காற்று வெளியிடை

காற்று வெளியிடை

11 mins read

சிறுகதை

பிரதீபா

வந்திருந்த குறுந்தகவலுக்கு என்ன பதில் அனுப்புவது என்று தெரியாமல் வானில் அலையும் முகிலினங்கள்போல் அவன் மனத்தில் எண்ண அலைகள் அலை பாய்ந்துகொண்டிருந்தன. நெடுநேரம் கைத்தொலைபேசியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"ஷூட்டிங்குக்கு நேரமாச்சுன்னு பரபரன்னு கிளம்புன. இப்போ போனையே உத்துப் பார்த்துக்கிட்டு உட்கார்ந்துகிட்டு இருக்க?" என்று கேட்டபடி வந்தார் அவனின் அம்மா பர்வதம்.

"ஒண்ணுமில்லம்மா வேலை விஷயமா சின்ன குழப்பம் அதான்..."

"கல்யாணத்துக்கு இன்னும் பத்து நாள்தான் இருக்கு. இந்தக் குழப்பத்தையெல்லாம் ஒதுக்கி வெச்சுட்டு இனிமேலாவது சந்தோஷமா இருக்கப்பாரு. சொந்தக்காரங்களுக்குக் குடுக்க பத்திரிகை பத்தலன்னு மாமா இரண்டு நாளா கேட்டுட்டு இருக்குறாரு. இன்னைக்காவது மறந்துடாம பத்திரிகைய கொடுத்துட்டு வந்துடு. அப்புறம் என் மருமக வெண்பாகிட்ட..."

"போதும்மா... நான் சாயந்தரம் மாமா வீட்டுக்குப் போயிட்டு உங்களுக்குப் போன் பண்ணுறேன். அப்போ உங்க மருமககிட்ட என்ன சொல்லனுமோ சொல்லுங்க. இப்போ எனக்கு நேரமாச்சு," என்று சொல்லிவிட்டு வெளியே வந்தான்.

இன்று அவ­னுக்­குப் பாசிர் ­ரிஸ்­ஸில் 10 மணிக்­குச் சூட்­டிங். நேரம் பார்த்­தான். கடி­கா­ரம் 8.30ஐ காட்­டி­யது. தெம்­ப­னி­ஸி­லி­ருந்து பாசிர் ­ரிஸுக்கு பத்து நிமி­டத்­தில் சென்று விட­லாம்.

செல்­லும் வழி­யில் திரு­ம­ணத்­திற்­குப் புகைப்­ப­டம் எடுப்­ப­தற்­காக ஏற்­பாடு செய்­தி­ருந்த கடைக்­குச் சென்­று­விட்டு ஷூட்­டிங்­கிற்­குச் செல்­ல­லாம் என்று நேற்று முடிவு செய்­தி­ருந்­தான். ஆனால் காலை­யில் குறுந்தகவலைப் பார்த்த பிறகு அவ­னு­டைய மனம் மாறி­விட்­டது.

அந்த நேரத்­தில் அவ­னுக்கு அமை­தி­யான சூழ­லும் தனி­மை­யும் தேவைப்­பட்­டது.

வீட்­டி­லி­ருந்­தால் அம்மா 'தொண தொண'வென்று ஏதா­வது பேசிக்­கொண்டே இருப்­பார்.

ஆகை­யால் சட்­டென்று வீட்டை விட்­டுக் கிளம்­பி­ய­வன் எங்கே செல்­வது என்று யோசித்­தான்.

அப்­போது அவன் கண்­ணில் பூங்கா தென்­பட அங்கே அமர்ந்­து­விட்­டுச் செல்­ல­லாம் என்ற எண்­ணம் தோன்ற பூங்­காவை நோக்கி நடக்க ஆரம்­பித்­தான்.

அன்று வானம் மப்­பும் மந்தாரமுமாக இருந்­த­தால் வெக்கை சற்று குறை­வாக இருந்­தது.

