ஆலை

ஆலை

13 mins read

சிறுகதை

கி. சுப்பிரமணியம்

"என்ன வேலைன்னு சொன்ன?"

மர­க­தம் துரு­விக் கேட்­டாள்.

"அது ஒரு ஆலை அம்மா. ஏதோ எண்­ணெய் தயா­ரித்து வெளி­நாட்­டுக்கு அனுப்­பு­றாங்­க­லாம். அங்­கு­தான் சின்ன வேலை. ஒரு நாளுக்கு நாலு வெள்ளி சம்­ப­ளம்" மெல்­லப் பதில் சொன்­னான் முத்து.

"பதி­னேழு வய­சுல எதுக்­குடா இந்த ஆலை­யில போய் கஷ்­டப்­ப­ட­ணும். சும்மா வீட்­டுல இருடா"!

தாய் மனம் அப்­படி அவ­ளைப் பேசச் சொன்­னது.

'மூணு மாசம்­தான் அம்மா, அப்­பு­றம் படிக்­கப் போயி­ரு­வேன்' எனச் சமா­தா­னம் சொன்­னான் முத்து.

1967ல் பத்­தாம் ஆண்டு படிப்பை முடித்­த­போது, சிறிது காலம் வேலை அனு­ப­வம் பெற வேண்டி, முத்து வேலைக்­குப்­போக ஆவல் கொண்­டான். அதற்­குக் கார­ணம், அந்­தக் கால­கட்­டத்­தில்­தான், சிங்­கப்­பூ­ரின் ஜூரோங் தொழிற்­பேட்டை வேக­மாய் வளர்ச்சி காண ஆரம்­பித்­தது.

தொழிற்­பேட்­டை­யில் முத­லீடு செய்­ப­வர்­கள், ஐந்­தாண்­டிற்­குப் பல வரிச் சலு­கை­கள் பெறு­வர். அத­னால் ஆவ­லு­டன் பல பன்­னாட்டு முத­லா­ளி­கள் பெரு­ம­ளவு முத­லீடு செய்­யத் தொடங்­கி­னர். வேலை வாய்ப்­பு­கள் குவிந்­து­கி­டந்­தன.

ஆகை­யால் முத்­து­வுக்­கும் வேலை தேடு­வ­தில் சிர­மம் ஏற்­ப­ட­வில்லை. கூடவே அவன் வய­தொத்த நண்­பன் ஹரி­யை­யும் அவ­னு­டன் சேர்த்­துக் கொண்டு, தொழிற்­பேட்­டை­யைச் சுற்றி வந்­தான்.

ஒரு குறிப்­பிட்ட ஆலை­யில், பணி­யா­ளர் தேவை என்ற விளம்­ப­ரத்­தைக் கண்­டான். அங்கு சென்று கேட்ட போது, உட­ன­டி­யாக வேலை கிடைத்­தது.

அது ஒரு நடுத்­தர அள­வி­லான ஆலை. முதல் நாள் வேலை தொடங்­கும் முன் அதன் மேற்­பார்­வை­யா­ளர் இரத்­தி­னம், அந்த ஆலை­யைப் பற்­றி­யும், அதன் வணிக நோக்­கம் பற்­றி­யும் விரி­வாக விளக்­கி­னார். அப்­போது அங்கு இரு­வர் மட்­டுமே நேரடி வேலை­யில் இருந்­த­னர். ஒரு­வர் அறு­பது வயது மதிக்­கத்­தக்க நாக­லிங்­கம் என்­ப­வர். மற்­றொ­ரு­வர் இரு­பத்­தைந்து வயது, மலே­சிய இளை­ஞர் முனி­யாண்டி. ஆக அன்­றாட முக்­கிய வேலை­களை நாக­லிங்­க­மும் முனி­யாண்­டி­யும் செய்­து­வந்­த­னர். இப்­பொ­ழுது முத்து, ஹரி, இரு­வ­ரை­யும் சேர்த்து நான்கு பணி­யா­ளர்­கள்!

அப்­படி என்­ன­தான் இந்த ஆலை­யில் உற்­பத்தி செய்­கின்­றார்­கள்?

இறைச்­சிக் கடை­களில் ஆடு, மாடு­க­ளின் ஒதுக்­கப்­பட்ட எலும்பு, கொழுப்பு, மிச்­சம் மீதி எல்­லா­வற்­றை­யும் அங்­கி­ருந்து கொண்­டு­வந்து, அதை ஆலை­யின் இராட்­சத இயந்­திர வாய்க்­குள் கொட்டி, அரைத்து, எண்­ணெய்யாக உருக்கி, பெரிய டிராம்­களில் நிரப்பி, ஹாங்­காங் போன்ற நாடு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­வது ஆலை­யின் முக்­கிய ஏற்­று­மதி!

