மெர்லயன் தீவு

மெர்லயன் தீவு

10 mins read

சிறுகதை

ஹேமலதா

புத்­தாண்டு நாளில் தொடங்­கிய மழை அடுத்து வந்த நாட்­க­ளி­லும் விடா­மல் தொடர்ந்த போதுதான் நான்கு பக்­க­மும் சூழ்ந்­திருந்த ஆழ்­நீலக் கடல் கொஞ்­சம் கொஞ்­ச­மாக தன் இருப்­பி­டம் விட்டு தீவிற்­குள் நுழை­யத் துவங்­கி­யது.

பற­வைப் பார்­வை­யில் யாரோ ஒரு­வர் இணை­யத்­தில் பதி­வேற்­றி­யி­ருந்த சிங்­கப்­பூ­ரின் படத்­தில், பச்சை மரங்­களும் கான்க்­ரீட் கட்­ட­டங்­களும் முளைத்த நிலத்­தின் கரை தொட்டு அது­வரை தளும்­பி­ய­ப­டி­யி­ருந்த கடல்தான் அது.

அப்­ப­டத்­தில்கூட அது ஊருக்­குள் நுழைய பரபரத்­துக் காத்­தி­ருந்­தது போலவே காட்­சி­ய­ளித்­த­தாய்தான் அவ­னுக்­குத் தோன்­றி­யது.

அந்­தச் சம­யம் நூல­கத்­தி­ல் இருந்து எடுத்து வந்­தி­ருந்த புத்­த­கத்­தில் இச்­ச­கத்­தைச் சீர­ழிக்­கும் மானு­டர்­க­ளைப் பற்­றிப் படித்­துக்கொண்­டி­ருந்­தான்.

பூமி வெப்­ப­ம­ய­மா­வ­தைப் பற்­றிய கவலை அவ­னைப் பற்­றிக்கொண்ட சம­யம் அது.

எங்கோ அண்­டார்­டிக்­கா­வி­ல் இ­ருந்து மிதந்து வந்த வெண்­பன்­றிக்­குட்­டி­களை ஒத்த பனிக்­கட்­டி­கள் கரைந்து கடல்­மட்­டம் ஏறு­வ­தைக் கற்­ப­னை­யில் அவன் பார்க்­கத் தொடங்கியிருந்தான்.

இதை யீஷு­னில் ஒரு கோப்­பிக்­க­டை­யில் போதை­யின் லேசான பிடி­யில் இருந்தபோது பர­ணி­யி­டம் சொன்­னான்.

இவனைவிட அதி­போ­தை­யி­ல் இருந்த அவன் சத்­த­மா­கச் சிரித்து­விட்டு, நீ குடி­யி­ருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு கட­லுக்கு மேல கட்­டி­னது தாண்டா என்­றான். அப்­போ­தி­லி­ருந்து அலை­யின் மேல் ஒரு கப்­பல் போல தன் புளோக் மிதப்­ப­தான மனப்­ப­டம் அவ­னுள் உரு­வா­கத் துவங்­கி­யி­ருந்­தது.

கட­லின் பெரிய அலை­க­ளை­யெல்­லாம் தனது செம்­பவாங் வட்­டார புளோக் தனக்­குக் கீழ் புதைத்­துக்கொண்டு நீர்ச் சிலும்­பல்­க­ளைக் கட­லுக்­குள் விட்­டு­விட்­ட­தாக அவன் நினைத்­தான்.

அவன் குடித்த மட்­ட­ரக மது­பானம் அவ­னைக் கீழே ­சாய்த்த போதெல்­லாம், கடல்நீர் புளோக்­கு­களின் அடித்­த­ளத்தை அரித்­துத் தாங்­கள் முன்­பி­ருந்த இடத்தை மீட்­கச்செய்த முயற்­சி­யில் புளோக் தள்­ளா­டு­வ­தாய் அவ­னுக்­குத் தோன்­றி­யது. 

