- பனசை நடராஜன்
இயற்கை வகுப்பெடுக்கிறது,
சத்தம் போடாதீர்..
ஓய்வின்றிப் பேசும் வாய்
மூடி கவனிப்போம்..
பணத்தாளைத் துரத்தி
உடல்நலம் தொலைத்தோரை
பிரம்பாலடிக்கிறது..
குளிர் அறைக்குள் குந்தியோரைக்
கோபமாக வெளியேற்றுகிறது..
பாலூற்றி விடுமோ என்ற பயம்
கட் அவுட்களுக்கு..
மூச்சுத்திணற வைத்த
நம்மை முடக்கி எச்சரித்து
புதுப்பித்துக் கொள்கிறது..
வியர்வைத் துளிகளை மட்டுமே
தட்டிக்கொடுத்துப் பாராட்டுகிறது..
இயற்கை வகுப்பெடுக்கிறது,
சத்தம் போடாதீர்...