வீசிய காற்­றில் இருந்த சிலு­சிலுப்பு அவ­னுக்கு இத­மாக இருந்­த­தோடு அலை­பாய்ந்த உள்­ளத்­திற்கு ஒத்­த­டம் கொடுத்­தாற்­போல் இருந்­தது.

ஓர­மாக இருந்த இருக்­கை­யில் சென்று அமர்ந்­தான்.

பூங்­கா­வின் அமை­தி­யான சூழல் அவன் மனத்­துக்­குச் சற்று இத­ம­ளிக்க தொலை­பே­சியை எடுத்­தான்.

கிட்­ட­த்தட்ட ஐம்­பது தட­வைக்கு மேல் படித்த அந்­தக் குறுந்தகவலை மீண்­டும் முதல் முறை படிப்­ப­து­போல் படித்­தான்.

"ஹாய் கார்த்­திக்!

இன்று உங்­க­ளுக்கு

நேர­மி­ருந்­தால்

வழக்­க­மாக

நாம் சந்­திக்­கும்

இடத்­தில்

நேரில் சந்­திக்­க­லாமா?"

என்று நந்­தி­னி­யி­டமிருந்து வந்­தி­ருந்த குறுந்தகவலை மீண்­டும் படித்­த­போது ஐஸ்­ கச்­சாங்­கில் ஊற்­றப்­பட்ட வண்­ணக்­க­ல­வை­யாய் அவன் மனத்­தில் எண்­ணங்­கள் வண்­ணக்­கு­வி­ய­லாய் ஊற்­றெ­டுத்­தது.

கிட்­டத்­தட்ட ஐந்து மாதங்­க­ளுக்­குப் பிறகு அவ­ளி­ட­மி­ருந்து வந்­தி­ருக்­கும் முதல் குறுஞ்­செய்தி.

இதற்­குப் பதில் அனுப்­பு­வதா அல்­லது வேண்­டாமா என்ற குழப்­பம் அவன் மனத்­தில் ஊஞ்­சல்­போல் ஊச­லா­டிக்­கொண்டு இருந்­தது.

அப்­போது அவன் அமர்ந்­தி­ருந்த இருக்­கைக்கு அரு­கில் இருந்த மரத்­தில் அணில் ஒன்று மரத்­தில் ஏறு­வ­தும் இவன் அரு­கில் வரு­வது­மாக விளை­யா­டிக்­கொண்­டி­ருந்­தது.

அதன் துருதுருப்­பை­யும் குறும்­புத்­த­னத்­தை­யும் பார்க்­கும்­போது அவ­னுக்­குள் நந்­தி­னி­யின் நினைவு­கள் கிளர்ந்­தன.

அவ­ளும் இப்­ப­டித்­தான் துருதுரு­வென்று இருப்­பாள்.

எந்த வேலை­யை­யும் 'பட­பட'வென்று செய்து முடித்­து­வி­டு­வாள். அந்­தத் துருது­ருப்­பும் பட­படப்­பும்­தான் அவளை அவன் பால் ஈர்த்­தது.

அன்பை வெளிப்­ப­டுத்­து­வ­தில் அவளை மிஞ்ச முடி­யாது. அவ­ளு­டன் இருந்த நாட்­களில் அவன் கொண்­டா­டிய பிறந்­த­நாட்­கள் இன்­றும் அவன் மனத்­தில் இனிக்­கின்­றன.

அதி­ர­டி­யாக ஏதா­வது செய்து அவனை அசத்தி விடு­வாள். எதி­லும் குறை­சொல்ல முடி­யாத அள­விற்கு அவ­ளின் ஒவ்­வொரு செய­லும் இருந்­தது.

ஆனால் ஒரு விஷ­யத்தை வேண்­டாம் என்று முடிவு எடுத்­து­விட்­டால் அதன் பிறகு அவள் மனத்தை மாற்­ற­மு­டி­யாது.

