பிள்ளைக் கனியமுதே

பிள்ளைக் கனியமுதே

10 mins read

சிறுகதை

சித்ரா தணிகைவேல்

"என்­னது? மூணு நிமி­ஷத்­தில 100 கணக்கு போட­ணுமா!?" கேட்­கும்­போதே தலை சுற்­றி­யது பானு­வுக்கு!

"ஆமாங்க, இன்பா 100 கூட்­டல் கணக்­குப் போட்­டு­டுவா. ஒண்­ணும் கஷ்­ட­மில்லை. கையெ­ழுத்து ஒழுங்கா இருக்­க­ணு­மேன்­னு­தான் நான் கவ­லைப்­ப­ட­றேன்!" என்­றாள் நந்­தினி.

முகக்­க­வ­சம் அணி­ய­ ம­றந்து வெளியே வரு­ப­வர்­க­ளைப் பார்ப்­பது­போல் நந்­தி­னியை அதி­ச­ய­மாய்ப் பார்த்த பானு, "அந்­தக் குழந்­தைக்கு இப்­போ­தான் ஆறு வயசு தொடங்­கி­யி­ருக்கு. ஓடி­யாடி மகிழ்ச்சியா இருக்­க­வேண்­டிய வய­சுடி! நீயும் உன் புரு­ஷ­னும் இப்­ப­டிப் படுத்­து­றீங்­களே!"

"அவளை யாரும் படுத்­தலை. எல்­லாம் அவ­ளோட எதிர்­காலத்­துக்­குத்­தான் இவ்­வ­ளவு மெனக்­கெ­ட­றோம். அவ­ளுக்கு பிடிச்­ச­மா­ன­தை­யும் செய்­துட்­டு­தான் இருக்­கோம். நாங்க ஒரு வரு­ஷமா இந்­தப் போட்­டிக்­காக அவ­ளைத் தயார் பண்­ணிட்டு இருக்­கோம். இன்­பாவை ராத்­தி­ரித் தூக்­கத்­தில எழுப்பி ரெண்டு, மூன்று இலக்க எண்­க­ளைக் குடுத்­துக் கூட்­டச் சொன்னா கொஞ்­சம்­கூட யோசிக்­காம உடனே பதில் சொல்­லுவா. அந்த அள­வுக்­குத் தயாரா இருக்கா!"

இந்த அதிர்ச்­சி­யி­லி­ருந்து மீள முயன்ற பானு பலி­கடா தலையை உத­று­வ­து­போல் தலையை ஆட்­டி­விட்டு, "ஆனா­லும் இது அதி­கம்­தாண்டி! அவ­ளைப் பாரு! அந்த முகத்­தில இருந்த குழந்­தைத்­தனமே போச்சு! ஏதோ மந்­தி­ரிச்சு விட்­ட­து­போல் இருக்கா!"

"அக்கா, சும்மா ஏதா­வது உளறா­தீங்­கக்கா! அவ நல்­லா­தான் இருக்கா. துள­சி­யை­யும் இன்பா கூடவே எல்­லாத் துணைப்­பாட வகுப்­பு­க­ளுக்­கும் அனுப்­புங்­கன்னு எவ்ளோ காலமா நானும் சொல்­லிட்டு­த்தான் இருக்­கேன். ஏதா­வது ஒரு வகுப்­புக்­கா­வது அனுப்­பி­யிருந்தா அவ­ளும் இன்­னைக்கு நல்லா வந்­தி­ருப்பா இல்­லையா?"

"இப்போ துள­சிக்கு என்ன கொறைச்­சல்? நல்­லாத்­தானே இருக்கா? அவ­ளு­டைய வய­சுக்­குரிய வளர்ச்­சி­யோட சந்­தோ­ஷமா சுத்­தித் திரிஞ்­சிட்டு இருக்கா. அவ வய­சுக்கு அவ­ளால என்ன செய்­ய­மு­டி­யுமோ அதை செஞ்­சாலே போதும். பிஞ்­சுக் குழந்­தை­யைப் போய்த் துணைப்­பாட வகுப்­புக்கு அனுப்­ப­ணு­மாம்! வேலை­யைப் பாருடி!" என இரைந்­தாள்.