மெல்ல மெல்­லக் கடல் மட்­டம் உயர்ந்த நாட்­களில் பூமி­வா­சி­கள் யாரும் தேவை­யான அள­விற்­குக் கவ­லைப்­பட்­ட­தா­கத் தெரி­ய­வில்லை.

ஒவ்­வொ­ரு­வ­ரும் பிற­ரைக் கார­ணம் காட்டி தப்­பித்­துத் தனது தனிப்­பட்ட உல­கிற்­குள் பதுங்­கிக் கொள்­ளவே முயன்­றார்­கள்.

இது அவ­னுக்­குள் மேலும் பயத்தை உண்­டாக்­கி­யது.

உல­கில் எல்­லோ­ருக்­கும் ஏற்­படும் ஒன்று தனக்­கும் ஏற்­ப­டு­கி­ற­தென்­றால் பயம் தோன்­று­வ­தில்லை போல.

வேறு யாரா­வது அதி­கம் கவ­லைப்­பட்டு அந்­தத் துன்­பத்­தைத் தீர்த்­து­வி­டு­வார்­கள் என்றே அனை­வ­ரும் பொறுப்­பின்றி இருப்பதாக அவன் நினைத்­தான்.

அவ­னது அச்­சத்தை மெய்ப்­பித்துத் தண்­ணீர் தெரு­விற்­குள் நுழைந்த நாளன்று நக­ரத்­தில் பர­பரப்பு உண்­டா­னது. 

*

தண்­ணீர் உள்­நு­ழைந்த  மரினா பே உள்­ளிட்ட ஸ்கை­லைன் பகு­தி­களைத் தொலைக்­காட்­சி­யில் திருப்­பித் திருப்­பிக் காட்­டிக் கொண்­டி­ருந்­தார்­கள்.

செய்தித்தாள்களில் கரை தாண்­டிய கடல் தலைப்­புச் செய்­தி­யாக நுழைந்­தி­ருந்­தது.

பள்­ளிக்­கூ­டங்­க­ளுக்கு அவ­சர விடு­மு­றை அறி­விக்கப்பட்டது. மாண­வர்­கள் இணைய வகுப்­பில் இணை­யும்­படி கேட்­டுக் கொள்ளப்பட்டனர்.

பணி­யி­டங்­கள் அன்று வழக்­கம் போல இயங்­கின. நக­ரெங்­கும் நீர்­மட்­டம் உயர்ந்­த­தைப் பற்­றியே பேச்­சாக இருந்­தது.

எண்­ணூறு வரு­டங்­க­ளுக்கு முன்­னர் சங் நீல உத்­தமா இங்கு வரு­வ­தற்கு முன்­பாக இப்­படி ஒரு­முறை ஆன­தா­க­வும் அப்­போது இந்­தத் தீவு அழிந்துபோன­தா­லேயே அகழ்­வா­ராய்ச்­சி­யில் அந்த நூற்­றாண்­டு­க­ளைப் பற்­றிய  சான்று­கள் அதி­கம் கிடைக்­க­வில்லை என்று வர­லாற்­றுக் குறிப்­பு­கள் தெரி­விப்­ப­தா­க­வும் அது போன்­ற­தொரு அழிவை நோக்கி தீவு இப்­போது சென்று கொண்­டி­ருப்­ப­தா­க­வும் வாட்­சப் செய்­தி­கள் பர­வின.

அவற்றை நம்பவேண்­டாம் என்று வதந்­தி பரப்­பு­ப­வர்­க­ள் எச்சரிக்கப்பட்டனர். இவன் வாட்­சப் குழுக்­கள் அனைத்­தி­லி­ருந்­தும் வெளி­யே­றி­னான். இவன் சில நாட்­க­ளுக்கு முன்பு பார்த்த வேலையை விட்டுவிட்டு தற்­போது வேறு­வேலை தேடிக்கொண்­டி­ருந்­தான்.

