உம்மாவின் துப்பட்டி

‘டன்­லப் ஸ்ட்திரீட்­டுக்­குள் முழுக்க அல­சி­யாச்சி... துப்­பட்டி பூ டிசைன்ல நீ கேக்­குற மாதிரி பெரிய பூ டிசைன் இல்ல.. என்ன பண்­ண­லாம்?’ எனக்­கேட்­டான் பாரதி.

தேடு­வோம் கிடைக்­கா­மலா போய்­டும்.. வா எங்காவது கிடைக்­கு­தான்னு பார்ப்­போம்’ என்­றான் இஸ்­மா­யில். சிங்­கப்­பூர் ரெஸ்டாரண்டில் வேலைக்கு வந்த மூன்று மாதங்­களில் டன்­லப் ஸ்திரீட்டுக்குள் நுழை­வது இதுவே இஸ்­மா­யி­லுக்கு முதல் முறை.

தமிழ்­நாட்டு கோரைப்­பாய்­கள், சென்­னி­மலை போர்­வை­கள், சிவப்பு, கறுப்பு கோடு­க­ளாக தலை­து­டைக்­கும் தேங்­காய்ப்பூ டவல்­கள், கடல்­பாசி, இந்­திய சப்­பாத்­து­கள், தாம்புக் கயிறுகள், அட்­டைப்­பெட்டி ரேப்­பர்­கள் என முழு­மை­யாக கடையே தெரி­யாத அள­விற்கு மூடிக்­கி­டக்­கும் கடை­களில் ஏறி இறங்கி இரு­வ­ருக்­கும் உடல் களைத்­துப்­போ­னது.

டன்­லப் ஸ்ட்­ரீட்­டின் தலை­மாட்­டில் நுழை­யும்­போது இளை­ய­ராஜா பாடல் ஒன்­றின் சர­ணம், பின்பு அடுத்­த­டுத்து நுழைந்த கடை­யொன்­றில் இமான் இசைப்­பா­டல் என ஞாயிற்­றுக்­கி­ழமை அவ­ர­வர் அவ­ச­ரத்­தில் அனி­ருத்­தும் ரஹ்­மா­னும் என தன்­பங்­கிற்கு இந்­திய தொழி­லா­ளர்­க­ளின் மகிழ்ச்­சி­யின் டெம்­போவை ஏற்றி இறக்­கிக் கொண்­டி­ருந்­தார்­கள்.

டன்­லப் ஸ்தி­ரீட்­டின் தோற்­று­வாயில் நின்­று­கொண்டு அந்த வீதி முழு­வ­தை­யும் பார்த்­தான் இஸ்­மா­யில்.

குடும்­பத்­தைப் பிரிந்து வீதி­யில் உலா­வும் இந்­திய தொழி­லா­ளர்­க­ளின் துய­ரம், பிரிவு, வலி என ஆற்­றா­மையை இந்த வீதி பங்கு போட்­டுக்­கொண்­டி­ருந்­தது.

ரொக்­கத்தை அனுப்­பி­விட்டு துக்­கத்­தைப் புதைத்­துக்­கொண்டு திரி­யும் நடைப்­பி­ணங்­க­ளால் நிறைந்து கிடக்­கிறது அந்த அங்­கா­டித்­தெரு.

அதன் நீட்­சி­யில் ஞாயிற்­றுக் கிழ­மை­யின் தற்­கா­லிக மகிழ்ச்­சி­யைத் தேடிக்­கொண்­டி­ருந்­த­னர்.

வீதி­யில் எல்­லாக் காட்­சி­களும் அட்­டைப்­பூச்­சி­க­ளாய் நெளி­யும் போது, இஸ்­மா­யி­லுக்கு இங்கே வந்து இறங்­கிய காட்­சி­கள் கண்­முன்னே வந்து போயின.