"வேலை­யைப் பாருன்­ன­தும்­தான் ஞாப­கம் வரு­துக்கா. நான் போய் துர்­க்கைக்கு விளக்­குப் போட­ணும்! அடுத்த வாரம் மலே­சி­யா­வுல தேசிய அள­வு­ல­யும் உலக அள­வு­ல­யும் நடக்­குற கணக்­குப் போட்­டி­யில எப்­ப­டி­யா­வது இன்­பா­வுக்கு முதல் பரிசு கிடைக்­க­ணும்! நான் கிளம்­ப­றேன்க்கா!" என்று அவ­சர அவ­ச­ர­மாக வில­கி­ய­வ­ளைக் கண்டு உள்­ளம் நொந்­த­வள் பேருந்­துக்­காக நின்­று­கொண்­டி­ருந்­தாள்.

பேருந்­தில் செல்­லும்­போது இடை­யி­டையே தென்­பட்ட துணைப்­பா­டப் பயிற்சி நிலை­யங்­கள் எரி­யும் விளக்­கில் எண்­ணெய்யை ஊற்­றிக்­கொண்­டி­ருந்­தன.

வீட்­டி­னுள் நுழைந்­த­தும் தலை­யைப் பிடித்­துக்­கொண்டு சோபா­வில் அப்­ப­டியே உட்­கார்ந்­து­விட்­டாள். அலு­வ­ல­கத்­தி­லி­ருந்து சீக்­கி­ரமே வீடு திரும்­பி­யி­ருந்த பகீ­ர­தன், நாற்­கா­லியை இழுத்து அவ­ள­ருகே போட்டு உட்­கார்ந்­தான்.

"ஏன் பானு ஒரு மாதிரி இருக்கே? ஏதோ ரொம்­பக் குழப்­பமா இருக்க மாதிரி இருக்கே?"

"ஏங்க, நம்ம துள­சியை நாம சரி­யாத்­தான் வளர்க்­கி­றோமா? அவ வய­சுக்கு அவள் படிக்­கிறது சரி­தானா?"

"என்ன உளர்றே? நீ என்ன சொல்ல வர்­றேங்­க­றதே எனக்­குப் புரி­யலை!"

"இல்­லைங்க, கோவி­லுக்­குப் போற வழி­யில நந்­தி­னி­யைப் பார்த்­தேன்."

"நந்­தி­னியா? யாரது?"

"அதாங்க, உங்­ககூட விளம்­ப­ரப் பிரி­வுல வேலை செய்­ய­றாரே ரகு­நா­தன்; அவர் மனைவி."

"ஓ, அவனா? அவன் ஒரு தலை­வலி! ஊர்ல ஒல­கத்­துல எங்கே போட்டி நடந்­தா­லும் அவன் பொண்ணை அனுப்­பி­டு­வான். ஏன் துள­சியை அனுப்­பக் கூடா­தான்னு கேட்­டுக் கேட்டு என்­னை­யும் வறுத்­தெ­டுத்­து­டு­வான். அவன் மேல இருந்து குதிச்சா, நாம­ளும் குதிக்­க­ணும்னு தலை­யெ­ழுத்தா என்ன? அது சரி, நந்­தினி என்ன சொன்னா?"

"அவ பொண்ணை உலக அள­வுல நடக்­குற கணக்­குப் போட்­டிக்கு அனுப்­பப் போறா­ளாம்."

