எண்ணும் எழுத்தும்
இல்லாதிருந்தால்
ஏற்றம் எங்கே கிடைக்கும்
கூட்டிப் பெருக்கி
வகுத்துக் கழித்து
வாழ்ந்து பார்த்தால் சிறக்கும்
சொல்லும் செயலும்
பொருந்தா திருந்தால்
வெறுப்புதானே வளரும்
அறமும் புறமும்
அகலாது இருந்தால்
அமைந்த வாழ்க்கை
இனிக்கும்
நினைப்பும் மறப்பும்
நிகழாது இருந்தால்
நீங்கா பகையும் விலகும்
மனதில் மறதி
இருந்தால்தானே
மன்னித் தருள பிடிக்கும்
வேண்டி விரும்பி
வரவேற்றாலே
வேண்டா விருப்பு விலகும்
அகமும் புறமும்
வெவ்வே றானால்
அமைந்த வாழ்க்கை கசக்கும்
இன்ப துன்பம்
மாறா திருந்தால்
இயல்பாய் எப்படி நடக்கும்
எங்கும் எதிலும்
இயல்பாய் இருந்தால்
எல்லாம் இங்கே கிடைக்கும்
பிறப்பும் இறப்பும்
இல்லா திருந்தால்
இடங்கள் எங்கே இருக்கும்
இனிப்பும் கசப்பும்
புளிப்பும் துவர்ப்பும்
இருந்தால் தானே சுவைக்கும்

