தலைப்பு: முடிவிலியின் முடிவினிலே
நூலாசிரியர்: மதுஹனி
பதிப்பாளர்: சென்னை : அறிவாலயம், 2019.
குறியீட்டு எண்: Tamil MAT
அனைத்து உரிமைகளும் காப்புரிமைக்கு உட்பட்டவை.
இரு இதயங்களின் முடிவில்லா வாழ்க்கைப் பயணத்தை எழுத்தாளர் மதுஹனி தெளிந்த அமைதியான நீரோடைபோல் அழகான நாவலாக வடிவமைத்திருக்கிறார். காதல், திருமணம், நல்வாழ்க்கை என்ற முடிவு பொதுவாக மகிழ்வைத் தருவது. ஆனால் திருமணம் என்ற பந்தத்துக்குள் வராமலேயே மகிழ்வைத் தருவதும் காதலின் வெற்றி என்று கொண்டாடுகிறது இந்த நாவல்.
ராஜா ராஜவர்தன் சிங் ரத்தோர், அவரது காதல் மனைவி சாரதா, அவர்கள் மகன் ஹர்ஷா, அவனோடு படிக்கும் ஹரிணி, இந்த நால்வரையும் சுற்றிப் புனையப்பட்ட ஓர் அழகான காதல் ஓவியம் இந்த நாவல். ஹர்ஷாவும் ஹரிணியும் மருத்துவப் படிப்பில் முதலாண்டு சந்தித்ததிலிருந்து அவர்களுக்குள் ஏற்படும் சிறுசிறு சச்சரவுகள், புரிதலின்மை ஆகியவை கொஞ்சம் கொஞ்சமாக மாறி, புரிதலுடன் கூடிய நட்பும் கரிசனமும் காதலைத் தாண்டிய ஓர் அன்பும் வளர்கிறது. ஹர்ஷா தன் பெற்றோரின் விருப்பத்தின் பேரில் மருத்துவப் படிப்பை மேற்கொண்டு உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்ற இருதய அறுவை சிகிச்சை நிபுணர். ஹரிணி அவனோடு மருத்துவம் பயின்ற, மயக்க இயல் மருத்துவ நிபுணர். ஹரிணியின் தனித்தன்மையும் தன் வெற்றிக்கு உதவும் அவளது மனப்போக்கும் தான் அரச பரம்பரையில் வந்தவன் என்ற கர்வத்தை ஹர்ஷாவிடம் அகற்றி அவன் செய்யும் சாதனைகள்தான் அவனுக்குப் புகழைச் சேர்க்கும் என்ற வாழ்க்கையின் ரகசியத்தை உணர்த்துகிறது. இதனால் மற்ற பெண்களை விட ஹரிணியிடம் ஹர்ஷாவிற்கு ஈர்ப்பு அதிகம் ஏற்படுகிறது. எதிர்பார்ப்பில்லாத அன்பையும் தூய்மையான காதலையும் போற்றும் இந்நூல் மென்மையான காற்று வீசும் கடற்கரையோரம் இருப்பது போன்ற இதமான உணர்வைத் தருகிறது. பொழுதுபோக்குக்காக வாசிப்பவர்களுக்கு மிகவும் சுவாரசியமாக அமையும். இந்த நூல் கிடைக்கும் நூலகங்களின் விவரங்களைப் பெற: http://catalogue.nlb.gov.sg