ஒரு முறை வேலைப் பளு­வினால் அவ­ளுக்கு உடல் நிலை சரி­யில்­லா­த­போது மருத்­து­வர் அவள் காபி குடிக்­கும் பழக்­கத்­தைக் குறைத்­துக்­கொண்­டால் நல்­லது என்று அறி­வுரை கூறி­னார்.

காபி என்­றால் அவ­ளுக்கு உயிர். ஒரு நாளைக்கு ஐந்து முறை­யா­வது அருந்­து­வாள். ஆனால் மருத்­து­வர் சொன்ன பிறகு அவள் அதை அடி­யோடு விட்­டு­விட்­டாள்.

பின்­னா­ளில் அந்­தக் குணம்­தான் அவர்­க­ளின் வாழ்க்­கைப் பாதையை மாற்றி அமைக்­கும் என்­பதை அவன் அறி­ய­வில்லை.

பல்­க­லைக்­க­ழ­கத்­தில் மூன்­றாம்­ஆண்டு படித்­துக்­கொண்­டி­ருக்­கும்­போது ஒரு தமிழ் நிகழ்ச்­சி­யில் தான் அவள் அறி­மு­க­மா­னாள்.

பல்­க­லைக்­க­ழ­கத்­தில் உள்ள இந்­திய மாண­வர் மன்­றம் நடத்­தும் கலை நிகழ்ச்சி அது.

ஆடல் பாடல், நாட­கம் என்று தமி­ழில் நடக்­கும் அந்த நிகழ்ச்­சியை அந்த ஆண்டு அவன் தொகுத்து வழங்­கி­னான்.

அதைப் பார்த்து வாழ்த்­துத் தெரி­விக்க வந்­த­போ­து­தான் அவர்­க­ளுக்­குள்­ளான நட்பு தொடங்­கி­யது.

பின்­னர் இரு­வ­ருக்­குள்­ளான புரி­தல் மெல்ல மெல்ல காத­லாக மலர்ந்­தது.

அவ­னுக்­குச் சிறு வய­தில் இருந்தே தமிழ்­மொழி மீது ஆர்­வம் அதி­கம்.

பள்­ளியில் படிக்­கும்­போது பல போட்­டி­களில் பங்­கேற்­றுப் பரி­சு­கள் பெற்று இருக்­கி­றான். அதன் பின்­னர் மேடை நாட­கக் குழு­வில் இணைந்து சில காட்­சி­களில் நடித்­தி­ருக்­கி­றான்.

ஆரம்­பத்­தில் பொழு­து­போக்­கிற்­காக ஆரம்­பித்த பழக்­கம் பின்­னர் நடிப்­பின் மீது தீராத தாக­மாக மாறிப்­போ­னது.

ஒரு முறை தொலைக்­காட்­சி­யில் ஒரு சிறு நிகழ்ச்­சி­யைத் தொகுத்து வழங்­கும் வாய்ப்­புக் கிடைத்­தது.

அந்த நிகழ்ச்சி மக்­க­ளி­டையே வெற்­றி­பெற வாய்ப்­பு­கள் அவ­னைத் தேடி வந்­தன. அப்­போது அவ­னின் பட்­டப்­ப­டிப்­பும் முடிவு பெற்­றது.

வேலை செய்­து­கொண்டே வாய்ப்­புக் கிடைக்­கும்­போது நாட­கங்­களில் நடித்து வந்­தான்.

இந்த நிலை­யில் அவர்­க­ளின் காதல் அவ­ன் வீட்­டிற்­குத் தெரிய அவன் அம்­மாவோ அதற்­குச் சிவப்­புக்­கொடி காட்டி பிடி­வா­த­மாக இருந்­தார்.

கார­ணம், அவ­ரு­டைய அண்­ணன் மகளை மரு­ம­க­ளாக்­கு­வது அவர் விருப்­ப­மாக இருந்­தது.