அத­னால், தனது ஐந்­தாம் மாடி வீட்­டின் சமை­ய­ல­றைச் சன்­னல் வழி­யா­கக் கொஞ்­சம் கொஞ்­ச­மாய் ஏறிக்­கொண்­டி­ருந்த கட­லின் மட்­டத்தை அளப்­பதே இவ­னு­டைய முழு­நாள் பணி­யா­னது.

வீடு கட­லுக்­குள் மூழ்­கி­விட்­டால் அதற்குப் பதிலாக வேறு வீடு கொடுக்கப்படுமா என்ற கேள்வி இவ­னுக்­குள் எழுந்­தது. 

துரித நட­வ­டிக்­கை­கள் முடுக்கிவிடப்பட்டன. அடுத்த ஒரு வாரத்­தில் நக­ரைச் சுற்றி கடல் நீர் அரிக்க முடியா கற்­க­ளைக் கொண்டு பத்­தடி உய­ரத் தடுப்­புச் சுவர் ஒன்று எழுந்­தது.

தரைத் தளத்­தி­லி­ருந்த மக்­களை வேறு இடங்­க­ளுக்கு அப்­பு­றப்­ப­டுத்­தும் முடிவு எடுக்­கப்­பட்ட நாளின் நள்­ளி­ர­வில் கடல்­நீர் தடுப்­புச் சுவ­ரின் மீதேறி முதற்­தள வீடு­க­ளுக்­குள்  நுழைந்­தது. அன்று விடி­ய­லில் தீவு முழு­வ­தும் அபா­யச் சங்கு ஒலித்­தது.

தரைத்­த­ளத்­தில் வசிப்­ப­வர்­கள் பாது­காப்­பான இடங்­க­ளுக்­குச் செல்­லும்­படி கேட்­டுக் கொள்ளப்பட்டனர். அன்று யாரும் பணிக்­குச் செல்­ல­வில்லை.

முதல் தள வீடு­க­ளின் படுக்­கை­கள், மரச்­சா­மான்­கள் இவை­யெல்­லாம் வெளி­யேறி மிதக்­கத் துவங்­கின. இரண்­டாம் மாடிக்கு மேலி­ருந்­த­வர்­கள் அதற்­கும் தனக்­கும் சம்­பந்­த­மில்லை என்­பது போல தங்­கள் வேலை­க­ளைத் தொடர்ந்­தார்­கள். சிலர் மிதந்து சென்ற பொருட்­க­ளைக் கொக்கி போட்டு தன் வீட்­டிற்­குள் இழுத்து வைத்­துக் கொண்­டார்­கள்.

விரை­வில் தங்­கள் மாடி மூழ்­க­வி­ருக்­கும் சாத்­தி­யத்தை அவர்­கள் உணர்ந்­த­தா­கத் தெரி­ய­வில்லை. 

ஊருக்­குள் நுழைந்­து­விட்­டி­ருந்த கடல் நீரை அப்­பு­றப்­ப­டுத்­தும் யோச­னை­கள் வர­வேற்­கப்­பட்­டன.

சிறந்த யோச­னைக்கு பரிசுத்தொகை அறி­விக்­கப்­பட்­டது.

அவன் ஒரு நோட்டுப் புத்­த­கத்தை எடுத்து தனக்­குத் தோன்­றிய யோச­னை­களை எண்­வ­ரி­சை­யிட்டு எழு­தத் துவங்­கி­னான்.

வரு­டா­வ­ரு­டம் காட்­டை­யெ­ரித்து புகை­யைத் தங்­கள் பக்­கம் திருப்­பும் நாடு­க­ளின் திசை­யில் தண்­ணீரை மோட்­டார் வைத்து இறைத்து விடு­வது அதில் முத­லா­வ­தாக இருந்­தது.

முதல்தள வீடு­கள் முற்­றி­லும் மூழ்கி இரண்­டாம் தள வீடு­க­ளுக்­குள் நீர் புகுந்தபோதுதான் ஒரு பொது பயம் உண்­டா­கத் தொடங்­கி­யது.

