கடல் - மகாகவி பாரதியாரின் சிறுகதை

கடல் - மகாகவி பாரதியாரின் சிறுகதை

5 mins read
f06fdf89-cd68-474f-a3dc-18e23534fd7f
மகாகவி பாரதியார்சிறுகதை -

ஒருநாள் மாலை­யில் நான் வேத­பு­ரம் கடற்­கரை­யில் தனி­யி­டத்­தில் மணல் மேலே போய்ப் படுத்­துக்­கொண்­டி­ருந்­தேன். பக­லில் நெடுந்­தூ­ரம் நடந்த களைப்­பி­னால் அப்­ப­டியே தூங்கிப் போய்விட்­டேன். அந்­தத் தூக்­கத்­திலே கண்ட கனவை எழு­து­கி­றேன்.

நடுக்­க­ட­லில் ஒரு தீவு. அத­னி­டையே பெரிய அரண்­மனை. அரண்­ம­னைக்­க­ருகே சிங்­கா­ரத் தோட்­டம். அதில் ஒரு நீரோடை. அத­ன­ருகே புல்­லாந் தரை மேல் பதி­னாறு வய­துள்ள ஒரு கன்­னிகை உட்­கார்ந்­தி­ருந்­தாள். அவள் என்­னைக் கண்ட மாத்­தி­ரத்­தில் எழுந்து அரண்­மனைக்­குள் ஓடிப்­போய்விட்­டாள். நான் அவ்­வழி­யைப் பின்­தொ­டர்ந்து சென்­றேன்.

போகிற வழி­யில் ஒரு பெரிய பாம்பு கிடந்­தது. என்­னைக் கண்­ட­வு­டன் படத்­தைத் தூக்கி என் மேலே பாய்ந்து கடிக்க வந்­தது. நான் ஓடி­னேன். அது என்­னைத் துரத்­திக் கொண்டு வந்­தது. ஓடி­யோ­டிக் கடற்­க­ரைக்கு வந்து சேர்ந்­தேன். பாம்பு காலுக்கு மிக­வும் சமீ­ப­மாக வந்­தது. கட­லுக்­குள்ளே குதித்­தேன்.

கட­லிலே புயற்­காற்று. ஓர­லை­யைத்­தூக்கி மூன்று பனை­ய­ளவு தூரம் மேலே எறி­கிறது. மற்­றோ­ர­லையை மூன்று பனை­ய­ளவு பள்­ளத்­தில் வீழ்த்­து­கிறது. எப்­ப­டியோ சாகா­மல் அந்த அலைக்­குத் தப்பி­விட்­டேன். நெடு­நே­ரத்­துக்­கப்­பால் அலை அடங்­கிற்று. நான் நீச்­சலை விட­வில்லை.

எப்­ப­டியோ நீந்­திக்­கொண்டு வரு­கி­றேன். ஆனால் கரை தென்­ப­ட­வில்லை. பிறகு கைகளில் நோவுண்­டா­யிற்று. என்­னால் நீந்­த­மு­டி­ய­வில்லை. என்­னு­டைய குல­தெய்­வத்­தின் பெயரை உச்­ச­ரித்­தேன். அங்கே ஒரு கிழ­வன் தோணி விட்­டுக் கொண்டு வந்­தான். "அண்ணே, அண்ணே, என்னை உன்­னு­டைய தோணி­யில் ஏற்­றிக் கொள்ளு. நான் புயற்­காற்­றில் அடி­பட்டு மிக­வும் நொந்து போயி­ருக்­கி­றேன்," என்று சொன்­னேன். அவன் தனது தோணி­யில் ஏற்­றிக்­கொண்­டான். தோணியை விட்­டுக் கொண்டு கட­லிலே போகி­றோம்; போகி­றோம்; வழி தொலை­ய­வே­இல்லை. "அண்ணே, கரை சேர இன்­னும் எத்­தனை காலம் செல்­லும்? எனக்­குப் பசி கண் அடைக்­கி­றதே. நான் என்ன செய்­வேன்?" என்று சொன்­னேன்.