ஆனால், அவன் விருப்­பம் நந்­தி­னி­யாக இருந்­த­தால் வீட்டை எதிர்த்து இரு­வ­ரும் திரு­ம­ணம் செய்­து­கொண்­டார்­கள்.

அதன் பின்­னர் அவர்­கள் வாழ்க்­கை­யா­னது மல­ரும் மண­மும்­போல மணம் வீசத் தொடங்­கி­யது.

பகு­தி­நே­ர­மா­கத் தொடங்­கிய அவ­னு­டைய நடிப்பு ஆர்­வம், வாய்ப்பு­கள் பெரு­கி­ய­தால் முழு நேர­மாக மாறத் தொடங்­கி­யது.

மக்­கள் விரும்­பும் கலை­ஞ­னாக மாறிப்­போ­னான். புகழ் வள­ரத் தொடங்­கும்­போதே பிரச்­சி­னை­களும் இர­யில் வண்­டி­போல் உடன் வரத் தொடங்­கி­யது.

தொழில் நிமித்­த­மா­கப் பல பெண்­க­ளு­டன் நெருங்­கிப் பழக வேண்­டிய சூழல் உரு­வா­னது.

சமூக வலைத்­த­ளத்­தில் அவ­னுக்கு வரு­கின்ற பதி­வு­கள், பின்­னூட்­டங்­கள் அவளை இம்­சித்­தன.

இத­னால் சந்­தே­கம் என்­னும் நோய் அவ­ளுக்­குள் வேர்­விட்டு வள­ரத் தொடங்­கி­யது.

ஆரம்­பத்­தில் சிறு தூற­லாக ஆரம்­பித்த பிரச்­சினை பின்­னர் புய­லாக உரு­வெ­டுத்தது. அதன் விளைவாக வாக்­கு­வா­தங்­கள் வலுத்­தன.

அவன் நடிப்­புத்­தொ­ழிலை விட்டு­விட்டு வேலைக்­குச் செல்ல வற்­பு­றுத்­தி­னாள்.

ஆனால், அவ­னுக்கோ அது வேலை என்­ப­தை­யும் தாண்டி மன­துக்கு ஓர் ஆத்ம திருப்­தியை அளிக்­கின்ற ஒரு விஷ­ய­மாக உரு­மா­றி­விட்­டி­ருந்து.

இனி­மேல் அலு­வ­ல­கத்­திற்­குச் சென்று வேலை பார்ப்­பது என்­பது இய­லாத ஒன்­றாக அவ­னுக்கு இருந்­தது.

அது­மட்­டு­மன்றி வாய்ப்­பு­கள் கிடைக்­கும் வரை தொடர்ந்துவிட்­டுப் பின்­னர் சொந்­தத் தொழில் ஆரம்­பித்து இதி­லி­ருந்து விலகி விடு­வது அவ­னது எண்­ண­மாக இருந்­தது.

ஆனால், அவளோ உடனே இதைத் தலை­மு­ழு­கி­விட்டு வர வேண்­டும் என்­ப­தில் பிடி­வா­த­மாக இருந்­தாள்.

அவ­ளின் பிடி­வா­தம் கண்ணை மறைக்க, அவன் கூறி­யது எதை­யும் அவள் கேட்­கத் தயா­ராக இல்லை.

இவ­னும் அவ­ளுக்­குப் புரிய வைக்­கப் பல வகை­களில் முயன்று தோற்­றுப் போனான்.

அவள் முடிவை அவ­னால் மாற்ற இய­ல­வில்லை.

ஒரு­ச­ம­யம் ஷூட்­டிங் முடிந்து அவ­ச­ர­மாக வீட்­டிற்கு வந்­து­விட்­டான்.

வீட்­டிற்கு வந்த பிற­கு­தான் நாட­கத்­தில் நடித்த நடி­கை­யின் லிப்ஸ்­டிக் அவன் சட்­டை­யில் ஒட்­டி­யி­ருப்­பதை அறிந்­தான்.

