சிறுகதை
மணிமாலா மதியழகன்
"ராசண்ணா.... நல்லாயிருக்கீங்களா? பாத்து எத்தன வருசமாச்சி? எந்த கம்பெனிக்கு வந்திருக்கீங்க?" மகிழ்ச்சியில் நான் கேள்விகளை அடுக்க, முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல், தோளிலிருந்த என் கையை எடுத்துவிட்டு அவர் வேகமாக நடக்க ஆரம்பித்தார். பளாரென முகத்தில் அறைந்ததுபோல என் முகம் சிறுத்துப்போனது. கீழே வைத்த பைகளை எடுத்துக்கொண்டு கனத்த இதயத்துடன் எம்ஆர்டியை நோக்கிப்போனேன்.
மின்படியைவிட்டு நான் இறங்கும்போது அவர் பொங்கோல் நோக்கிச்செல்லும் ரயிலுக்குள் நுழைவது தெரிந்தது.
மற்ற சமயமாக இருந்திருந்தால் திறந்திருந்த ரயிலுக்குள் ஓடிப்போய் என்னைத் திணித்திருப்பேன்.
அடுத்து வந்த ரயிலில் ஏறியதும் கையிலிருந்த சுமையைக் கீழே வைத்த நொடியில் மனத்தின் பாரம் தாளாமல் நினைவுகள் பின்னுக்கு நகர்ந்தன.
நான்காண்டுகளுக்கு முன், நான் சிங்கப்பூருக்கு வந்த புதிதில் ஆறு பேர் ஓர் அறையில் தங்கியிருந்தோம்.
செடிகளை நடுதல், சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் கிளைகளைக் கழித்து விடுதல், வயதான மரங்களை அப்புறப்படுத்துதல் போன்ற பணிகளைச் செய்தோம்.
இவற்றில் செடிகளை நடும் வேலை வரும்போது ராசு அண்ணனின் முகத்தில் மகிழ்ச்சி படர்ந்திருக்கும்.
நாங்களெல்லாம் அதை ஒரு கடமையாகச் செய்ய, அதை அனுபவித்துச் செய்யும் அவரிடம் ஒருவிதத் தாய்மை உணர்வு தெரியும்.
பிளாஸ்டிக் பைகளிலிருக்கும் ஒவ்வொரு செடியையும் குழந்தையை ஏந்துவதைப்போல எடுத்து, தோண்டப்பட்ட பள்ளத்தில் உரம் கலந்த மண்ணை அளவாகப் போட்டு நடுவார்.
செடியை நட்டுவிட்டு பூவாளியால் தண்ணீர் ஊற்றும்போது இலைகளின்மேல் கொஞ்சங்கூட மண் ஒட்டியிருக்காது.
சாலையின் மறுபுறம் இருக்கும் மரத்தின் கிளைகளை நோக்கிக் கைகுலுக்கச் செல்வதைப்போல நீண்டிருக்கும் கிளைகளை கழித்துவிடும் வேலையை ஒருநாள் செய்துகொண்டிருந்தோம்.
"நாம இப்படிச் செய்யுறோமே, இந்த மரத்திலிருக்கும் குருவிங்க பாவமில்லே?" என்று கேட்டார்.
"ஏண்ணே... ஏன்...? இருக்குற வேலைக்கு ஒலை வச்சிடுவீங்கபோல..." சிவா அவரைக் கிண்டல் செய்தான்.
"இல்லடா... நாமபாட்டுக்கு வெட்டி வீசிட்டு அள்ளிப்போட்டுக்கிட்டுப் போயிடுவோம். இங்க இருந்த குருவிங்க வந்து அதுங்களோட குஞ்சுகளைக் காணாம தவிச்சுப் போயிடும்ல?" என்று கேட்டார்.
"சின்னப்புள்ள மாதிரி யோசிக்கிறீங்களே அண்ணே," என்று நான் அவரைப் பார்த்துச் சிரித்தேன்.
என்னவோ தெரியவில்லை இரண்டு நாளாக ராசண்ணன் எதையோ பறிகொடுத்த மாதிரியே இருந்தார்.
