- பா. கங்கா
இடுகாட்டிற்கு வெளியே
மிக நீண்டதொரு வரிசை
எனக்கு எழுபதாம் எண்
ஆறாம் எண்ணா உனக்கு
என்றவனின் சொற்களில்
ஏக்கத்தழும்பல்
வரிசையில் நிற்பவர்கள்
எண்களுடன் சென்றவர்களைப்
பார்த்த பார்வையில்
பொறாமை மூச்சு
வரிசையின் இறுதியில்
நிற்பவனுக்கோ
தன் முறை வரும்வரை
எண் இருக்குமா என்ற
தொடை நடுங்கும் பயம்
போதாமை அதிகமானதால்
இனி கொடுக்க எண் இல்லை
என்று கூட்டம்
கலைக்கப்பட்ட பின்
எங்கிருந்தோ ஒரு குரல்
நான்கு தெரு தள்ளியுள்ள
இடுகாட்டில்
எண் தருகிறார்களாம்
கலைந்த கூட்டம்
மீண்டும் வரிசையில் நிற்க
ஓடிக்கொண்டே இருக்கிறது.