அன்று அவர்­க­ளின் சண்டை வலுத்து ஒரு முடி­வுக்கு வந்­தது.

நம்­பிக்கை பொய்த்தபின் சேர்ந்து வாழ்­வது என்­பது நடிப்­பதை­விட கடி­ன­மா­னது என்­பதை உணர்ந்­தான்.

அத­னால் அவள் பிரிந்­து­வி­ட­லாம் என்று சொன்­ன­போது அவ­னும் சரி­யென்று ஒப்­புக்­கொண்­டான். ஆனால், அதனை நினைத்து அவன் பல நாள் வருந்தி இருக்­கி­றான்.

அவ­ளைத் தொடர்­பு­கொள்ள முயற்சி செய்­த­போது அது அவ­னுக்­குத் தோல்­வியி­லேயே முடிந்­தது.

அவள் முடி­வில் உறு­தி­யாக நின்­றாள். அவ­னும் வேறு வழி­யின்றி அவள் கேட்ட விவா­க­ரத்­திற்கு ஒப்­புக்­கொண்­டான்.

இரு­வ­ரும் கருத்து ஒத்­துப் பிரிந்­த­தால் வழக்­கும் சிக்­கல் இல்­லா­மல் முடிந்­தது.

அவன் மாமா வழக்­க­றி­ஞர் என்­ப­தால் வழக்கை எளி­தில் முடித்­துக் கொடுத்­து­விட்­டார்.

வழக்­கின் இறுதி நாள் அன்று அவ­ளைக் கடை­சி­யா­கப் பார்த்­தது. அதன் பின் அவ­ளு­டன் எந்­தத் தொடர்­பும் இல்­லா­மல் போனது.

அவ­ளின் நினை­வு­க­ளி­லி­ருந்து விடு­பட அவன் தொழி­லில் தன்னை மூழ்­க­டித்­துக்­கொண்­டான்.

விவா­க­ரத்­துக் கிடைத்­த­வு­டன் அம்மா மறு­ம­ணத்­திற்கு அவனை நச்­ச­ரிக்­கத் தொடங்­கி­னார்.

இவ­னும் பிடி­கொ­டுக்­கா­மல் நழு­விக்­கொண்டே இருந்­தான்.

இந்த நிலை­யில் அவ­னு­டைய அம்­மா­விற்கு நெஞ்சு வலி கார­ண­மாக உடல் நிலை சரி­யில்­லா­மல் போனது.

மருத்­து­வ­ம­னை­யில் இருந்­த­போது அம்­மா­வின் வற்­பு­றுத்­தலை அவ­னால் மறுக்க முடி­ய­வில்லை.

உடனே மாமா மகள் வெண்­பாவை பேசி முடித்­து­விட்­டார். இன்­னும் பத்து நாளில் திரு­ம­ணம்.

இந்­நி­லை­யில், நந்­தி­னி­யி­டம் இருந்து வந்த குறுந்தகவல் அவனை அலைக்­க­ழித்­துக் கொண்­டி­ருக்­கிறது.

இன்­னும் சில நாட்­களில் திரு­ம­ணத்தை வைத்­துக்­கொண்டு அவ­ளைச் சந்­திக்­கச்­செல்­வது அவ­னுக்­குச் சரி­யா­கப்­ப­ட­வில்லை.

என்ன பதில் அனுப்­பு­வது என்ற சிந்­த­னை­யில் இருந்­த­வனை அணி­லின் கீச்­சி­டும் சத்­தம் கலைத்­தது.

அது மரத்­தில் இருந்து இறங்கி அவ­னி­டம் ஏதோ சொல்ல வரு­வது­போல் வந்து 'குறு­குறு'வென்று பார்த்­து­விட்டு வேக­மாக மரத்­தில் ஏறி மறைந்து கொண்­டது.

