பேங்காக்கில் ஓர் இரவு

சிறுகதை:

சிவக்குமார் KB

டிசம்­பர் - வரு­டத்­தில் இந்த ஒரு மாதம் தான் எல்­லோ­ரா­லும் அவ­ர­வர் கண்­ணோட்­டத்­தில் எதிர்­பார்ப்­போடு வர­வேற்­கக்­கூ­டிய மாதங்­களில் ஒன்று. உல­கத்­தின் நான்­கில் மூன்று பரப்­ப­ளவு முன் பனிக்­கா­ல­மாக மாறி, சில்­லென்று வீசும் பனிக்­காற்­றின் வர­வேற்­போடு அதி­கா­லை­யில் தோன்­றும் சூரி­யன், தன் சுடர்­க­ளின் ஒளியை இரு­ளி­டம் தோற்று விரை­வா­கவே மறைந்­து­வி­டும் மாதம்.

ஆனால், இந்தக் கடைசி மாதம் பல நிறு­வ­னங்­க­ளின் வரு­டாந்­தர லாப நஷ்­டத்தைக் கணக்­கி­டும் அள­வு­கோலாக அமை­வ­தால், அதே சில்­லென்று வீசும் காற்­றோடு தினம் தோன்­றும் சூரி­யன் ஒரு சில­ருக்கு அவர்­கள் இலக்­கின் வெற்றி தோல்­வியை நிர்­ணயிக்­கும் சுட­ரா­க­வும் அமை­கி­றான்.

அப்­படி ஒரு இலக்­கின் அள­வு­கோலை தன் முன் நிறுத்தி மீண்­டும் மீண்­டும் கணக்கைக் கூட்டிப் பார்த்த ராமிற்கு, அந்த வரு­டத்­தின் விற்­பனை இலக்கு கைக்­கெட்­டும் தூரத்­தில் இருந்­தது.

இன்­னும் ஒரு மென்­பொ­ருள் ஆர்­டர், ஆம் ஒரு மென்­பொ­ருள் ஆர்­டர் கிடைத்­தால் போதும், அவன் அந்த கம்­பெ­னி­யில் சேர்ந்து மூன்று வரு­டத்­திற்குப் பின் முதல் முறை­யாக விற்­பனை இலக்கை எட்டிவிடு­வான். ஆனால், அவன் முன் இருந்­ததோ வெறும் முப்­பது நாட்­கள்தான்.

அதை 'வெறும் முப்­பது நாட்­கள்தான்' என்று பார்ப்­பதா, அல்­லது 'இன்­னும் முப்­பது நாட்­கள் இருக்­கி­றதே' என்று பார்ப்­பதா என்­பது அவ­ர­வர் விற்­பனைத் திறனை பொறுத்­தது என்று அவன் மேல் அதி­காரி சொல்­வது அவன் நினை­விற்கு வந்­தது.

டேய் ராம்! சும்­மா­தானே இருக்க. போய் ஒரு காபி குடிச்­சிட்டு வர­லாம்" என்று அவனை கூப்­பிட்ட சுந்­த­ரின் குரல்­கூட அவன் காதில் விழ­வில்லை.

சற்று தள்­ளிப்­போய் திரும்­பிப் பார்த்த சுந்­த­ருக்கு, ராம் தன் இருக்­கை­யி­லேயே உட்­கார்ந்­தி­ருந்­ததை பார்த்து சற்று கோபம் வந்­தது.

"டேய்!! அந்த பேப்­பர திருப்­பித் திருப்­பிப் பார்த்தா இலக்கு எட்­டி­டுமா? இந்த வரு­ஷம் அவ்ளோ தான் நினைச்­சிக்கோ" என்று சுந்­தர் சொன்­ன­போது ராம் மெல்ல தலை நிமிர்ந்து அவனை பார்த்­தான்.