அந்­தக் கிழ­வன் தின்­ப­தற்­குக் கொஞ்­சம் அரிசி மாவும், ஒரு மிடறு தண்­ணீ­ரும் கொடுத்­தான். இளைப்­பாறி அப்­ப­டியே கண்­ண­யர்ந்­தேன். (கன­வுக்­குள்ளே ஒரு தூக்­கம்.) கொஞ்­சம் ஆயா­சம் தெளிந்­த­வுடனே கண்ணை விழித்­துப் பார்த்­தேன்; கரை தெரிந்­தது. கிழ­வன் என்­னைக் கரை­யில் இறக்கிவிட்டு, மறு­படி தனது தோணி­யைக் கட­லிலே செலுத்­திக்­கொண்டு போனான்.

நான் அவ­னி­டம் ஏதெல்­லாமோ கேள்வி கேட்­டேன். அவன் ஒன்­றுக்­கும் மறு­மொழி சொல்­ல­வில்லை. கண்­ணுக்­கெட்­டும் வரை அவன் தோணி­யைப் பார்த்­துக் கொண்­டி­ருந்­தேன். மறு­படி அந்­தத் தீவுக்­குள் கொஞ்ச தூரம் போன­வு­டனே பழைய அரண்­மனை தெரிந்­தது. அத­ன­ருகே சிங்­கா­ரத் தோட்­டம், அந்த நீரோடை, அந்­தப் பெண்­ணும் முன்­போ­லவே புல்­லாந் தரை­மேல் உட்­கார்ந்து கொண்­டி­ருக்­கி­றாள். என்­னைக் கண்­ட­வு­டன் மறு­படி எழுந்து தன் வீட்டை நோக்கி ஓடி­னாள்.

நான் தொடர்ந்து போக­வில்லை.

தொடர்ந்து போனால் முன்­போலவே வழி­யில் பாம்பு கிடக்­கு­மென்று நினைத்து மிக­வும் பயங்­கொண்­ட­வ­னாய், அதி­வே­க­மா­கக் கடற்­க­ரையை நோக்கி ஓடிச் சென்­றேன். ஓடும் போதே பாம்பு துரத்­திக்­கொண்டு வரு­கி­றதா என்று பல­முறை திரும்­பிப் பார்த்­தேன். பாம்பு வர­வில்லை. கரைக்கு வந்து சேர்ந்­த­வு­டனே இந்­தத் தீவி­லி­ருந்து எப்­ப­டி­யே­னும் வெளி­யே­றிப் போக­லா­மென்று யோசித்­தேன். அந்­தப் பெண் யாரென்று தெரிந்து கொண்டு பிறகு தான் அந்­தத் தீவி­லி­ருந்து புறப்­பட வேண்­டு­மென்று மற்­றொரு யோசனை உண்­டா­யிற்று. அப்­போது பசி­யும் களைப்­பும் அதி­க­மாக இருந்­த­ப­டி­யால் அவற்­றைத் தீர்க்க ஏதே­னும் வழி­யுண்டா என்று சுற்­றிப் பார்த்­தேன். கரையோர­மா­கவே நெடுந்­தூ­ரம் நடந்து வந்­த­போது அங்கே ஒரு குடிசை தென்­பட்­டது.

அந்­தக் குடி­சைக்­குள்ளே போய் நுழைந்­தேன். அதற்­குள்ளே ஒரு பிள்­ளை­யார் வைக்கப்பட்டிருந்தது.

