கொரோனா குடிச்சி ரசிக்குது

கொரோனா குடிச்சி ரசிக்குது

1 mins read

உழைக்கும் உசுரெல்லாம்

அடங்கி ஒடுங்கி கிடக்குது.

உள்ளக் குமுறலில் தான்

தீய மூட்டி வளர்க்குது.

அல்லும் பகலுமேனோ.?

அவலத்தில கடக்குது.

ஆகாய வெளி கூட

அழ மறந்து சிரிக்குது.

நடவு நட்ட மகன்

நாதியற்று கிடக்கிறான்.

பயிர வளர்த்து விட்டு

பாதி உசுரில் படுக்கிறான்.

ஒழைச்சி விட்ட வியர்வ

ஓடையில் தேங்கி கிடக்குது.

மப்பா இருந்த வானம்

உப்பா உறைந்து கிடக்குது.

வாரி கொடுத்த மண்ணு

வயிறு பிளந்து கிடக்குது.

வாழத் தாருக்கண்ணு

வாழ்வை இழந்து முடிக்குது.

எரும்பா உழைச்ச கூட்டம்

அரும்பா நின்னு போச்சி.

கரும்பா இனிச்ச வாழ்வு

துரும்பா இளைச்சி போச்சி.

பள்ளி போகும் புள்ள

பல்லாங்குழி ஆடுது.

கிள்ளி விட்ட குழந்த

கொரோனா ராகம் பாடுது.

குடும்பம் கூடி ஒண்ணா

தாயம் ஆடி களிக்குது.

அடங்கி கிடக்கும் கூட்டம்

ஆடுபுலி ஆடுது.

கொரோனா நெருப்பு இங்க

கொளுத்தி உயிர எடுக்குது.

வையம் எல்லாம் ஏனோ?

வைரஸ் ஒளிஞ்சி பறக்குது.

நெடிய வாழ்வில் தானே

கொடிய நச்சு படுக்குது.

வரனா கிடைச்ச உசுர

கொரோனா குடிச்சி ரசிக்குது.