மக்­கள் அது­வரை சேமித்த பணத்தை எப்­ப­டிப் பாது­காப்­பது என்று விவா­தித்­தார்­கள். தனது சேமிப்­பில் இருந்த முந்­நூற்று நாற்­பத்­தாறு வெள்­ளி­ப் பணம் பற்றி இவன் அதி­கம் கவலை கொள்­ள­வில்லை. அதை­விட அதி­க­மான பணமும் பொரு­ளும் வரும் நாட்­களில் உதவியாகக் கிடைக்கும் என்று அவன் அறிந்­தி­ருந்­தான்.

கடல் மெல்ல மெல்ல இவ­னது பாதம் நோக்கி உயர்ந்­த­படி இருந்­தது.  இவன் பதி­னோ­ரா­வது யோச­னையை எழு­திய நாளில் தான், மாறி­வ­ரும் சூழ­லுக்­கேற்ப மனி­த­உடல் தன்­னைத் தக­வ­மைத்­துக் கொண்ட அந்த  அதி­ச­யம் கவ­னிக்­கப்­பட்­டது.

*

தண்­ணீர் மட்­டம் உயர உயர அந்த நிலை­யில் வசித்த மக்­க­ளுக்­குச் சுவா­சிக்க ஏது­வாக காது­க­ளுக்கு அரு­கில் செவுள்­கள் முளைத்­தன.

கைகால்­கள் உதிர்ந்து அதற்­குப் பதி­லா­கத் துடுப்­பு­களும் வாலும் முளைத்­தன.

இந்த மாற்­றத்தை நீரில் வசித்­த­வர்­கள் சாதா­ர­ண­மாய் எடுத்­துக் கொண்­டார்­கள்.

தண்­ணீ­ரி­லி­ருந்த உயிர்க்காற்றை வாய்­வ­ழி­யாக உள்­ளி­ழுத்து செவுள் வழி­யாக வெளி­யேற்­றி­னார்­கள்.

அது­வரை நீச்­சல் கற்­ற­றி­யா­த­வர்­களும்கூட தன்­னி­யல்­பாய் நீந்­தத் துவங்­கி­னார்­கள்.

தமது வால்­களை நீந்­து­வ­தற்­கேற்­றார்ப்போல அழ­கா­கச் சீவி விட்­டுக்கொண்­டார்­கள். அவர்­கள் அனை­வ­ரும் தங்­க­ளுக்கு ஏற்­பட்ட புதிய மாற்­றங்­களை ரசித்­த­தா­கவே தோன்­றி­யது. 

கடல் விடு­வி­டு­வென உயர்ந்து நான்­காம் மாடி மூழ்­கிய தினத்­தன்று இவ­னது பொதுத் தாழ்­வா­ரத்­தி­லி­ருந்து கால் நீட்­டி­னால் தொட்­டு­வி­டும் தூரத்­தில் நீர் இருந்­தது.

அதைத் தொட்டால் தானும் மெர்­ல­ய­னைப் போல மாறி­வி­டு­வோம்  என்ற அச்­சத்­தில் அவன் வீட்­டிற்கு வெளியே கால்­வைக்­க­வில்லை.

அன்­றி­ரவு தூங்­கி­யெ­ழுந்­தால் தனக்­குத் துடுப்பு முளைத்­தி­ருக்­கும் என்று அவன் நம்­பி­னான்.

தனது உடற்­பா­கங்­களை ரசிக்­கக் கிடைத்த இறுதி தினத்­தைத் தவ­ற­விட மன­மின்றி அன்று முழு­வ­தும் கண்­ணாடி முன் நின்­றி­ருந்­தான்.

கைக­ளி­னோ­ரம் ஏதா­வது புதிய வளர்ச்சி தட்­டுப்­ப­டு­கி­றதா என்று தட­விப் பார்த்­த­ப­டி­யி­ருந்­தான்.