உருக்­கப்­பட்ட மாமிச எச்­சத்­தை­யும் எலும்பு உதி­ரி­க­ளை­யும் மாவாக அரைத்­துக் கோழி­க­ளுக்கு உண­வா­கத் தயா­ரித்­த­னர். அப்­பொ­ழுது ஜூரோங் தொழிற்­பேட்­டை­யில் ஆடு, மாடு, பன்றி ஆகி­ய­வற்றை இறைச்­சிக்­காக வெட்­டும் இட­மான 'அபெட்­டோர்' ஒன்று கட்டி முடிக்­கப்­பட்­டி­ருந்­தது. அங்­கு சென்று, சந்­தைக்­குச் செல்­லத் தடை­செய்­யப்­பட்ட மாமி­சங்­கள், குளி­ரூட்­டப்­பட்ட அறை­யில் தொங்­க­வி­டப்­பட்­டி­ருக்­கும். அவற்­றை­யும், இந்த ஆலைக்­குக் குறைந்த விலைக்கு விற்­பார்­கள். அங்­கும் சென்று, மிக­வும் கனமான அந்த இறைச்­சித்­துண்­டங்­களை எடுத்து வரு­வார்­கள். போதா­தற்கு, அந்த அறுக்­கப்­பட்ட விலங்­கு­க­ளின் இரத்­த­மும், தனித்­த­னி­யாக இரு பெரிய உய­ர­மான தொட்­டி­யில் சேமித்து வைக்­கப்­பட்­டி­ருக்­கும். அதை­யும் பெரிய டிரம்­மில் நிரப்பி ஆலைக்கு எடுத்­துச் செல்­வார்­கள்! இந்த இரத்­தத்­தை­யும் உறை­ய­வைத்து அரைத்து மாவாக்­கிக் கோழி­க­ளுக்­கான உயர்­ரக உண­வெ­னத் தயா­ரித்து வணி­கம் செய்­வர்!

மேற்­பார்­வை­யா­ளர் ரத்­தி­னம் அவர்­கள் இரு­வ­ரும் செய்ய வேண்­டிய வேலை­கள் பற்றி விளக்­கி­விட்டு, நாக­லிங்­கத்­தைக் கொண்டு புதி­ய­வர்­க­ளைக் கண்­கா­ணிக்­கச் சொல்­லி­விட்­டுச் சென்­று­விட்­டார். நாக­லிங்­கம் மிக­வும் குறை­வா­கவே பேசு­வார். புதி­ய­வர்­கள் என்­ப­தால் முத்து, ஹரி, இரு­வர் மீதும் பரி­வு­காட்டி வேலை­யைக் கற்­றுக்­கொ­டுத்­தார். அங்கு பல பெரிய இயந்­தி­ரங்­கள் புழக்­கத்­தில் இருந்­தன. எல்லா இயந்­தி­ரங்­க­ளின் பயன்­பாட்­டை­யும் மேலோட்­ட­மா­கச் சொல்­லித்­தந்­தார்.

வந்­த­தும் வரா­த­து­மாக, இவர்­க­ளின் துர­திர்ஷ்­டமோ என்­னவோ, தரை­யி­லி­ருந்து முதல் மாடிக்கு, பாரம் தூக்­கும் இயந்­தி­ரம் சில நாளுக்கு முன் பழு­தா­னது. அதை பழுது பார்ப்­ப­தற்கு ஆஸ்­தி­ரே­லி­யா­விற்கு அனுப்­பி­வைத்­த­னர். ஆகை­யால், தோளில் சாக்­கைப் போட்டு, கன­மான இறைச்­சித் துண்­டங்­களைத் தூக்­கி­ய­படி பதி­னைந்து படி­கள் ஏறி, முதல் மாடிக்கு வந்­த­டைந்து, அரைக்­கும் இயந்­திர வாயில் கொட்ட வேண்­டும்.

இதில் பயப்­படும் நிலை என்­ன­வென்­றால், அந்­தப் பெரிய நான்கு அடி அக­ல­மான இயந்­திர வாய்க்­குச் சுற்­றி­லும் தடுப்பு இல்லை. தோலில் சுமந்­து­வ­ரும் இறைச்­சித் துண்­டங்­க­ளைக் கொட்­டும்­போது, வழுக்­கி­னால் அவ்­வ­ள­வு­தான்! கொட்­டி­ய­வ­னும் உள்ளே விழுந்து அரை­பட வேண்­டி­ய­து­தான்!

நாக­லிங்­கம் சொல்ல வேண்­டி­ய­தைச் சுருங்­கச் சொல்­வார். காலை 7 மணி முதல் பிற்­ப­கல் மூன்று மணி­வரை, இரு­வ­ரும் செய்ய வேண்­டிய வேலை­களை விளக்­கி­னார்.

முதல் வேலை­யா­கச் சந்­தை­க­ளுக்­குச் சென்று மாமிச மிச்­சங்­களை எடுத்து வர­வேண்­டும் என்­றார். ஹரி­யும் முத்­து­வும் அதற்கு ஆயத்­த­மா­னார்­கள்.