"அடப்­பாவி, உள்­ளூர்ப் போட்­டி­யெல்­லாம் முடிச்­சிட்டு இப்போ உலக அள­வுல நடக்­குற போட்­டிக்கு அனுப்­ப­றானா? சரி அனுப்­பட்­டும்; அது அவங்க பொண்ணு, அவங்க விருப்­பம், அதுக்­காக நீ ஏன் மூஞ்­சிய சோகமா வச்­சிட்டு இருக்கே?"

"மூணு நிமி­ஷத்­தில 100 கூட்­டல் கணக்கு போட­ணு­மாம்!?"

"100 கணக்கு இல்லை, ரகு அவன் பொண்ணை 1,000 கணக்கு கூடப் போட­வைப்­பான். அவன் பிள்­ளை­யைப் பிள்­ளையா வளர்க்­கலை. அவன் விருப்­பப்­படி நடக்­கற எந்­தி­ரப் பொம்­மை­யாப் பார்க்­க­றான். நீ இன்­னும் உன் சோகத்­துக்­குக் கார­ணம் சொல்­ல­லையே!"

"துள­சிக்­கும் இன்பா மாதி­ரியே ஆறு வய­சா­குது. ஆனா அவ இப்­போ­தான் ஒண்­ணுல இருந்து 100 வரைக்­கும் எழு­தவே ஆரம்­பிச்­சி­ருக்கா. ஆனா இன்பா மூன்று இலக்­கக் கூட்­டல் அசாத்­தி­ய­மாப் பண்­றா­ளாம். அது­வும் ஒரே வரு­ஷப் பயிற்­சி­யில."

"சர்க்­கஸ்ல உள்ள சிங்­கத்­துக்­குக்­கூட முறை­யான பயிற்சி குடுத்தா அது என்­னென்­னவோ வித்­தை­யெல்­லாம் செய்­யுமே, பாத்­தி­ருக்­கியா? அந்த வித்­தை­யெல்­லாம் அதோட இயல்பா? இல்­லையே! எது இயல்போ அந்த இயல்­போட ஒத்­துப்போக­ணும். இப்போ நம்ம துளசி அவள் வகுப்­பில சொல்­லிக்­கு­டுக்­கற பாடங்­களை அவ­ளே­தானே செய்­யறா?"

"...ம்ம்ம்"

"ஒண்­ணுல இருந்து 100 வரைக்­கும் சரியா எழு­தறா இல்­லியா?"

"சரி­யாத்­தான் எழு­தறா."

"ஆங்­கி­லம், தமிழ் இதி­லெல்­லாம் குடுக்­குற வேலை­களை அவ­ளாத்­தானே செய்­யறா?"

"ஆமாங்க"

"துள­சிக்கு 100 வரைக்­கும் எழு­தத் தெரி­யு­தேன்னு சந்­தோ­ஷப் பட­றதை விட்­டுட்டு கவ­லைப்­ப­ட­றியே."

"அதில்­லைங்க. இன்பா மட்­டு­மில்லை. நம்ம துள­சி­கூ­டப் படிக்­கிற பிள்­ளைங்க எல்­லாம் 'போஃ­னிக்ஸ்', 'ஸ்பீச் அண்ட் டிராமா', 'சாக்­கர்', 'பேட்­மிண்­டன்', 'நீச்­சல்' ன்னு என்­னென்­னவோ வகுப்­புக்­கெல்­லாம் போறாங்க. துள­சி­யை­யும் சேர்த்­து­வி­டச் சொல்லி அப்­பப்போ சொல்­லு­வாங்க. தொடக்­க­நிலை போனா ரொம்ப உத­வியா இருக்­கு­மாம். நான்­தான் அதெல்­லாம் வேணாம், பள்­ளிக்­கூ­டத்­தில படிக்­க­றதே போதும்னு சொல்­லு­வேன். ஆனால், இப்போ என்­னவோ மனசு கெடந்து அலை­பா­யுது."

அவள் பேசட்­டும் என்று அமை­தி­யா­கக் கேட்­டுக்­கொண்­டி­ருந்­தான் பகிரதன்.