முன்­தி­னம் இணை­யத்­தின் வழி தான் புதி­தாய் அறிந்துகொண்ட ஒரு விஷ­யத்தை யாரி­ட­மா­வது சொல்­லி­விட்­டால் எல்­லாம் சரி­யாகி இயல்புநிலை மீண்டுவிடும் என்று ஏனோ அவ­னுக்­குத் தோன்­றி­யது. 

யீஷூன் புளோக் 124ன் மூன்­றா­வது மாடி­யி­லி­ருந்த பர­ணி­யு­டன் தொலைபே­சி­யில் பேசுவதற்கு தொடர்ந்து முயன்­ற­படி இருந்­தான். ஆனால், தொடர்பு முற்­றி­லும் விடு­பட்­டுப் போயி­ருந்­தது.

கடல்நீர் நான்­காம் மாடிக்கு மேல் உயர பிர­யத்­த­னம் செய்­ய­வில்லை. மக்­கள் புதிய வாழ்க்­கைக்­குப் பழ­கத் துவங்­கி­யி­ருந்­தார்­கள்.

பேருந்து மற்­றும் விரைவு ரயில் செயல்­பா­டு­கள் நின்று போயி­ருந்­தன. போக்­கு­வ­ரத்­துக்­குப் படகு­களும் ஹெலி­காப்­டர்­களும் பயன்­ப­டுத்­தப்­பட்­டன.

பெரு­வ­ணி­கர்­கள் தமக்­கென தனி ஹெலிகாப்­டர்­க­ளைக் கொண்டு இணை­யத்­தில் தரு­வித்த பொருட்­க­ளைச் சங்­கி­லி­யில் கூடை கட்டி வீடு­க­ளுக்கு விநி­யோ­கித்­தார்­கள்.

சிறு வியா­பா­ரி­கள் பட­கின் மூலம் தங்­கள் பரி­வர்த்­த­னை­களைத் தொடர்ந்­தார்­கள். கட­லுக்கு மேலி­ருந்த தளங்­கள் கம்­பி­யில்லா மின்­சா­ரத்­தைப் பயன்­ப­டுத்­திக் கொண்­டன.

கீழி­ருந்­த­வர்­க­ளுக்கு மின்­சா­ரம் இருக்­க­வில்லை. அவர்­கள் அதைப் பொருட்­ப­டுத்­தி­ய­தா­க­வும் தெரி­ய­வில்லை.

ஆர்­வ­மி­கு­தி­யால் யாரும் கட­லுக்­குள் குதித்து  உரு­மாற்­றம் கொண்டு விடா­மல் இருக்க, மேலி­ருப்­ப­வர்­க­ளுக்­குத் தண்­ணீ­ருக்­குள் குதிக்­கத் தடை விதிக்­கப்­பட்­டது.

சீனர்­கள், இந்­தி­யர்­கள், மலாய்­கா­ரர்­கள், வெளி­நாட்­டி­னர், குடி­மக்­கள், இந்­தப் பிரி­வி­னை­யெல்­லாம் மறைந்து நாடு, கடல் மட்­டத்­திற்கு மேலி­ருப்­ப­வர்­கள், கீழி­ருப்­ப­வர்­கள் என்ற இரண்டு பிரி­வாய் ஆனது.

மேலி­ருப்­ப­வர்­கள் கீழி­ருப்­ப­வர்­களின் பிள்­ளை­க­ளு­டன் தங்­கள் பிள்­ளை­கள் பேசு­வ­தைத் தடுத்­தார்­கள். அவர்­க­ளு­டன் விளை­யா­டி­னால் தங்­கள் பிள்­ளை­க­ளுக்­கும் உருவ மாற்­றம் ஏற்­பட்­டு­வி­டும் என்று பயந்­தார்­கள். 

குறிப்­பிட்ட அள­வுக்­கான அத்­தி­யா­வ­சி­ய நிவாரணப் பொருட்­களை இவ­னது வீட்­டிற்கு ஹெலி­காப்­ட­ரின் மூலம் விநி­யோ­கிக்கப்பட்டது.