இந்­தச் சந்­தை­க­ளுக்­குச் செல்­வ­தற்­காக ஒரு நடுத்­தர அள­வி­லான லாரி­யும் அதற்கு ஓர் ஓட்­டு­ந­ரும் இருந்­தார். ஓட்­டு­நரின் பெயர் மொக்­தார். இவர் ஓர் இந்­தோ­னீசிய வம்­சா­வ­ளி­யைச் சேர்ந்­த­வர். நல்ல நகைச்­சுவை உணர்­வு­மிக்­க­வர். தோற்­றத்­தில் ஒல்­லி­யா­க­வும், கொஞ்­சம் குள்­ள­மா­க­வும் இருப்­பார். வெறும் ஓட்­டு­நராக மட்­டு­மின்றி கூட வந்த முத்­துக்­கும் ஹரிக்­கும் கொஞ்­சம் உத­வி­யா­க­வும் இருந்­தார்.

லாரி­யில், முத்­து­வும் ஹரி­யும் ஏறிக்­கொள்ள, அது, கேலாங் சிராய் சந்­தைக்கு முத­லில் சென்­றது. அங்கு மாமிச மிச்­சங்­களை எடுத்­துக்­கொண்டு, அதே­போல் வேறு சில சந்­தை­க­ளுக்­கும் சென்­று­விட்­டுக் கடை­சி­யாக அன்­றைய பழைய தேக்கா சந்­தைக்கு வந்து சேர்­வ­தற்­குள், பிற்­ப­கல் ஒரு மணி­யைத் தாண்டிவிட்­டது.

"நாம் நினைத்­த­தை­விட வேலை கடு­மை­யாக இருக்­கி­றதே," என்று ஹரி முத்­து­வி­டம் ஆங்­கி­லத்­தில் சொல்ல, அதைக் கேட்ட மொக்­தார் வேக­மாய்ச் சிரித்­தான்!

"இதற்கே வேலை கடி­னம் என்று முதல் நாளி­லேயே சொல்­கி­றீர்­களே. உண்­மை­யில் கடி­ன­மான வேலையை நீங்­கள் சந்­திக்­க­வில்லை. உங்­கள் போதாத நேரம், பாரம் தூக்­கிப் பழு­தா­கி­விட்­டது. இவ்­வ­ளவு மாமிச மலை­யை­யும், நீங்­கள் இரு­வ­ரும், முனி­யாண்­டி­யு­டன் சேர்ந்து தூக்­கிப் படி­கள் ஏறி இயந்­தி­ரத்­தின் வாய்க்­குள் கொட்ட வேண்­டும். அப்­பொ­ழுது தெரி­யும் உங்­க­ளுக்கு," என்று சொல்லி மீண்­டும் சிரித்­தான்.

முத்­து­வும் ஹரி­யும் ஒரு­வரை ஒரு­வர் மிரண்­ட­படி பார்த்­துக்­கொண்­ட­னர். மதி­யம் ஒன்­றைத் தாண்­டி­ய­தால் இரு­வ­ருக்­கும் நல்ல பசி. காலை­யில் வேலைக்கு வரும்­போது வாங்­கி­வந்த புரோட்டா பொட்­ட­லத்­தைப் பிரித்து இரு­வ­ரும் உண்ண ஆரம்­பித்­தார்­கள்.

லாரி மீண்­டும் அவர்­களை ஏற்­றிக்­கொண்டு ஜூரோங் ஆலையை வந்­த­டைந்­த­தும், கொண்­டு­வந்த மாமி­சக் குவி­யல்­க­ளைப் படி­யேறி, அரைக்­கும் இயந்­தி­ரத்­தின் வாயில் கொட்ட வேண்­டும் என்று ரத்­தி­னம் சொன்­ன­வு­டன் இரு­வ­ரும் வேலை­யைத் துவங்க ஆரம்­பித்­த­னர். நல்ல வேலை­யாக முனி­யாண்­டி­யும் அவர்­க­ளு­டன் சேர்ந்­து­கொண்­டது கொஞ்­சம் மன­திற்கு ஆறு­த­லைத் தந்­தது. ஒரு பழைய சாக்­கைத் தோளில் போட்­ட­பின், நாக­லிங்­கம் மாமி­சப் பாரத்தை அதன் மீது தூக்கி வைப்­பார். கொஞ்­சம் வய­தா­ன­வர் என்­ப­தால் அவ­ருக்கு இந்­தப் படி­யே­றும் சிர­மத்தை முன்­னிட்டு இந்­தப் பொறுப்பு ஒதுக்­கப்­பட்­டது. எத்­தனை முறை ஏறிக் கொட்­டி­னா­லும் மாமி­சக் குவி­யல் குறைந்­த­தா­கவே தெரி­ய­வில்லை. முனி­யாண்டி உடல் வலு­வி­லும் வய­தி­லும் கூடு­த­லா­ன­வர் என்­ப­தால், அவ­ரால் இதைக் கொஞ்­சம் சிர­ம­மின்­றிச் செய்ய முடிந்­தது. எப்­ப­டியோ மாலை நான்கு மணி நெருங்­கும்­போது ஒரு­வா­றாக இந்­தக் கடின வேலை முடிந்­தது. சற்று ஓய்­வெ­டுக்க முத்­து­வும் ஹரி­யும் ஒரு ஓர­மாக அமர்ந்­த­னர். நாக­லிங்­க­மும் அரு­கில் வந்து அமர்ந்­தார்.