"உனக்­கென்­னப்பா! நீ இலக்கை எப்­போ­தும் எட்­டி­டுவ. என் நிலை­மை­தான் மோசம். கடுப்பா இருக்­குடா. இந்த இலக்கை நினைச்சு, ராத்­திரி தூக்­கமே வரலை. நானும் எவ்ளோ உண்­மையா உழைக்­கி­றேன். வரப்­போற வாடிக்­கை­யா­ளர் எப்­படி எதிர்­பார்க்­க­றாங்­களோ அதுக்கு ஏத்த மாதிரி எல்­லாம் பண்­ண­றேன். ஆனா­லும் வருஷா வரு­ஷம் இந்த இலக்கு எப்­ப­வும் கை விட்­டுப்­போ­குது. ஏன்னு புரி­ய­லையே?" என்று சலித்­துக்­கொண்­டான் ராம்.

"டேய் ராம், நீ உழைக்­கிற தரம் டா, பொழைக்­கிற தரம் இல்ல. ரொம்ப ஒழுக்­கத்­தோடு நல்­ல­வனா இருந்தா, ஒண்­ணும் விற்க முடி­யாது. புது வாடிக்­கை­யா­ள­ருக்கு என்ன வேணுமோ, அதை புரிஞ்­சுக்­க­ணும். அப்­பு­றம் அங்க இங்க கூட்­டிட்டு போய் அவனை குஷி படுத்­த­ணும். நீ சுத்த வேஸ்டு டா!" என்று சுந்­தர் சொன்­னது, 'நங்' என்று ராம் மண்­டை­யில் அடித்­தது.

"நீ இப்போ முதல்ல கிளம்பி காபி குடிக்க வா, சொல்­றேன்," என்று சுந்­தர் அவன் பதி­லுக்கு காத்­தி­ரா­மல் அங்­கி­ருந்து நகர, ஏதோ வாழ்க்­கைப்­பா­டம் சொல்­லிக்­கொ­டுக்க போகும் ஆசி­ரி­ய­ரைப் பின்­தொ­டர்­வ­து­போல், ராம் சுந்­தரைப் பின்­தொ­டர்ந்து சென்­றான்.

"ராம், நீ இருக்­க­றதை மட்­டும் சொல்­லிப்­புட்டு, வாங்­க­ற­வன் பதி­லுக்கு காத்­துக்­கிட்­டி­ருந்தா ஒரு மண்­ணும் விற்க முடி­யாது" என்று காபியை குடிப்­ப­தற்கு முன்­னால் 'சுளீர்' என்று நேர­டி­யாக விஷ­யத்­திற்கு வந்­தான் சுந்­தர்.

"இப்போ என்­னைப் பாரு. வருஷா வரு­ஷம் தவ­றாம இலக்கை எட்­ட­றேன். எப்­படி முடி­யுது?" கொஞ்­சம் யோசிச்­சியா?" என்று அவன் தொடர்ந்து கேட்ட கேள்­விக்கு, "நீ வரப்­போற வாடிக்­கை­யா­ளர்­கிட்ட இல்­லா­த­தை­யும் பொல்­லா­த­தை­யும் சொல்லி வித்­து­டுற போல," என்று ராம் சொன்ன பதில் சுந்­த­ருக்கு சிரிப்­பைத்­தான் வர­வழைத்­தது.

"ராம், அப்­படி நான் இல்­லா­த­தை­யும் பொல்­லா­த­தை­யும் சொல்லி விற்றா, இந்த நேரம் எந்த வாடிக்­கை­யா­ள­ரும் திரும்பி வந்­தி­ருக்­க­மாட்­டான். நம்ம கம்­பெனி பெய­ரும் நாச­மா­யி­ருக்­கும். அப்­படி ஒண்­ணும் நடக்­க­லியே. அப்போ என்ன கார­ணம் யோசிச்­சியா?" என்று சுந்­தர் மேலும் தொடர்ந்­தான்.

