- பூவிலங்கையான்
நீ யாரோடு
போரிடுகிறாய் என்பதை
அவனை முழுவதுமாய்
படித்துவிட்டு
முடிவெடு.
வீரமே உன்னை
ஓர் நாள்
கோழையென்று
தூற்றிவிடக் கூடும்.
உன்னை விட
உயர்ந்தவன் எவன்?
தாழ்ந்தவன் எவன்?
என்பதை
நீ முடிவெடுக்காதே!
உன்னை
உயர்த்தியும்
தாழ்த்தியும் பேசும்
வீணர்களின்
வார்த்தைகளை
மனதில்
பூட்டி வைக்காதே!
உன்
வீரத்திற்கும்
விவேகத்திற்கும்
அறிவிற்கும்
ஆற்றாமைக்கும்
திறமைக்கும்
திமிருக்கும்
சமமானவனிடம்
போரிடு.
வெற்றி
உனதென்றால்
வீரத்தின் வியர்வையை
மண்ணில் நடு.
உன் தோல்வி
பகைவனிடம் என்றால்
முயற்சியின் மூச்சை
உன்னில் விடு
விண்ணைத் தொடு.