"வேலை கஷ்­டமா இருக்­குது இல்­லையா," என ஒரு தந்­தை­யின் பரி­வு­டன் கேட்­டார்.

"ஆம். இருந்­தா­லும் பர­வால்ல," என்று புன்­ன­கைத்­த­வாறு பதில் சொன்­னான் முத்து.

சிறிது ஓய்­விற்­குப் பின் குளி­யல் அறை­யில், ஒன்­றுக்கு மூன்று முறை சோப்பு போட்­டுக் குளித்­து­விட்டு வந்­த­னர் முத்­து­வும் ஹரி­யும்.

"இந்த வேலையை மூன்று மாதம் நம்­மாள தாக்குப்பிடிக்க முடி­யாது. படி ஏறி இறங்கி, காலும் தோள் பட்­டை­யும் இப்­படி நம்­மால" என ஹரி நொந்­து­கொண்­டான். புத்­த­கக் கட்டை தூக்­கி­ய­வ­னுக்கு இந்த மாமி­சக் குவி­ய­லைத் தூக்­கு­வ­தில் சிர­மம் ஏற்­பட்­ட­தில் ஆச்­ச­ரி­யம் இல்லை தான்!

"ஆலை­யின் பாரம் தூக்­கும் இயந்­தி­ரம் பழு­தா­ன­தால்தான் நம்மை அவ­ச­ர­மாக வேலைக்கு எடுத்­துக்­கொண்­ட­னர் என்றே தெரி­கிறது," என்று தொடர்ந்­தான் ஹரி.

'இது முதல் நாள் என்­ப­தால் நமக்­குச் சிர­ம­மா­கத் தெரி­கிறது. போகப்­போ­கப் பழ­கி­வி­டும்' என்று ஆறு­தல் கூறி­னான் முத்து.

என்­ன­தான் ஹரிக்­குச் சமா­தா­னம் சொன்­னா­லும் முத்­து­வும் தனக்­குள் அந்த வேலைச் சிர­மத்தை உணர முடிந்­தது.

வீட்­டிற்­குச் சென்­ற­வு­டன், அவன் தாயார் கேட்ட முதல் கேள்வி.. "என்­னடா ஒரு மாதி­ரி­யான வாடை அடிக்­கிது," என்­ற­து­தான். முத்து ஒன்­றும் சொல்­லாது மீண்­டும் ஒரு­முறை குளிக்­கப் போய்­விட்­டான்.

*

மறு­நாள் முத்­து­வும் ஹரி­யும் ஆலை நிர்­வாகி இரத்­தி­னம் இரு­வ­ரை­யும் 'அபெட்­டோர்' சென்று குளி­ரூட்­டிய அறை­யில் தொங்­கும் மாட்­டின் பெரும் பாகங்­களை எடுத்­து­வ­ரச் சொன்­னர். முனி­யாண்­டியை வேறு வேலைக்கு அனுப்­பி­னார்.

மொக்­தார் லாரியை ஓட்ட, முத்­து­வும் ஹரி­யும் லாரி­யின் பின்­பக்­கம் அமர்ந்­து­கொண்டு பய­ணம் செய்­த­னர். 'அபெட்­டோர்' வெகு தூரம் இல்லை. ஒரு ஏழு நிமி­டத்­தில் அங்கு சென்­ற­டைந்­த­னர்.

'அபெட்­டோர்' உள்ளே கடுங் குளிர். அங்கு தக்க குளிர் தாங்­கும் ஆடை­யின்றி வெகு­நே­ரம் நிற்க முடி­யாது. உள்ளே ராட்­ச­சன் போல மாடு­க­ளின் அறுக்­கப்­பட்ட பெரும் பகு­தி­கள் வலு­வான இரும்பு கொக்­கி­களில் தொங்­கிக்­கொண்­டி­ருந்­தன. அங்கு பணி­யில் இருந்­த­வர், சொல்­லிக்­கொ­டுத்­த­படி, மாமி­சத்தை, ஏதோ காத­லன் காத­லி­யைத் தழு­வு­வ­து­போல் முத்­து­வும் ஹரி­யும் தழு­விக்­கொள்ள, மேல் பகு­தியை அங்கு பணி செய்­த­வன் அறுத்­தான். நல்ல வேளை­யா­கக் கூடவே ஹரி­யும் இருந்­த­தால், இரு­வ­ரும் அதைத் தாங்­கி­ய­படி லாரி வரை தூக்­கி­யும், இழுத்­தும் கொண்­டு­வந்து சேர்த்­த­னர்.