"இப்­பக்­கூட நந்­தி­னி­யைத் திட்­டிட்­டு­தான் வந்­தேன். ஆனா யோசிச்­சிப் பார்த்தா நான்­தான் தப்­புப் பண்­ணிட்­டே­னோன்னு தோணுது. ஒரு­வேளை நானும் துள­சியை அந்­தக் குழந்­தை­கள் போகும் வகுப்­பு­களில் சேர்த்­து­விட்­டி­ருந்தா இந்­நே­ரம் அவ­ளும் அந்­தப் பிள்­ளை­க­ளைப்­போல சில படி­கள் மேலே இருந்­தி­ருப்­பா­ளோன்னு தோணுது."

"அது சரி, துளசி ஏழு வய­சுக்­குள்ள முனை­வர் பட்­டம் வாங்­கி­டு­வான்னு சொல்லு!"

"கிண்­டலா?"

"பின்ன என்ன பானு? ஒரு லிட்­டர் குடு­வை­யில ஒரு லிட்­டர் தண்­ணி­தான் ஊத்­த­மு­டி­யும். அதுக்கு மேல ஊத்­துனா நிரம்­பித்­தான் வழி­யும். பல வீடு­க­ளில குழந்­தை­க­ளுக்கு நடக்­குற கொடுமை இது. நம்ம குழந்தை அதோட இயல்­பி­ல­தான் வள­ரும். இதில எந்த மாற்­ற­மும் கிடை­யாது."

"இப்போ என்­ன­தான் பண்­ண­ணும்னு சொல்­றீங்க?"

"அவளை நீச்­சல், யோகா, பூப்­பந்து அப்­ப­டின்னு விளை­யாட்­டு­க­ளுக்கு அனுப்­ப­லாம்; அது­வும் அவ­ளு­டைய தின­சரி வேலை­க­ளுக்­குப் போக மீதி நேர­மி­ருந்­தால் அனுப்­ப­லாம். எந்­தக் கார­ணத்­தைக் கொண்­டும் அவ­மேல எதை­யும் திணிக்­கக்­கூ­டாது. அவளே விருப்­பப்­பட்­டுக் கேட்டா செய்­ய­லாம். ஆனால் எப்­ப­வும் யாரை­யும் கட்­டா­யப்­ப­டுத்­தக் கூடாது."

இந்­தப் பதி­லில் பானு­வுக்­குப் பெரி­தா­கத் திருப்­தி­யில்லை.

"ராத்­தி­ரிக்கு தோசை சுட்­டுச் சட்னி அரைச்­சுத் தரவா?" எனப் பேச்­சைத் திசை மாற்­றி­னாள்.

புரிந்­து­கொண்ட பகீ­ர­தன், "அதெல்­லாம் ஒண்­ணும் வேணாம். நீ சோகமா இருக்­கும்­போது சமைச்சா, சமை­யல் சுமா­ராத்­தான் இருக்­கும். தேக்­கா­வுக்­குப் போய்ச் சாப்­பிட்டு வர­லாம். நாளைக்கு விடு­மு­றை­தானே! கொஞ்­சம் பொறு­மை­யாவே வர­லாம்," என்­றான்.

"தேக்­கான்­ன­தும்­தான் ஞாப­கம் வருது. கறி­காய் எல்­லாம் முடிஞ்­சி­டிச்சி. இந்த வாரத்­துக்­குத் தேவை­யா­ன­தெல்­லாம் வாங்­கிட்டு வர­ணும்ங்க," என்­றாள்.

"சரி நீ போய் துள­சி­யைப் பள்­ளிக்­கூ­டத்­தி­லி­ருந்து அழைச்­சிட்டு வந்­திடு, நான் குளிச்­சிட்­டுக் கிளம்பி இருக்­கேன். நீங்க ரெண்­டு­பே­ரும் வந்­த­தும் கிளம்­பி­டு­வோம்," எனக் கூறி­ய­ப­டியே குளி­ய­ல­றையை நோக்கி நடந்­தான் பகீ­ர­தன்.