அதைப் பார்த்­ததும் அவன் மனத்­தில் நந்­தி­னி­யின் முகம் நிழ­லாட தொலை­பே­சியை எடுத்து, "மாலை நான்கு மணிக்கு வழக்­க­மான இடத்­தில் சந்­திக்­க­லாம்," என்று பதில் அனுப்­பி­னான்.

அவன் அனுப்­பிய மறு­நி­மி­டத்­தில் "கண்­டிப்­பாக வந்து விடு­கி­றேன். நன்றி," என்று அவ­ளி­டம் இருந்து பதில் வந்­தது.

அதைப் பார்த்த­தும் அவ­னின் இதழ் கடை­யோ­ரம் புன்­மு­று­வல் தோன்ற அதைப் பார்த்­த­படி இருந்­தான்.

சற்று நேரத்­தில் அவ­ளின் நினை­வு­க­ளி­லி­ருந்து விடு­பட்­ட­வன் படப்­பி­டிப்­பிற்­குச் செல்ல வேண்­டும் என்ற சிந்­தனை உதிக்க நேரத்­தைப் பார்த்­தான்.

சிறிய முள் ஒன்­ப­தி­லும் பெரிய முள் மூன்­றி­லும் நின்று மணி ஒன்பதே­கால் என்­றது.

இப்­பொ­ழுது கிளம்­பி­னால் படப்­பிடிப்பு நடக்­கும் இடத்­திற்­குச் சென்று தயா­ராவ­தற்­குச் சரி­யாக இருக்­கும் என்ற எண்­ணம் தோன்ற அந்த இடத்­தை­விட்­டுக் கிளம்­பி­னான்.

இனம் புரி­யாத மகிழ்ச்சி அவன் உள்­ளம் எங்­கும் பரவி நின்­றதை அவ­னால் உணர முடிந்­தது.

அன்று ஷூட்­டிங்­கில் பல டேக்கு­கள் வாங்கி ஒரு வழி­யா­கக் காட்சி­களை முடித்­துக் கொடுத்­து­விட்டு மூன்று மணிக்­கெல்­லாம் கிளம்­பி­விட்­டான்.

ஒரு வித­மான பர­ப­ரப்பு அவன் உட­லில் தொற்­றிக்­கொண்­டதை அவ­னால் உணர முடிந்­தது.

நீண்ட நாட்­க­ளுக்­குப் பிற­கான சந்­திப்பு என்­ப­தால் எதிர்­பார்ப்­பு­கள் நிறைந்த அந்­தச் சந்­திப்பை எதிர் நோக்கி பய­ணிக்­கத் தொடங்­கி­னான்.

­பல்­க­லைக்­க­ழ­கத்­தில் படித்­துக்­கொண்­டி­ருக்­கும்­போது இரு­வ­ரும் அடிக்­கடி செல்­லும் இடம் வெஸ்ட்­கோஸ்ட் கடற்­க­ரை­தான்.

மாலை நேரத்­தில் கடற்­கரைக் காற்றை அனு­ப­வித்­த­படி காலார நடப்­பது அவர்­க­ளுக்­குப் பிடித்­த­மான ஒன்று.

கட­லைப் பார்த்து உட்­கார்ந்­து­கொண்டு விரைவு உணவகம் ஒன்றில் இருந்து வாங்­கிய சின்­னச் சின்­னப் பொரித்த கோழி­யைச் சுவைத்­துக்­கொண்டு இரு­வ­ரும் மணிக்­க­ணக்­கில் அள­வ­ளா­விக் கொண்­டி­ருப்­பார்­கள்.

ஆனால், கடந்த ஓர் ஆண்­டாக அங்­குச் செல்­வ­தையே மறந்து போய்விட்­டது அப்­போது அவன் நினை­வுக்கு வந்­தது.

வண்­டியை நிறுத்­தி­விட்டு அவர்­கள் வழக்­க­மா­கச் சந்­திக்­கும் இடத்தை நோக்கி நடக்க ஆரம்­பித்­தான்.