*

திருச்சி ஏர்­போர்ட்­டில் தம்பி லக்­கேஜ் கொண்­டு­போக ட்ராலி எடுக்­கப்­போ­யி­ருந்­தான்.

உம்மா மெது­வாக காதில் கூறி­னாள்.

‘இஸ்­மா­யிலு.. இந்த பண்­டாரி வேலை சூன்­யம்.. நம்­மள சும்­மா­விடாது. உங்க அத்தா பினாங்­குல பண்­டா­ரியா இருந்து உங்­கள வளர்த்­தாரு.. இந்த அடுப்­புல வேகு­றது என்­னோ­டவே போகட்­டும்.. இவ­னுங்­க­ளா­வது படிச்சு வேற உத்­தி­யோ­கம் போக­ணும்னு பிரா­ய­சப்­பட்­டாரு’ என தனது வெறு­மையை துப்­பட்­டி­யின் ஓரத்­தில் ஒத்தி நகல் எடுத்­துக்­கொண்டே விசும்­பிய காட்­சி­கள் அவன் மன­தைப் பிசைந்­தது.

ஏஜென்­டிற்கு கொடுக்க வேண்­டிய பணம் பாக்­கி­யி­ருந்­த­போது, ஒழு­கும் கூரைக்கு அருகே நின்ற ஒன்­பது ஆடு­களை வந்த விலைக்கு விற்று கட்­டிய பணம் கல்­லாய் முது­கில் எந்­நே­ர­மும் கனத்­துக் கிடக்­கும் உணர்­வில் கிடக்­கி­றான் இஸ்­மா­யில்.

தன் அத்தா பினாங்­கிற்கு பிழைப்­பிற்­காக சென்­ற­தை­யும், மலக்கா புலாவ் பசார் மக்­காம் அருகே இருந்த சாப்­பாட்­டுக் கடை­யில் வேலை பார்த்து பின்­னா­ளில் அங்­கேயே இறந்­தும் போன­தை­யும், வீட்­டு­வேலை செய்து வயிற்­றைக் கழு­விய உம்­மா­விற்கு உறு­து­ணை­யாய் நிற்க இஸ்­மா­யி­லுக்கு பள்­ளி­கூ­டக்­கல்வி உத­விக்கு வராத கசப்­பான கடந்த காலத்­தை­யும் ஒரு தஸ்­பீஹ் மணி­யைப்­போல் அவ­னது மனம் உருட்­டிக்­கொண்­டி­ருந்­தது.

அவ்­வப்­போது கன­வில் தோன்­றும் இறந்­து­போன அத்தா, அவ­னது ஜோப் பாக்­கெட்­டில் வெங்­கா­யம், பச்­சை­மி­ள­காய் என கன­வில் மடித்து வைத்­துப்­போ­னதை பலிக்­கும் கன­வாக உரு­மாற்றி உள்­ளுக்­குள் தன் நன்னா ‘தேங்­காய் சோறு பஷீர்’ போல பேர் எடுக்க வேண்­டும் என்று மன­திற்­குள் கூறிய கால­மும் நினை­வுக்கு வர, கரி­சல்­பட்டி-துவ­ரங்­கு­றிச்சி சுற்று வட்­டா­ரத்­தின் திரு­மண, கந்­தூரி விழாக்­களில் கை பண்­டாரி ஆகி நள­பாக பாரம்­ப­ரி­யத்தை தொடர்ந்த இஸ்­மா­யில், இப்­போது சிங்­கப்­பூர் உண­வ­கத்­தில் பண்­டாரி வேலைப்­பார்ப்­ப­தற்கு விமான நிலை­யத்­தில் காத்­தி­ருந்­தான்.

கண்­க­ளைத் துடைத்­துக்­கொண்டே இருந்த உம்­மா­வின் துப்­பட்­டியை உற்­றுப்­பார்த்­தான்.

