முகக்கவசமணிந்து
போர்வீரர்கள்
யுத்தத்திற்கு
ஆயத்தமாகிறார்கள்.
இடைவெளி
தூரங்களிலும்
பெருக்கல்
அடையாளங்களிலும்
உலவும் கேள்விக்குறிகள்.
சுத்திகரிப்புக் குடுவைகளில்
பீய்ச்சிப் பீய்ச்சி
சிகிச்சை நெடியேறும்
தற்காப்பின் ஈரமணம்.
கைகள்
கழுவிக் கழுவிக்
கரைசல்களில்
வழிந்தோடும்
நம்பிக்கையின் நாட்கள்.
கொத்துக் கொத்தாய்
முடிவுறும்
மறைவுடன் சமராடி
முன்னேறும்
தியாகக் கேடயங்கள்.
நீங்கள்,
இயற்கை
இறைவன்
இல்லை
சரி
இப்படியான
தர்க்கங்களையெல்லாம் தாண்டி
தேசங்கள்
எண்ணிக்கை
மீட்பு
பாதிப்பு
என்ற
நடுவளையத்திற்குள்
சுழன்று கொண்டிருக்கிறீர்கள்...
நாளையின் பறவை
தன் கூட்டிலிருந்து
புலர்வின்
பெரும் உற்சாகத்துடன்
திவ்யமாய்
சிறகசைத்து மேலெழும்புகிறது...
விடியலின் புளகாங்கித
மலர்களைச் சொரிந்தபடி
புன்னகைக்கும் உலகின்
குணவனம்...
பரிசோதனையில்
இல்லை
எனும்
மகிழ்ச்சியின் முடிவோடு
இயல்பாய்
இயங்க ஆரம்பித்துவிட்டது
நகரம்...
நீங்கள் எதிர்பார்த்துக்
காத்திருந்த செய்திதான்
கண்டுபிடித்தாயிற்று!