"ஊரில் யாருக்காவது உடம்புக்கு முடியலையா? கல்லூரியில் படிக்கும் பிள்ளைகளுக்குப் பணம் கட்டணுமா? வேறு எதுவும் பிரச்சினையா?" என்று கேட்டபோது, அதெல்லாம் ஒண்ணுமில்லை என்றார்.
எதையோ நினைத்துக் கலங்குவதை அவர் கண்கள் காட்டிக்கொடுத்தன.
ஓர் அறையில் தங்கியிருந்தாலும் அடுத்தவர் பிரச்சினையை ஓரளவுக்குமேல் துருவிக் கேட்பது நல்லதில்லை என்று விட்டுவிட்டேன்.
சிராங்கூன் சென்ட்ரலில் அமைந்துள்ள மார்க்கெட்டைச் சுற்றியிருக்கும் மரங்களில் உள்ள கிளைகளைக் கழித்துவிடும் வேலையை அன்று செய்ய வேண்டும்.
வேலை நடக்கும் பகுதிக்கு யாரும் வர முடியாதளவு நாடாவால் கட்டினோம்.
மேற்பார்வையாளர் ஒருவர் வேலையைக் கண்காணிப்பதுடன் யாரும் தடுப்பைத் தாண்டி வந்துவிடாத மாதிரியும் பார்த்துக்கொண்டிருந்தார்.
ராசண்ணன் இடுப்பில் கயிற்றைக் கட்டிக்கொண்டு ஒரு கையால் மரத்தின் கிளையைப் பற்றிக்கொண்டு மறு கையிலிருந்த ரம்பத்தை கிளையின் மீது வைத்தார்.
அடுத்த நொடியே அந்தக் கிளை நிலத்தை நோக்கி வந்தது.
அண்ணாந்து பார்க்கையில், மேலிருந்து பொன் துகளை வாரி இறைத்ததைப்போல மரத்துகள் பறந்தது.
கைக்கெட்டும் தூரத்தில் இருந்த கிளைகளை வெட்டியவுடன் ராசண்ணன் கீழே நிறுத்தியிருந்த வண்டியில் இறங்கினார்.
அதுவரை கீழே நின்றிருந்த சிவாவும் நானுமாக கிளைகளை இழுத்துப்போய் வண்டியில் போட்டோம்.
அங்கே வந்த ஒருவர் "அப்பாடா... ஒரு வழியா நல்ல காரியம் செய்யுறாங்க," என்று அருகிலிருந்தவரிடம் சொன்னார்.
"சிங்கப்பூரிலுள்ள மைனாக்கள் எல்லாம் இங்கதான் அடையுமோ என்னவோ? ப்பா... சாயந்திரமானா என்னா சத்தம்? இப்பவாவது நடவடிக்கை எடுத்தாங்களே!" என இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.
மரத்தின் மற்றொரு பக்கத்துக்கு வண்டி நகர்ந்தது.
ராசண்ணன் ரம்பத்தைக் கிளைமீது கொண்டுபோன வேளையில் "ஹேய்... ஸ்டாப்... ஸ்டாப்!" என மேற்பார்வையாளர், அண்ணனை நோக்கிக் கத்தினார்.
எதற்கு இப்படிச் சத்தம் போடுகிறார் என நாங்கள் அண்ணாந்து பார்த்தபோதுதான் ராசண்ணன் ஹெல்மெட் அணியவில்லை என்பது தெரிந்தது.
கடுமையான பார்வையை வீசிய மேற்பார்வையாளரிடம் மன்னிப்புக் கேட்டபிறகு அவர் வேலையைத் தொடர்ந்தார்.
'ம்.... இவருக்கு என்னாச்சின்னு சொல்ல மாட்டேங்கிறாரே?'
வீட்டுக்குப் பணம் அனுப்புவதற்காக ராசண்ணன் லிட்டில் இந்தியாவுக்குப் போவதாகச் சொன்னார்.