"எந்த ஒரு மென்­பொ­ருள் விற்­கும்­போதும், அதில் குறை நிறை இருக்­கும். எல்­லாம் மீட்­டிங்­கில் பேசி முடி­வா­க­ற­தில்லை. அந்த குறை நிறை­யைச் சொல்ல வேண்­டிய முறை­யும், இட­மும் வேறு. அதை புரிஞ்­சுக்­காம வாடிக்­கை­யா­ளர் வாங்­க­லைன்னு சொன்னா எவன் நம்­பு­வான்? உனக்கு சாமர்த்­தி­யமா விற்க தெரி­ய­லை­னு­தான் சொல்­லு­வான்," என்று சுந்­தர் சொன்­னது ராம் மன­தில் குழப்­பதை ஏற்­ப­டுத்­தி­யது.

"வாங்­க­ற­வனை அங்க இங்க கூட்­டிட்டுப் போய் குஷி படுத்­த­ணும்னு சொல்­லற. அப்போ, அது லஞ்­சம் இல்­லையா?" என்று ராம் கேட்­ட­தற்கு, "அது நீ பார்க்­கிற பார்­வை­யைப் பொறுத்­தது,'' என்­றான் சுந்­தர்.

"இப்போ நாம ரெண்டு பேரும் காப்பி குடிக்­கி­றோம். நான்­தான் வாங்­கி­னேன். இது லஞ்­சமா? இல்­லையே. ஒரு நட்­புக்­கான அடை­யா­ளம். அவ்­வ­ளோ­தான். அதே மாதிரி, வரப்­போற வாடிக்­கை­யா­ளரை பப்­புக்கு கூட்­டிட்டு போய் அவனை குஷி படுத்­தினா, அது­வும் வரப்­போ­கும் நட்­புக்­கான அடை­யா­ளம். அவ்­வ­ளோ­தான். அந்த நேரத்­துல, நீ அவன்­கிட்ட குறை நிறை­களை எடுத்து சொன்னா அவ­னும் யதார்த்­தமா புரிஞ்­சுக்குவான். இதெல்­லாம் என் அனு­ப­வத்­தில சொல்­­றேன். அப்­படி கூட்­டிட்­டுப்­போ­ற­துல.." என்று அவன் சொல்­லிக்­கொண்­டி­ருக்­கும்­போதே ராமின் மேல் அதி­காரி அவனை கைபே­சி­யில் அழைத்­தார்.

"ராம், ஒரு புது வாடிக்­கை­யா­ளர் நம்ம மென்­பொ­ரு­ளைப் பார்க்­க­ணும்னு சொல்­றார். அவர் இன்­னும் ரெண்டு நாளைக்கு தாய்­லாந்தின் பேங்­காக் நக­ரத்­திலே இருக்­கா­ராம். மென்­பொ­ருள் பிடிச்சா உடனே 'செக்' கொடுக்கத் தயாரா இருக்­கா­ராம். நீ உடனே போய் அவரை நாளைக்கே பாரு. இந்த வாடிக்­கை­யா­ளர்­கிட்ட நீ வித்­துட்டா, உன்­னோட வரு­டாந்­திர இலக்கு எட்­டி­டுவ. பேசாம, இன்­னிக்கி இரவே நீ சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து பேங்­காக் புறப்­படு," என்று அவன் பதி­லைக் கூட எதிர்­பார்க்­கா­மல் அவர் ஆணை­யிட்­டார்.

ராம் பேசி­மு­டித்த கையோடு சுந்­தரை ஒரு புன்­மு­று­வ­லோடு பார்த்­தான்.

"பாஸோட கால். ஒரு புது வாடிக்­கை­யா­ள­ரைப் பார்க்­க­ணு­மாம். அவர் இன்­னும் ரெண்டு நாளைக்கு பேங்­காக்ல இருப்­பா­ராம். அத­னால இன்­னிக்கி இரவே.." என்று ராம் முடிப்­ப­தற்­குள், "டேய், பழம் நழுவி பாலில் விழு­துடா! இதை­விட ஒரு நல்ல இட­மும் சந்­தர்ப்­ப­மும் அமை­யாது. பேங்­காக்ல அவரை எங்க கூட்­டிட்­டுப் போக­ணும்னு நான் சொல்­ல­றேன்," என்று சுந்­தர் அடுத்த பத்து நிமி­டத்­திற்கு பாடமே நடத்­தி­னான்.

