மாற்றமும் உண்டோ சொல்வீர்!

மாற்றமும் உண்டோ சொல்வீர்!

1 mins read

என்னடா அவலத் துன்பம்

எதற்கடா பிறந்தோம் நாமும்

கன்னல்மா மதியும் சாகும்

கவிழ்ந்தவான் பரிதி போகும்

வின்னமோ உடலில் இல்லை

விந்தையே கொரோனா எல்லை

சன்னமாய்க் கொத்துக் கொத்தாய்ச்

சாவினில் தொலைக்க லாமோ?

சொன்னதும் கேட்பா ரில்லை

சுயபுத்தி அதுதூ வெள்ளை

மன்னரும் அமைச்சும் கூட

மதியெலாம் மயங்கிப் போனார்

தன்னுடை உடலம் பற்றி,

தங்கிடா உயிரைப் பற்றி

என்னதான் அறிந்தோம் நாமும்

எதையுமே புரிந்தோ மில்லை!

ஊர்வன பறவை இன்னும்

உயர்ந்தமா விலங்கு கட்கும்

காற்றினைச் சுவாசம் செய்யும்

காற்றுப்பை உண்டு தானே

தேர்ந்து அதைச் சேர்ந்தால்

நுண்ணி

செத்துடன் மடிந்தே போகும்!

ஆற்றல்கொள் மனிதன் இன்று

அதனிடம் தோற்ற தேனோ?

ஏனென எண்ணிப் பாரீர்

இறைவனின் படைப்பெல் லாமே

ஊணெனக் கொள்ப வற்றை

ஒருநாளும் மாற்ற வில்லை

வீணராய்ப் போன நாமோ

விவரமாய் நாவைப் பேணா

ஈனராய் ஆனோம், சாவை

இயற்றினர் வணிகக் கூட்டம்!

வணிகர்கள் கண்ட தெல்லாம்

வலியதோர் விஞ்ஞா னத்தின்

பிணிதரும் கருப்புப் பக்கம்

பிறப்பிடம் நோய்க்கு, மேலும்

அணிதரும் வேதிச் சேர்க்கை

அழிவுள நஞ்சென் றெண்ணா

நுனிதரும் இனிமை கண்ட

நுகர்புலன் ஆனந் தத்தில்..!

கருவதன் மரபை மாற்றி

காய்கனி இயல்பை மாற்றத்

தருமகிழ் இன்பம்! நம்முள்

தங்கிய எதிர்ப்புச் சக்தி

அருகிடல் அறியாப் பாரும்

அழிவுகண் டழுதே வாடும்!

மறுபடி இருப்போர் தேர

மாற்றமும் உண்டோ சொல்வீர்!