அலுப்பாக இருந்ததால் மதிய சாப்பாட்டையும் அந்த வார சமையலுக்கு வேண்டிய பொருளையும் அவரையே வாங்கிவந்துவிடச் சொன்னோம்.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொழுது உச்சிக்குப் போன பிறகுதான் அன்று எனக்கு விடிந்தது.
பசியோடு காத்திருந்த வேளையில், "லிட்டில் இந்தியா எம்ஆர்டிக்குப் பக்கத்திலிருக்கும் காய்கறிக் கடைக்கு உடனே வா," என கைபேசியில் அவரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது.
பிரியாணியைச் சாப்பிட்டுவிட்டு படுக்கையில் மறுபடி சுருண்டுகொள்ளலாம் என்று நினைத்திருந்தவன் உடனே கிளம்பினேன்.
அண்ணன் சொல்லியிருந்த கடையை நோக்கி வரும்போது சற்று தூரத்தில் இருக்கும்போதே ஏதோ சரியில்லையென எனத் தெரிந்தது.
காய்கறிக்கடையின் அருகில் ராசண்ணன் நிறுத்தி வைக்கப்பட்டிருக்க, நான்கு பேர் அவரைச் சுற்றி நின்றுகொண்டு ஏதோ கேட்டுக்கொண்டிருந்தனர்.
கடையில் பொருட்களை எடுத்துக்கொண்டிருந்தவர்களது கண்கள் யாவும் அவர் இருந்த திசையை நோக்கியே இருந்தன.
என்னவோ தப்பாகத் தோன்ற கால்களின் வேகத்தைக் கூட்டினேன்.
"நீ மட்டுந்தான் இதைச் செய்தியா? இல்ல உன் பின்னாடி ஒரு கூட்டமிருக்கா? எவ்வளவு நாளா இப்படிப் பண்ணியிருக்கே?" என்று விசாரித்தனர்.
அவர் குரலெழும்பாமல் "மன்னிச்சிடுங்க, நான் வேணும்னு செய்யல..." என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
"என்னாச்சிண்ணே?" என்னைப் பார்த்ததும் அவர் கண்களில் கண்ணீர் பொங்கியது.
"உங்கூட்டாளியா?" அங்கிருந்த ஒரு பெண்மணி என்னைக் காட்டிக் கேட்டார். அந்தக் குரலால் அவ்வழியே போன அத்தனை தலைகளும் என் பக்கம் திரும்பின.
நான் அண்ணனிடம் விசாரிக்க, அவரைப் பேசவிடாது அந்தப் பெண்மணி "என்னாச்சா? உங்கூட்டாளி எங்கடையில திருடியிருக்கான்," என்றார்.
'ராசண்ணனைப் பார்த்தா இப்படிச் சொல்றார்?' என் பார்வையின் பொருளை உணர்ந்ததாலோ என்னவோ அருகிலிருந்த தாட்டியான ஆள், "நாங்க விளையாட்டுக்கு இந்தாளை நிறுத்தி வச்சிருக்கோம்னு நினைச்சியா? திருட்டுப் பய கையுங்களவுமா மாட்டுனதும் இல்லவே இல்லன்னு சாதிக்கிறான்," என்று சொன்னார்.
"பொருளை எடுத்துக் கூடையில வச்சவன் பில் போடுறப்ப அதை எடுத்துக்கிட்டுப் போவாம கையிலிருந்த வெங்காயம், தக்காளிக்கு மட்டும் பணத்தைக் கட்டிட்டு ஏதோ ஞாபகத்துல கூடையைக் கையிலேயே எடுத்துக்கிட்டு கடையைவிட்டு வெளியே வந்துட்டேன்.
"நெசமாவே நான் வேணும்னு செய்யலங்க. சாமி சத்தியமா இதான் உண்மை," என்று சொன்னவர் அவர்களைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டார்.
"தயவுசெஞ்சி நான் சொல்றதை கேளுங்க. இவர் அப்படிப்பட்டவர் கிடையாது. என்னவோ தெரியல, ரெண்டு நாளாவே யாரிடமும் பேசாமலேதான் இருந்தார். அதனால்தான் இப்படித் தப்பு நடந்திடுச்சின்னு நினைக்கிறேன். உண்மையாவே திருடுற யாராச்சும் கடையில இருக்கிற கூடையோட வெளியே போவாங்களா நீங்களே சொல்லுங்க?" என்றேன்.