எதற்­காக வரச் சொன்­னாள் என்ற கேள்வி அவ­னுள் வட்­ட­மிட்­டுக்­கொண்­டே­யி­ருந்­தது.

அவ­னு­டைய பாதங்­கள் ஒவ்­வொரு அடி­யாக எடுத்து வைத்­துக்­கொண்­டி­ருக்க ஆனால் உள்­ளமோ அதற்கு முன்­னால் அவளை நோக்கிப் பாய்ந்­தோ­டி­யது.

அன்று வார­நாள் என்­ப­தால் கூட்­டம் சற்று குறை­வாக இருந்­தது.

சிலர் தங்­களை ஆரோக்­கி­ய­மாக வைத்­துக்­கொள்ள மெது­வோட்­டம் ஓடிக்­கொண்­டி­ருந்­தார்­கள்.

புல்­வெ­ளி­யில் ஒரு­வர் பட்­டத்­தைப் பறக்­க­வி­டும் முயற்­சி­யில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருந்­தார்.

அதற்கு எதிரே இருந்த இருக்­கை­யில் இவ­னுக்­குப் பிடித்த வெள்­ளைப்­பூக்­கள் இறைத்த நீல­நி­றச் சேலை­யில் பது­மை­போல் நந்­தினி அமர்ந்­தி­ருந்­தாள்.

காற்­றில் அலை­பா­யும் கூந்­தலை அடக்க முயற்­சித்­துத் தோற்­றுப்­போய்க்கொண்­டி­ருந்­த­வ­ளி­டம்,

"ஹாய் நந்­தினி!

எப்­ப­டி­யி­ருக்கே?

வந்து ரொம்ப நேர­மாச்சா?"

"இப்­ப­தான் பத்து நிமி­ஷத்­துக்கு முன்­னாடி வந்­தேன்.

நீங்க எப்­ப­டி­யி­ருக்­கீங்க கார்த்­திக்?"

"ம்ம்ம்.... இருக்­கேன். ஏதா­வது சாப்­பி­டு­ற­துக்கு வாங்­கிட்டு வரட்­டுமா?"

"எனக்கு ஒண்­ணும் வேணாம்"

"உனக்­குப் பிடிச்ச மெக்­டோ­னால்ஸ் சிக்­கன்"

"இப்ப எது­வும் வேணாம்"

அதன்­பி­றகு என்ன பேசு­வது என்று தெரி­யா­மல் இரு­வ­ரும் காற்­றின் வேகத்­திற்­குத் தக்­கபடி மேலும் கீழும் அல்­லா­டிக்­கொண்­டி­ருந்த பட்­டத்­தைப் பார்த்­த­படி இருந்­த­னர்.

சற்று நேரம் இரு­வ­ருக்­கும் இடை­யில் மௌனம் மட்­டும் பேசிக்­கொண்­டி­ருந்­தது.

அவ­ளி­ட­மி­ருந்து வந்த லேவண்­டர் மணத்­தி­லி­ருந்து விடு­பட்­ட­வன்

"சொல்லு நந்­தினி. ரொம்ப நாளைக்­குப் பிறகு உன்­கிட்ட இருந்த வந்த குறுந்தகவலைப் பார்த்­த­போது எனக்கு இன்ப அதிர்ச்­சியா இருந்­தது.

"அது­வும் நேர்ல பார்க்­க­னும்ன்னு சொன்­ன­வு­டனே எனக்­குள்ள பதற்றம் அதி­க­மா­யி­டுச்சு. உனக்கு ஒன்­னு­மில்­லையே?"

"எனக்கு ஒன்­னும் இல்ல. உங்­களை நேர்ல பார்த்துப் பேசனும்னு தோணிச்சு அதான்..."