தண்­ணீ­ரைத் தீவிற்­குள்­ளி­ருந்து வெளி­யேற்ற உத­வும் எழு­பத்­தெட்­டா­வது யோச­னையை அவன் எழு­தத் தொடங்­கிய நாளில் உப்­பு­நீ­ரால் முழு­தும் அரிக்­கப்­பட்ட கட்­டி­டங்­க­ளின் அடித்­த­ளங்­கள் பூமி­யி­ருந்து தம்மை விடு­வித்­துக்கொண்­டன.

புவி­யீர்ப்பு விசை எவ்­வி­தத்­திலோ சமன்­பட்டு புளோக்­கு­கள் மிதக்­கத் துவங்­கின. புளோக்­கு­கள் நீரோட்­டம் சென்ற திசை­யில் நகர்ந்­தன. 

ஊரைச் சுற்றி எழுப்­பப்­பட்­டி­ருந்த சுவர் இருந்­த­தால் அவை கட­லுக்­குள் செல்­ல­வில்லை. அவற்­றின்  ஒன்­றை­யொன்று முட்­டிக் கொள்­ளா­மல் இருப்பதற்கு அவ­ச­ரக்­கால உள்­ளூர் கடற்­போக்­கு­வ­ரத்­துக் காவல்­து­றை­யொன்று உரு­வா­னது.

சிவப்­புச் சீரு­டை­ய­ணிந்த அதன் பணி­யா­ளர்­கள் பட­கு­களில் தீவை வலம் வந்­தார்­கள்.

முட்­டிக்கொண்ட புளோக்­கு­களை பளு­தூக்­கி­கள் உத­வி­யுடன் இரும்­புத் தூண்­க­ளைக் கொண்டு நகர்த்தி விட்­டார்­கள்.

கீழி­ருப்­ப­வர்­கள் மீன்­க­ளைப் போல அனைத்துத் திசை­க­ளி­லும் நீந்திவர, மேலி­ருந்­த­வர்­க­ளால் நீரோட்­டத்­தின் திசை­யில் மட்­டுமே செல்ல முடிந்­தது. 

சட்­டம் போடப்­பட்­ட­தா­லேயே ஆர்­வம் கொண்­டு­விட்ட  சிலர் ஓர் இர­வில் கடற்­கா­வ­லர்­கள் இல்­லாத பக்­க­மாய்ப் பார்த்து தண்­ணீ­ருக்­குள் குதித்­தார்­கள் அவர்­க­ளுக்­குச் செவுளோ, துடுப்போ முளைக்­க­வில்லை. அத­னைத் தொடர்ந்து நீச்­சல் அறிந்­த­வர்­கள் கட­லுக்­குள் செல்­லத் துவங்­கி­னார்­கள்.  சென்று வந்­த­வர்­கள் நீரின் கீழி­ருந்த தளங்­களை எட்­டிப் பார்த்துவிட்டு வந்து கதை கதை­யா­கச் சொன்­னார்­கள். 

அவர்­கள் வீடு­களில், அழ­கான சிப்பி அலங்­கார வேலைப்­பாடு செய்த பெரிய கடற்­பஞ்­சுப் படுக்­கை­யில் அவர்­கள் உறங்­கு­வ­தா­க­வும், அத­னால்தான் மிதந்து சென்ற பொருட்­க­ளைப் பற்றி கவ­லைப்­படவே இல்­லை­யென்­றும் அவர்­கள் சொன்­னார்­கள்.

கடல்­நா­கங்­கள் கக்­கிச்சென்ற மாணிக்­கக் கற்­கள் கடல் படுக்கை முழு­வ­தும் இறைந்து கிடந்­தும் அதன் மீது பற்று கொள்­ளாத அள­விற்கு அங்­கி­ருந்­த­வர்­கள் துறவு நிலையை எய்­து­விட்­டார்­கள் என்ற பேச்சு உல­வி­யது.