இது­போல் மேலும் மூன்று மாமிச மலை­க­ளைத் தூக்கி இழுத்து வந்­த­தால் இரண்டு இளை­ஞர்­களும் களைத்து விட்­ட­னர். எல்­லா­வற்­றை­யும் லாரி­யில் ஏற்றி ஆலைக்­குச் சென்று அடைந்­த­போது மதிய நேரம் நெருங்­கி­யது.

கை கால்­க­ளைக் கழு­வி­ய­பின் கொண்­டு­வந்த உண­வுப் பொட்­ட­லத்­தைப் பிரித்­தான் முத்து. வேலை ஏது­மின்றி வீட்­டில் தாய் சமைத்­துப் போடும் போது, எவ்­வ­ள­வு­தான் சுவை­யான உண­வென்ற போதி­லும், அதை ரசித்து, ருசித்து உண்­டது குறைவு. பசி­யும் அதி­கம் இருப்­ப­தில்லை. ஆனால், இப்­படி உழைத்த களைப்­பில் உண்­பது, சாதா­ரண உண­வ­கத்­தில் வாங்கி வந்த உண­வென்­ற­போ­தும், அமு­தம் போல் சுவைத்­தது அவ­னுக்கு! கடின உடல் உழைப்­பால் தளர்ந்து வீடு வரும் தன் தந்­தையை நினைத்­துப் பார்த்­தான்.

இந்­தச் சிறு வய­தில், அது­வும் இரண்டு நாள் வேலை­யி­லேயே இவ்­வ­ளவு சோர்வு தெரி­கி­றதே, கால­மெல்­லாம் வெயி­லில் வேலை செய்­யும் தன் தந்­தை­யைப் பற்­றி­யும், சாலை செப்­ப­னி­டும் தொழி­லா­ளி­க­ளைப் பற்­றி­யும் அவன் மனம் சிந்­திக்­கத் தொடங்­கி­யது. சரி­யா­கக் கல்வி கற்­காது போனால் இப்­ப­டித்­தான் குறை­வான ஊதி­யத்­தில் உடல் நோக உழைத்து வாழ­வேண்­டும் என்­பதை நினைத்­தாலே அவ­னுக்­குப் பயம் வந்­தது. கல்­வி­யின் அரு­மையை நன்­றாக உணர ஆரம்­பித்­தான்.

மறு­நாள் காலை எழும்­போது தான் முத்­து­வுக்கு உடல் சோர்வை உணர முடிந்­தது.

ஆலை­யில் அன்று ரத்­தி­னம், இரு­வ­ரை­யும் மீண்­டும் 'அபெட்­டோ­ருக்கு அனுப்பி வைத்­தார் இரத்தினம். சிறிது நேரத்­தில் மொக்­தா­ரு­டன் லாரி­யில் அபெட்­டோ­ருக்கு விரைந்­த­னர்.

அங்கு ஒரு பத்­தடி உய­ரத்­தில் கட்­டப்­பட்­டி­ருந்த இரு கோபு­ரத்­தின் உச்­சி­யில் கான்­கி­ரீட் தொட்­டி­கள் கட்­டப்­பட்­டி­ருந்­தன ஒன்­றில் பன்றி இரத்­த­மும், மற்­றொன்­றில் மாட்­டின் இரத்­த­மும் சேமித்து வைக்­கப்­பட்­டி­ருந்­தது. அவை யாவும் காலை­யில் அறுக்­கப்­பட்ட விலங்­கு­க­ளின் சேமிப்பு! ஒவ்­வொரு தொட்­டி­யும் நாலரை அடி உய­ரம் இருந்­தது! கோபு­ரத்­தின் அடி­யில், குழாய் ஒன்று பொருத்­தப்­பட்­டி­ருந்­தது. ஆகவே, லாரி­யில் இருந்த டிரம்­களை இறக்கி அதன் கீழ் வைத்து, குழாய் மூலம் இரத்­தத்தை நிரப்ப ஆரம்­பித்­த­னர்.

இரத்­தம் வேக­மாக டிர­மில், நிரம்ப ஆரம்­பித்­தது. அவ்­வப்­போது அது நின்­று­வி­டும். அதற்­குக் கார­ணம், உறைந்த இரத்­தம் இறுக்­க­மாகி, தொட்­டி­யில் அடைத்­துக்­கொள்­ளும்.

மொக்­தா­ருக்கு இது­பற்றி தெரி­யும். உடனே ஹரி­யைப் பார்த்து, மேலே தொட்­டிக்­குள் இறங்கி, அடைப்பை விலக்­கு­மாறு சொன்­னான்!

வந்­ததே ஹரிக்­குக் கோபம்!

"என்­னையா அந்த இரத்­தத் தொட்­டிக்­குள் இறங்­கச் சொல்­கி­றாய். இடுப்பு வரைக்­கும் இரத்­தம் இருக்­கும் போல் தெரி­கிறது. என்­னால் முடி­யாது," என்­றான்.