அதை முழு­தும் கேட்ட ராமிற்கு ஏனோ மனம் உட­ன­டி­யாக ஒப்­ப­வில்லை.

"டேய், இது கொஞ்­சம் ஓவர். நீ விட்டா என்னை என்­னென்­னவோ வேலை­யெல்­லாம் பார்க்­கச் சொல்­லுவ போல. இதெல்­லாம் என்­னால முடி­யாது. வேணும்னா ஒரு காபி ஷாப் இல்­லாட்டி ஒரு ரெஸ்டாரெண்ட் கூட்­டிட்­டுப் போறேன்," என்று சொன்­ன­வ­னைப் பார்த்து "டேய்....உன்னை என்­னத்த சொல்­ல­றது! என்­னால உனக்கு வழி சொல்­லத்­தான் முடி­யும். அந்த வழி­யில போய் பிழைக்­கிறது உன் திறமை," என்று சுந்­தர் கிளம்­பி­விட்­டான்.

அன்­றி­ரவு பேங்­காக் கிளம்­பும் வரை ராமின் மனம் ஏனோ அலை­பாய்ந்­து­கொண்டே இருந்­தது. வீட்­டி­லி­ருந்து விமான நிலை­யம் செல்­லும்­போது அவன் வீட்­டா­ரி­டம்­கூட சரி­யாக சொல்­லிக்­கொள்­ள­வில்லை. அவன் மன­தில் சுந்­த­ரின் பேச்சு மீண்­டும் மீண்­டும் ஒலித்­துக்­கொண்­டே­யி­ருந்­தது. சுந்­தர் சொல்­வது போல் நல்­ல­வனா இருந்தா பிழைக்க முடி­யா­து­போல. அவன் சொல்­லற மாதிரி அங்க இங்க கூட்­டிட்­டுப்­போனா தான் என்ன தப்பு? வாழ்க்­கை­யில் செல்­லும் பாதை முக்­கி­யமா அல்­லது அடை­யும் இலக்கு முக்­கி­யமா? அவ­னுக்கு ஒரே குழப்­ப­மாக இருந்­தது.

தாய்­லாந்தின் பேங்­காக் மிக பழ­மை­வாய்ந்த சுற்­றுலா நக­ரம். அவன் பேங்­காக்­கில் தரை­யி­றங்­கி­ய­போது இரவு மணி ஒன்று. விமான நிலை­யத்­தி­லி­ருந்து அவன் தங்­கும் நட்­சத்­திர ஹோட்­டல் செல்­லும் வழி­யெல்­லாம் மின்­மி­னுத்­தன. இரவு ஒரு மணி­யா­கி­யும், தெருக்­கள் வண்ண வண்ண விளக்­கு­க­ளின் பிர­கா­சத்­தில் ஜொலித்­தன.

சுந்­தர் சொன்ன 'சுகும்­விட்' என்ற இடம் மற்ற இடங்­க­ளை­விட இன்­னும் பிர­கா­ச­மாக ஜொலித்­தது. சாலை­யின் இரண்டு பக்­க­மும் பப்­பு­களும், மசாஜ் கடை­க­ளு­மாக இருந்­தன.

அந்­தக் கடை­க­ளின் வாச­லில் பெண்­கள் கூட்­டம் கூட்­ட­மாக நின்று வாடிக்­கை­யா­ளர்­களை மடக்க முனைந்­தார்­கள். அரை­குறை ஆடை­யில் நின்ற அந்த பெண்­க­ளைப் பார்த்த ராம், ஒரு நிமி­டம் அவர்­க­ளின் அழ­கைக் கூட ரசிக்கத் தொடங்­கி­னான்.