உஜாலா நீலத்­தில் முழு­தும் குளித்­தி­ருந்­தது. நீலத்­தின் பிண்­ண­னி­யில் துப்­பட்டி அதன் பழுப்பு பக்­கங்­க­ளோடு வெளி­றிப்­போ­யி­ருந்­தது. துப்­பட்டி பூக்­கள் பாதி உதிர்ந்­தும் உதி­ரா­ம­லும் ஒட்­டிக் கிடந்­தன.

ஒரு­முறை வெளி­நாட்­டி­லி­ருந்து ஊர்­தி­ரும்­பி­ய­போது ஆசை­யா­சை­யாய் மலே­சியா மஸ்­ஜித் இந்­தி­யா­வில் இருந்து அந்­தத் துப்­பட்­டியை உம்­மா­விற்கு அத்தா வாங்கி வந்­தி­ருந்­தார்.

அவ­ரது பய­ணப்­பெட்டி இரண்­டு­ மூன்று சென்ட் பாட்­டில்­களும், கோடாலி தைலங்­க­ளோடு இந்த துப்­பட்டி மடித்­து­கி­டந்­த­தாக தம்பி கள்­ளத்­த­ன­மாய் பெட்­டியை உடைத்து மிட்­டாய் திரு­டி­ய­போது பார்த்த காட்சி அவன் நினை­வுக்கு வந்­தது.

அம்மா, அதை அணிந்­த­தும் முகம் மலர்ந்­த­வி­தம், துப்­பட்­டி­யின் வெண்­மை­யை­விட பிர­கா­ச­மாக இருந்­தது. புதி­தாக வந்த வெளி­நாட்­டுத் துப்­பட்டி அது­வரை உம்மா உடுத்­தி­யி­ருந்த ரேசன்­கடை இல­வச வெள்­ளைத்­து­ணிக்கு விடை கொடுத்­தி­ருந்­தது.

உற­வுக்­கா­ரர்­க­ளின் திரு­ம­ணத்­திற்கு இனி சென்­றால் பக்­கத்­து­வீட்டு சைனம்­பு­வி­டம் இர­வல் துப்­பட்டி வாங்கி ஏழ்­மையை மறைக்­கத் தேவை­யில்லை என்ற உற்­சா­கம் உம்­மா­விற்கு புதுத் தெம்பை கொடுத்­தது. அதன் ஓரப்­பூக்­களில் அத்­தா­வின் வாசம் இருந்­தி­ருக்க வேண்­டும். அதை அவள் அணி­யும்­போது அதன் பூக்­க­ளைத் தேடி வந்­த­டை­யும் வண்­ணத்­துப்­பூச்­சி­கள் எங்கோ தூரத்­தில் புலாவ் பசார் தீவில் சோற்­றுப்­ப­னை­யைக் கிண்­டிக்­கொண்­டி­ருக்­கும் அத்தா அனுப்­பி­ய­தாக உம்மா உணர்ந்­தி­ருப்­பாள். அது­தானே அத்தா இறந்து ஏழு­வ­ரு­டங்­க­ளுக்­குப் பின்­னும் அந்­தத் துப்­பட்­டியை உம்மா சுற்றி வரு­வ­தன் கார­ண­மாக இருக்­கும் என்று இஸ்­மா­யில் மனம் சொன்­னது.

இளைமைக் காலத்தை மீட்டு எடுக்­கும் தன் அத்­தா­வின் வாசனை இஸ்­மா­யி­லுக்கு வீட்­டிற்­குள் நுழைந்­தி­ருக்­கும் சூட்­கேஸ் உட்­பட பொதி­க­ளின் மணம். அந்த வாச­னை­யில் அத்தா புகைக்­கும் கூடாங்­க­ரம் புகை மணம், கோடாலி தைல வாசனை, உம்­மா­விற்குத் தெரி­யா­மல் அவ­ரது அக்கா கலிமா குப்­பிக்குத் தனி­யாக கொண்டு வந்த லக்ஸ் சோப்பு வாசனை, புதிய வாக்­கர் செருப்­பின் மணம், ஜவ்­வு­மிட்­டாய், ஜெல்­லி­மிட்­டாய் போத்­தல்­க­ளின் மணம் என கல­வை­யாக கலந்­தி­ருக்­கும்.