"மாட்டிக்கிட்டவன் எவன்தான் உள்ளதை ஒத்துக்குவான்?
"சே... இதெல்லாம் ஒரு பொழப்பா?" என தக்காளியைப் பொறுக்கிக்கொண்டே ஓர் அம்மணி வார்த்தைகளை இறைத்தார்.
"மத்த மத்த நாடு மாதிரியா இது? இங்கதான் எல்லா எடத்துலயும் கேமரா வச்சி நம்மள பாத்துக்கிட்டே இருக்காங்களே.
"ஒரு சின்ன தப்பை செஞ்சிட்டு இங்கிட்டிருந்து யாராச்சும் தப்பிச்சிட முடியுமா?"
"இங்க பாருங்க... யாரு தப்பு செஞ்சாங்களோ அவங்களைப் போலிசுல புடிச்சி குடுங்க. அதை விட்டுட்டு எல்லாரையும் அப்படிப் பேசுற வேலை வச்சுக்காதீங்க!"
"பாவம் புள்ளக்குட்டிக்கார மனுசனாயிருப்பான். இவன் செஞ்சதுக்கு அதுங்க என்ன பண்ணும்? பெரிய மனசுபண்ணி பொருளுக்கு உண்டான வெள்ளிய வாங்கிட்டு வுடு தாயீ!"
அவ்வழியே வந்தவர்கள் அவரவரது மனத்தில் பட்டவற்றை சிதறடிக்க, கடைக்கார அம்மணி வாய் திறந்தார்.
"இந்தாள் எடுத்த பொருளோட வெல முப்பத்திரண்டு வெள்ளிதான். அதுக்காக நான் பாக்குல.
"எங்கிட்ட பணமில்லன்னு சொல்லியிருந்தா 'வொர்க் பர்மிட் நம்பர' வாங்கிட்டுப் பொருள குடுத்து அனுப்பியிருப்போம்.
"எத்தினியோ பேரு எங்கடையில அப்படித்தான் வாங்கிட்டுப் போவாங்க, சம்பளம் போட்டதும் வாங்குன கடனை திருப்பி அடைப்பாங்க.
"இந்தாள் செஞ்சது பெரிய தப்பில்லையா? அவ்ளோ காய்கறி, மளிகைன்னு எடுத்து வச்சிக்கிட்டு வெறும் தக்காளி, வெங்காயத்துக்கு மட்டும் பில்லைப் போட்டு வாங்கிட்டுப்போனா எப்படி? கடைக்கு சேவாக்கூலிய குடுத்து, இந்தியா, மலேசியான்னு சுங்கத் தீர்வை கட்டி பொருள எறக்குற என் நெலம என்னாவுறது? இந்த மாதிரி நாலு பேரு செஞ்சா நானும் எங்கியாவது திருடத்தான் போவணும்."
"ஆமாக்கா, வுடாதீங்க... இவனுகளுக்கெல்லாம் பாடம் கத்துக் குடுக்கணும். இன்னும் போலிசுக்கு கால் பண்ணாமலா இருக்கீங்க?"
"வேணாம் தம்பி. யாரு பெத்த புள்ளையோ? ஏதோ போதாத காலம், அந்தப் புள்ளாண்டான் இப்படிப் பண்ணிட்டான். போலிசுக்கெல்லாம் போனா அவனோட பொழப்பு கெட்டுப் போயிடும். உனக்குப் புண்ணியமா போவட்டும். பணத்த வாங்கிட்டு வுட்டுடும்மா," நடை தளர்ந்த மூதாட்டி அண்ணனுக்காகப் பரிந்துபேசினார்.
"இவ்ளோ பேசுறியே... உங்கடையா இருந்தா இப்படி விட்டுடுவியா?"
"அதான... வேடிக்கை பாத்தமா வூட்டுக்குப் போனமான்னு இல்லாம பஞ்சாயத்து பண்ண வந்துட்டே.... என்ன செய்யணும்னு எங்களுக்குத் தெரியும். நீ கெளம்பு பெருசு!"