அந்த நிமி­டத்­தில், அவன் செய்­யும் வேலைக்­கும் அவர்­கள் செய்­யும் வேலைக்­கும் என்ன வித்­தி­யா­சம் என்­று­கூட அவன் மனம் நினைத்­தது. இரு­வ­ரும் வாடிக்­கை­யா­ளர்­க­ளைத்­தான் தேடு­கி­றார்­கள்!! அவன் விற்­கும் மென்­பொ­ரு­ளில் குறை நிறை உண்டு. இவர்­கள் ஆடை­யி­லும் குறை நிறை உண்டு. பின் என்ன வித்­தி­யா­சம் என்று அவன் மனம் புன்­மு­று­வ­லோடு அவ­னி­டம் பேசி­யது. அந்த சப­லத்­தின் பிடி­யில் சிறிது நேரம் மனம் அலை­பாய்ந்­தது. அதை அடக்­கும் பொருட்டு அவ­னுள் இருந்த ராம், இப்­போது அவ­னி­டம் கேள்வி எழுப்­பி­னான். "ராம், வந்த வேலையை கவனி. மென்­பொ­ருள் மேல நாட்­டம் வை. பெண்­பொ­ருள் மேல் இல்லை!' என்று ஹாஸ்­ய­மாக திசை­தி­ருப்­பினான்.

ஒரு வழி­யாக அவன் தங்­க­வேண்­டிய நட்­சத்­திர ஹோட்­டலை அடைந்­த­போது, தூக்­கம் சொக்­கி­யது. ஆனால், அறை­யின் பஞ்­சு­மெத்­தை­யில் படுத்­த­வ­னுக்கு, அன்று இரவு முழுக்க ஏனோ தூக்­கம் வர­வே­யில்லை.

அடுத்த நாள் காலை, வாடிக்­கை­யா­ளர் சந்­திப்பு.

நான்கு மணி நேரத்­திற்கு மேல், தொண்டை தண்ணி வற்ற ராம் அந்த மென்­பொ­ருள் பற்றி அந்த புதிய வாடிக்­கை­யா­ள­ரி­டம் விளக்­கி­னான். எல்­லா­வற்­றை­யும் பொறு­மை­யாக கேட்­டுக்கொண்ட அந்த வாடிக்­கை­யா­ளர், முடி­வில் ஒன்­றும் சொல்­ல­வில்லை. பிடித்­ததா, பிடிக்­க­லையா என்­று­கூட முக­பா­வம் இல்லை. சாதா­ர­ண­மாக இப்­ப­டிப்­பட்ட சந்­திப்­பு­களில், அவர்­கள் முடி­வைத் தெரி­விக்க ராம் தன் கைப்­பே­சி­யை­யும், மின்­னஞ்­சல் முக­வ­ரி­யை­யும் கொடுத்­து­விட்டு கிளம்பி விடு­வது வழக்­கம். ஆனால், இம்­முறை சுந்­தர் சொல்­படி நடக்க தயா­ரா­னான்.

"சார், உங்­க­ளுக்கு இதைப் பற்றி யோசிக்­க­ணும் நினைச்சா இன்­னிக்கி மாலை நாம 'சுகும்­விட்ல' ஒரு பப்­பில பேச­லாம். உங்­க­ளுக்­கும் கொஞ்­சம் ரிலாக்ஸ் பண்­ணின மாதிரி இருக்­கும். நான் உங்­கள கூட்­டிட்­டுப் போக எனக்கு ஒரு வாய்ப்­புக் கொடுங்க. எந்த நிர்­பந்­த­மும் இல்லை" என்று சுந்­தர் சொல்­லிக்­கொ­டுத்­ததை மனப்­பா­டம் பண்­ணி­ய­வன் போல் சொன்­னான்.

"கண்­டிப்பா மிஸ்­டர் ராம். இது நல்ல யோசனை. எனக்­கும் பாங்­காக் நைட் லைஃப் பார்க்­க­ணும்" என்று அவர் உடனே அதற்­குப் பதில் சொன்­ன­தும், சுந்­தர் அவனை பார்த்­துக் கண்­சி­மிட்­டு­வது போல் உணர்ந்­தான்.

