சிறுகதை கலைவாணி இளங்கோ
லிட்டில் இந்தியா பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது. பொங்கல் பண்டிகையின் உற்சாகப் பரபரப்பு மக்களிடையே பரவி இருந்தது.
பண்டிகை வர இன்னும் இரு தினங்கள்தான் உள்ளன என்பதால் மக்கள் கூட்டம் அலைபோல் கேம்பல் லேனைச் சூழ்ந்து இருந்தது. அனைவரும் தங்கள் வீட்டிற்குத் தேவையானவற்றை வாங்குவதில் முண்டியடித்தனர்.
அஞ்சனும் புத்தாடைகளை வாங்கத் தேக்கா பகுதிக்கு வந்தான். முக்கி முனங்கிக் கிடைத்த சிறு சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு நடக்க ஆரம்பித்தான்.
"அங்கிள் வணக்கம், அந்த பாத்தேக் சட்டைய எடுங்க, இன்னும் இரண்டு சட்டைகளையும் எடுத்துக்குறேன். தாத்தாவோடே நண்பர்களுக்கு ரொம்பப் புடிக்கும்," என்றான் அஞ்சன்.
"தம்பி நல்லா இருக்கீயா அய்யா? பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. இன்னுமா தாத்தாவின் கூட்டாளிங்களுக்கு உடுப்பு வாங்குறே? நான்கூட அந்த மில்லு பக்கம்போக நேரமில்லைப்பா," என்ற கடைக்காரத் தாத்தா மெல்ல உடைகளைப் பையில் போட்டுக்கொடுத்தார்.
"நன்றி அங்கிள். என்னுடைய ஒவ்வொரு தீபாவளியும் பொங்கலும் அவர்களோடுதான் ஆரம்பிக்கும். பழச அவ்வளவு எளிதில மறக்கமுடியுமா தாத்தா?" என்று கூறியபடி புன்னகைத்து மெல்ல நடந்தான் அஞ்சன்.
பரிசுப் பொருட்கள் வாங்குவதில் மூத்த பேரனான அஞ்சனோடு யாரும் போட்டியிட முடியாது. அப்படித்தான் பார்த்துப் பார்த்து தனது குடும்பத்திற்கு மட்டுமல்ல தன்னை வளர்த்தவர்களுக்கும் அன்புக்குரியவர்களுக்கும் தவறாமல் தீபாவளிக்கும் பொங்கலுக்கும் முன்பு ஆண்டுதோறும் வாங்குவான்.
இந்த 30 வயதுள்ள வளர்ந்த பையன்தான் தமது வாழ்நாள்களின் முக்கால்வாசிப் பகுதியைத் தாத்தா பாட்டியோடுதான் கழித்தவன் ஆவான்.
அவனுக்கு 7 வயது இருக்கும்போது அவனது தந்தைக்கு கோலாலாம்பூரில் வேலை கிடைத்தது.
குடும்பச் சுமை தாங்காமல் தவித்துக்கொண்டிருக்கும் அஞ்சனின் அப்பாவிற்கு அந்தப் புதிய வேலை கைகொடுக்கும் என்பதால் அங்கேயே குடும்பத்தோடு சென்றுவிடலாம் என்று அவர் முடிவு செய்தார்.
அப்போது இங்கு படித்துக் கொண்டிருந்த பேரனைப் பிரிய மனமில்லாத அஞ்சனின் தாத்தா ராமு, தம் கூடவே அஞ்சன் வளரட்டும் என்று அவர் அன்புடன் வேண்டிக்கொண்டதால் அவன் பெற்றோர் 3 தம்பிகளை மட்டும் அழைத்துக்கொண்டு மலேசியாவிற்குச் சென்றனர்.
தாத்தா ராமு அவர்கள் கஃப் ரோட்டிலுள்ள மாவு மில்லில்தான் வேலை செய்துகொண்டிருந்தார். அஞ்சனை அவன் பெற்றோரிடம் காட்ட மாதம் 3 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு அவனையும் அழைத்துக்கொண்டு கோலாலம்பூருக்குச் செல்வார்.
அந்த மூன்று நாட்கள்கூட அந்தச் சிறுவனுக்கு மகிழ்ச்சியைவிட ஏக்கத்தைத்தான் அளிக்கும்.
