இன்றைய விடியல் எப்போதும் போலில்லை. வானம் இன்னும் சிவந்தே இருக்கிறது. பூமொட்டுகள் விரிந்தபாடில்லை. வேண்டுமா வேண்டாமா என்று கதிரவன் மெல்ல வருகிறான்.
அந்த தெருவோர அரசு மருத்துவமனையில் எப்போதும் கூட்டம் இருக்காது. இன்றென்னவோ அப்படியொரு கூட்டம். ஆம்புலன்சுகள் வரிசையாக நேர்த்தியாக வடம் பிடித்ததுபோல் ஒன்றன் பின் ஒன்றாக நிற்கின்றன.
அவசர அவசரமாக இயங்கும் மருத்துவமனை ஊழியர்கள். மனித நேயத்தின் உச்சம். ஒரு நொடி கூட யாரும் தாமதிப்பதில்லை.
முதலில் நிற்கும் ஆம்புலன்ஸிலிருந்து ஒரு முதியவரை ஸ்ட்ரெச்சரில் வைத்து ஆஸ்பத்திரியின் உள்ளே ஓடுகிறார்கள். நேராக 'ஐசியு' நோக்கி பறக்கிறார்கள். 'ஐசியு'க்கு வெளியே நின்றுகொண்டிருக்கும் கண்ணன் 'யாரிவரென?' அருகில் நிற்கும் பெரியவரிடம் கேட்டார். பெரியவர், "இவரைத் தெரியாதா? இவர் பக்திப் பாட்டு பாடி பிரபலமானவர். இவர் பாடாத மேடைகளில்லை; ஊர்களில்லை," என்று மூச்சுவிடாமல் சொல்லி முடித்தார்.
இரண்டாவதாக நிற்கும் ஆம்புலன்ஸிலிருந்து ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க ஆடவரை அவசர அவசரமாக ஸ்ட்ரெச்சரில் கூட்டிச் சென்றார்கள். நேராக 'ஐசியு'க்கு சென்றது ஸ்ட்ரெச்சர். கண்ணன் இன்னும் 'ஐசியு'க்கு வெளியிலேயே நின்றுகொண்டிருந்தான். அதே பெரியவர் இன்னும் அருகிலேயே இருந்தார். 'யாரிவரென' கண்ணன் அந்தப் பெரியவரிடம் கேட்டார். "சார், என்னால இன்னும் நம்பமுடியல. இவர்தான் எல்லா கொரோனாவில் மறைந்தவர்களை தான் ஓட்டும் ஆம்புலன்சில் வைத்து மயானத்திற்கு எடுத்துச்செல்வார். இதுவரை ஒரு ஐநூறு பேரை எடுத்துச் சென்றிருப்பார். நேற்றுக்கூட இவரை இங்கு பார்த்தேன்," என தழுதழுத்த குரலோடு பெரியவர் சொன்னார்.
மூன்றாவது ஆம்புலன்ஸிலிருந்து காவி உடையணிந்த ஒருவரை 'ஐசியு'விற்கு ஸ்ட்ரெச்சரில் வைத்து கூட்டிச் சென்றனர். கண்ணன் அங்கேயே நின்றிருந்தார். பெரியவரும் அங்கேயேதான் இருந்தார். கண்ணனும் பெரியவரும் பேசவில்லை. இந்த சன்னியாசி தினந்தோறும் குறளை டிவியில் சொல்லிக்கொடுத்தவர் என்று இருவருக்கும் தெரியும்.
ஒரு மணிநேரத்திற்குப் பிறகு 'ஐசியு'விலிருந்து டாக்டர் ஒருவர் வெளியே வந்தார். கண்ணனுக்கு தாங்கமுடியவில்லை. வேகமாக டாக்டரிடம் சென்று "அந்த மூன்றுபேருக்கும் என்னாச்சு?" என்று கேட்டார்.
"என்ன சொல்லறது? கொரோனா அந்த மூன்று பேரையும் மூச்சுவிடமுடியாமல் செய்கிறது. அதிசயம் என்னன்னா அவர்கள் சாதாரணமாகவே இருக்கிறார்கள்.
"என்னைப் பொறுத்தவரை மூவரும் பிழைத்து விடுவார்கள். ஏதோ மூவரும் நல்லது செய்திருக்கிறார்கள். ஒன்றும் கவலைப்படவேண்டாம்," என்று கண்ணனிடம் டாக்டர் சொன்னார்.
பெருமூச்சு விட்டபடி கண்ணன் கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்தான்.
இரா சத்திக்கண்ணன்
- குட்டிக்கதை -