பிந்­தைய இர­வு­கள் அவர் மார்பு மீது அணைத்து உறங்­கும் வேளை­யில்தான் உணர்ந்த எல்­லா­வற்­றை­யும் மீறிய ஒரு வாசனை அத்­தா­வி­டம் அவ­னுக்குத் தெரிந்­தது. அது அவ­ரது ஆன்­மா­வின் வாசனை. அத்தா என்­றாலே வாச­னை­தானே.

தம்பி ட்ரா­லியை எடுத்து லக்­கேஜ் எல்­லா­வற்­றை­யும் ஏற்றிவிட்டு இஸ்­மா­யில் அரு­கில் வந்து கைகளைப் பிடித்­த­போது தன் உணர்­வுக்கு மீண்டு வந்­தான் இஸ்­மா­யில்.

உம்­மா­வி­டம் வழி­ய­னுப்­பு­கை­யில் ஏதும் பேச­வில்லை. தம்­பியை இறுக அணைத்து விடை கொடுத்தபோது தன்­னால் படிக்­க­மு­டி­யா­மல்போன அத்­தா­வின் கன­வை­யும் தம்­பி­யின் தோள்­களில் பார­மாக ஏற்­றி­விட்டு விமா­னம் ஏறி­னான்.

‘பெரிய பூ இருக்­கு­ற­மா­திரி வெள்­ள­துப்­பட்­டியா எடுத்­துப்­போடுங்க’ என கடை சேல்ஸ்­மேனி­டம் கேட்­டான் இஸ்­மா­யில். அவர் துணிக்­கட்டை உடைத்து சரித்­துப்­போட்ட துப்­பட்­டி­களில் ஒன்று, வித்­தி­யா­ச­மா­ன­தா­க­வும் உம்­மா­வின் பழைய துப்­பட்­டியை ஒத்தும் இ­ருந்­தது.

வெள்ளை செம்­ப­ருத்திப் பூக்­கள் வாய்­பி­ளந்து துப்­பட்டி முழு­தும் வியா­பித்து இருந்­தது. அதனை பேக் செய்து ‘கரி­சல்­பட்டி ஆட்­டுப்­பட்டி பாத்­திமா வசம் கொடுக்­க­வும்’ என கொட்டை எழுத்­தில் எழுதி ஊர்­போ­கும் நண்­ப­ரி­டம் அனுப்­பி­வைத்­தான்.

‘உம்மா... துப்­பட்டி நல்­லா­ருக்­காம்மா’ என நீண்ட நாட்­கள் கழித்து உம்­மா­வி­டம் பேசு­கை­யில் ஆர்­வத்­து­டன் கேட்­டான் இஸ்­மா­யில். உம்மா பக்­கத்­து­வீட்டு ராபி­யத்து அக்­கா­விற்கு வரன் கிடைத்த மகிழ்ச்சியைப் பகிர்ந்­துகொண்­டாள்.

கரி­சல்­பட்டி பஜா­ரில் டீக்­கடை போட்­டி­ருக்­கும் ராபி­யத்து தந்­தைக்கு ஐந்­தும் பெண்­பிள்­ளை­கள்.

ஆண்­பிள்ளை கிடைக்­காத வருத்­தத்­தில் வெறுத்­துப்­போய் தனது ஐந்­தா­வது மக­ளுக்கு எல்­லாமே பொட்­ட­புள்­ளங்க.. இதுவே போது­மென ‘போதும் பெண்’ என்றே பெய­ரிட்­ட­வர் என ஊரில் பேச்­சு­வ­ழக்கு உண்டு.