பாட்டி தனியாக சிங்கப்பூரில் என்ன செய்கிறார்களோ என்று எண்ணிப் பரிதவிக்கும் அந்தப் பிஞ்சு உள்ளம்.
அப்படி ஒரு அளவற்ற அன்பையும் மதிப்பையும் பாசத்தையும் தாத்தா பாட்டிமீது வைத்திருந்தான் அந்தப் பொடியன்.
அஞ்சன், தாத்தா ராமு வேலை பார்த்த கஃப் ரோட்டிலுள்ள மாவு மில்லை நோக்கி நடந்தான். அங்குதான் தாத்தாவின் நண்பர்கள் இன்னும் வேலை செய்து கொண்டிருந்தனர்.
ஆலயத்தை நோக்கி வரிசையில் நிற்கும் பக்தர்கள் கூட்டம் போல ஒவ்வொரு கடையிலும் வழிந்தோடும் கூட்டத்தைப் பொருட்படுத்தாமல் அவன் நடந்தான். அவன் கால்கள் முன்னோக்கிச் செல்ல, எண்ண அலைகள் பின்னோக்கிச் சென்றன.
அஞ்சன் பால்ய பருவத்தில் தாத்தா ராமுவை அந்த கஃப் ரோடு மாவு மில்லில் தான் சந்திப்பான். அதுதான் 65 வயது தாத்தாவின் 35 ஆண்டுகாலப் பணியிடம் ஆகும்.
வயது முதிர்ந்த காலத்திலும் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதில் தாத்தா தீர்மானமாக இருந்தார்.
பூன் கெங்கில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் படித்து வந்த அஞ்சன், பள்ளி முடிந்தபின் தினமும் மாவு மில்லுக்குச் சிட்டாய்ச் சிறகடித்துப் பறப்பான்.
தாத்தா வேலை பார்க்கும் அழகை ரசிக்க அவனுக்கு இரு கண்கள் போதா.
"தாத்தா, உங்களுக்கு ஏதாச்சும் உதவி செய்யவா? நான் பள்ளிக்கூடத்தில் வீட்டுப்பாடங்களை முடிச்சிட்டேனே," எனச் சொல்லிக்கொண்டே தாத்தாவின் நிழலில் விளையாட ஆசைப்படுவான்.
"சரிப்பா தம்பி. நீ போய் மேசையில இருக்கும் தோசைய போய்ச் சாப்பிடு. பசியோடு இருப்பே. சாப்பிட்டு பின்ன தாத்தாவுக்கு உதவி செய்," எனச் செல்லமாக அவனது முடியைக் கோதிவிடுவார்.
இந்த உண்மை யாருக்கும் தெரியாமல் இருப்பது நல்லது. குறிப்பாகப் பாட்டிக்கு!
பாட்டியின் சமையலைவிடத் தனது தாத்தா வாங்கிக் கொடுக்கும் மசாலாத் தோசையில்தான் ருசி அதிகம் என்று நினைக்கும் அளவிற்கு அஞ்சனின் நாக்கு மாறிவிட்டது! அப்படி ஒரு பந்தம், தாத்தாவிற்கும் பேரனுக்கும்!
பொதுவாகத் தாத்தா பாட்டியிடம் வளரும் பேரப்பிள்ளைகள் செல்லம் அதிகம் கொடுப்பதால் சரியாக இருக்கமாட்டார்கள் என்ற பொதுவான எண்ணத்தை உடைத்து எறியும் அளவிற்கு இருந்தது அஞ்சனின் தாத்தா பாட்டியின் வளர்ப்பு முறை.
கனிவையும் கண்டிப்பையும் சரியான அளவில் காட்டி அவன் பிஞ்சு மனத்தில் நங்கூரம் அடித்து அவர்கள் உட்கார்ந்துகொண்டனர் என்றால் அது மிகையாகாது.
வாரநாட்களில் மதியம் பள்ளி முடிந்த பின் தன் புத்தகப் பையைத் தூக்கிக் கொண்டுவரும் பேரனுக்காக மாவு மில்லில் வேலை செய்யும் தாத்தா மாவு அரைக்கும் இயந்திரங்கள்மீது ஒரு கண்ணும், பேரனுக்காக வழிப்பாதைமீது ஒரு கண்ணும் வைத்துக் காத்திருப்பார்.