துள­சி­யின் பள்ளி நோக்கி தளர்­வாக நடந்­தாள் பானு.

பள்­ளி­யின் அருகே போடப்­பட்­டி­ருந்த நாற்­கா­லி­களில் ஒன்­றைப் பிடித்து வச­தி­யாக உட்­கார்ந்­தி­ருந்த நந்­தினி, காதில் கைப்­பே­சியை வைத்­த­வாறே 'அவ­ளைப் போன்ற' யாரோ ஒரு பெற்­றோ­ரு­டன் பேசிக்­கொண்­டி­ருந்­தாள்.

"ம்ம்.. ஆமாம். இன்­னும் நாலு நாள்­தான் இருக்கு. கையும் ஓடலை. காலும் ஓடலை. உங்க பொண்ணு எப்­ப­டிப் பண்றா?"

அடுத்த முனை­யில் வந்த பதி­லுக்கு பதில் சொல்­வ­தற்­குள் பள்ளி மணி அடித்­து­விட,

"சரி வைக்­க­றேன். பள்ளி முடிஞ்­சி­டுச்சு. அவளை அழைச்­சிக்­கிட்டு கொஞ்­சமா எதா­வது சாப்­பி­டக் குடுத்து நீச்­சல் அனுப்­பிட்டு, அப்­பு­றம் துணைப்­பாட வகுப்­புக்­குக் கூட்­டிட்­டுப் போக­ணும். இன்­னைக்கு அவள் ராத்­திரி தூங்­கப்­போக எப்­ப­டி­யும் 11 மணி­யாய்­டும். நான் அப்­பு­றம் பேச­றேன்," எனத் தொடர்­பைத் துண்­டித்­தாள்.

கேட்­டுக்­கொண்­டி­ருந்த பானு­வுக்­குப் பழை­ய­படி தலை சுற்­றி­யது.

பள்­ளி­யி­லி­ருந்து வெளியே வந்த இன்பா சொல்­லிக்­கொ­டுத்­த­து­போல் எல்­லா­வற்­றை­யும் ஒப்­பிக்க ஆரம்­பித்­தாள். "இன்­னைக்கு ஆங்­கி­லம் 'சொல்­வது எழு­து­த­லில்' நான் அஞ்­சுக்கு அஞ்சு வாங்­கிட்­டேன் மா!"

"கணக்­குப் பாடத்­தில சின்ன எண்­ணி­லி­ருந்து பெரிய எண் வரைக்­கும் வரி­சைப்­ப­டுத்­தச் சொன்­னாங்க. நான் சீக்­கி­ரமே முடிச்­சிட்­டேன். முடிச்ச பிறகு என்ன செய்­ய­ற­துன்னு தெரி­ய­லைமா. அத­னால நான் போட்­டிக்­குப் பயிற்சி பண்­ணிட்டு இருந்­தேன்மா," மிகுந்த சோர்­வு­டன் இருந்­தாள் இன்பா!

"அப்­ப­டியா சரி, நல்­லது," என்று கூறி­ய­ப­டியே கைபே­சி­யில் ஏதோ ஒரு பாடத்தை ஒலிக்­க­விட்­டாள்.

"அப்பா இப்­போ­தான் இந்­தப் பாடத்தை அனுப்­பி­னாங்க. இதைக் கேட்­டுட்டே சாப்­பிடு இன்பா." சாப்­பிட்டு முடிச்­ச­தும் நீ கத்­துக்­கிட்­டதை அம்­மா­கிட்­டச் சொல்­ல­ணும் சரியா?" என்­றாள் நந்­தினி.

