வெளிநாட்டு ஊழியனின் 'உள்ளிருப்புக்காலம்'

1 mins read

சி.கருணாகரசு

சிறகுகளை

மடித்து வைத்த

குருவிக்கூடானது

எனது வசிப்பிடம்.

வாசல் தாண்டிய

வெளியுலகு

வாய்க்குமா என்றே

வாழ்நாட்கள் கடந்தன.

வாசல்,

முறைவாசலாகி

மூன்றுமுறையே திறக்கப்பட்டது

உணவுப்பொட்டலங்கள்

உள்நுழைய.

எனது

பட்டா நிலத்தின் அளவே

வானத்தை ரசிக்க

வாய்ப்புத்தந்தது

வசிப்பிட சாளரம்.

இருக்கும் இடத்திலேயே

வாழ்வைப் பொருத்திக்கொண்ட

மைனாக்களில் இரண்டு,

அவ்வப்போது

சாளரத்தில் வந்து அமர்கின்றன.

அவற்றின் சிறகுகளுக்கு

அப்படியொரு கொடுப்பினை.

மின்விசிறிகள்

வேகமெடுத்த சுழற்சியிலும்

மனத்தின் புழுக்கத்திற்கு

மருந்தில்லை.

எனது நீள்வட்ட

அறைக்குள் நிகழும்

அசைவுகள் அனைத்தையும்

ரசிக்கும் கட்டாயம் எனக்கு.

உற்றவன் மரணத்தில்

ஒருபிடி வாய்க்கரிசி போடவும்

வழியில்லாத் துயர்நிலையில்

எனது

கண்ணீர் துடைத்த

கைக்குட்டை கவிதைதான்.

எண்ணங்களுக்கு பூச்சூடி

எழில் கூட்ட

எனது,

குளிருக்கு போர்வையாகவும்

வெயிலுக்கு குடையாகவும்

இருந்ததென்னவோ

கவிதைகள்தான்.

எனது காதல்,

கவிதையின் மீதும்

கற்போடு இருந்ததால்

வலிநிரம்பிய காலத்தில்

மடிதந்து தலைகோதியது.

உயிர் அறுக்கும்

மன அழுத்தம்

சாளரத்தின் வழி வெளியேறாமல்

என்

ஆயுள் ரேகையின் நீளத்தை

அதிகப்படுத்தியது

கவிதையேதான்.