"அய்யா ராமசாமி, இந்த மிஷனைக் கவனி. நான் போய் இந்தப் பய என்ன பண்ணுறான்னு பார்த்திட்டு வாரேன். வெளியே உட்கார்ந்து படிக்கச் சொன்னேன். உள்ளுக்குள்ள ஒரே சத்தம் பாரு," என்றார் தாத்தா.
"அட, நீங்க ஒன்னு. அவனுக்குப் படிப்பவிட நம்ம வேலையதான் ரொம்ப புடிச்சிருக்கு. எல்லாருக்கும் உதவி செய்யுறான். தொழில வேகமாகக் கத்துக்குவான்னு நினைக்கிறேன். பின்ன உங்க ரத்தமாச்சே' எனச் சீனக்கூட்டாளி சாங் சொல்லும்போது தாத்தா மீசை முறுக்கும் அழகோ அழகு.
இப்படியே தனது வாழ்க்கையை வடிவமைத்த பெருமை தாத்தாவிற்கும் மாவு அரைக்கும் இயந்திரங்களுக்கும்தான் உள்ளது என்பது அஞ்சனின் இதயத்தில் பசுமரத்தாணி போல பதிந்துவிட்டது.
சிறுவன் வந்தவுடன் தாத்தா ஆசையாக வாங்கி வைத்த கோழிச்சோற்றை உண்பான்.
அதற்கு முன் தாத்தா சாப்பிட்டரா என்பதை சைகை மூலமாகக் கேட்க, பரபரப்பாக வேலை செய்யும் மாவு அரைக்கும் இயந்திரங்களின் சத்தத்தில் போட்டி போடாமல் தாத்தாவும் சைகை மூலமாகப் பதில் அளிப்பார்.
பல சமயம் அஞ்சனின் பள்ளி நண்பர்கள், அவன் தினமும் மாவு மில்லுக்குப் போவதைப் பற்றி ஏளனமாகப் பேசினர்.
"என்ன பெரிய மாவு மில்லு, ஒரே தூசி! அழுக்கு, கண் எரிச்சல் கசகசவென்று இருக்கும் ஏதோ அமெரிக்கா போகிற மாதிரி துள்ளிக் குதிக்கிற நீ," என்னும் நண்பர்களின் பேச்சிற்குக் கொஞ்சங்கூட அவன் செவிசாய்க்க மாட்டான் அஞ்சன்.
தான் பின்பற்றவேண்டிய பண்பு நலன்களையும் பள்ளியையும்விட மாவு மில்தான் அதிகமாகக் கற்றுக் கொடுத்து கொண்டிருப்பதாக உறுதியாக நம்பிய அவன், சென்டிமீட்டர் புன்னகை பூரித்த முகத்தோடு மாவு மில்லுக்குப் பறந்துவிடுவான்.
காலை முதல் மாலை வரை கடினமாக உழைத்துக் கொண்டிருக்கும் தாத்தா மற்றும் அனைத்துத் தொழிலாளிகளின் உடல் வலிமையையும் விடாமுயற்சியையும் சகிப்புத்தன்மையையும் எண்ணி வியந்துள்ளான்.
இன்று உள்ள வசதி வாய்ப்புகள் 1990களில் அவ்வளவாக இல்லை. தொழில்நுட்ப வசதிகளோ, மின்னியல் சாதனங்களோ, பெரிய இயந்திரங்களோ அவ்வளவாக இல்லாத பட்சத்தில் மசாலாப் பொருட்களைஅரைக்க மகளிர் கூட்டம் மணிக்கணக்கில் காத்துக் கிடக்கும். ஆதலால் வேலைப் பளு குறைந்தபாடே இல்லை.
இருப்பினும் தாத்தா தமது வேலையைப் பற்றி என்றும் குறை கூறியதில்லை.
தனது வேலையை விருப்பத்தோடு ஆசையாகச் செய்யும் அவரின் பண்பை அஞ்சன் மதித்தான்.
"நீயும் எதிர்காலத்தில செய்யுறே வேலைய விரும்பிச் செய்யணும், குறை கூறக்கூடாது. எத்தனையோ பேர் வேலையே இல்லாமல் தவிக்கிறாங்கப்பா," என்ற தமது தாத்தாவின் வார்த்தைகள் வேதவாக்காக அஞ்சனுக்கு எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கும்.