இதற்­கி­டை­யில் முத்து அவ­னுக்­குக் கிடைத்த நீண்ட கம்­பி­யைக்­கொண்டு குழாய் வாய்­வ­ழிக் குத்­திப்­பார்த்­தான். அடைப்பு வில­கி­ய­தா­கத் தெரி­ய­வில்லை.

மொக்­தார் தலையை முடி­யாது என்ற பாவ­னை­யில் அசைத்­தான்.

மீண்­டும் மொக்­தார் பேச ஆரம்­பித்­தான்,

'அடைப்பு தொட்­டிக்­குள்­தான். அதைச் சரி செய்­தால்­தான் இரத்­தம் சீராக ஓடும். வேறு வழி இல்லை," என்­றான்!

"எந்த ஒரு மாற்று ஆடை ஏதும் இன்றி எப்­படி இறங்­கு­வது? நாலு வெள்ளி சம்­ப­ளத்­திற்கு இதை­யெல்­லாம் செய்ய வேண்­டுமா," என்று கோப­மாக கத்­தி­னான் ஹரி.

இதை­யெல்­லாம் கேட்­டுக்­கொண்டு புன்­ன­கைத்­த­படி லாரி­யில் சாய்ந்­த­படி நின்­றான் மொக்­தார்.

உண்­மை­யில் மொக்­தாரை குறை சொல்­வ­தற்­கில்லை. அவன் ஓட்­டு­நர் வேலை செய்­ப­வன். அவ­னி­டம் கோபத்­தைக் காட்டி என்ன செய்ய?

நிலை­மையை நன்­றா­கப் புரிந்­து­கொண்­டான் முத்து. ஹரி­யின் பொறு­மை­யின்மை மற்­றும் முன்­கோ­பம் பற்­றி­யும் அவன் நன்கு அறி­வான்.

உடனே மொக்­தாரை நோக்கி ஏதே­னும் பழைய மாற்று அரைக்­கால் சட்டை லாரி­யில் இருக்­குமா எனக் கேட்க, கொஞ்ச நேரச் சிந்­த­னைக்­குப்­பின், ஓட்­டு­நர் அம­ரும் பகு­தி­யைக் கிண்டி, அரைக்­கால் சட்டை என்ற ஒரு கந்­த­லைக் கொண்­டு­வந்­தான்.

வேறு எதை­யும் சிந்­திக்­கா­மல் நேரே அங்­குள்ள குளி­ய­ல­றைக்­குச் சென்று, தான் அணிந்­தி­ருந்த ஆடை­யைக் கலைத்து, இந்­தக் கந்­தல் கால்­சட்­டையை அணிந்து வந்­தான் முத்து. இதைக் கண்­ட­வு­டன் மொக்­தா­ருக்கு சிரிப்­பைக் கட்­டுப்­ப­டுத்த முடி­ய­வில்லை.

ஹரிக்கு என்ன சொல்­வது என்று தெரி­யா­மல் மௌன­மாய் இருந்­தான். முத்து மெல்ல இதற்­கா­கச் செய்து வைக்­கப்­பட்­டி­ருந்த கயிற்­றுப்­ப­டி­யின் மேலே ஏறி தொட்­டிக்­குள் இறங்­கி­னான். தொடை­வரை இரத்­தம்! ரத்­தத்­தின் உச்­சத் துர்­நாற்­றம் மற்­றொரு புறம்! அவ­னுக்கு அரு­வ­ருப்­பும், கால் வழுக்கி விழுந்­து­வி­டு­வோமோ என்ற பய­மும் கவ்­விக்­கொண்­டது! எப்­ப­டியோ இரத்­தம் தொட்­டியை விட்­டுக் கீழே இறங்­கும் நடுப் பகு­திக்கு வந்து, பாதத்­தால் தட­விப் பார்த்­தான். ஏதோ தடிப்­பாக, கொழ­கொழ வென்று அடைத்­துக்­கொண்­டி­ருக்­கிறது என்­பதை உணர்ந்­தான். அது நிச்­ச­ய­மாக இரத்­தம் உறைந்த நிலை­யென அவ­னுக்கு மன­தில்­பட்­டது. மேலி­ருந்­த­வாறே மொக்­தா­ருக்கு நிலை­மையை எடுத்­துச் சொன்­னான்.

மொக்­த­ருக்கு இது­பற்­றிய முன்­ன­னு­ப­வம் இருந்­த­தால், குனிந்து கையால் எடுத்து அதை அகற்­றி­விடு என்று சொல்­லி­விட்­டுச் சிரித்­தான்.

முத்து அப்­ப­டியே கொஞ்­சம் உறைந்து நின்­று­விட்­டான்.

சரி, இரத்த ஆற்­றில் கால் வைத்­தாகி விட்­டது. இனி கைவைப்­ப­தில் என்ன வேண்­டிக் கிடக்­கிறது, என்று தனக்­குத்­தானே ஆறு­தல் சொல்­லிக்­கொண்டு, கையை­விட்டு அந்த அடைப்பை நீக்­கி­னான்.

