வாழ்வதற்குத் தக்கபடி வருவா யில்லை
வருங்காலச் சிந்தனைகள் சிறிதும் இல்லை
சூழ்கடனைத் தீர்ப்பதற்கும் வழிகள் இல்லை
சுமை மாற்றிக் கொடுப்பதற்கும் ஆட்கள் இல்லை!
ஆழ்கடலில் பேரலைகள்; அமைதி யில்லை
ஆனாலும் உனக்கென்ன அதுவா தொல்லை!
பாழ்வயிறு பசித்தாலும் பரவா யில்லை!
பாவலனே நீபாடு கவிதை பாடு!
*
தாரமொடு பெற்றெடுத்த பிள்ளை ஐந்து
தப்பாமல் பாடுவதோ வண்ணச் சிந்து!
நேரமொடு கடனாற்றல் மற்றோர் பாடு!
நினக்கென்ன கவியெழுதக் கையில் ஏடு!
வார இதழ், நாளேடு கவிதை தாங்கும்!
வருமானம் சிறிதில்லை, பெருமை ஓங்கும்!
சாரமில்லை வாழ்க்கையிலே எனினும் சற்றும்
சளைக்காமல் நீபாடு, கவிதை பாடு!
*
புனையவொரு புத்தாடை இல்லை யென்றே
புலம்புகின்ற மனையாளைப் புறக்கணிப்பாய்!
புனைகின்ற கவிதைகளால் அடையும் கீர்த்தி
போதுமென்ற சிந்தனையால் தலை கனப்பாய்!
அணியில்லை என்பாளைத் தள்ளி வைப்பாய்!
அணியுண்டே என்பாட்டில் அதிகம் என்பாய்
பிணிகொண்ட வாழ்க்கையிலும் தனிமை தேடிப்
பிசகாமல் நீபாடு, கவிதை பாடு!
க.து.மு. இக்பால்