"இப்­ப­வா­வது எங்­கூட உனக்­குப் பேசனும்ன்னு தோணிச்சே ரொம்­ப சந்­தோ­ஷம்"

"இப்­ப­டி­யெல்­லாம் பேசி என்ன கஷ்­டப்­ப­டுத்­தா­தீங்க கார்த்­திக்.

"ஏற்கெ­னவே நான் எடுத்த முட்­டாள்­த­ன­மான முடிவை நெனச்சு ரொம்ப வருத்­தத்­துல இருக்­கேன்.

"உங்­க­ளப் பார்த்து பேசக்கூடிய அரு­க­தையை நான் எப்­பவோ இழந்­துட்­டேன்.

"நீங்க எவ்­வ­ளவோ எடுத்­துச் சொன்­னீங்க. ஆனா புத்­திக்கு உரைக்­கல.

"ஆனா உங்­க­ளைப் பிரிஞ்சு இருந்த காலத்­துல நான் பல விஷ­யங்­களை உணர்ந்­துட்­டேன்.

"இரண்டு நாளைக்கு முன்­னாடி உங்­க­ளோட 'லாயர் மாமா' இந்­தப் பத்­தி­ரி­கையை அனுப்­பி­யி­ருந்­தாரு," என அவள் கைப்­பை­யைத் திறந்து அதி­லி­ருந்து அவ­னு­டைய திருமணப் பத்­தி­ரிகையை எடுத்து அவர்­க­ளுக்­கி­டை­யில் வைத்­தாள்.

அதைப் பார்த்­தும் அவன் ஒன்றும் பேச­வில்லை. அவள் தொடர்ந்­தாள்.

"அதைப் பார்த்­த­போது மன­சுக்­குக் கொஞ்­சம் பாரமா இருந்­தது. அப்­பு­றம் எனக்கு என்ன உரிமை இருக்­குன்னு என்னை நானே கேட்டுக்­கிட்டு என் மனச தேத்­தி­கிட்­டேன்.

"திரு­ம­ணத்­திற்கு வாழ்த்து சொல்­லிட்டு அப்­ப­டியே உங்­களை ஒரு­முறை நேர­டியா பார்த்­துப் பேச­னும்­னு­போல இருந்­தது.

"முன்­ன­விட இப்போ இன்­னும் அழகா இருக்­கீங்க கார்த்­திக்.

"ரொம்ப நல்லா நடிக்­கி­றீங்க. டிவியில வர்ற உங்க நாட­கத்தை ஒன்­னு­வி­டாம பாத்­து­டு­வேன்.

"இப்­போ­யெல்­லாம் பெண்­களோட நீங்க நெருக்­கமா நடிக்­கிற காட்­சி­யைப் பார்க்­கும்­போது எனக்­குக் கோபமே வர்­ற­தில்லை.

"அப்­பு­றம் விவா­க­ரத்து ஆன­வு­டனே எனக்கு நீங்க கொடுத்த பணத்­துக்­கான காசோலை இது. இதை என்­னோட கல்­யாண பரிசா உங்­க­ளுக்­குக் கொடுக்­கு­ற­துக்­கா­கத்­தான் வரச் சொன்­னேன்," என்று சொல்­லிக்­கொண்டே காசோலையை அவ­னி­டம் நீட்­டி­னாள்.

அப்­போது காற்று சற்­றுப் பல­மாக வீச, அவர்­க­ளுக்­கி­டை­யில் இருந்த பத்­தி­ரிகை காற்­றில் பறக்க யத்­த­னித்­தது.

அந்த நொடி­யில் இரு­வ­ரது கைகளும் தன்­னிச்­சை­யாய் அத­னைத் தடுக்க முற்­பட, அவர்­களின் கைப்­பி­டிக்­குள் பத்­தி­ரிகை அடங்­கி­யது.

அது­வரை வானில் அலைக்­கழிந்து கொண்­டி­ருந்த பட்­டம், இப்­போது ஒரே சீராக உயரே பறக்க ஆரம்­பித்­தது.

- முற்றும் -