ஒப்­பாரி போடு­வ­து­போல் பேசி­னார்.

ஏமா... உனக்­கும் புள்­ளக்­குட்டி இருக்கு... என் வயிற எரி­ய­வி­டாதே.

பாத்­தி­மா­வுக்கு திடீ­ரென்று, இன்­னும் மஞ்­சள் காமாலை சுக­மா­காத தனது மூன்று வயது மக­ளின் நினைவு மனதை உட­ன­டி­யாய் அரித்­தது.

இந்த ஆசா­மி­யின் சாபத்­தால், மர­ணம் மகளை பறித்­து­வி­டக் கூடாது என்­கிற பயம்.

அப்­படி பயப்­பட பயப்­பட அதுவே கோப­மாய் குண­மா­றி­யது.

ஆபீ­ஸ­ரைக் காட்­டிக் கொடுத்­தால், அவன் தனது அந்­த­ரங்க குறிப்­பேட்­டில் வில்­லங்­கம் செய்து, அத­னால் நெருங்கி வரும் பதவி உயர்வு ஓடி­வி­டக் கூடாதே என்று இது­வரை பல்­லைக் கடித்து பொறுத்­த­வள்.

இப்­போது வட்­டி­யும் முத­லு­மாய் முழங்­கி­னாள். ஆபீஸ் ரக­சி­யத்தை எல்­லோ­ருக்­கும் கேட்­கும்­படி கத்­த­லா­கச் சொன்­னாள்.

“நாற்­காலி பணம் மூணு மாசத்­துக்கு முன்­னா­டியே வந்­துட்­டுது... இங்க இருந்த ஆபீஸ்­ரு­தான் முழுங்­கிட்­டான். கவ­லப்­ப­டா­திங்க பெரி­ய­வரே... இப்­பவே மெட்­ரா­சுல இருக்­கிற எங்க டெப்டி டைரக்­ட­ருக்­கிட்ட டெலி­போன்ல பேசி, நடந்­த­தைச் சொல்­றேன்... உங்க மொத­லா­ளிக்­கும் டெலி­போன்ல விஷ­யத்தை சொல்­றேன்...”

‘சாகப் போற­வ­னுக்கு பாலு கேட்­டால், பசு­மாடு குட்டி போடட்­டும்னு சொல்ற கதை மாதிரி இருக்கு...’

பாத்­தி­மா­வின் முகம் இறு­கி­யது. கடற்­க­ரைப் பாண்டி சொன்­னதை காது­கள் உள்­வாங்­க­வில்லை.

தொடர்ச்சி அடுத்த வாரம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!