அவரைப்போல் அங்கு கண் எரிச்சலோடும், தொண்டை எரிச்சலோடும் உழைக்கும் பல உன்னதப் பிறவிகளுக்குத்தான் என்றாவது உதவ வேண்டும் என்ற எண்ணம் அப்போதே அவனது நெஞ்சில் துளிர்விட ஆரம்பித்தது.
மாவு மில் முதலாளி தியோ தொழிலாளிகளை அன்போடும் சமமாகவும் நடத்தி வருவார்.
அதுவும் தமது மூத்த பணியாளர் தாத்தாவிடம் தனி மரியாதை காட்டி வந்தார். அவர் கொடுக்கும் போனஸ் $50 வெள்ளியில் பாதியைத் தாத்தா தமது சகோதரியாக மதிக்கும் மலாய்ப் பாட்டி சுரினாவுக்குத் தந்துவிடுவார்.
அந்தப் பாட்டி இந்தத் தள்ளாத வயதிலும் மாவு மில் பக்கத்திலுள்ள கடையில் கூட்டிப்பெருக்கும் வேலை செய்கிறார்.
தாத்தாவின் கடன் தொல்லைகளையும் வீட்டு வாடகையும் கூடக் கட்ட கஷ்டப்பட்ட சமயத்தைப் பற்றியும் அந்த வயதிலேயே அறிந்து இருந்த அஞ்சனுக்கு இந்தச் செயல் வியப்பாக இருக்கும்.
"தம்பி, என்னதான் நமக்கு கஷ்டம் வந்தாலும் நம்மால் முடிஞ்ச உதவியை முடியாதவர்களுக்குச் செய்யணும். கொடுக்கக் கொடுக்கக் கரம் தேய்ஞ்சிப் போகாதுப்பா. இதுதான் நம் நாட்டு மக்களுக்கும் சமூகத்திற்கும் செய்யக்கூடிய சிறு உதவி," என்பார் தாத்தா.
அஞ்சனைப் பொறுத்தவரை தாத்தா என்றாலே ஒரு கொடைவள்ளல்தான்.
ஒரு சமயம் அஞ்சனின் வாழ்வில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அன்று சனிக்கிழமை. அஞ்சனுக்கு விடுமுறை.
மிளகாய்த்தூள் அரைக்கும் இயந்திரத்தை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு வயது 12 ஆகி விட்டது.
ஐந்து வருட காலமாக இப்படிப்பட்ட இயந்திரங்களை வேடிக்கை பார்த்துதான் அவன் வளர்ந்தான்.
இருப்பினும் அன்று ஒரு தொழிலாளி, லிம் என்பவர் இயந்திர அழுத்த அளவை ஏற்றி இறக்கிக்கொண்டு இருப்பதையும் மாவு அழகாக அரைத்து வெளியே வருவதையும் பார்த்துக் கொண்டிருந்தான்.
அஞ்சனையே கவனித்த தாத்தா மதிய வேளையில் அவனிடம் பேசக் காத்துக்கொண்டிருந்தார்.
தாத்தாவுக்குப் பாட்டி கொடுத்து அனுப்பிய நெத்திலிச் சம்பாலையும் சோற்றையும் எடுத்து வைத்தான்.
"கண்ணா, இங்கே வாப்பா உன்னிட்ட ஒண்ணு பேசணுமே," என்றார் தாத்தா
"என்ன தாத்தா, உடம்புக்கு முடியிலையா?" என்று பதற ஆரம்பித்தான்.
"இல்லைப்பா போன வாரம் நீ உன் அம்மா, அப்பாவைப் பார்க்க மலேசியா போனதானே. அங்கு உன் தம்பிகளோடு சரியாகப் பேசலே, நல்லா பழகலே'ன்னு கேள்விபட்டேன்ப்பா."
"தாத்தா, எனக்குத் தம்பிகளின் பழக்கவழக்கமே பிடிக்கலை. அப்பா அம்மாவையே எதிர்த்துப் பேசுகிறாங்க, என்கிட்ட மரியாதை இல்லாமப் பேசுகிறாங்க. படிக்கிற நேரத்தில் படிக்காமல் கூத்துதான் அடிக்கிறார்கள், அம்மா தனியாகக் கஷ்டப்படுறாங்க. தெரியுமா? வர ஆத்திரத்தில் 'ஓங்கி அடிச்சா ஒன்றரை வாரம் எந்திரிக்க மாட்டீங்கன்னு' என்று மிரட்டிட்டு வந்தேன். பாவம், அப்பாவுக்கு இவர்களைக் கண்டிக்க நேரமில்லை," என்றான் அஞ்சன்.