சுகும்­விட் - மாலை நேரத்­தி­லி­ருந்தே களை கட்­டி­யது. சுந்­தர் சொன்ன அந்த பப்­பிற்­குள் நுழைந்­தும் அவர்­கள் இரு­வ­ரை­யும் வர­வேற்க இரண்டு அரை குறை ஆடை அணிந்த பெண்­கள் வந்­த­னர்.

"குட் ஈவி­னிங். வெல்­கம், கேன் வி கெட் எ ட்ரிங்க்?" என்று கேட்­ட­தோடு நிற்­கா­மல் அவர்­கள் இரு­வ­ரை­யும் தங்­க­ளு­டன் அணைத்­த­வாறு வர­வேற்­ற­னர். அவ­னோடு வந்த வாடிக்­கை­யா­ளர், அப்­போது 'குட் சாய்ஸ்' என்­றார். அவர் இடத்தை பற்றி சொன்­னாரா அல்­லது அவரை அணைத்த பெண்­ணைப் பற்றி சொன்­னாரா என்று ராமிற்கு தெரி­ய­வில்லை.

அந்த இரண்டு பெண்­களும் இப்­போது இவர்­கள் இருக்­கைக்கு வந்­த­னர். வந்­த­வர்­கள் கோப்­பையை மட்­டும் நிரப்­பா­மல் இவர்­கள் அரு­கி­லேயே அமர்ந்து தங்­கள் கோப்­பை­யை­யும் நிரப்­பி­னர். பின், "சியர்ஸ்" என்று சொல்­லி­விட்டு அவர்­கள் மடி­யில் உட்­கா­ராத குறை­யோடு, உட­லோடு உடல் உர­சி­னர்.

ராமிற்கு என்ன சொல்­வது என்றே தெரி­ய­வில்லை. மெல்ல அவன் அருகே இருந்த பெண்­ணைப் பார்த்­துச் சிரித்­தான். அவ­ளும் மெல்ல சிரித்­து­விட்டு அந்த பப்­பில் ஒலித்த பாட்டை ரசிப்­ப­து­போல் தலையை ஆட்­டிக்­கொண்­டி­ருந்­தாள். எதிரே அமர்ந்து வாடிக்­கை­யா­ளரோ, அவர் அருகே இருந்­த­வ­ளி­டம் ஏதோ பல நாள் பழ­கி­ய­வர் போல் கொஞ்­சவே ஆரம்­பித்­து­விட்­டார். கொஞ்­சும் மும்­மு­ரத்­தில் இருந்­த­வரை, "சார், இன்­னிக்கி பார்த்த மென்­பொ­ருள் பற்றி என்ன நினைக்­க­றீங்க?" என்­றான் ராம். அவரோ, கோப்­பையை உயர்த்தி "முதல்ல இந்த இரவை ரசிப்­போம் மிஸ்­டர் ராம். இன்­னும் ரசிச்சு அனு­ப­விக்க வேண்­டிய விஷ­யங்­கள் நிறைய இருக்கு. அவ­ச­ரப்­ப­டா­தீங்க!!" என்று சொல்­லி­விட்டு அவர் அருகே இருந்­த­வ­ளி­டம் மீண்­டும் கொஞ்சி குலா­வத் தொடங்­கி­விட்­டார்.

ராமிற்கு இப்­போது என்ன செய்­வது என்று தெரி­ய­வில்லை. மெல்ல அந்த பப்பை சுற்றிப் பார்த்­தான். அங்கு வந்­தி­ருந்­த­வர்­கள் எல்­லோர் அரு­கி­லும் அரைகுறை ஆடை அணிந்த பெண்­கள்.