அந்த மூர்த்­தி­யின் முன்னே ஓர் இலை­யில் சோறு, கறி, பாய­சம், பக்ஷ­ணம் முத­லி­ய­ன­வும், ஒரு குடத்­தில் நீரும், பக்­கத்­தில் புஷ்­பம், சந்­த­னம் முத­லிய பூஜை திர­வி­யங்­களும் வைத்­தி­ருக்­கக் கண்­டேன். எனது பசி­யின் கொடு­மை­யி­னால் அந்த ஆகா­ரத்­தைத் தின்றுவிட­லா­மென்று யோசித்­தேன். பிறகு சிந்­தனை பண்­ணிப் பார்த்­தேன். 'போன ஜன்­மத்­தில் என்ன பாவம் பண்­ணியோ இந்த ஜன்­மத்­தில் இந்­தத் தீவில் வர­வும், இத்­த­னைக் கஷ்­டப்­ப­ட­வும் ஏது­வுண்­டா­யிற்று. இப்­போது பசித் துன்­பத்­தைப் பெரி­தாக எண்ணி எந்த மகானோ சுவாமி பூஜைக்­காக வைத்­தி­ருக்­கும் திரு­வ­முதை அப­க­ரித்­தால், இன்­னும் பாவம் மேற்­படும். ஆத­லால் அந்­தக் காரி­யம் செய்­யக் கூடாது என்று தீர்­மா­னம் செய்து கொண்­டேன்.

பசி தாங்­க­வில்லை.

நாமே பூஜை நைவேத்­தி­யம் முடித்து விட்­டுப் பிறகு அந்த உண­வைக் கொள்­ளலாமென்று நினைத்து ஸ்நா­னம் செய்ய இடம் கிடைக்­குமா என்று பார்க்­கும் பொருட்டு வெளியே வந்து சிறிது தூரம் சுற்­றிப்­பார்த்­த­தில் அங்கே ஒரு சுனை­ இ­ருந்­தது. அதில் ஸ்நா­னம் செய்து ஸந்தி முத­லிய கர்­மங்­களை முடித்து விட்டு மறு­படி குடி­சைக்­குள் போய்ப் பார்க்­கை­யில் பிள்­ளை­யார் மாத்­தி­ரந்­தா­னி­ருந்­தது.

சோறு வடை தண்­ணீர் பூ சந்­த­னம் ஒன்­றை­யும் காண­வில்லை. எனக்கு வயிற்­றெ­ரிச்­சல் பொறுக்க முடி­ய­வில்லை. "பிள்­ளை­யாரே, பிள்­ளை­யாரே, உமக்கு எங்­கள் வேத­புரி சேர்ந்­த­வு­டனே முப்­பத்து மூன்று தேங்­காய் உடைத்­துப் பூஜை செய்­கி­றேன். எனக்­கிந்த ஆபத்து நேரத்­தில் உதவி செய்ய மாட்­டீரா?" என்று வேண்டி வருத்­தப்­பட்­டேன்.

இந்த நிலை­யில் எனது கனவு தடைப்­பட்­டது. பல குழப்­பங்­க­ளுண்­டா­யின; செய்தி நினைப்­பில்லை. பிறகு மறு­ப­டி­யும் நான் கட­ல­லை­களின்­மீது மிதந்து செல்­வது கண்­டேன். யுகப் பிர­ள­யம் போல­வே­இருந்­தது. என் கைகள் புடைத்­தன. கண் தெரி­ய­வில்லை. பிரக்­கினை சரி­யில்லை.

கட­லைத் திவலை திவ­லை­யாக உடைத்து நாசம் செய்­து­விட வேண்­டு­மென்ற நோக்­கத்­து­டன் வாயு புடைப்­பது போலி­ருந்­தது: அதே சம­யத்­தில் என­து­டம்­பைக் கட­ல­லை­கள் பந்­தா­டின.

என்­னு­யி­ரைக் கால தூதர் பந்­தா­டு­வ­து­போல் தோன்­றிற்று. அப்­போது மீண்­டும் குல சக்­தி­யின் பெயரை உச்­ச­ரித்து, விநா­ய­கரை நினைத்­தும் "பிள்­ளை­யாரே, என்னை வேத­பு­ரத்­துக் கரை சேர்த்து­விட்­டால் உமக்கு மூவா­யிரத்து முந்­நூறு தேங்­காய் உடைக்­கி­றேன். காப்­பாற்ற வேண்­டும், காப்­பாற்ற வேண்­டும்" என்று என்னை அறி­யா­மல் கூவி­னேன்.