இதைக் கேட்டுச் சிரித்த தாத்தா "சரி இப்போ மாவு அரைக்கும் இயந்திரத்தைப் பார்த்தியே, ஏன்?"
"ஆமா பார்த்தேன் தாத்தா, சரியான அழுத்தம் கொடுத்துதான் மஞ்சள், மிளகு, இஞ்சி. வெந்தயம் போன்ற பொருட்களைப் போட்டு மாவு அரைக்கிறாங்க. அதைத்தான் கவனிச்சேன். அங்கிள் லிம் மிகச் சரியான அளவில் அழுத்தத்தைக் கொடுத்தாரு தாத்தா. கூடுதலாகவும் இல்லை, குறைக்கவும் இல்லை தெரியுமா! மல்லி மாவு சரியாக வந்துச்சு. குழம்பும் சுவையாகத்தான் இருக்கும் என்று நம்புறேன்," என்றான் அஞ்சன்.
"ஆமாம், அது போல தான்பா, குடும்பமும் கண்டிப்பும் அன்பும் என்கிற அழுத்தம், சரியான அளவில் கொடுக்கலன்னா உன் தம்பிகளிடையே உனக்கு எப்படிப் பிணைப்பு வரும்? பந்த பாசமே இல்லாமலே வளர்ந்து விடுவீர்களேயப்பா.
"உன் தம்பிகளை அடிப்பது மிரட்டுவது எல்லாம் அதிகமாகப் போய்டுச்சுனுனா அவர்கள் உன்னை வெறுக்க மாட்டார்களா? ஒற்றுமை எப்படிப்பா இருக்கும்?
"உங்கள் அம்மா, அப்பாவுக்கு இது மகிழ்ச்சிய கொடுக்குமா? என் காலத்திற்கு அப்புறம் நீங்கதானே உங்க அம்மா, அப்பாவுக்குத் துணை.
"விட்டுக்கொடுப்பதால் யாரும் கெட்டுப்போக மாட்டார்களப்பா அய்யா.
"எனவே, உன் தம்பிகளிடம் அடிக்கடி தொலைபேசியில் பேசு, அன்பாகக் கடிதங்களை எழுதிப் போடு, பிணைப்பை ஏற்படுத்திக்க, ஒற்றுமையா இருக்கணும்.
"இது வீட்டிற்கும் சரி, நாட்டிற்கும் இது பொருந்தும். பல இன சமூதாயம் வாழும் நம் நாட்டில். அனைவரும் ஒற்றுமையின்றி வாழ்ந்தால் நாட்டில் நிம்மதி இருக்குமா... சொல்," என்று கேட்கும்போதே அஞ்சனது கண்கள் குளங்களாயின.
நல்ல பண்புகளை ஊட்டக்கூடிய கதைகளைப் பாட்டியின் மூலம் கேட்டு வளரும் அஞ்சனுக்கு உண்மை விளங்கிவிட்டது.
சோற்றை மென்றுகொண்டே தூசி படிந்த மாவு அரைக்கும் இயந்திரத்தை நன்றியுணர்வோடு பார்த்தான்.
அன்று முதல் இன்று வரை அவன் தன் தம்பிகளோடு சண்டை சச்சரவு செய்வதில்லை. தன் கடமைகளைச் சரியாகச் செய்யத் தொடங்கினான்.
முரண்பட்ட கொள்கைகளுடைய தம்பிகளிடம் புத்திமதி கூறும்போதுகூட அமைதியைக் கடைப்பிடிப்பான்.
தன்னை யார் பேசினாலும் ஏசினாலும் தன் கருத்துகளை அஞ்சாமல் பணிவுடன் கூறி வந்தான்.
இப்படிப்பட்ட அறிவுரைகளையும் அரவணைப்பையும் வாரி வழங்கிய ராமு தாத்தாவின் மாவு மில்லுக்கு வந்துவிட்டான் அஞ்சன். தீபாவாளிப் பண்டிகையின் ஆரவாரமே இல்லாமல் அமைதியாகக் காணப்பட்டது மாவு மில். அதே பழைய கட்டடம்தான்.
