வருடம் முழுதுவதும் இங்கே
கொட்டி முழக்குகிறாய்.
நனையாமல் செல்வதற்கு
நடைபாதைகளில் கூட
கூரை வைக்குமளவு
நலத்திட்டங்களை தூண்டுகிறாய்.
பொது நிகழ்ச்சி தயாரிப்பில்
சிந்தனைகளில் சேர்ந்துவிட்டாய்.
காலையில் கொளுத்துகின்ற
கதிரவனை எச்சரிக்க
அடிக்கடி அச்சுறுத்தி
அடைமழையாய்
அவதாரம் எடுக்கின்றாய்.
பல நாடுகளுக்கு
சுற்றுலாப் பயணி போல
எப்போதாவது செல்லும் நீ
நிரந்தரவாசியாக இங்கே
நிலைகொண்டாய் என
நினைத்திருந்தேன்.
எப்போது இங்கே
குடியுரிமை பெற்றாய்
விழுந்தவுடன் மண்ணில்
விரைந்தோட தடைகளின்றி
கால்வாய்கள் கச்சிதமாய்
இருப்பதுதான் இந்த
இருப்பின் இணக்கமா? - இல்லை
நேர்மையும் கனிவும்
நிறையவே இருப்பதற்கு
நீ செலுத்தும் வணக்கமா?
-சித. அருணாசலம்