அங்­கி­ருந்த பிள்­ளை­கள் பவ­ளங்­க­ளை­யும் முத்­துக்­க­ளை­யும் வீசி­யெ­றிந்து விளை­யா­டு­வ­தா­க­வும் செய்­தி­கள் பர­வின.

செஜாரா மலா­யு­வின் ராஜா­சூரன் நீருக்­குள் மூழ்­கியபோது அங்­கி­ருந்த  உல­கம் இது­வாக இருக்­க­லாம் என்­றார்­கள்.

இப்­ப­டித்­தான் பல்­லா­யி­ரம் வரு­டங்­க­ளுக்கு ஒரு­முறை பூமி தன்னை சுருக்­கி­யும் விரித்­தும் அமைதிப்படுத்திக்கொள்­ளும் என்­றார்­கள்.

நீருக்­குப் பாவங்­க­ளைக் கரைக்­கும் தன்மை உண்டு என்ற செய்தி­கள் பரவ, கடல் நீரை அள்­ளித் தெளித்து தங்­க­ளைப் புனி­த­மாக்­கிக்கொள்ள முயன்­றார்­கள். 

நீர்மூழ்­கிச் சாதனங்­க­ளின் விலை வேக­மாக உயர்ந்­தது. நீருக்­குள் செல்ல விரும்­பு­ப­வர்­கள் முன்­ப­திவு செய்து காத்­தி­ருக்க வேண்­டும் என்ற புது விதி அம­லுக்கு வந்­தது.

நீச்­சல் தெரி­யா­த­வர்­க­ளுக்­கென்று சிறு நீர்­மூழ்­கிப் பட­கு­கள் அறி­மு­க­மா­யின. 

கட­லின் நீலம் கரைந்து நீருக்­க­டி­யில் இருந்­த­வர்­க­ளின் உட­லில் ஒரு மென்­நீ­லம் பர­வத் தொடங்­கி­யி­ருந்­தது.

சபை­யர் கற்­க­ளைப் போல மினுக்­கிய உட­லைப்பெற்ற அவர்­கள் அழ­கா­ன­வர்­க­ளா­கக் கரு­தப்­பட்­டார்­கள்.

செதில் முளைத்த பெண்­கள் கவர்ச்­சி­யா­ன­வர்­கள் என்ற கருத்து உரு­வா­னது.

மேலி­ருந்­த­வர்­கள் தங்­க­ளி­ட­மி­ருந்த பொருட்­க­ளை­யெல்­லாம் கொடுத்­தா­கி­னும் அவர்­க­ளுக்­கி­ருந்­த­தைப் போன்ற நீண்ட வால்­க­ளைப் பெற முயன்­றார்­கள்.

அவர்­க­ளால் போலி­யான வால்­களை வாங்கி ஒட்­டிக்கொள்ள மட்­டுமே முடிந்­தது. ஆண்­கள் இறால்­களைப் போல மீசை­களை வைத்­துக் கொள்ள விருப்­பப்­பட்­டார்­கள்.

இப்­போது மேல் மாடிகளில் இருப்பவர்கள் அனை­வ­ரும் கீழ் மாடிகளில் இ­ருப்­ப­வர்­க­ளு­டன் தொடர்­பி­லி­ருக்க பெரி­தும் ஆர்­வம் காட்­டி­னார்­கள்.

புளோக் 131ன் கீழ்த்தள வீடு ஒன்றில் குடியிருந்த ஒருவரின் மகன் என் மக­ளு­டன் கிண்­டர்­கார்­ட­னில் படித்­தான் என்­ப­தைப் பெரு­மை­யா­கச் சொன்­னார்­கள்.

தங்­கள் வீட்டை விலை அதி­கம் கொடுத்து வாங்­கி சிப்­பி­க­ளால் அலங்­க­ரித்­தார்­கள்.