இரு தொழிலாளிகள்தான் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். அந்த இருவரும் தாத்தாகூட வேலை பார்த்த சீன மற்றும் இந்திய நண்பர்கள்.
அஞ்சனைப் பார்த்த இருவரும், "வாப்பா... அஞ்சன்.. நல்லா இருக்கியா.. ஏதாச்சும் சாப்பிடுறியா?" என்றனர்.
அஞ்சன் அவர்களிடத்தில் பரிசுப் பொட்டலங்களை நீட்டி "அது எல்லாம் வேணாம் தாத்தா. பொங்கல் வரப்போகுது. உங்களுக்கு எல்லாம் புது உடுப்பு வாங்கி இருக்கேன்," என்று கொடுத்தான்.
"நீ மட்டும்தான் எங்களை நினைப்பு வச்சுக்கிட்டு மாசம் ஒரு தடவை பார்க்க வர்றே. ஒவ்வொரு பண்டிகைக்கும் எங்களுக்குக் காசு கொடுக்கிறே. இந்தக் காலத்திலே பெற்ற பிள்ளையே பெற்றோர்களை மறந்துவிடுறாங்க.
"சும்மா சொல்லக்கூடாதுப்பா, உன் தாத்தா, பாட்டி வளர்ப்பு அப்படி. விதைநெல் போட்டால் கள்ளிச் செடியா முளைக்கும்?
"உன் தாத்தாவைப்பற்றி பேசாத நாளேயில்லை. அப்படி ஒரு நல்ல மனுசன்பா. பார்க்கிறதுக்குகூட அவரையே உரிச்சு வைச்சுருக்கே. ரொம்ப சந்தோஷம்பா.
"நீ போன மாசம் ஆதரவற்ற பிள்ளைகள் இல்லத்தில செஞ்ச தொண்டூழியத்தைப் பத்தி செய்தித்தாளில படிச்சேன்.
"இன்று வழக்கறிஞராக இருக்கிற நீ, உன் வட்டார மக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குற என்றும் கேள்விப்பட்டேன். உன் தாத்தாவைப் போல் நீயும் அனைவருக்கும் உதவி செய்யுறத பார்க்கும்போது பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்பா," என்றார் லிம் தாத்தா.
"உன்னைப்போன்ற பிள்ளைங்கதான் இன்றைய காலகட்டத்தில் ரொம்ப தேவை. உன் தாத்தா உயிரோடு இருந்திருந்தால் ரொம்ப பெருமைபட்டிருப்பாரு," என்று கூறினார் இன்னோர் தாத்தா.
ஆமாம். ராமு தாத்தா இறந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவரின் மறைவிற்குப் பின் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தீபாவளிக்கும் பொங்கலுக்கும் அஞ்சன் இந்த மாவு மில்லுக்கு வருவான்.
தன் தாத்தாவின் நினைவுகள் கொண்ட பொக்கிஷமாக அந்த இடத்தையே எண்ணினான்.
அனைவருக்கும் பணம் கொடுத்துவிட்டு அங்கு இருந்த பழைய உடைந்த மாவு அரைக்கும் இயந்திரத்தைத் தடவிவிட்டு விழிகளின் விளிம்பில் தேங்கி நிற்கும் கண்ணீரைத் துடைக்காமல் வெளியேறினான்.
தன் தாத்தாவின் நினைவுகள் அவன் மனத்தை வாட்டின. கடையைவிட்டு வெளியேறும்போது, மழைத் துளிகள் அவன் கரங்களில் முத்தமிட்டன.
உடனே தலைநிமிர்ந்து வானத்தைப் பார்த்தான். தன் பேரனின் அன்பை எண்ணி தாத்தாஆனந்தக் கண்ணீர் விடுவதைப் போல் தோன்றியது அவனுக்கு.
தரிசாய்க் கிடந்த தன்னைப் பண்படுத்தி அனைவருக்கும் பயன்படும் தோப்பாய் மாற்றிய தாத்தாவும் மாவு இயந்திரமும் தன்கூடவே வருவதைப் போல் வெள்ளைச் சட்டையில் ஒட்டிருந்தது மல்லித்தூள்.
அதைத் துடைக்க மனமில்லாமல் கண்ணீரை மட்டும் துடைத்துக்கொண்டு துணிக் கடையை நோக்கி நடந்தான்.