இன்பா சாவி கொடுத்த பொம்­மை­போல உணவை மென்­று­கொண்டே அந்­தப் பாடத்­தைக் கேட்­டுப் பயிற்சி செய்­து­கொண்­டி­ருந்­தாள்.

பானு­வைப் பார்த்­த­படி ஓடி­வந்த துளசி அவ­ளைப் பார்த்து, "அம்மா டீச்­சர் குடுத்த வேலை எல்­லாம் முடிச்­சிட்­டேன். டீச்­சர் எனக்கு ஸ்டிக்­கர் குடுத்­தாங்க," எனப் பெருமை பொங்­கக் கூறி­னாள்.

"அப்­ப­டியா? சமர்த்து!" எனக்­கூ­றி­ய­படி அவ­ளுக்கு முத்­த­மிட்­டாள்.

"அம்மா சாமிக்கு எத்­தனை வயசு?" எனக் கேட்­டாள்.

"உனக்கு எத்­தனை வயசோ அது­தான் சாமி­யோட வயசு!" சமா­ளிப்­ப­தற்­காக, தோன்­றிய பதி­லைச் சொன்­னாள் பானு.

"அப்போ உங்­களை எல்­லாம் யார் படைச்­சது?" என அடுத்த குண்­டைத் தூக்­கிப் போட்­டாள்.

"எங்­க­ளோட அப்பா அம்மா!"

"அப்போ அவங்­க­ளை­யெல்­லாம்?"

"அவங்­க­ளோட அப்பா அம்மா"

"அப்போ சாமி என்னை மாதிரி ரொம்­பச் சின்­னப் பிள்­ளையா?"

பதில் சொல்ல முடி­யா­மல் மௌன­மாய்ச் சிரிக்க, அவ­ளின் மௌனத்­தைக் கலைக்க அடுத்த கேள்­விக்­க­ணை­யி­னைத் தொடுத்­தாள்.

"நாம கோவில்ல பாத்­தோமே, ஒரு சாமி, புட­வை­கூட கட்­டி­யி­ருந்­தாங்­களே, அந்த சாமிக்கு எத்­தனை வயசு?"

"இப்போ எதுக்­கும்மா இந்த ஆராய்ச்சி எல்­லாம்?"

"சாமி­தான் எல்­லா­ரை­யும் உரு­வாக்­கி­னாங்க அப்­ப­டீன்னு சஞ்­சனா சொன்னா. அதான் சாமிக்கு எவ்­வ­ளவு வய­சி­ருக்­கும் அப்­ப­டீன்னு நாங்க ரெண்டு பேரும் பேசிட்­டி­ருந்­தோம். மணி­ய­டிச்­சிட்­டாங்­களா, அதான் உங்க கிட்ட கேட்­டேன் அம்மா."

"எத்­தனை பெரிய கேள்­வி­யைக் கேட்­டி­ருக்­கிறது இந்­தப் பிஞ்சு!" மன­சுக்­குள் மகிழ்ந்­த­வ­ளாக அவள் பையை வாங்­கிக்­கொண்டு அரு­கில் இருந்த விளை­யாட்டு மைதா­னத்­தில் சிறிது நேரம் விளை­யாட வைத்­தாள். துளசி விளை­யா­டு­வ­தைப் பார்த்த இன்பா, "அம்மா நானும் கொஞ்ச நேரம் விளை­யாண்­டுட்டு வர்­றேன்மா?" எனக் கேட்க, "இல்லை இன்பா, நீச்­சல் போய்ட்டு கணக்கு துணைப்­பாட வகுப்பு போக­ணும். நேர­மில்லை கிளம்­ப­லாம்; அந்த வகுப்­பெல்­லாம் முடிச்­சிட்டு வீட்­டுக்­குப் போய் ஆங்­கி­லத்­தி­லும் கணக்­கு­ல­யும் ரெண்டு வினாத்­தாள் வேற செய்­ய­ணும். அப்­பு­றம் கணக்­குப் போட்­டிக்கு இன்­னொரு தடவை பயிற்சி பண்­ண­ணும்; நீ முதல் பரிசு வாங்­க­ணுமா இல்­லையா?"