*

இவன் தனது நண்­பன் பரணியை ஒரு­முறை பார்த்து தான் இணை­யத்­தில் கண்­ட­றிந்த அவ்­வி­ஷ­யத்­தைச் சொல்­லி­விட விரும்­பி­னான். அதற்கான அனுமதியையும் பெற்றுவிட்டான்.

*

காலைக் கதிரவனின் இளங் கதிர்­கள் நீரின் மேல்­மட்­டத்தை ஊடு­ரு­வி­ய­தில் கடல் தங்க நிறத்­தில் பர­வி­யி­ருந்­தது.

வெது­வெ­துப்­பா­யி­ருந்த நீருக்­குள் பாய்ந்தபொழு­தில் உடல் சற்று கிறு­கி­றுத்­தது.

கீழே செல்­லச்செல்ல ஒருவித போதை அவ­னுக்­குள் படர்ந்­தது.

அவ­னது உடல் மெல்ல அவ­னி­லி­ருந்து கழன்று ஆன்மா மட்­டும் நீந்­து­வ­தைப் போன்ற இல­கு­வான உணர்வு உண்­டா­னது.

உடல் அவன் கட்­டுப்­பாட்­டில் இ­ருந்து முழு­வ­தும் விலக, தென்­தி­சையை நோக்­கிச்சென்ற சிறு­மீன்­க­ளின் கூட்­டத்­து­டன் இயைந்து மிதந்­தான்.

விர­லெட்­டும் தொலை­வில் நீந்­திய அம்­மீன்­க­ளைப் பொரித்து உண்­ணும் உந்­து­தல் அவ­னுக்கு எழுந்­தது.

உடலை ரப்­பர் போல வளைத்து நீந்­திய ஆண்­களும் பெண்­களும் அவ­னின் இருப்பை மதிக்­காது கடந்­தார்­கள்.

பரணி இருந்த புளோக் 124-ஐத் தேடி­னான். அது மிதந்து நகர்ந்து கான்­பரா வட்­டா­ரத்­தின் புளோக் 123க்கு பக்­கத்­திற்­குச் சென்­றி­ருந்­தது. அது­வும் போதை­யில் இடம் புரி­யா­மல் தத்­த­ளிக்­கிறது என்று நினைத்­துக்கொண்­டான்.

இவன் காண்டோ பக்­க­மா­கச் சென்ற கால்­வா­யைத் தாண்­டும்போது தடு­மா­றி­ய­படி எதி­ரில் வந்­த­வன் இவனை இடித்­து­விட்டு முறைத்­தான்.

முறைத்­த­வ­னின் பக்­கம் திரும்­பிய இவன், "ப்ரோ பூமி­யைப் பத்­தி­ரமா பார்த்­துக்­கோங்க," என்­றான்.

பின்­னர், "ப்ரோ ஒன் மினிட், உங்­க­ளுக்கு ஒன்று தெரி­யுமா? நான் குடி­யி­ருக்கும் புளோக் கட­லுக்கு மேல இல்லை, பர­ணி­யைப் பார்த்து இதைச் சொல்லத்தான் போய்­க்கிட்­டி­ருக்­கேன்," என்­றான்.

அந்த நொடி சுற்­றி­லும் இ­ருந்த கடல் சிலீ­ரெ­னப் பாய்ந்து அவ­னது உட­லுக்­குள் புகுந்­தது.

முன்பு தென்திசை­யை நோக்கிச் சென்ற அதே மீன்­கள் இப்­போது இவ­னது மூளையை நோக்­கிப் பய­ணித்­தன.

அவற்­று­டன் நீந்தி எப்­ப­டி­யா­வது தனது வீட்­டிற்­குச் சென்­று­விட வேண்­டும் என்ற அவ­சர உந்­து­தல் அவ­னுக்கு முட்­டிக்கொண்டு வந்­தது. 

 *

(சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கம் 2021 முத்­த­மிழ் விழாவை ஒட்டி நடத்­திய பொதுப்­பி­ரிவு சிறு­க­தைப் போட்­டி­யில் முதல் பரிசு பெற்ற கதை)