அன்னையர் தினம்

1 mins read

நாற்பதாண்டுக்கு முன்

நடந்த ஒரு நிகழ்வு

நெஞ்சைவிட்டு

நகரமறுக்கும் நிகழ்வு

சுவர் ஒன்றெழுப்ப

வானம் வெட்டி

ஆறப்போட்டேன்

வாடிக்கை நாயொன்று

வானத்தில் இறங்கி

குட்டிகளை ஈன்றது

அன்று இரவு

இடியோடு அடமழை

இடிந்து விழுந்த மண்

வானத்தை மூடியது

அம்மவோ!

அந்தக் குட்டிகள்

தாயோடு சேர்ந்து

புதைந்திருக்குமோ?

நினைக்கும்போதே

என் படுக்கை

பற்றி எரிகிறது

பொழுது விடிந்தது

கொல்லைப்புறக் கொட்டகையில்

அந்த நாயின் குடும்பம்......

குட்டிகள் மடிசப்ப

சுகமான உறக்கத்தில்

தாய் நாய்

அந்தப் பள்ளத்திலிருந்து

அந்த அடமழையில்

கண்திறக்கா குட்டிகளை

கவ்வித் தூக்கிவந்து

காப்பாற்றியது

சத்தியமாக

சாத்தியமே இல்லை

நம்பமுடியாத அதிசயம்

நடத்தியிருக்கிறது

'தாய்மை' என்கிற

மாபெரும் சக்தி

அச்சாகத் தாய்மை

சுழல்கிறது பூமி.

அத்தனை உயிர்களுக்கும்

அன்னையர் தின வாழ்த்துகள்

அமீதாம்மாள்