"ம்ம்ம்... ம்ம்ம்.." என்று கூறி­ய­வாறே ஏக்­கத்­தோடு துள­சி­யைப் பார்த்­துக்­கொண்டே கையாட்­டி­ய­படி சென்­றாள் இன்பா.

"இன்பா, நாளைக்­குப் பாக்­க­லாம், பை!" துளசி.

பானு­வின் மனம் கல்­லெ­றிந்த குட்டை போல் மீண்­டும் குழம்­பி­யது.

"சரி துளசி கிளம்­ப­லாமா? தேக்கா போக­ணும்."

உல­கில் உள்ள எல்­லாக் குழந்­தை­களும் விளை­யாட்டு மைதா­னத்­தை­விட்டு வரு­வ­தற்கு முன் பொது­வா­கச் சொல்­லும் வார்த்­தை­யான, "இன்­னும் அஞ்சு நிமி­ஷம்," எனக் கூறி­விட்டு 'ஷான்' உடன் விளை­யாட எத்­த­னித்­தாள்.

"கிளம்­ப­லாம் துளசி. அப்பா காத்­திட்டு இருக்­காங்க!"

'அப்பா' என்ற சொல் மகள்­களுக்கு மட்­டும் மிகப்­பெ­ரிய மந்­தி­ரச் சாவி. 'ஷானுக்­குக்' கையாட்­டி­விட்­டுத் துள்­ளிக் குதித்து ஓடி வந்­தாள் துளசி.

வீட்­டுக்­குச் சென்று குளித்­து­விட்டு அப்­பா­வும் மகளும் சிறிது நேரம் கொஞ்சி முடித்­துக் கதை பேசி­விட்­டுத் தேக்­கா­விற்­குக் கிளம்­பி­னார்­கள்.

வாய் ஓயா­மல் பேசிக்­கொண்டே வந்­தாள்; கேட்­டுக்­கொண்டே பெரு­மி­தத்­து­டன் நடந்­தான் பகீ­ர­தன்.

"அப்பா எனக்கு 'கோன்' தோசை வேணும்."

'கோன்' தோசை வந்­தது.

"அப்பா மலை மாதிரி இருக்கு பாருங்­க­ளேன்."

"ம்ம்ம் ஆமாண்டா, மலை மாதிரி­தான் இருக்கு"

"மலையை யார் செஞ்­சாங்க?"

"நீ இப்­ப­டி­யெல்­லாம் கேட்டா நான் பதி­லுக்கு எங்கே போவேன் துளசி?" சிரித்­தான் பகீ­ர­தன்.

சாப்­பிட்டு முடித்­த­தும் மளிகைக்கடையை நோக்கி, நடந்து செல்­லும்­போது, "துளசி, நீச்­சல், பூப்­பந்து இந்த மாதிரி ஏதா­வது விளை­யாட்­டு­களில் உன்­னைச் சேர்த்­து­வி­ட­லாம்னு அப்பா சொல்­றாங்க. உனக்கு என்ன விளை­யாட்டு பிடிக்­கும்?" எனக்­ கேட்­டாள் பானு. அதற்­குப் பதில் சொல்­லாத துளசி, "அப்பா என்­னைத் தூக்­குங்­கப்பா," என்­றாள்.

அவ­ளைத் தூக்­கித் தோளில் வைத்­துக்­கொண்ட பகீ­ர­த­னி­டம், "எனக்கு இந்த விளை­யாட்­டு­தான் பிடிக்­கும் என்­ற­வாறே அவன் கழுத்­துப் பக்­கம் இருந்த முடி­யைப் பிடித்­துக்­கொண்டு நாக்கை மடித்தி மேல் அண்­ணத்­தைத் தொட்டு, 'டொக் டொக்' எனக் குதிரை ஒலி எழுப்­பு­வது போல் ஒலி­யெ­ழுப்­பி­னாள்.

