ஒற்றை எழுத்தையும்
ஒற்றைச் சொல்லையும்
வெறுமனே அடுக்கிவைத்து
பெருமிதப்பட்டுக்கொள்ளும்
பக்குவத்தை நான்
இன்னும் எட்டவில்லை.
விட்டுவிடுங்கள் என்னை.
வெறும் வார்த்தைகளால்
வெற்றிடத்தை நிரப்பும்
பக்குவத்தையும் நான்
இன்னும் எட்டவில்லை.
விட்டுவிடுங்கள் என்னை.
'ஒற்றை'க்காலில்
நிற்கச் சொல்லி
ஒற்றைக்காலில் நிற்காதீர்கள்.
உங்கள் விருப்பத்தை
எனக்கு ஊட்டாதீர்கள்
நீங்கள் விரும்பும் காட்சியை
எனது விழிகளின் வழியே
காண முடியாது.
எனக்குக் கடிவாளம் கட்டும் முன்
உங்கள் வறட்டுக் கடிவாளத்தைக்
கழற்றிப் பாருங்கள்
கவிதை தெரியும்.
என் கைத்தறி நெசவு
உங்களுக்கு ஒட்டடையாகத் தெரியலாம்..
கைரேகையைப் போன்றவை
விருப்பங்கள்...
சற்று பின்னோக்கிப் பாருங்கள்..
நீங்கள் நிரந்தரமென்று
நினைப்பதெல்லாம்,
காலத்துக்கு
கடல்மணல் கிறுக்கல்கள்..!