சிறி­து­நே­ரத்­துக்­குள் புயல் காற்று நின்­றது: அங்கே ஒரு தோணி வந்­தது; தோணி­யின் அழகு சொல்லி முடி­யாது. மயில் முகப்­பும், பொன்­னி­ற­மும் கொண்­ட­தாய் அன்­னம் நீந்தி வரு­வது போல மெது­வாக என்­ன­ரு­கில் வந்த அத்­தோ­ணி­யிடையே ஒரு மறக்­கு­மா­ரன் ஆச­ன­மிட்டு வீற்­றி­ருந்­தான். அவன் முகத்­தி­னொளி தீயொளி போலே விளங்­கிற்று. தோணி­யைக் கண்­ட­வு­டனே நான் கைகூப்­பி­னேன். அப்­போது தோணிக்­கா­ர­னி­டம் என்னை யேற்­றிக் கொள்­ளும்­படி அவன் கட்­ட­ளை­யிட்­டான். அவர்­கள் என்னை ஏற்­றிக் கொண்­ட­னர்.

அந்­தத் தோணி­யில் ஏறி­ன­வுடனே என் உடம்­பி­லும், மன­தி­லு­மி­ருந்த துன்­பங்­க­ளெல்­லாம் நீங்­கிப் போயின. என் உடம்­பைப் பார்த்­தால் ராஜா­வுடை தரித்­தி­ருக்­கிறது. பதி­னாறு வயது பிள்­ளை­யா­கவே நானு­மி­ருந்­தேன். தோணி­யி­டை­யி­ருந்த மன்­னன் கரத்­திலே வேல் தெரிந்­தது. அப்­போது கண்ணை விழித்­தேன். வேத­பு­ரத்­துக் கடற்­கரை, மாலை வேளை; மணல்­மீது நான் படுத்­தி­ருப்­பது கண்­டேன்.

நம்­பிக்கை உண்­டா­க­வில்லை. கண்ணை நன்­றா­கத் துடைத்­துப் பார்த்­தேன். தீவும், புயற்­காற்­றும், கன­வென்று தெரிந்து கொண்­டேன். அந்­தத் தீவில் என்­னைக் கண்­ட­வு­டன் ஓடி மறைந்த பெண்­ணின் வடி­வம் என் கண்முன்னே நிற்­பது போலி­ருந்­தது. பிறகு தோணி­யிலே கண்ட மன்­னன் வடி­வம் தெரிந்­தது... வீடு வந்து சேர்ந்­தேன்.

வேத­பு­ரத்­தில் மௌனச் சாமி­யார் என்­றொ­ரு­வர் இருக்­கி­றார். அவ­ரி­டம் கன­வைச் சொல்லி, அந்­தத் தீவிலே கண்ட பெண் யாரென்று கேட்­டேன். "உன்னை யார் காப்­பாற்­றி­ய­தென்­பதை நீ அறி­ய­வில்லை. அந்­தப் பெண் உன்­னி­டம் அன்பு கொண்­டாள்.

"இரண்­டாம் முறை தோணி­யிலே தோன்­றிய இள­வ­ர­சன் கையில் ஒரு வேல் இருந்­தது கண்­ட­னையா? அதுவே உனக்­குப் பெண்­ணா­கத் தோன்­றிற்று. உன்­னைக் கவ­லைக் கட­லில் வீழ்த்­திய பெண்ணே பிறகு வேலா­கத் தோன்றி உன்­னைக் காத்­தாள்," என்று சொன்­னார்.

சக்­தியே வேலென்­றும் அதுவே உயி­ருக்கு நல்ல துணை­யென்­றும் தெரிந்து கொண்­டேன். சீக்­கி­ரத்­தில் நல்ல நாள் பார்த்து வேத­புரத்­தி­லுள்ள ஏழைப் பிள்­ளை­யா­ருக்கு மூவா­யி­ரத்து முந்­நூறு தேங்­காய் உடைக்க வேண்­டு­மென்று தீர்­மா­னம் செய்­தி­ருக்­கி­றேன்.

நன்றி: புராஜெக்ட் மதுரை