‘எல்­லாம் கைகூடி வந்­தி­ருக்கு இஸ்­மா­யிலு.. செலவு பெருசா இல்ல.. கல்­யா­ணம் அன்­னைக்கு வெறும் தேத்­தண்ணி போட்டு கொடுத்தா போதும்.. மாப்­பிள திருப்­பூர் பனி­யன் கம்­ப­னில வேலை பாக்­கு­றா­ராம்...’ என்­றாள் உம்மா.

தொடர்ந்து ‘ரொம்ப சிர­மப்­ப­டு­துக.. ஜமாத் தலை­வர்ட்ட சீட்டு வாங்கி சுத்து வட்­டா­ரத்­துல பணக்­கார வீடு­கள்ல ஏறி இறங்கி கிடச்­சத வச்­சும், அக்­கம்­பக்­கம் நம்ம வீடு­கள்ல கிடச்­சத வச்­சும் இந்த கல்­யா­ணம் நடத்­தணும் இஸ்­மா­யிலு.. நான் கூட பட்­டில கிடக்­குற இரண்டு ஆட்­டை­யும் இழுத்­துட்டு போக­ச்சொன்­னேன்.. ஏதோ நம்­மாள முடிஞ்­சது..’

உம்மா கூறி­யதை இஸ்­மா­யில் ஆமோ­தித்­தான்.

‘அப்­பொ­றம் இஸ்­மா­யிலு.. ராபி­யத்த நம்ம வீட்­டுல வளர்ந்த புள்ள.. உனக்கே தெரி­யும்.. வீட்­டுக்கு வந்­தவ கொடில கிடந்த நீ அனுப்­புன துப்­பட்­டிய ரொம்ப நேரம் பார்த்­துட்டு இருந்தா.. ஒண்­ணும் சொல்­லல.. ரொம்ப ஏக்­கமா இருந்­தது.

உன்­ன­மா­திரி அவ­ளுக்கு ஒரு தம்பி இருந்­தி­ருந்தா அவ­ளுக்­கும் ஏதோ மன­சுல கிடக்­குற ஆசைய சொல்­லி­யி­ருப்பா.. அத­னால... ‘

‘அத­னால..?’

‘நீ அனுப்­புன செம்­ப­ருத்தி துப்­பட்­டிய அவ­ளுக்கே கொடுத்­து­டு­றேன்’

‘உம்மா உனக்கு ஆசையா வாங்­கி­னது அது..’

‘இருக்­கட்­டும் இஸ்­மா­யிலு. நான் வாழ்ந்து முடிச்­சவ. இனிமே தான் அவ வாழப்­போ­றவ. ஒண்­ணு கொடுத்தா படச்ச ரப்பு ஒம்­பது தரு­வான்.

‘எனக்­குன்னு எத்­துனை துப்­பட்டி வந்­தா­லும் உங்க அத்தா முதன்­முதலா வாங்கி தந்த துப்­பட்டி மாதிரி செள­கர்­யமா வேறு ஏதும் இல்லை.

‘இந்த வீட்­டில மூணே மூணு தான் இறந்­துபோன உங்க அத்தா ஞாப­கத்தை எனக்குக் கொடுக்­குது. நீ, உன் தம்பி, அப்­பொ­றம் இந்தத் துப்­பட்டி...’ என்­றாள் உம்மா.

இஸ்­மா­யில் போனை அணைத்த போது, ராபி­யத்து வீட்­டில் ஒளி­றிக்­கொண்­டி­ருந்த செம்­ப­ருத்தி துப்­பட்­டியை பீரோ­வில் இருந்து எடுத்து அதை அணைத்­தாள்.

தனது நீண்ட கன­வின் நீட்­சி­யான பாது­காப்­பு­ணர்வு அவ­ளைக் கவ்­வி­யது துப்­பட்­டி­யின் செம்­பருத்திப் பூக்­களைத் தேடி வண்­ணத்­திப்­பூச்­சி­கள் அவள் வீட்­டிற்கு வர ஆரம்­பித்­தன. •

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!