ஆளாளுக்குப் பேச குனிந்திருந்த அண்ணனின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது.
"நடந்தது தப்புதான். தயவுசெஞ்சி மன்னிச்சிடுங்க. இந்தப் பொருளுக்கான பணத்தைக் கொடுத்துடறேன். என்னை விட்டுடுங்க," என்று கெஞ்சிக்கேட்டார்.
"என்னாது பணம் குடுக்கிறியா? குரூப்பாயிருந்து திருட வேண்டியது, மாட்டிக்கிட்டா இப்புடில்லாம் சமாளிக்கிறதுன்னு உங்க திட்டமாடா?" அந்தத் தாட்டியான ஆளின் குரல் எகிறியது.
"அண்ணே... அப்படில்லாம் இல்லண்ணே...
"வேணும்னு செஞ்சிருக்க மாட்டாரு. சொன்னா நம்பமாட்டீங்க, இவரு டிஷ்யூ பேப்பரை யூஸ் பண்ணவே மாட்டாரு. ஆனாலும் வெளியே போயிட்டு வர்றப்ப ரெண்டு பாக்கெட்டாவது டிஷ்யூ பேப்பர் இல்லாம அறைக்குத் திரும்பமாட்டாரு.
"முடியாதவங்களுக்கு, கைகால் நல்லாயிருக்கிற நாம் இந்த உதவிய செஞ்சா குறைஞ்சிடமாட்டோம்னு சொல்வாரு. அப்படிப்பட்டவர் நிச்சயமா இதை செஞ்சிருக்கமாட்டாரு என்னைய நம்புங்கண்ணே."
"தம்பி, இந்தக் கதையெல்லாம் இங்க வுடாத. நான் பதினைஞ்சி வயசுல காது குத்தி கடுக்கண் போட்டுக்கிட்டவன். நாங்க போலிசுக்குப் போவுறது போவுறதுதான்.
"ஏதோ இவன் சொன்னான்னு உன்னை வரச் சொன்னோம். இன்னும் கொஞ்ச நேரத்துல போலிசு வரும். அவுங்ககிட்ட உங்க அண்ணனப் பத்திய கதையச் சொல்லு. இப்ப உன்னோட போன் நம்பர குடுத்துட்டு எடத்த காலி பண்ணு."
"ப்ளீஸ்... அப்படில்லாம் செஞ்சிடாதீங்க. அவர் அப்பிராணி. உள்ளபடி அப்படிச் செய்யுற மனுசன் கிடையாது. என்னை நம்புங்க."
பெரிய கடை ஒன்றில் பிராண்டட் கைக்கடிகாரத்தைத் திருடிய ஒருவர் பிடிபட்ட செய்தி கொஞ்ச நாளுக்கு முன் செய்தியில் வெளியாகியிருந்தது. அந்த ஆளுக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்ட செய்தியை படித்தபோது ராசண்ணன், "மரங்களையே கண்காணிக்குற சிங்கப்பூரில் மனுசங்கள கண்டுக்காம இருப்பாங்களா?
"இவனுக்குக் கிடைச்ச தண்டனையைப் பாரு. இது அவன் குடும்பத்துக்கு எப்பேர்பட்ட அவமானம்?" என அறிமுகமில்லா ஒரு குடும்பத்துக்காக வருத்தப்பட்டார்.
அவர் நிச்சயமாக இந்தத் தப்பை செய்திருக்க வாய்ப்பேயில்லையென இவர்களிடம் சொன்னால் எடுபடவில்லையே என்ற வேதனை என்னைக் கவ்வியது.
என் பேச்சை நம்பினாரோ அண்ணனின் கண்ணீரைப் புரிந்துகொண்டாரோ அந்தக் கடைக்கார அம்மணி, "சரி சரி... உங்க கம்பெனி போன் நம்பரையும், வொர்க் பர்மிட் நம்பரையும் எழுதிக் குடுத்துட்டு கெளம்புங்க," என்றார்.