கீழே இரத்­தம் டிரா­மிற்­குள் பாய்­வ­தாக ஹரி சொன்­ன­வு­டன் கால்­களில் இருந்­தும் கைகளில் இருந்­தும் இரத்­தம் சிந்தி வழி­யும் வண்­ணம், மெது­வா­கக் கீழே இறங்­கி­னான் முத்து.

முத்து அந்­தக் கோலத்­தில் இறங்­கு­வ­தைப் பார்த்த ஹரிக்­குக் கோப­மும் அனு­தா­ப­மும் ஒருங்கே ஏற்­பட்­டது. கீழே இறங்­கிய முத்து பக்­கத்­தில் இருந்த தண்­ணீர் குழா­ய­டி­யில் இரத்­தம் போகும்­வரை கைகால்­க­ளைக் கழு­வி­விட்டு அரு­கில் இருந்த குளி­யல் அறைக்­குச் சென்று உடை மாற்­றிக்­கொண்டு வந்­தான்.

இப்­பொ­ழுது இரத்­தம் நிரப்­பப்­பட்ட டிரம்­களை லாரி­யில் ஏற்ற வேண்­டும். அது எளி­தான காரி­ய­மல்ல. மொக்­தார் இதற்­கா­கவே இரண்டு வலு­வான ஐந்­த­டிப் பல­கையை லாரி­யின் பின்­பு­றத்­தில் வைத்­தி­ருப்­பான். அதை லாரி­யின் கடை­சிப் பகு­தி­யில் சாய்த்து வைத்து டிரம்மை பல­கை­யின் மீது ஏற்றி உருட்டி, லாரிக்­குள் தள்ள வேண்­டும் என்­றான்!

இரு டிரம்­களும், நிறைந்த நிலை­யில் இருந்­தன. இதை எப்­படி உருட்டி லாரிக்­குள் ஏற்­று­வது என்று நினைத்து நின்­று­கொண்­டி­ருந்த இரு­வ­ரை­யும் உற்­சா­கப்­ப­டுத்­தி­னான் மொக்­தார்.

"உங்­க­ளால் முடி­யும். நானும் கொஞ்­சம் உத­வு­கி­றேன்," என்­றான்!

முத்து லேசா­கப் புன்­மு­று­வல் செய்­து­விட்டு ஹரி­யு­டன் சேர்ந்து தள்ள ஆரம்­பித்­தான். டிராம் கொஞ்­சம்­கூட அசைந்­த­பா­டில்லை. தொடர்ந்து, பலம்­கொண்ட மட்­டும் தள்­ளி­னர். மொக்­தார் ஒரு நீண்ட இரும்­புத்­தடி கொண்டு டிராம்­மின் நடுப்­ப­கு­தி­யில் வைத்து நெம்­பி­னான்.

சிறி­து­நேர முயற்­சிக்­குப்­பின் டிராம் மெல்ல மேல் நோக்கி நக­ரத் தொடங்­கி­யது. பலம்­கொண்ட மட்­டும் இரண்டு டிரம்­க­ளை­யும் எப்­ப­டியோ லாரிக்­குள் தள்­ளி­விட்டு, ஓர் ஓர­மாக அமர்ந்து கொஞ்­சம் களைப்­பா­றி­னர்.

நான்கு வெள்­ளிச் சம்­ப­ளத்­துக்­காக இப்­ப­டியா நாம் கஷ்­டப்­ப­ட­ணும்? என்று முனக ஹரி ஆரம்­பித்­தான்.

முத்து அமை­தி­யாக இருந்­தான்.

சிறிது நேர ஓய்­விற்­குப்­பின், லாரி­யில் ஏறி, டிரம்­க­ளைச் சரி­யாத வண்­ணம் பிடித்­த­படி நின்­றிட, மொக்­தார் லாரியை ஆலையை நோக்கி ஓட்ட ஆரம்­பித்­தான். அந்­தக் களைப்­பி­லும் மொக்­தார் பாடிக்­கொண்டே ஓட்­டு­வது, லாரி­யின் பின்­பு­றம் நின்று கொண்­டி­ருக்­கும் இரு­வ­ருக்­கும் லேசா­கக் கேட்­டது. ஆலை வந்­த­டைந்­த­தும், டிரம்­களை இறக்கி அவற்றை ஆலைக்­குள் உருட்டி வந்து அரைக்­கும் இயந்­தி­ரத்­திற்­குள் கொட்ட வேண்­டும். இங்­கும் படாத பாடு­பட்­ட­னர். இயந்­தி­ரம் மூன்­றடி உய­ரத்­தில் அமைக்­கப்­பட்­டி­ருந்­த­தால் இங்­கே­யும் பலகை போட்­டுத் தள்ள வேண்­டி­யி­ருந்­தது. வேலையை முடித்த களைப்பில் ஓர் ஓரத்­தில் அமர்ந்து ஓய்­வெ­டுத்­த­னர்.

