கண்ணனையும் காணவில்லை,
பாண்டவரும் பார்க்கவில்லை,
போரெதுவும் மூளவில்லை,
வன்மவெறிக்கு குறைவில்லை,
பாரதம் கேட்டு புண்ணியமில்லை,
தெய்வங்களுக்கு பஞ்சமில்லை
தொழுது ஒரு பயனுமில்லை,
வரும்முன் காக்க வழியுமில்லை
வந்தபின் கேக்க நாதியில்லை
தற்காப்புக் கலை போதவில்லை
நற்பண்புச் சொலவடைகள், மனித
அகராதியில் காணவில்லை
திரௌபதிகளின்
துகிலுறிப்புக்கு முடிவுமில்லை.
ஆயிரம் நிந்தனை, சட்ட தண்டனை
எது நடந்து என்ன பயன்?
நெஞ்சு பதறி, கதற நாவற்று
மாண்டவள் வலி தீருமோ?
இணைய வார்த்தைகள் வர்ணித்த
கற்பனைக்கெட்டா வலியை
நினைக்கக்கூட
நெஞ்சு பொறுக்குதில்லையே,
கள்ளிப்பால் சுவையாக இருந்திக்குமோ,
என்றெண்ணத் தோன்றுகிறதே.
ஒப்பாரிக்கு எழுத்துரு தருவதைத்தவிர
ஐயகோ என்செய்வேன்; - பெண்ணே
என் இனமன்றோ நீயும்;
கத்தி முனையைவிட பேனா முனை கூர்
வில் முனையைவிட சொல்முனை கூர்
எனும் கூற்றுகள் வெறும்
ஏட்டுச் சுரைக்காய்
என்பது கண்கூடானதே!
கல்லாமை முயலாமை
என்றனைத்து ஆமைகளையும்
ஒழித்து என்ன பயன்?
இயலாமை இயல்பாய் அறைகிறதே!
- மோகனபிரியா தனசேகரன்