அவர்களுக்கு கைகூப்பி நன்றி சொன்ன அண்ணன், வாலட்டிலிருந்து ஐம்பது வெள்ளியை எடுத்துக் கொடுத்தார். மீதி சில்லறையை அந்த அம்மணி எடுத்துக் கொடுக்கும் வேளையில், "எல்லாரும் என்னைப்போலப் பெரிய மனசு பண்ண மாட்டாங்க.
"பொழைக்க வந்த எடத்துல கை சுத்தமா இருக்கணும்," என்று சொல்லிய வேளையிலா அங்கே சிவா வரவேண்டும்? இவன் எப்படி இங்கே வந்தான்? சரியான ஓட்டை வாயனாச்சே என நான் பதைக்க, சுற்றியிருந்தவர்கள் மூலம் நடந்ததை அறிந்துகொண்டான்.
"சிவா, அண்ணனுக்கு ஏதோ பிரச்சினையிருக்கு, அதை நம்மகிட்ட சொல்லாம என்னவோ குழப்பத்துலயே இருக்காரு. இங்கு நடந்ததை நீ யாரிடமும் மூச்சுவிடாதே" என எச்சரித்தேன்.
நான் குளித்துவிட்டு வந்தபோது, "காய்கறிக் கடையில ராசு திருடிட்டாராமே..." என மற்றவர்கள் விசாரித்தனர்.
"இதை எப்படி மறைக்க முடியும்?" என்பதைப்போல சிவா என்னைப் பார்த்தான். எனக்கு ராசண்ணனின் முகத்தைப் பார்க்கவே சங்கடமாக இருந்தது.
இந்தச் சம்பவம் நடந்து இரண்டு நாளாகியும் அவர் தூக்கம் தொலைந்தே காணப்பட்டார்.
சாப்பாடு என்பது உடன் தங்கியிருக்கும் மற்றவர்களின் வற்புறுத்தலால் கொஞ்சம் உள்ளே போனது.
தன்னைச் சாப்பிடச் சொல்லிவிட்டு முதுகுக்குப் பின் சிரிக்கிறார்களோ என்ற சந்தேகம் அவருக்கு இருந்துகொண்டே இருந்தது.
"வேலையாவது மண்ணாவது... எல்லாத்தையும் விட்டுட்டு ஓடிட்டா என்னன்னு தோணுது," என்று புலம்பிய அவரைத் தேற்றினேன். அன்று வேலை முடிந்து எல்லாரும் கிளம்பிக்கொண்டிருந்தோம். லாரியை எடுக்கப் போகும்போது ராசண்ணனை மட்டும் காணவில்லை.
"எங்க போச்சி இந்த முப்பத்திரெண்டு வெள்ளி?" என்று சிவா கிண்டலாகக் கேட்டுக்கொண்டிருந்தபோது அவர் வந்துவிட்டார்.
மறுநாள் விடுமுறை என்பதால் நட வேண்டிய செடிகள் வெயிலில் காய வேண்டாமென்று நிழலைத் தேடி வைத்துவிட்டு வந்திருக்கிறார். அன்று அறைக்குத் திரும்பும்வரை யாருமே வாயைத் திறக்கவில்லை.
"எந்தப் பொறுக்கியோ செஞ்ச தப்புக்கு நீ ஏங்கண்ணு சாவணும். அப்பாவுக்கு உன்ன தெரியும்டா... கம்பெனியில லீவு கேட்டிருக்கேன். நாலஞ்சி நாள்ல வந்துடுவேன். அதுவரைக்கும் நீ காலேஜுக்குப் போவாம வீட்லயே இரும்மா," என போனில் ராசண்ணன் ரகசியமாக பேசிக்கொண்டிருந்த வார்த்தைகள் எதேச்சையாக என் காதில் விழுந்தன. பிள்ளைகளின் ஞாபகமாக இருப்பதால் இந்தியாவுக்குப் போய்விட்டு வர இருப்பதாக எங்களிடம் சொன்னார்.
*
வெவ்வேறு பகுதியிலிருந்து கொண்டு வந்த புதர் தவளைகளை பூமலையிலுள்ள ஊசியிலைக்காட்டுப் பகுதியில்விடும் வேலையைச் செய்துகொண்டிருந்தோம்.
