அகதிக் கன்றுக்குட்டிகள்

அகதிக் கன்றுக்குட்டிகள்

1 mins read

நதி மூலம் போல

வேலியின் முடிவுகள்

பாவாடை சட்டையும்

ஒற்றைப் பின்னலும்

அசட்டுச் சிரிப்பும் அணிந்திருந்த

இரண்டு அகதிக் கன்றுக்குட்டிகள்

ஒரு கன்றுக்குட்டி

எங்கோ கண்டுபிடித்த செவ்வக அட்டைக் கோத்தாவை

கீழ்த் துவாரம் வழியே சொருக

மறு குட்டி

அதன் மறுபக்கத்தை

லாகவமாகப் பிடித்துக்கொண்டது

பக்கத்தில் கிடந்த பாறைத்துண்டை

நடுக்கல்லாகப் பொருத்தி

அட்டைக் கோத்தாவை

அதன் மேலே அமர்த்தி

சீ-சா கட்டிக்கொண்டன

ஒன்றன் பின் ஒன்றாக

இல்லாத எடை கொண்டு

சீ-சாவில் ஒரு பொழுது ஊனவும்

மறு பொழுதே

அந்தர சிகரத்தைத் தொட

தாவிய பின் சரிந்தும்

இதயங்கள் துள்ளத் துள்ள விளையாடின

சீ-சாவும் அவற்றுடன்

சாய்ந்து சாய்ந்து விளையாடியது

நீதித் தராசின் சாயல் தெரிந்தது.

- தங்கமுனை விருது 2019 போட்டியில், இரண்டாம் பரிசு பெற்ற கவிதை