ஏதோ அந்தப் பெண்­களை தினம் பார்த்துப் பழகு­வதுபோல் உட­லோடு உடல் உரசி, சந்­தோ­ஷத்­தில் சிரித்­துக்­கொண்­டி­ருந்­தார்­கள். மீண்­டும் அவன் அருகே உட்­கார்ந்­த­வளைப் பார்த்­தான். சரி, ஏதா­வது பேச­லாம் என்று ஆரம்­பித்­தான்.

"ஹௌ ஓல்ட் ஆர் யு?" என்று அவ­ளி­டம் கேட்க , அவள் குபீர் என்று சிரித்­து­விட்­டாள். சொல்­லுங்க பார்ப்­போம் என்ற பாணி­யில் ராமின் கன்­னத்­தில் ஒரு கேள்­விக்­கு­றியை வரைந்­தாள்.

அவ­ளின் அழகைக் கொஞ்­சம் பக்­கத்­தில் பார்த்த ராம், ''ஹ்ம்ம் 25" என்று சொல்ல, அதை கேட்­ட­வள் அவன் மீது சாய்ந்து, அவன் கன்­னத்­தில் அழுத்தி ஒரு முத்­தம் கொடுத்­தி­விட்டு "ஜஸ்ட் 16" என்று குழைந்­தாள்.

ராமிற்கு அப்­போது என்­ன­சொல்­வது என்று தெரி­ய­வில்லை. 'சே!! பதி­னாறா?. படிக்க வேண்­டிய வய­சுல!' என்று அவளை திட்ட அவன் மனம் நினைத்­த­போது அவன் கைபே­சிக்கு அழைப்பு வந்­தது. கைபே­சி­யில் அழைத்­தது அவன் மனைவி.

சற்று வெளியே சென்று சத்­தம் குறைந்த இடத்­தில் அவன் அந்த அழைப்பை எடுத்­தான்.

"ராம். இப்போ பேச­லாமா?" என்று அவ­னி­டம் அவள் கேட்­ட­தற்கு "ஹ்ம்ம் சொல்லு" என்­றான்.

"உன் செல்ல பதி­மூணு வயசுப் பொண்ணு, இன்­னிக்கி பெரிய பொண்ணு ஆயிட்டா. இனி­மேல் அப்பா உன்னை கட்டி அணைச்சு முத்­த­மெல்­லாம் கொடுக்கமாட்­டார் என்று சொன்­ன­தும், ஒரே அழுகை. இன்­னும் விவ­ரம் வரலை. அவ­ளோட கொஞ்­சம் பேசு ராம்," என்று சொல்­லி­மு­டிக்க, "அப்பா.." என்று ஒரு குரல் மறு­மு­னை­யில் அவனை அழைத்­தது.

அதற்குமேல் ராமிற்கு எது­வும் பேச முடி­ய­வில்லை. அவன் எதிரே கோப்­பை­யும் கையு­மாக, அரை குறை ஆடை அணிந்து தினம் ஒரு ஆணி­டம் கொஞ்சிப் பேசும் அந்த பதி­னாறு வயதுப் பெண்ணைப் பார்த்­தான்.

அவள் அவனை மீண்­டும் உள்ளே ­வ­ரு­மாறு கைய­சைத்­தாள்.

"இப்­படித்தான் வரு­டாந்­திர இலக்கை எட்­ட­ணுமா?

"இலக்கு முக்­கி­யமா இல்­லாட்டி அதை அடை­யும் பாதை முக்­கி­யமா?" என்று அவ­னுள் இருந்த ராம், அவ­னி­டம் மீண்­டும் கேட்­டான்.

"ஒண்­ணும் அறி­யாத வயசு பெண்­களை இந்தத் தொழில்ல தள்ளி விட்­ட­வங்க மட்­டும் தப்பு பண்­ணலை, அதை ரசிக்­கிற நாமும் குற்­ற­வா­ளிங்க தான்," என்று அவன் மனம் குமு­றி­யது.

அவனையும் அ­றி­யா­மல், கால்­கள் வேக­மாக அவன் தங்­கி­யி­ருந்த நட்­சத்­திர ஹோட்­டலை நோக்கி நகர்ந்­தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!