அந்தக் கால சிங்கப்பூரில் இரவு நேரத்தில் கேட்கும் தவளையின் சத்தத்தை மக்களுக்கு நினைவூட்ட 'உயிரின மீட்புச் செயல் திட்டம்' என்னும் பெயரில் இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. "இந்தத் தவளையா பொறந்திருக்கலாமோ?" என்று சிவா சொல்ல எல்லாரும் சிரித்தபோதும் ராசண்ணனின் முகம் மட்டும் வாடியே இருந்தது.
குறுந்தகவல் வந்த ஒலியைக் கேட்டு போனை எடுத்தேன்.
என் நண்பர்கள் குழுவில் 'கல்லூரிக்குச் செல்லும் பெண்ணின் களியாட்டம்' என்னும் தலைப்பில் ஒருவன் வீடியோ ஒன்றை அனுப்பியிருந்தான். மேற்பார்வையாளரின் கண்கள் என்னை நோட்டமிட போனை பாக்கெட்டில் வைத்துவிட்டேன். எப்படா மணி பன்னிரண்டு ஆகுமென அந்த வீடியோவை எண்ணி மனம் சுழன்றது. சாப்பாட்டுப் பையை எடுத்துக்கொண்டு நிழலை நோக்கி எல்லாரும் செல்ல, நான் தள்ளிப் போனேன்.
'இந்தப் பொண்ண எங்கியோ பாத்திருக்கேனே!' மூணாவது முறை அந்த வீடியோவைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, "அட... பலான வீடியோவைப் பாக்கத்தான் அவ்ளோ அவசரமா கெளம்பிப் போனியா?" என்று என் பின்னாலிருந்து எட்டிப் பார்த்த சிவா கேட்டான். சட்டென கைகளைப் பின்னால் இழுத்துக்கொண்டேன். என் கையிலிருந்த போனை பிடுங்குவானென நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
"டேய்... இது ராசண்ணனோட பொண்ணுடா," என்றான். 'அது உண்மையாக இருக்கக்கூடாது என நினைத்து அவரது வாட்சப் ப்ரோஃபைல் பக்கத்தை எடுத்தேன். 'உன் சந்தேகம் தீர்ந்ததா?' சிவா என்னிடம் பார்வையால் கேட்டான்.
அந்த வீடியோவை உடனே டிலிட் செய்யச்சொல்லி அதைப் போட்ட நண்பனுக்குப் போனடித்தேன். அதற்குள், "இது போட்டோ ஷாப் செஞ்ச வீடியோ," என்று வேறொருவனிடமிருந்து இன்னொரு குறுந்தகவல் வந்தது.
வீடியோ 'டிலிட்' ஆனபிறகுதான் என்னால் நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது.
"ஆமாம், இந்த சிவா எங்கே?"
எம்ஆர்டியில் கார்டை அடித்துவிட்டு வெளியே வந்தபிறகுதான் நான் தவறான நிறுத்தத்தில் இறங்கியிருந்தது புரிந்தது.
*
"நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திடீரென இந்தியாவுக்குப் புறப்பட்டுப் போன ராசண்ணனை இன்றுதான் பார்த்தேன்.
"காதலிக்க மறுத்தாள் என எந்தப் படுபாவியோ செய்த அப்படியொரு காரியத்தால் ராசண்ணன் அவரது மகளை இழந்து தவிக்க நேரிட்டது.
"என்னிடம் ஒரு நல்ல நண்பனாகவும் அண்ணனாகவும் அரவணைத்து அன்புகாட்டிய ராசண்ணாவுக்கு நண்பனாகவோ தம்பியாகவோ எந்தவகையிலும் உதவ முடியாமல் போன வேதனை இன்றைக்கும் என்னை வாட்டுகிறது."
***
(சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், 2021 முத்தமிழ் விழாவை ஒட்டி நடத்திய சிறுகதைப் போட்டி பொதுப்பிரிவில் ஊக்கப் பரிசு பெற்ற கதை)

