அமிர்தம் கிடைக்குமிடம்
எங்கென்று கேட்டேன்.
பாட்டி சொன்னாள்
'பாற்கடல் பரந்தாமனிடம்' என்று...!
தாத்தா சொன்னார்
'சூடான இரண்டாம்-கப் கோப்பி-யில்'
என்று!
அம்மா சொன்னாள்
'மழலை முத்தத்தில்' என்று!
அப்பா சொன்னார்
'திரைகடல் திரவியத்தில்' என்று!
உடன்பிறந்தவள் சொன்னாள்
'காதல் மயக்கத்தில்' என்று!
உடன்பிறந்தவன் சொன்னான்
'உண்மை நட்பில்' என்று!
நட்பு சொன்னது
'இருப்பதைப் பகிர்தலில்' என்று!
தாகம் எடுத்தது;
எஃகு குழாயைத் திறந்து
லோட்டாவில் நிறைத்தேன்,
நுனிநாவில் அருவியென வீழ்ந்ததை
தம்கட்டி அண்ணாந்து பருகினேன்;
தவிப்பு தணிந்தபின்
மிடற்றில் அடக்க முயன்று
தோற்ற நொடியில் உணர்ந்தேன்
அமிர்தம் எதுவென்று - அஃது
கிடைக்குமிடம் எங்கென்று!
- மோகனபிரியா தனசேகரன்