ஹரி­யின் முன­க­லுக்­கும் வெறுப்­புக்­கும் இடை­யி­லும் நாள்­கள் வேக­மாக நகர்ந்­தன. போகப்­போக வேலை­யின் சுமை, பழக்­கப்­பட ஆரம்­பித்­தது. போதா­த­தற்கு மொக்­தா­ரின் நகைச்­சு­வைப் பேச்­சும் சிரிப்­பும், ஹரி­யைக்­கூட உற்­சா­கப்­ப­டுத்­தி­யது. இப்­பொ­ழு­தெல்­லாம் மொக்­தாரை கிண்­டல் செய்து, அவன் வேடிக்கை சிரிப்­பைக்­கேட்டு, அவ­னும் சிரிக்­கத்­தொ­டங்­கி­னான். ஒரு மாதம் எப்­ப­டியோ ஓடி முடிந்­தது.

ஹரி ஏதோ முடி­விற்கு வந்­த­வ­னாக, "இந்த இரண்­டாம் மாதம் முடிந்­த­வு­டன் வேலை­யி­லி­ருந்து நின்­று­வி­டப் போகி­றேன்," என்று சொன்­னான். படிப்­புக்குத் தயா­ராக வேண்­டும் என்­றான். நண்­பன் வில­கப் போகி­றான் என்­ற­வு­டன், முத்துவும் வில­கு­வ­தாக ஹரி­யி­ட­மும் சொன்­னான். "நாம் நாளை திரு இரத்­தி­னம் அவர்­க­ளி­டம் முறைப்­படி வில­கல் கடி­தத்­தைக் கொடுத்து விடு­வோம்," என்­றான் முத்து.

*

மறு­நாள் இரெத்­தி­னத்­தி­டம், வில­கல் கடி­தத்தை இரு­வ­ரும் கொடுக்­கும்­போது அவர் முகத்­தில் எந்த மாற்­ற­மும் தெரி­ய­வில்லை. "சரி, தொடர்ந்து இந்த மாதம் முழு­தும் எப்­போ­தும் போல் வேலை செய்­யுங்­கள்," என்று சொல்­லி­விட்டு நகர்ந்­தார். இரு­வ­ரும் வில­கப்­போ­கும் செய்­தியை நாக­லிங்­கத்­தி­ட­மும் முனி­யாண்­டி­யி­ட­மும் சொன்­னான் முத்து. இதை அவர்­களும் எதிர்­பார்த்­தது தான். மொக்­தார் மட்­டும் இதைக் கேட்­டுக் கொஞ்­சம் வருத்­தப்­பட்­டான்.

நாட்­கள் உருண்­டோடி மாதத்­தின் கடைசி நாள் மாலை­யும் வந்­தது. முத்­து­வும் ஹரி­யும் விடை­பெ­றும் நேரம். மொக்­தார் உணர்ச்­சி­பூர்­வ­மாக இரு­வ­ரின் கைக­ளைக் குலுக்­கிய வண்­ணம் 'ஐ விஷ் யூ லக்' என ஆங்­கி­லத்­தில் வாழ்த்­தி­னான். எப்­பொ­ழு­தும், எதற்­கும் சிரிக்­கும் அவன் முகத்­தில் இப்­பொ­ழுது அதன் சாயல் தென்­ப­ட­வில்லை. அமை­தி­யாக வேலை­யில் கவ­னம் செலுத்­திக்­கொண்­டி­ருந்த நாக­லிங்­கம், முத்­து­வின் அரு­கில் வந்­தார்.

"இந்த இரண்டு மாதம் உங்­கள் இரு­வ­ரின் கடின உழைப்­பைப் பார்த்­தேன். இது உங்­க­ளுக்கு நல்­ல­தொரு அனு­ப­வம். உங்­கள் படிப்­பைத் தொட­ருங்­கள். எதிர்­கா­லத்­தில் நல்ல வேலை­யில் நீங்­கள் அம­ர­லாம். எங்­கள் தலை­மு­றை­யோடு இந்­தக் கஷ்­டம் போகட்­டும். என் மனைவி மக்­க­ளைத் தமி­ழ­கத்­தில் விட்­டு­விட்டு, இங்கு பல காலம் மாடாய் உழைக்­கி­றேன்.

முறை­யா­கப் படித்­தி­ருந்­தால் இந்த அவ­ல­நிலை வந்­தி­ருக்­காது. நன்­றா­கப் படித்து முன்­னே­றுங்­கள்," என்று தனது மனக்­கு­மு­ற­லைக் கொட்­டித் தீர்த்­த­தோடு ஆசி­யும் வழங்கி வழி­ய­னுப்பி வைத்­தார்.

ஆலையை விட்டு ஹரி­யு­டன் சற்­று­தூ­ரம் நடந்­து­சென்ற முத்து, மீண்­டும் ஒரு­முறை ஆலை­யைத் திரும்­பிப் பார்த்­தான். அந்த ஆலை ஒரு பல்­க­லைக் கழ­கம் போல் மன­தில் தோற்­றம் தந்­தது!