மளிகைக்கடையில் வார இறு­திக்­கான கூட்­டம் களை­கட்­டத் தொடங்­கி­யி­ருந்­தது.

கடை­யில் காய்­க­றி­களை வாங்­கிய பானு தேவை­யான பழங்­களை ஒவ்­வொன்­றாக எடுத்­துக் கூடை­யில் வைத்­தாள். மாம்­ப­ழங்­க­ளைப் பார்த்­த­தும் அப்­பா­வும் பெண்­ணும் ரக­சி­ய­மா­கச் சிரித்­துக்­கொண்­டார்­கள்.

அப்பா '2' என விரல் காட்ட மகளோ '6' என விரல் காட்ட, இரு­வ­ரும் ஒரு முடி­வுக்கு வந்­த­வர்­கள் போல நெகி­ழிப் பையில் ஆறு மாம்­ப­ழங்­களை அடுக்­கத் தொடங்­கி­னார்­கள்.

"ஆரம்­பிச்­சிட்­டீங்­களா ரெண்டு பேரும்?"

"ஆரஞ்சு நிறத்­தில் உள்ள மாம்­ப­ழம் ருசியா இருக்­கும்னு சொல்­லு­வியே பானு. பாரு, இந்­தப் பழ­மெல்­லாம் ஆரஞ்சு நிறத்­தில் இருக்கு. உனக்கு மாம்­ப­ழம் பிடிக்­கும்­தானே. அதான் நிறைய வாங்­கிட்டு இருக்­கோம்," எனச்­ சொல்­லி­ய­வாறே துள­சி­யைப் பார்த்­துக் கண் சிமிட்­டி­னான். துளசி குறும்­பாய்ச் சிரித்­தாள்.

"மாம்­ப­ழம் சீசன் முடிஞ்சு ஒரு மாசம் ஆகுது! சீசன் முடிஞ்சு வர்ற பழங்­கள் அவ்­வ­ளவு ருசியா இருக்­காது."

"ஆனா இதெல்­லாம் நல்­லாப் பழுத்­துத்­தானே இருக்கு? நல்­லாத்­தான் இருக்­கும்!" எனப் பழங்­களை எடுத்­துக்­கொண்டே எதிர்­வா­தம் செய்­தான் பகீ­ர­தன்.

"வெளியே பார்க்­கப் பழம் நல்­லாத்­தான் இருக்கு. இந்த நிறம் வர்றதுக்­காக மாங்­கா­ய புகை­போட்­டுப் பழுக்க வச்­சி­ருக்­காங்க. வெட்­டிச் சாப்­பிட்­டுப் பாத்­தீங்­கன்னா கன்­னிப்­போன பழங்­க­ளோட ருசி­தான் இருக்­கும்."

"இப்போ என்ன சொல்ல வர்றே? வாங்­க­லாமா வேணாமா?"

"பழம் கனிய அதுக்­குப் போது­மான காலம் இருந்­தாத்­தான் அந்த பழம் சுவையா இருக்­கும். தானாக் கனிஞ்ச பழங்­களில் உள்ள ருசி, இந்த மாதிரி அவ­சர அவ­ச­ர­மாப் பழுக்­க­வச்ச பழங்­களில் இருக்­காது. அத­னால இந்த மாம்­ப­ழம் வேணாம்."

"ஒரு பழம் கனி­யவே பல நாட்­கள் தேவைப்­ப­டுதே, இந்­தப் பிள்­ளைக் கனி­கள் கனிய கால அவ­கா­சம் வேண்­டாமா பானு?"

காந்­தா­ரி­யின் கண்­களில் கட்­டப்­பட்ட துணி விலகி மீண்­டும் உல­கைக் கண்­ட­து­போல் உணர்ந்­தாள் பானு!